இஸ்லாம்: எது உண்மை வரலாறு?
January 2, 2006‘அவர்கள்’ என்றொரு திரைப்படத்தில் கமலஹாசன் கையில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அதனோடு உரையாடுவார். “ஜூனியர்..ஜூனியர்..” என்று இரு குரல்களில் ஒரு பாடல் கூட இருக்கிறது. உண்மையில், கமல், ஜூனியர் பொம்மை ஆகிய இருகுரல்களில் பேசியவர் கமலஹாசனே! தனது வாயசைவுகூட தெரியாதபடி அந்த பொம்மையே பேசுவதுபோல செய்வது ஒரு கலை. இந்த படத்திற்காகவே கமலஹாசன் அதை பயின்றதாக கேள்விப்பட்ட ஞாபகம்.
ஆரோக்கியம் என்பவரின் ‘இஸ்லாமை அறிந்து கொள்வோம்’ பதிவில், ஆரோக்கியமும், நேசகுமாரும் மாறி மாறி உரையாடுவதை பார்க்கும்போது நமக்கு ‘அவர்கள்’ திரைப்படமும், கமலஹாசனும், ஜூனியர் பொம்மையும்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
சரி போகட்டும்.. Know Islam என்ற தலைப்பில் ஆரோக்கியம் என்ன சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் பார்ப்போம். Know Islam-1 என்ற தலைப்பில் ஜெனிபர் கிங் என்பவரது கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார் ஆரோக்கியம். (இதையேதான் நேசகுமாரும் செய்து கொண்டிருந்தார் - உதாரணம்: தமிழோவியத்தில் தொடராக வந்த கொய்ன்ராட் எல்ஸ்டின் கட்டுரை - என்பது உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல!)
ஜெனிபர் கிங் கட்டுரையின் சாரம் இதுதான்: முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்திருக்கும் பல நூற்களில் காலத்தால் முந்திய இப்ன் இஷாக், அல் தபரி ஆகியோர் எழுதிய நூற்களே எந்தவித நீக்கமும் செய்யப்படாத உண்மையான வரலாற்றை கூறுகின்றன. புகாரி, முஸ்லிம் உட்பட காலத்தால் பிந்திய பிற தொகுப்புகள் அனைத்தும் அன்றன்றயை அரசியலுக்காகவும், கற்பனை கதைகளாலும் அலங்கரிக்கப்பட்டு எழுதப்பட்டன.
இப்ன் இஷாக், அல் தபரி ஆகியோரது நூற்கள் காலத்தால் முந்தியது என்பது தவிர அவைதான் உண்மையான வரலாற்று ஆவணங்கள் என்பதற்கு வேறு எந்த ஆதாரத்தையும் கட்டுரையாளர் தரவில்லை.
இஸ்லாத்தின் வரலாற்றை ஆராய்ந்த ஆய்வாளர்கள் ஜெனிபர் கிங்கின் இந்த வாதத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காலத்தால் முந்தியதால் மட்டுமே ஒரு நூல் வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்குமுன் ஹதீஸ் நூற்கள் எவ்வாறு எந்த சூழ்நிலையில் தொகுக்கப்பட்டன? என்பதை கொஞ்சம் அறிந்து கொள்வது நல்லது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாக தொகுக்கும் பணி தொடங்கியது. நபிகளார் அவர்களின் காலத்தில் குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் அறிவிக்கப்படும்போது அவ்வசனங்களை எழுத்து வடிவத்தில் அவ்வப்போது குறித்து வைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஹதீஸ்களையும் எழுத்து வடிவத்தில் குறித்து வைத்தால் வீணான குழப்பம் ஏற்படும் என்பதால் ஹதீஸ்களை பதிவு செய்வதை நபிகளார் தடை செய்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர், உமர், ஆகிய கலிபாக்களின் ஆட்சிக்காலத்திற்கும் பிறகு, கலிபா உமறுப்னு அப்தில் அஜீஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது உத்தரவின்பேரில் அபூபக்கரிப்னு ஹஜ்ம் என்ற அறிஞர் அவர் அறிந்திருந்த ஹதீஸ்களை தொகுத்து ஒரு கிரந்தம் எழுதினார். இக்கிரந்தத்தை தொடர்ந்தே வேறு சில மார்க்க அறிஞர்களும் தங்களுக்கு தெரிந்த இதர ஹதீஸ்களையும் எழுத ஆரம்பித்தனர். இவ்வாறுதான் ஹதீஸ்களை தொகுக்கும் பணி தொடங்கியது.
இவ்வாறு தொகுக்கப்பட்ட கிரந்தங்களில், நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் ஆகியவைகள் மட்டுமில்லாமல், ஸஹாபிகள் எனப்படும் நபித்தோழர்களின் சொல் செயல் ஆகியவைகளும், அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் மார்க்கத் தீர்ப்புகளும் கலந்திருந்தன. தாபியீன்கள் நபிகளாரின் காலத்தில் பிறந்தே இருக்காத தலைமுறையினர். இவர்கள் ஸஹாபிகளிடமிருந்து மார்க்கத்தை கற்றவர்கள்.
இந்த காலக்கட்டத்திலிருந்தே பொய்யான ஹதீஸ்களை கூறுபவர்களும் தோன்றிவிட்டார்கள். அதிகமான ஹதீஸ்களை அறிந்து அறிவிக்கும் மார்க்க அறிஞர்களை மக்கள் பெரிதும் மதித்தனர். அத்தகைய மதிப்பு தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை காணப்பிடிக்காமல் அது வளரும் வேகத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் போன்ற காரணங்களினாலும், பொய்யான ஹதீஸ்களை புனைந்து மக்களிடையே இவர்கள் பரப்பத்தொடங்கினர்.
இந்த காலக்கட்டத்தில் தொகுக்கப்பட்ட காலத்தால் முந்திய வரலாற்று / ஹதீஸ் நூற்களில் இத்தகைய பொய்யான கற்பனை ஹதீஸ்களும் பெருமளவில் இடம்பிடித்திருந்தன. இதற்கு காரணம் அன்றைய ஹதீஸ் தொகுப்பாளர்கள் அவர்கள் கேள்விப்பட்ட ஹதீஸ்களை ஆய்ந்து தரம் பிரிக்காமல் அப்படியே தம் தொகுப்புகளில் பதிந்ததுதான்.
இதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு (ஹிஜ்ரி 194-ல்) தோன்றிய இமாம் புகாரி அவர்களின் காலத்திலும் இவர்களுக்கு பின் தோன்றிய மற்ற ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலத்திலும்தான் ஹதீஸ்களை ஆய்ந்து, தரம் பிரித்து, ஆதாரமானவைகளை இனங்கண்டு தொகுக்கும் பணி நடந்து வந்தது.
குறிப்பாக, அல் தபரியின் நூலில் காணப்படும் சில ஹதீஸ்கள் ஆதாரமில்லாதவை, புறக்கணிக்கத்தக்கவை என பிரபலமான குர்ஆன் விரிவுரையை எழுதியிருக்கும் இமாம் இப்னு கஸீர் கூறுகிறார். இதே கருத்தை இமாம் இப்னுல் ஜவ்ஸீ இமாம் இப்னு ஹஜர் ஆகியோரும் தெரிவித்திருக்கிறார்கள்.
நேசகுமார் ஆரோக்கியம்: உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதும் கருத்துக்களில் உங்களுக்கே நம்பிக்கை இருக்கிறதா?
