காந்தியும் கோட்ஸேயும் - சில ‘முகமதிய’ கேள்விகள்!

January 16, 2006

டோண்டு ராகவனின் ‘காந்தியும் கோட்ஸேயும்’

தமிழ் இணையத்தில் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதற்கென்றே சிலர் இயங்கிக் கொண்டிருக்கையில், டோண்டு ராகவன் போன்ற மூத்த வலைப்பதிவர்களும் இதை செய்யத்தான் வேண்டுமா?

மலர் மன்னன் என்பவரின் பின்புலம் எனக்கு பரிச்சயம் இல்லாவிடினும், அவரது இந்த ‘திண்ணை’ கட்டுரை மூலம் அவரைப் பற்றி ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது.

கட்டுரையின் மையக்கருத்து என நமக்கு புலப்படுவது இதுதான்; ‘இந்த ஹிந்துஸ்தானம் ஹிந்துக்கள் பெருவாரியாக வசிப்பதால் ஹிந்துக்களுக்கே சொந்தமானது. ஹிந்துக்களின் நலனுக்கு பாதகமாக யாராவது நடக்க முயற்சித்தாலோ, அல்லது அவ்வாறு அவர்கள் நடக்க முயல்வார்கள் என ஒரு ‘தீவிர’ ஹிந்து சந்தேகப்பட்டாலோ, அவர்கள் கதி ‘அதோகதி ‘தான். சம்பந்தப்பட்ட நபர் பெரும்பாலான ஹிந்து மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவராக இருந்தாலும் சரியே. அந்த தீவிர ஹிந்து செய்ய வேண்டியதெல்லாம், அருகில் இருப்பவர்களையெல்லாம் தள்ளிவிட்டு தான் குறி வைத்த அந்த நபரை மட்டும் தாக்குவதுதான். முடியுமானால் ‘எனது செயலுக்கு மன்னியுங்கள்’ என்பதுபோல் முன்கூட்டியே வணங்கிவிட்டு தாக்கலாம். ஆக, மோகன்தாஸ் என்ற அந்த முதியவர் பரிதாபமாக உயிரை விட்டதற்கு முழு முதற் காரணம் அவரது நடவடிக்கைகள்தான். ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானத்திற்கு சம்பந்தமேயில்லாத முகமதியர்களுக்கும், தலித்துகளுக்கும் இவர் ஏன் பரிவு காட்ட வேண்டும்? அதற்கான கூலியைத்தான் அவர் பெற்றுக் கொண்டார்’.

இப்படி ஒரே ஒரு பத்தியில் சொல்லக்கூடிய சங்கதியை, மலர் மன்னன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளராக இருப்பதால், ஆங்காங்கு உப்பு, உறைப்பு சேர்த்து ஒரு சுவையான முழு நீள கட்டுரையாக்கி இருக்கிறார்.

கட்டுரையை படித்ததும் எனக்குள் எழுந்த கேள்விகள் சில:

* இந்த கட்டுரையை இப்போது ம.ம. எழுந்த என்ன அவசியம் நேர்ந்தது? ‘தியாகி’ கோட்ஸேவின் நினைவுநாள் எதுவும் வருகிறதா?

* ‘பாரத தேசத்துப் பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களும், ஓரளவு கணிசமான கிறிஸ்தவர்களும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான முகமதியரும்’ என்ற சொற்றொடரில் எந்த ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை ம.ம. குறிப்பிடுகிறார்? இந்த ‘பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களி’ல்’ தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் தலித்துகள் எத்தனை சதவிகிதம்? அவர்களை தாழ்த்தி வைத்திருக்கும் ‘உயர்த்தப்பட்டவர்கள்” எத்தனை சதவிகிதம்?

* ‘நமது தேசம் ஹிந்துக்கள் பெரும்பாலானவர்களாக உள்ள ஹிந்துஸ்தானம் என அறியப்பட்ட தேசமாதலால்…’ ‘இது ஹிந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் தொண்ணூறு சதம் இருக்கிற, ஹிந்துஸ்தானம் என்றே அறியப்படுகிற தேசமாதலால்…’ திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட இந்த வாக்கியங்கள் மூலம் மம சொல்ல வருவது என்னவென்றால், ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் பிரதேசம் என்பதாலேயே இந்த நாடு ஹிந்துஸ்தானம் என அறியப்படுகிறது.

ஆனால் வரலாறு வேறு விதமாக சொல்கிறது. இது சிந்து நதிக்கு அப்பால் இருக்கும் பிரதேசம் என்பதால் மொகலாயர்கள் இதனை ‘சிந்துஸ்தான்’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்த பெயரே நாளடைவில் ‘ஹிந்துஸ்தான்’ ஆயிற்று என்பதாக மதன் எழுதிய ‘வந்தார்கள், வென்றார்கள்’ புத்தகத்தில் படித்த ஞாபகம்.

இங்கு மம-விற்கு சில விஷயங்களை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ‘ஹிந்துஸ்தானில்’ வசிக்கும் முஸ்லிம்கள் (மம-வின் வார்த்தைகளில் சொல்வதானால் முகமதியர்கள்) அனைவரும் கைபர் போலன் கணவாய் வழியாகவோ அகதிகளாகவோ இந்நாட்டிற்குல் நுழைந்தவர்கள் அல்லர். இவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவுதான் சிறுபான்மையினராக இருந்தாலும் இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வரும் இந்த மண்ணின் மைந்தர்கள். பெரும்பான்மையான தன் சக மனிதர்களை தாழ்த்தி வைத்ததன் மூலம் தங்களைத் தாங்களே ‘உயர்த்தி வைத்துக் கொண்ட’ ஒரு சிறு பிரிவினருக்கு இந்நாட்டில் என்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அதைவிட ஒரு படி அதிகமாகவே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இந்தியர்களுக்கு இருக்கிறது.

* ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் தொடக்கத்திலிருந்தே அவருடைய மிகப் பெரும்பாலான பக்தர்களான ஹிந்துக்களின் நலனுக்குப் பாதகமாகவே இருந்தன.’ - மகாத்மா காந்திஜி ஏன் இவ்வாறு செய்தார்? பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கு பாதகமாக காரியமாற்றி அவர் என்ன பலனை அடைந்தார்? அவரது நடவடிக்கைகள் பெரும்பாலான ஹிந்துக்களுக்கு பாதகமாக இருந்தும் அவர்கள் ஏன் காந்திஜியின் பக்தர்களாக இருந்தார்கள்? அவர்கள் ஏன் ‘மஹாத்மா’ என்றும் ‘பாபு’ என்று அவர் மீது பேரபிமானம் செலுத்தினார்கள்? கோட்ஸே, சாவர்க்கர் போன்ற வெகு சிலரைத்தவிர மற்ற பெரும்பான்மையான இந்துக்கள் அனைவரும், காந்திஜி தங்களுக்கு துரோகம் இழைக்கிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ள இயலாத அடிமுட்டாள்களாக இருந்தார்கள் என்கிறாரா மம?

* ‘பிரதமர் பதவி பெறுவதற்காகத் தேசம் துண்டாடடப் படுவதை ஒப்புக்கொண்ட நேருவுக்கு தேசமெங்கணும் சிலைகள், சாலையின் பெயர்கள், குழந்தைகள் பெயரால் பிறந்த தினக் கொண்டாட்டங்கள்!’ - ஆக, தேசம் துண்டாடப்பட்டதில் பலனடைந்தது நேருஜிதான், காந்திஜி அல்ல. நியாயமாக பார்த்தால் கோட்சேயின் கோபம் நேருஜியின் மீதல்லாவா சென்றிருக்க வேண்டும்? தள்ளாத வயதுடையவராக இருந்த காந்திஜியை ஏன் தாக்க வேண்டும்?

* ‘..ஆனால் எப்படியும் பாகிஸ்தானாக வரையறுக்கப்பட்ட பகுதியில் ஹிந்துக்களின் என்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டோ, துரத்தப்பட்டோதான் இருப்பார்கள். ஏனென்றால் ஜிஹாத் முகமதியருக்கு மிகவும் அவசியமான சமயக் கடமையாகும்.’ - இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்னையில், அதிலும் பெரும்பான்மை ஹிந்துக்களின் தலைவர்களான காந்திஜி, நேருஜி ஆகியோரின் ஒப்புதலுடன் ஏற்பட்ட பிரிவினையில், ‘ஜிஹாத்’ எங்கிருந்து வந்து நுழைந்தது அல்லது நுழைக்கப்பட்டது?

* ‘மஹாத்மா சொல்லைத் தட்டாத சில ஹிந்துக்களும் அதற்குத் தயாராக, பாபுதான் சொல்லிவிட்டாரே, அவர்கூடப் போகலாம் என்று துணிந்திருக்கக் கூடும். அப்படி அவர்கள் திரும்பிச் சென்றிருப்பின் என்ன நேர்ந்திருக்கும்? காந்திஜி அவர்களைப் பாகிஸ்தானில் விட்டு வந்த மறுகணமே அவர்களின் மானம் மூதலிலும் உயிர் அதன் பிறகும் பறிக்கப்பட்டிருக்கும் என்பதல்லாமல் வேறென்ன? ‘

இது போல ஹைபோதடிகல் (hypothetical) கேள்விகள் நமக்கும் ஓரிரண்டு தோன்றியது;
- மஹாத்மாவை அவர் ஒரு முதியவர் என்று கூட பாராது கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்? சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மேலும் சின்னஞ்சிறுபான்மையினராகி இருப்பார்களே! அதைபற்றி மம கட்டுரை எழுத நேர்ந்தால் எப்படி எழுதியிருப்பார்?

- நல்ல வேளையாக நரேந்திரமோடி குஜராத்திற்கு மட்டும் முதல்வராக இருக்கிறார். அவரே முழு இந்தியாவிற்கும் பிரதமராக இருந்தால் என்னவாகி இருக்கும்? எத்தனை முகமதிய கர்ப்பிணிகளின் வயிறுகள் கிழிபட்டிருக்கும்? எத்தனை கிருஸ்துவ பிரச்சாரகர்கள் குடும்பத்துடன் எரிக்கப்பட்டிருப்பார்கள்? நினைத்தாலே குலை நடுங்குகிறது. இதையும் நியாயப்படுத்தி மம கட்டுரை எழுதியிருப்பார். அவர்தான் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் ஆயிற்றே!

* கட்டுரையின் ஆரம்பத்தில் மம இவ்வாறு குறிப்பிடுகிறார்; ‘போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன்?’

ஏனென்றால், அவர்களில் ஒருவர் நிராயுதபாணியாக இருந்தாலும்கூட, அது போர்க்களம் என்பதாலும், அவர்களின் நோக்கம் போரிடுவதுதான் என்பதாலும், எதிரியை தான் தாக்காவிட்டால் அவன் தன்னை தாக்கிவிடுவான் என்ற நிதர்சனத்தை உணர்வதாலும், அதில் ஒருவர் கொல்லப்பட்டால் அது கொலைக்குற்றமாக கருதப்படுவதில்லை.

ஆனால், மகாத்மா காந்தியை கோட்ஸே சுட்டது போர்க்களத்தில் அல்ல; மகாத்மா கோட்ஸேவை தாக்குவதற்காக துப்பாக்கி ஏந்தி இருக்கவில்லை; அவனை தாக்கும் நோக்கமும் காந்திஜிக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை; அவன் தன்னை தாக்கப் போகிறான் என்பதைக்கூட அவர் உணர்ந்திருக்கவில்லை. கோட்ஸே இவ்வாறு நடந்து கொண்டது கடைந்தெடுத்த பச்சை நம்பிக்கைத் துரோகமே அல்லவா?

‘அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது.’

கவனிக்கவும், மம எடுத்தாண்டிருக்கும் உதாரணத்தையே நான் மேற்கோள் காட்டுகிறேன். போர்களத்தில் சந்திக்கும் இரு தரப்பு வீரர்களும் தாக்கிக் கொள்வதற்கு சொந்தக்காரணமோ, உள்நோக்கமோ இருக்காது. மாறாக, அவர்கள் நாட்டு அரசாங்கங்கள் எடுத்த முடிவை, அவரவர்களின் படைத்தலைவர்களின் கட்டளையை தம் உயிரைக் கொடுத்தாவது அங்கு நிறைவேற்றுவார்கள். அப்படியானால், கோட்ஸேயின் ‘அரசாங்கம்’ எது? அவனது படைத்தலைவர்கள் யார் யார்? அவர்களின் எந்த கட்டளையை அவன் செயல் படுத்தினான்?

மேலும், கட்டுரையின் இறுதியில் மம இவ்வாறு சொல்வது அர்த்தமிழந்து போகிறது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல; ‘மேலும், எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்த வித்தியாசத்தை — இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கமோ, ஹிந்து மஹா சபையோ, சாவர்கர்ஜியோ எடுத்த முடிவை அவர் செயல் படுத்தவில்லை.’

எது எப்படி இருப்பினும், மம தான் சொல்ல வந்த கருத்துக்களை இந்த கட்டுரையில் ஒருவாறு சொல்லி முடித்து விட்டதாகவே தோன்றுகிறது. ஹிந்துஸ்தான் ஹிந்துக்களுக்கே உரித்தானது. கோட்ஸே செய்தது தப்பே இல்லை. காந்திஜி ஹிந்துக்களுக்கு துரோகம் இழைத்தவர். மகாத்மா என அழைக்கப்பட தகுதியில்லாதவர், போன்ற கருத்துக்களோடு மம இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.

எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. அது முஸ்லிம்களுக்கு பழகியும் போய்விட்டது.

புலால் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

January 14, 2006

சுந்தர் “நீங்கள் இவ்வுலகின் கடைசி மனிதனாக இருந்தால்?” என்ற தலைப்பில், தினமலரில் வெளியான ஒரு கட்டுரையின் சில பகுதிகளை பதிவிட்டிருக்கிறார். அக்கட்டுரையில் உள்ள இஸ்லாம் தொடர்பான சில கருத்துக்களுக்கு விளக்கங்கள், சற்று நீளமாகி விட்டதால் இங்கு தனி பதிவாக வைக்கிறேன்.

1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

தினமலர் கட்டுரை “சைவ உணவையே உண்டு வந்தார் முகமது நபி.” என்று குறிப்பிடுவதோடு, சில குர்ஆன் வசனங்களை குறிப்பிட்டு, ‘இறைவன் முஸ்லிம்களுக்கு பரிந்துரைக்கும் உணவு மரங்களிலிருந்து கிடைக்கும் காய் கனிகளும் பசுவிலிருந்து கிடைக்கும் பால் போன்றவையே’ என்பதுபோல தெரிவிக்கிறது.

ஆனால் கீழ்க்காணும் திருமறை வசனங்களை பார்க்கும்போது, தடுக்கப்பட்ட ஒருசிலவற்றை தவிர மற்ற உணவு வகைகள் அனைத்தையும், மாமிசம் உட்பட, இறைவன் மனிதர்களுக்கு ஆகுமானதாக ஆக்கி வைத்திருக்கிறான் என்பது தெரிகிறது.

5:1 முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன.

2:173 தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்கியிருக்கிறான்.

6:145 (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை

23:21 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினன இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அனேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்திலிருந்து) நீங்கள் புசிக்கின்றீர்கள்.

16:4 நீங்கள் கடலிலிருந்து நய(மும் சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து வெளிப்படுத்தவும் அவன்தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்.

மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அசைவ உணவு அருந்தியிருக்கிறார்கள் என்பதற்கும் அனேக ஆதாரங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு ஹதீஸ்:

Sahih Bukhari Volume 7, Book 65, Number 316:

Narrated Ibn ‘Abbas: The Prophet took out a bone with meat on it from a cooking pot and ate of it, and then offered the prayer without performing ablution anew.

அசைவ உணவு சாப்பிட இஸ்லாம் அனுமதிதான் அளித்திருக்கிறதே தவிர, அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சைவ உணவை மட்டுமே உண்ணக்கூடிய ஒருவர் ஒரு நல்ல முஸ்லிமாகவும் இருக்க முடியும்.

2. மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது இயற்கைக்கு மாற்றமானது அல்ல!

இயற்கைக்கு எதிரான மனிதன் செயல்படும்போது அது அவனை தண்டிக்கவே செய்கிறது என்பது நாம் கண்கூடாக கண்டு வரும் நிதர்சனமான உண்மை. தினமலர் கட்டுரை இதற்கு ஒரு நல்ல உதாரணத்தைக் காட்டுகிறது. “சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்… பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை “Mad Cow disease” என்றனர்.”

இவ்வாறு நிகழ்ந்தது உண்மைதான். இதற்கு காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற பிராணிகள் தாவர உண்ணிகள். இவற்றின் செரிமான அமைப்பு தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அது போலவே, சிங்கம், புலி போன்ற விலங்குகளின் செரிமான அமைப்பு மாமிச உணவு வகைகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதனால்தான் ‘புலி பசித்தாலும் புல் தின்பதில்லை’. இந்த இயற்கை அமைப்பிற்கு மாற்றமான உணவு வகைகளை இந்த பிராணிகள் உட்கொள்ள நேர்ந்தால், Mad Cow Disease போன்ற வியாதிகளின் மூலம் இயற்கை தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

ஆனால், மனிதன் புலால் உணவு உண்பது இயற்கைக்கு மாற்றமானதல்ல என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச உணவு, தாவர உணவு என இருவகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த அமைப்பு, இருவகை உணவுகளையும் மனிதன் உட்கொள்ளலாம் என்பதற்கு இயற்கையே வழங்கியிருக்கும் அனுமதி.

மேலும், பிராணிகள் மற்றும் மனிதர்களின் பற்கள் அமைப்பிலும் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது.

ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள், தாவர உணவு மட்டுமே உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை கொண்டிருக்கின்றன. இந்த பிராணிகள் இலை தழைகளை நன்கு மென்று உண்ண இந்த பற்கள் உதவுகின்றன. அது போல சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகளின் பற்கள், மாமிசத்தை கடித்து தின்பதற்கு வசதியாக கூராக அமைந்துள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே, மாமிச உணவு உண்ண வசதியாக கூரான முன்பற்களும், தாவர உணவுகளை மென்று உண்ண வசதியாக தட்டையான கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?

3. பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு புலால் உண்பவர்கள் காரணமல்ல.

“ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.” என்கிறது தினமலர் கட்டுரை.

அதாவது, பல கிலோ பசுமையான தாவர இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகளே சில கிலோ மாமிச உணவாக மாறுகிறது என்ற பொருள் தொனிக்கிறது. இருக்கலாம். ஆனால் அதற்காக மனிதர்கள் மாமிச உணவு உண்பதை நிறுத்திவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா போய்விடும்?
* ஆடு, மாடுகள் அப்போதும் தாவர இலைகளைத்தான் உண்ணும்.
* கால்நடைகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. உணவுக்காக அவை கொல்லப்படாததால் உலகில் அவற்றின் பெருக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும்.
* சைவ உணவு மட்டுமே உண்ணும் மனிதர்களும் தாவர உணவுவகைகளுக்காக கால்நடைகளுடன் போட்டியிட வேண்டும்.
* இந்த சூழ்நிலையில் பூமியின் பசுமைக்கவசம் வெகு சீக்கிரமே காணாமல் போகும்!

நன்றி: Islamic Research Foundation

இந்துவா? முஸ்லிமா? - 2

January 7, 2006

மூர்த்தி @ முஹம்மது அப்துல்லாவின் நல்லடக்கம் குறித்த பதிவிற்கு ஆரோக்கியம் தனது பதிவில் பதிலளித்திருக்கிறார். (அடைப்புக்குறிக்குள் உள்ளது அவரது பதில்கள்)

//மரணித்தவர் ஒரு முஸ்லிம்தான் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றால், ஒரு ஷரியா நீதிமன்றம் அவரை முஸ்லிம் என அறிவிக்குமா?//

(அறிவித்திருக்கிறது. )

//* அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் என நிரூபிக்க இயலாத ஒருவரை முஸ்லிம்களின் அடக்கவிடத்தில் ஒரு முஸ்லிம் போலவே அடக்கம் செய்ய ஷரியா நீதிமன்றம் சம்மதிக்குமா?//

(சம்மதிப்பது மட்டுமல்ல, அவரை முஸ்லீம் முறைப்படிதான் அடக்கம் செய்யவேண்டும் என்று போலீஸை அனுப்பி உடலை கைப்பற்றி அரசாங்க காவலோடு முஸ்லீம் அடக்கம் செய்திருக்கிறார்கள்.)

என் பதில்: ஷரியா நீதிமன்றம் ஆதாரமில்லாமல்தான் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது என ஆரோக்கியம் குற்றச்சாட்டு சுமத்துவதால், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கே இருக்கிறது. நிரூபிப்பாரா?

//* முஸ்லிம் என நிரூபிக்க முடியாத ஒருவரின் உடலை, முஸ்லிம் என அறிவித்து அடக்கம் செய்வதால், ஷரியா நீதிமன்றத்திற்கோ, பிற முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ ஏதாவது பயன் ஏற்படுமா?//

(பார் எல்லாரும் மரணம் அடைந்த பின்னரும் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்று உலகுக்கு காட்டுவதற்காக இருக்கலாம். முஸ்லீம் முல்லாக்களுக்கு உயிரிருந்தால் என்ன உயிரில்லாவிட்டால் என்ன? )

என் பதில்: ஆரோக்கியத்திற்கு இங்கு பதில் சொல்ல ஒன்றும் இல்லை என்பதால், வழக்கம்போலவே தனது யூகங்கள், கற்பனைகளை எடுத்து வைத்திருக்கிறார்.

திருமறை கூறுகிறது: “அந்தச் சமூகம் சென்று விட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே; அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்” (2:134)

ஒருவர் இறந்துபோன பிறகாவது அவரை முஸ்லிமாக்கித்தீர வேண்டும் என்ற கடப்பாடு எந்த ஒரு முஸ்லிமுக்கும் இல்லை என்பதை அறிந்த எந்தவொரு முஸ்லிம் முல்லாவும் இறந்துபோன ஒருவரை முஸ்லிமாக பிரகடனப்படுத்த முன்வர மாட்டார்கள். இப்படியெல்லாம் செய்துதான் மதத்தை வளர்க்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இஸ்லாம் இல்லை. இஸ்லாத்திற்கு சேவை செய்வதாக நினைத்துக்கொண்டுகூட யாரும் இவ்வாறு செய்திருக்க வழியில்லை. காரணம், அவ்வாறு செய்வதால் நிச்சயம் இஸ்லாத்திற்கு பலன் எதுவும் ஏற்படாது, மாறாக அவப்பெயர்தான் ஏற்படும் என்பதை சிறுபிள்ளைகள் கூட அறியும்.

//* இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஒரு முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கும் சூழ்நிலையில் அவரது உடலை ஒரு முஸ்லிமல்லாதவர் போல எரியூட்டுவது முறையாகுமா?//

(அவர் முஸ்லீம் அல்ல என்று கூடவே வாழ்ந்த மனைவி கூறுகிறார். கூடவே வாழ்ந்த நண்பர்கள் அவர் இந்துதான் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவரை இந்துவாக அடக்கம் செய்துவதானே அவருக்கு செலுத்தும் மரியாதை?)

என் பதில்: சந்தேகமில்லாமல் அவர் இந்துவாகத்தான் இறந்தார் என்பது நிச்சயமானது என்றால் அவரை முஸ்லிம் என்று அறிவித்து இஸ்லாத்தை இவ்வளவு சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியதில் யாருக்கு என்ன லாபம்?

(பாருங்கள் இப்னு பஷீர். கிரிஸ்துவர்கள் மத்தியில் கிரிஸ்துவ நீதிமன்றம் என்று ஏதுமில்லை. இந்துக்கள் மத்தியில் இந்து நீதிமன்றம் என்று ஏதுமில்லை. இருப்பது பொது நீதிமன்றங்கள். அதில் எல்லோரும் வாதிடலாம். ஆனால் முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்களுக்கு என இஸ்லாமிய நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவைகளில் இந்துக்களோ கிரிஸ்துவர்களோ படியேற முடியாது. அதில் கொடுக்கப்படும் நீதியை கேள்வி கேட்கமுடியாது. சிவில் நீதிமன்றத்தில் நின்றால், தனக்கு அதிகாரமில்லை என்று வழக்கு தூக்கி எறியப்படுகிறது. )

என் பதில்: ஓ.. இதுதான் உங்கள் பிரச்னையா? முஸ்லிம்கள் தமது மார்க்க விவகாரங்களுக்காக தனி நீதிமன்றம் வைத்திருப்பதுதான் உங்கள் கண்களை உறுத்துகிறதா? பல நாடுகளில் சிவில் வழக்குகளுக்காக தனி நீதிமன்றமும் கிரிமினல் வழக்குகளுக்காக தனி நீதிமன்றமும் அமைத்திருப்பார்கள். சிவில் வழக்குகளை கிரிமினல் நீதிமன்றத்திலோ, கிரிமினல் வழக்குகளை சிவில் நீதிமன்றங்களிலோ விசாரிக்க மாட்டார்கள். அது போன்றதுதான் ஷரியா நீதிமன்றங்களும்.

(இதே நிலையை முஸ்லீம்களுக்கு சற்றே கொடுத்துப்பாருங்களேன்.

கிறிஸ்துவ நீதிமன்றம் அல்லது இந்து நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது வைத்துக்கொள்வோம். அங்கு முஸ்லீம்கள் நின்று வாதிட முடியாது. அங்கு கொடுக்கப்படும் நீதியை தனக்கு பாதகமாக இருந்தாலும் ஒரு முஸ்லீம் சிவில் கோர்ட்டில் எதிர்த்து வழக்கு போட முடியாது என்று இருந்தால், எப்படி இருக்கும் உங்களுக்கு?

முஸ்லீம் பெரும்பான்மை நடுவே வாழும் இந்துக்களின் கிரிஸ்துவர்களின் அவல நிலை புரிகிறதா?

நிச்சயம் உங்களுக்கு புரியாது. ஏனெனில் உங்களது மதம் அப்படிப்பட்ட கொடூரமான மதம். மதம் உங்கள் கண்களை மறைக்கும் வரைக்கும் மற்றவர்களின் நிலைமை புரியாது. )

எனக்கு புரிகிறது. கண்களில் கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பவர்களுக்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது.

இஸ்லாத்திற்கு எதிராக 10,000 இணைய தளங்கள்!

இஸ்லாத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் இழிவுபடுத்தும் ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் உள்ளதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு வருடந்தோறும் மொத்தம் ஒரு பில்லியன் டாலர் செலவழிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வித்துறைப் பேராசிரியர் டாக்டர். ஸைய்யித் மர்இ இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.

அதே சமயம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துகின்ற இணையதளங்களின் எண்ணிக்கை இருநூறைத்தாண்டவில்லை. பெரும்பாலும் அவை தனி நபர்களால் தொடங்கப்பட்டவை. தேவையான அளவில் முறைமையோ, திட்டங்களோ அதில் இல்லை. பட்ஜெட்டும் மிகக்குறைவு. இஸ்லாத்தை அறிமுகப்படுத்தவும் அதனைப்பற்றிய தவறான எண்ணங்களை நீக்கவும் இத்தகைய இணைய தளங்களுக்கு வருடம் தோறும் ஒரு மில்லியன் டாலரே ஒதுக்கப்படுகிறது.

1980-ல் இருந்தே இணைய தளத்தில் இஸ்லாமிய விரோத தளங்கள் வந்து விட்டன. இதற்குப் பிண்ணனியில் யூத குழுக்களே இருந்தன. இஸ்லாமிய விரோத தளங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. இறைத்தூதரையும் இனிய தோழர்களையும் தரம் தாழ்ந்த முறையில் இழிவு படுத்துவது ஒரு வகை. வேறு சிலவற்றில் அரபி லிபியில் உள்ள குர்ஆன் வசனங்களை பன்றிகள், நாய்கள் உருவத்தில் “காலியோகிராபி” செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்த இணைய தளங்களில் குர்ஆனில் இல்லாத விதவிதமான ‘அத்தியாயங்களை’ காணலாம்.

இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தீவிரவாத சேற்றை வாரித் தூற்றும் வலைகளும் ஏராளம் உள்ளன. எந்தவொரு அடிப்படையும் இல்லாத பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை இவற்றில் காணலாம். நிர்வாணமான பெண்களுடன் புனித குர்ஆனின் வாசகங்களை சேர்த்து வைக்கும் கயவர்களும் உள்ளனர். புகழ்பெற்ற கலைஞர்களின் உடைகளிலும் சில நேரங்களில் வசனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இது ஒரு மனோரீதியான தாக்குதலும் கூட என்கிறார் ஆய்வை வெளியிட்டுள்ள டாக்டர். ஸைய்யித் மர்இ. -A.R.

நன்றி: ‘சமரசம்’ 1-15 ஜனவரி 2006

என் குறிப்பு: இத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் தமிழ் இணயத்திற்கு புதிதல்ல. சமயம் கிடைக்கும்போதெல்லாம் இஸ்லாத்தை தாக்குவதற்காக சிலரும், அதையே முழு நேர கடமையாகக் கொண்டு, அதற்காகவே வலைப்பதிவுகள் நடத்திக் கொண்டிருக்கும் சிலரும் இங்கு இருக்கிறார்கள். இவர்களுக்கு இஸ்லாத்தின் மேல் இந்த அளவுக்கு வெறுப்பு ஏற்பட என்னதான் காரணமோ?

இஸ்லாம்: எது உண்மை வரலாறு?

January 2, 2006

‘அவர்கள்’ என்றொரு திரைப்படத்தில் கமலஹாசன் கையில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அதனோடு உரையாடுவார். “ஜூனியர்..ஜூனியர்..” என்று இரு குரல்களில் ஒரு பாடல் கூட இருக்கிறது. உண்மையில், கமல், ஜூனியர் பொம்மை ஆகிய இருகுரல்களில் பேசியவர் கமலஹாசனே! தனது வாயசைவுகூட தெரியாதபடி அந்த பொம்மையே பேசுவதுபோல செய்வது ஒரு கலை. இந்த படத்திற்காகவே கமலஹாசன் அதை பயின்றதாக கேள்விப்பட்ட ஞாபகம்.

ஆரோக்கியம் என்பவரின் ‘இஸ்லாமை அறிந்து கொள்வோம்’ பதிவில், ஆரோக்கியமும், நேசகுமாரும் மாறி மாறி உரையாடுவதை பார்க்கும்போது நமக்கு ‘அவர்கள்’ திரைப்படமும், கமலஹாசனும், ஜூனியர் பொம்மையும்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

சரி போகட்டும்.. Know Islam என்ற தலைப்பில் ஆரோக்கியம் என்ன சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் பார்ப்போம். Know Islam-1 என்ற தலைப்பில் ஜெனிபர் கிங் என்பவரது கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார் ஆரோக்கியம். (இதையேதான் நேசகுமாரும் செய்து கொண்டிருந்தார் - உதாரணம்: தமிழோவியத்தில் தொடராக வந்த கொய்ன்ராட் எல்ஸ்டின் கட்டுரை - என்பது உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல!)

ஜெனிபர் கிங் கட்டுரையின் சாரம் இதுதான்: முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்திருக்கும் பல நூற்களில் காலத்தால் முந்திய இப்ன் இஷாக், அல் தபரி ஆகியோர் எழுதிய நூற்களே எந்தவித நீக்கமும் செய்யப்படாத உண்மையான வரலாற்றை கூறுகின்றன. புகாரி, முஸ்லிம் உட்பட காலத்தால் பிந்திய பிற தொகுப்புகள் அனைத்தும் அன்றன்றயை அரசியலுக்காகவும், கற்பனை கதைகளாலும் அலங்கரிக்கப்பட்டு எழுதப்பட்டன.

இப்ன் இஷாக், அல் தபரி ஆகியோரது நூற்கள் காலத்தால் முந்தியது என்பது தவிர அவைதான் உண்மையான வரலாற்று ஆவணங்கள் என்பதற்கு வேறு எந்த ஆதாரத்தையும் கட்டுரையாளர் தரவில்லை.

இஸ்லாத்தின் வரலாற்றை ஆராய்ந்த ஆய்வாளர்கள் ஜெனிபர் கிங்கின் இந்த வாதத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காலத்தால் முந்தியதால் மட்டுமே ஒரு நூல் வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்குமுன் ஹதீஸ் நூற்கள் எவ்வாறு எந்த சூழ்நிலையில் தொகுக்கப்பட்டன? என்பதை கொஞ்சம் அறிந்து கொள்வது நல்லது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாக தொகுக்கும் பணி தொடங்கியது. நபிகளார் அவர்களின் காலத்தில் குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் அறிவிக்கப்படும்போது அவ்வசனங்களை எழுத்து வடிவத்தில் அவ்வப்போது குறித்து வைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஹதீஸ்களையும் எழுத்து வடிவத்தில் குறித்து வைத்தால் வீணான குழப்பம் ஏற்படும் என்பதால் ஹதீஸ்களை பதிவு செய்வதை நபிகளார் தடை செய்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர், உமர், ஆகிய கலிபாக்களின் ஆட்சிக்காலத்திற்கும் பிறகு, கலிபா உமறுப்னு அப்தில் அஜீஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது உத்தரவின்பேரில் அபூபக்கரிப்னு ஹஜ்ம் என்ற அறிஞர் அவர் அறிந்திருந்த ஹதீஸ்களை தொகுத்து ஒரு கிரந்தம் எழுதினார். இக்கிரந்தத்தை தொடர்ந்தே வேறு சில மார்க்க அறிஞர்களும் தங்களுக்கு தெரிந்த இதர ஹதீஸ்களையும் எழுத ஆரம்பித்தனர். இவ்வாறுதான் ஹதீஸ்களை தொகுக்கும் பணி தொடங்கியது.

இவ்வாறு தொகுக்கப்பட்ட கிரந்தங்களில், நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் ஆகியவைகள் மட்டுமில்லாமல், ஸஹாபிகள் எனப்படும் நபித்தோழர்களின் சொல் செயல் ஆகியவைகளும், அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் மார்க்கத் தீர்ப்புகளும் கலந்திருந்தன. தாபியீன்கள் நபிகளாரின் காலத்தில் பிறந்தே இருக்காத தலைமுறையினர். இவர்கள் ஸஹாபிகளிடமிருந்து மார்க்கத்தை கற்றவர்கள்.

இந்த காலக்கட்டத்திலிருந்தே பொய்யான ஹதீஸ்களை கூறுபவர்களும் தோன்றிவிட்டார்கள். அதிகமான ஹதீஸ்களை அறிந்து அறிவிக்கும் மார்க்க அறிஞர்களை மக்கள் பெரிதும் மதித்தனர். அத்தகைய மதிப்பு தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை காணப்பிடிக்காமல் அது வளரும் வேகத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் போன்ற காரணங்களினாலும், பொய்யான ஹதீஸ்களை புனைந்து மக்களிடையே இவர்கள் பரப்பத்தொடங்கினர்.

இந்த காலக்கட்டத்தில் தொகுக்கப்பட்ட காலத்தால் முந்திய வரலாற்று / ஹதீஸ் நூற்களில் இத்தகைய பொய்யான கற்பனை ஹதீஸ்களும் பெருமளவில் இடம்பிடித்திருந்தன. இதற்கு காரணம் அன்றைய ஹதீஸ் தொகுப்பாளர்கள் அவர்கள் கேள்விப்பட்ட ஹதீஸ்களை ஆய்ந்து தரம் பிரிக்காமல் அப்படியே தம் தொகுப்புகளில் பதிந்ததுதான்.

இதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு (ஹிஜ்ரி 194-ல்) தோன்றிய இமாம் புகாரி அவர்களின் காலத்திலும் இவர்களுக்கு பின் தோன்றிய மற்ற ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலத்திலும்தான் ஹதீஸ்களை ஆய்ந்து, தரம் பிரித்து, ஆதாரமானவைகளை இனங்கண்டு தொகுக்கும் பணி நடந்து வந்தது.

குறிப்பாக, அல் தபரியின் நூலில் காணப்படும் சில ஹதீஸ்கள் ஆதாரமில்லாதவை, புறக்கணிக்கத்தக்கவை என பிரபலமான குர்ஆன் விரிவுரையை எழுதியிருக்கும் இமாம் இப்னு கஸீர் கூறுகிறார். இதே கருத்தை இமாம் இப்னுல் ஜவ்ஸீ இமாம் இப்னு ஹஜர் ஆகியோரும் தெரிவித்திருக்கிறார்கள்.

நேசகுமார் ஆரோக்கியம்: உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதும் கருத்துக்களில் உங்களுக்கே நம்பிக்கை இருக்கிறதா?

இந்துவா? முஸ்லிமா?

மலேஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மூர்த்தி என்கிற முஹம்மது அப்துல்லா டிசம்பர்-20 ம் தேதி மரணமடைந்தார். ( இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அவரது சவ அடக்கம் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மூர்த்தி சென்ற வருடம் முஸ்லிமாக மாறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மூர்த்தி மதம் மாறியதற்கு எந்த விதமான சான்றிதழும் இல்லை எனவும் அவர் மதம் மாறியதை தன்னிடம் கூறியதுகூட இல்லை எனவும் அவரது மனைவி காளியம்மாள் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாத மலேஷிய ஷரியா நீதிமன்றம் முஹம்மது அப்துல்லாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி புதைக்கத்தான் வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி அதன்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புதான் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

“மலேசிய நீதிமன்றங்களின் இந்தச்செயல் அந் நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத பிற சிறுபான்மை மதத்தினருக்கு எதிரானது என கண்டனக் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. பிற மதத்தினரின் உரிமைகளை பறிக்க நடக்கும் முயற்சி இது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என தட்ஸ்தமிழ் இணைய இதழ் தெரிவிக்கிறது.

பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் முழுமையாக இல்லாத சூழ்நிலையில் மலேசிய நீதிமன்றங்களின் மீதான இந்த குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருக்குமா என்பது குறித்து சில கேள்விகள் எழுகின்றன.

* மரணித்தவர் ஒரு முஸ்லிம்தான் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றால், ஒரு ஷரியா நீதிமன்றம் அவரை முஸ்லிம் என அறிவிக்குமா?

* அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் என நிரூபிக்க இயலாத ஒருவரை முஸ்லிம்களின் அடக்கவிடத்தில் ஒரு முஸ்லிம் போலவே அடக்கம் செய்ய ஷரியா நீதிமன்றம் சம்மதிக்குமா?

* முஸ்லிம் என நிரூபிக்க முடியாத ஒருவரின் உடலை, முஸ்லிம் என அறிவித்து அடக்கம் செய்வதால், ஷரியா நீதிமன்றத்திற்கோ, பிற முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ ஏதாவது பயன் ஏற்படுமா?

* இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஒரு முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கும் சூழ்நிலையில் அவரது உடலை ஒரு முஸ்லிமல்லாதவர் போல எரியூட்டுவது முறையாகுமா?

பத்திரிக்கைச் செய்திகள் தெளிவாக இல்லாத சூழ்நிலையில் ஆரோக்கியம் என்பவர் வழக்கம்போல எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றும் செயலாக ஒரு பதிவிட்டிருக்கிறார். ‘ஒரு சிலரது சதியால்’ அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்ய முடியவில்லையாம். என்ன சதி என்பதையாவது அவர் விளக்கியிருக்கலாம். இந்துவாகிய ஒருவரை முஸ்லிம் என பெயர் சூட்டி அடக்கம் செய்வதால் யாருக்கு என்ன பயன் என்பதையும் விளக்கியிருக்கலாம்.

இது போதாதென்று ‘இதுவே வெகு விரைவில் தமிழகத்திற்கும் வரப்போகிறது’ என முன்னறிவிப்பும் செய்திருக்கிறார் ஆரோக்கியம். நடக்கும் என்றுதான் தோன்றுகிறது. குஜராத்தில் முஸ்லிம்களை உயிருடனேயே கொளுத்தியவர்கள், முஸ்லிம்களின் பிரேதங்களையா கொளுத்த தயங்கப் போகிறார்கள்?