புலால் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

January 14, 2006

சுந்தர் “நீங்கள் இவ்வுலகின் கடைசி மனிதனாக இருந்தால்?” என்ற தலைப்பில், தினமலரில் வெளியான ஒரு கட்டுரையின் சில பகுதிகளை பதிவிட்டிருக்கிறார். அக்கட்டுரையில் உள்ள இஸ்லாம் தொடர்பான சில கருத்துக்களுக்கு விளக்கங்கள், சற்று நீளமாகி விட்டதால் இங்கு தனி பதிவாக வைக்கிறேன்.

1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

தினமலர் கட்டுரை “சைவ உணவையே உண்டு வந்தார் முகமது நபி.” என்று குறிப்பிடுவதோடு, சில குர்ஆன் வசனங்களை குறிப்பிட்டு, ‘இறைவன் முஸ்லிம்களுக்கு பரிந்துரைக்கும் உணவு மரங்களிலிருந்து கிடைக்கும் காய் கனிகளும் பசுவிலிருந்து கிடைக்கும் பால் போன்றவையே’ என்பதுபோல தெரிவிக்கிறது.

ஆனால் கீழ்க்காணும் திருமறை வசனங்களை பார்க்கும்போது, தடுக்கப்பட்ட ஒருசிலவற்றை தவிர மற்ற உணவு வகைகள் அனைத்தையும், மாமிசம் உட்பட, இறைவன் மனிதர்களுக்கு ஆகுமானதாக ஆக்கி வைத்திருக்கிறான் என்பது தெரிகிறது.

5:1 முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன.

2:173 தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்கியிருக்கிறான்.

6:145 (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை

23:21 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினன இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அனேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்திலிருந்து) நீங்கள் புசிக்கின்றீர்கள்.

16:4 நீங்கள் கடலிலிருந்து நய(மும் சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து வெளிப்படுத்தவும் அவன்தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்.

மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அசைவ உணவு அருந்தியிருக்கிறார்கள் என்பதற்கும் அனேக ஆதாரங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு ஹதீஸ்:

Sahih Bukhari Volume 7, Book 65, Number 316:

Narrated Ibn ‘Abbas: The Prophet took out a bone with meat on it from a cooking pot and ate of it, and then offered the prayer without performing ablution anew.

அசைவ உணவு சாப்பிட இஸ்லாம் அனுமதிதான் அளித்திருக்கிறதே தவிர, அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சைவ உணவை மட்டுமே உண்ணக்கூடிய ஒருவர் ஒரு நல்ல முஸ்லிமாகவும் இருக்க முடியும்.

2. மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது இயற்கைக்கு மாற்றமானது அல்ல!

இயற்கைக்கு எதிரான மனிதன் செயல்படும்போது அது அவனை தண்டிக்கவே செய்கிறது என்பது நாம் கண்கூடாக கண்டு வரும் நிதர்சனமான உண்மை. தினமலர் கட்டுரை இதற்கு ஒரு நல்ல உதாரணத்தைக் காட்டுகிறது. “சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்… பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை “Mad Cow disease” என்றனர்.”

இவ்வாறு நிகழ்ந்தது உண்மைதான். இதற்கு காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற பிராணிகள் தாவர உண்ணிகள். இவற்றின் செரிமான அமைப்பு தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அது போலவே, சிங்கம், புலி போன்ற விலங்குகளின் செரிமான அமைப்பு மாமிச உணவு வகைகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதனால்தான் ‘புலி பசித்தாலும் புல் தின்பதில்லை’. இந்த இயற்கை அமைப்பிற்கு மாற்றமான உணவு வகைகளை இந்த பிராணிகள் உட்கொள்ள நேர்ந்தால், Mad Cow Disease போன்ற வியாதிகளின் மூலம் இயற்கை தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

ஆனால், மனிதன் புலால் உணவு உண்பது இயற்கைக்கு மாற்றமானதல்ல என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச உணவு, தாவர உணவு என இருவகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த அமைப்பு, இருவகை உணவுகளையும் மனிதன் உட்கொள்ளலாம் என்பதற்கு இயற்கையே வழங்கியிருக்கும் அனுமதி.

மேலும், பிராணிகள் மற்றும் மனிதர்களின் பற்கள் அமைப்பிலும் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது.

ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள், தாவர உணவு மட்டுமே உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை கொண்டிருக்கின்றன. இந்த பிராணிகள் இலை தழைகளை நன்கு மென்று உண்ண இந்த பற்கள் உதவுகின்றன. அது போல சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகளின் பற்கள், மாமிசத்தை கடித்து தின்பதற்கு வசதியாக கூராக அமைந்துள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே, மாமிச உணவு உண்ண வசதியாக கூரான முன்பற்களும், தாவர உணவுகளை மென்று உண்ண வசதியாக தட்டையான கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?

3. பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு புலால் உண்பவர்கள் காரணமல்ல.

“ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.” என்கிறது தினமலர் கட்டுரை.

அதாவது, பல கிலோ பசுமையான தாவர இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகளே சில கிலோ மாமிச உணவாக மாறுகிறது என்ற பொருள் தொனிக்கிறது. இருக்கலாம். ஆனால் அதற்காக மனிதர்கள் மாமிச உணவு உண்பதை நிறுத்திவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா போய்விடும்?
* ஆடு, மாடுகள் அப்போதும் தாவர இலைகளைத்தான் உண்ணும்.
* கால்நடைகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. உணவுக்காக அவை கொல்லப்படாததால் உலகில் அவற்றின் பெருக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும்.
* சைவ உணவு மட்டுமே உண்ணும் மனிதர்களும் தாவர உணவுவகைகளுக்காக கால்நடைகளுடன் போட்டியிட வேண்டும்.
* இந்த சூழ்நிலையில் பூமியின் பசுமைக்கவசம் வெகு சீக்கிரமே காணாமல் போகும்!

நன்றி: Islamic Research Foundation

2 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/01/14/non-vegetarianism/trackback/

  1. அன்பின் நண்பருக்கு, தங்களது விரிவான விளக்கங்களுக்கு நன்றி.

    உலகில் அனைவரும் சைவர்களாக இருந்தார்கள் என்பதை நான் நம்பவில்லை. சைவமாகவோ அசைவமாகவோ இருப்பது அவரவர் விருப்பத்தைப்பொருத்தது.

    இறைவனது படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றையொன்று ஏதோ ஒரு விதத்தில் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எல்லாம் மாமிச பட்சிணிகளாக இருந்தாலோ அல்லது எல்லாரும் சைவர்களாக இருந்தாலோ பூமியின் சமநிலை போய்விடும். சிங்கம் புலி போன்றவை மான் ஆடு போன்றவற்றை வேட்டையாடித் தின்பதும், மான் ஆடு போன்றவை புல் இலை தளைகளைத் தின்பதும் இயற்கை நியதியே. மனிதன் சைவம் அசைவம் இரண்டையும் தின்பதற்கு ஏதுவாக ஜீரண உறுப்புகளும் பற்களும் அமைந்திருப்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு கூறே. ஆரம்பத்தில் ஆப்பிள் சாப்பிட்டானா அல்லது வேட்டையாடிச் சாப்பிட்டானா; குரங்கிலிருந்து வந்தோமா இல்லை மனிதனாகவே வந்தோமா என்ற கேள்விகளுக்குள் போவதை விட, எனக்கு எளிதாக நம்பமுடியும் விளக்கம் ‘உயிர்கள் அவை வசிக்கும் இடத்தைச் சார்ந்து உணவுப் புழக்கங்களை அமைத்துக் கொண்டன’ என்பதே.

    உங்கள் பதிவுக்கு நன்றி.

    Comment by சுந்தர் — January 14, 2006 @ 11:18 pm

  2. ‘உயிர்கள் அவை வசிக்கும் இடத்தைச் சார்ந்து உணவுப் புழக்கங்களை அமைத்துக் கொண்டன’ - நன்றாக சொன்னீர்கள் சுந்தர். முஸ்லிம்கள் தாம் வாழும் சூழலுக்கேற்ப தம் உணவுப் பழக்கங்களை அமைத்துக் கொள்ளும்போது, இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களையும் (அனுமதிக்கப்பட்டவை, விலக்கப்பட்டவை) கவனத்தில் கொள்கின்றனர். அது ஒன்றுதான் முஸ்லிம்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் இடையிலான வித்தியாசம்.

    Comment by ibnubasheer — January 15, 2006 @ 2:57 am

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.