காந்தியும் கோட்ஸேயும் - சில ‘முகமதிய’ கேள்விகள்!
January 16, 2006டோண்டு ராகவனின் ‘காந்தியும் கோட்ஸேயும்’
தமிழ் இணையத்தில் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதற்கென்றே சிலர் இயங்கிக் கொண்டிருக்கையில், டோண்டு ராகவன் போன்ற மூத்த வலைப்பதிவர்களும் இதை செய்யத்தான் வேண்டுமா?
மலர் மன்னன் என்பவரின் பின்புலம் எனக்கு பரிச்சயம் இல்லாவிடினும், அவரது இந்த ‘திண்ணை’ கட்டுரை மூலம் அவரைப் பற்றி ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது.
கட்டுரையின் மையக்கருத்து என நமக்கு புலப்படுவது இதுதான்; ‘இந்த ஹிந்துஸ்தானம் ஹிந்துக்கள் பெருவாரியாக வசிப்பதால் ஹிந்துக்களுக்கே சொந்தமானது. ஹிந்துக்களின் நலனுக்கு பாதகமாக யாராவது நடக்க முயற்சித்தாலோ, அல்லது அவ்வாறு அவர்கள் நடக்க முயல்வார்கள் என ஒரு ‘தீவிர’ ஹிந்து சந்தேகப்பட்டாலோ, அவர்கள் கதி ‘அதோகதி ‘தான். சம்பந்தப்பட்ட நபர் பெரும்பாலான ஹிந்து மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவராக இருந்தாலும் சரியே. அந்த தீவிர ஹிந்து செய்ய வேண்டியதெல்லாம், அருகில் இருப்பவர்களையெல்லாம் தள்ளிவிட்டு தான் குறி வைத்த அந்த நபரை மட்டும் தாக்குவதுதான். முடியுமானால் ‘எனது செயலுக்கு மன்னியுங்கள்’ என்பதுபோல் முன்கூட்டியே வணங்கிவிட்டு தாக்கலாம். ஆக, மோகன்தாஸ் என்ற அந்த முதியவர் பரிதாபமாக உயிரை விட்டதற்கு முழு முதற் காரணம் அவரது நடவடிக்கைகள்தான். ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானத்திற்கு சம்பந்தமேயில்லாத முகமதியர்களுக்கும், தலித்துகளுக்கும் இவர் ஏன் பரிவு காட்ட வேண்டும்? அதற்கான கூலியைத்தான் அவர் பெற்றுக் கொண்டார்’.
இப்படி ஒரே ஒரு பத்தியில் சொல்லக்கூடிய சங்கதியை, மலர் மன்னன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளராக இருப்பதால், ஆங்காங்கு உப்பு, உறைப்பு சேர்த்து ஒரு சுவையான முழு நீள கட்டுரையாக்கி இருக்கிறார்.
கட்டுரையை படித்ததும் எனக்குள் எழுந்த கேள்விகள் சில:
* இந்த கட்டுரையை இப்போது ம.ம. எழுந்த என்ன அவசியம் நேர்ந்தது? ‘தியாகி’ கோட்ஸேவின் நினைவுநாள் எதுவும் வருகிறதா?
* ‘பாரத தேசத்துப் பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களும், ஓரளவு கணிசமான கிறிஸ்தவர்களும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான முகமதியரும்’ என்ற சொற்றொடரில் எந்த ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை ம.ம. குறிப்பிடுகிறார்? இந்த ‘பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களி’ல்’ தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் தலித்துகள் எத்தனை சதவிகிதம்? அவர்களை தாழ்த்தி வைத்திருக்கும் ‘உயர்த்தப்பட்டவர்கள்” எத்தனை சதவிகிதம்?
* ‘நமது தேசம் ஹிந்துக்கள் பெரும்பாலானவர்களாக உள்ள ஹிந்துஸ்தானம் என அறியப்பட்ட தேசமாதலால்…’ ‘இது ஹிந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் தொண்ணூறு சதம் இருக்கிற, ஹிந்துஸ்தானம் என்றே அறியப்படுகிற தேசமாதலால்…’ திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட இந்த வாக்கியங்கள் மூலம் மம சொல்ல வருவது என்னவென்றால், ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் பிரதேசம் என்பதாலேயே இந்த நாடு ஹிந்துஸ்தானம் என அறியப்படுகிறது.
ஆனால் வரலாறு வேறு விதமாக சொல்கிறது. இது சிந்து நதிக்கு அப்பால் இருக்கும் பிரதேசம் என்பதால் மொகலாயர்கள் இதனை ‘சிந்துஸ்தான்’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்த பெயரே நாளடைவில் ‘ஹிந்துஸ்தான்’ ஆயிற்று என்பதாக மதன் எழுதிய ‘வந்தார்கள், வென்றார்கள்’ புத்தகத்தில் படித்த ஞாபகம்.
இங்கு மம-விற்கு சில விஷயங்களை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ‘ஹிந்துஸ்தானில்’ வசிக்கும் முஸ்லிம்கள் (மம-வின் வார்த்தைகளில் சொல்வதானால் முகமதியர்கள்) அனைவரும் கைபர் போலன் கணவாய் வழியாகவோ அகதிகளாகவோ இந்நாட்டிற்குல் நுழைந்தவர்கள் அல்லர். இவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவுதான் சிறுபான்மையினராக இருந்தாலும் இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வரும் இந்த மண்ணின் மைந்தர்கள். பெரும்பான்மையான தன் சக மனிதர்களை தாழ்த்தி வைத்ததன் மூலம் தங்களைத் தாங்களே ‘உயர்த்தி வைத்துக் கொண்ட’ ஒரு சிறு பிரிவினருக்கு இந்நாட்டில் என்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அதைவிட ஒரு படி அதிகமாகவே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இந்தியர்களுக்கு இருக்கிறது.
* ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் தொடக்கத்திலிருந்தே அவருடைய மிகப் பெரும்பாலான பக்தர்களான ஹிந்துக்களின் நலனுக்குப் பாதகமாகவே இருந்தன.’ - மகாத்மா காந்திஜி ஏன் இவ்வாறு செய்தார்? பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கு பாதகமாக காரியமாற்றி அவர் என்ன பலனை அடைந்தார்? அவரது நடவடிக்கைகள் பெரும்பாலான ஹிந்துக்களுக்கு பாதகமாக இருந்தும் அவர்கள் ஏன் காந்திஜியின் பக்தர்களாக இருந்தார்கள்? அவர்கள் ஏன் ‘மஹாத்மா’ என்றும் ‘பாபு’ என்று அவர் மீது பேரபிமானம் செலுத்தினார்கள்? கோட்ஸே, சாவர்க்கர் போன்ற வெகு சிலரைத்தவிர மற்ற பெரும்பான்மையான இந்துக்கள் அனைவரும், காந்திஜி தங்களுக்கு துரோகம் இழைக்கிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ள இயலாத அடிமுட்டாள்களாக இருந்தார்கள் என்கிறாரா மம?
* ‘பிரதமர் பதவி பெறுவதற்காகத் தேசம் துண்டாடடப் படுவதை ஒப்புக்கொண்ட நேருவுக்கு தேசமெங்கணும் சிலைகள், சாலையின் பெயர்கள், குழந்தைகள் பெயரால் பிறந்த தினக் கொண்டாட்டங்கள்!’ - ஆக, தேசம் துண்டாடப்பட்டதில் பலனடைந்தது நேருஜிதான், காந்திஜி அல்ல. நியாயமாக பார்த்தால் கோட்சேயின் கோபம் நேருஜியின் மீதல்லாவா சென்றிருக்க வேண்டும்? தள்ளாத வயதுடையவராக இருந்த காந்திஜியை ஏன் தாக்க வேண்டும்?
* ‘..ஆனால் எப்படியும் பாகிஸ்தானாக வரையறுக்கப்பட்ட பகுதியில் ஹிந்துக்களின் என்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டோ, துரத்தப்பட்டோதான் இருப்பார்கள். ஏனென்றால் ஜிஹாத் முகமதியருக்கு மிகவும் அவசியமான சமயக் கடமையாகும்.’ - இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்னையில், அதிலும் பெரும்பான்மை ஹிந்துக்களின் தலைவர்களான காந்திஜி, நேருஜி ஆகியோரின் ஒப்புதலுடன் ஏற்பட்ட பிரிவினையில், ‘ஜிஹாத்’ எங்கிருந்து வந்து நுழைந்தது அல்லது நுழைக்கப்பட்டது?
* ‘மஹாத்மா சொல்லைத் தட்டாத சில ஹிந்துக்களும் அதற்குத் தயாராக, பாபுதான் சொல்லிவிட்டாரே, அவர்கூடப் போகலாம் என்று துணிந்திருக்கக் கூடும். அப்படி அவர்கள் திரும்பிச் சென்றிருப்பின் என்ன நேர்ந்திருக்கும்? காந்திஜி அவர்களைப் பாகிஸ்தானில் விட்டு வந்த மறுகணமே அவர்களின் மானம் மூதலிலும் உயிர் அதன் பிறகும் பறிக்கப்பட்டிருக்கும் என்பதல்லாமல் வேறென்ன? ‘
இது போல ஹைபோதடிகல் (hypothetical) கேள்விகள் நமக்கும் ஓரிரண்டு தோன்றியது;
- மஹாத்மாவை அவர் ஒரு முதியவர் என்று கூட பாராது கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்? சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மேலும் சின்னஞ்சிறுபான்மையினராகி இருப்பார்களே! அதைபற்றி மம கட்டுரை எழுத நேர்ந்தால் எப்படி எழுதியிருப்பார்?
- நல்ல வேளையாக நரேந்திரமோடி குஜராத்திற்கு மட்டும் முதல்வராக இருக்கிறார். அவரே முழு இந்தியாவிற்கும் பிரதமராக இருந்தால் என்னவாகி இருக்கும்? எத்தனை முகமதிய கர்ப்பிணிகளின் வயிறுகள் கிழிபட்டிருக்கும்? எத்தனை கிருஸ்துவ பிரச்சாரகர்கள் குடும்பத்துடன் எரிக்கப்பட்டிருப்பார்கள்? நினைத்தாலே குலை நடுங்குகிறது. இதையும் நியாயப்படுத்தி மம கட்டுரை எழுதியிருப்பார். அவர்தான் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் ஆயிற்றே!
* கட்டுரையின் ஆரம்பத்தில் மம இவ்வாறு குறிப்பிடுகிறார்; ‘போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன்?’
ஏனென்றால், அவர்களில் ஒருவர் நிராயுதபாணியாக இருந்தாலும்கூட, அது போர்க்களம் என்பதாலும், அவர்களின் நோக்கம் போரிடுவதுதான் என்பதாலும், எதிரியை தான் தாக்காவிட்டால் அவன் தன்னை தாக்கிவிடுவான் என்ற நிதர்சனத்தை உணர்வதாலும், அதில் ஒருவர் கொல்லப்பட்டால் அது கொலைக்குற்றமாக கருதப்படுவதில்லை.
ஆனால், மகாத்மா காந்தியை கோட்ஸே சுட்டது போர்க்களத்தில் அல்ல; மகாத்மா கோட்ஸேவை தாக்குவதற்காக துப்பாக்கி ஏந்தி இருக்கவில்லை; அவனை தாக்கும் நோக்கமும் காந்திஜிக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை; அவன் தன்னை தாக்கப் போகிறான் என்பதைக்கூட அவர் உணர்ந்திருக்கவில்லை. கோட்ஸே இவ்வாறு நடந்து கொண்டது கடைந்தெடுத்த பச்சை நம்பிக்கைத் துரோகமே அல்லவா?
‘அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது.’
கவனிக்கவும், மம எடுத்தாண்டிருக்கும் உதாரணத்தையே நான் மேற்கோள் காட்டுகிறேன். போர்களத்தில் சந்திக்கும் இரு தரப்பு வீரர்களும் தாக்கிக் கொள்வதற்கு சொந்தக்காரணமோ, உள்நோக்கமோ இருக்காது. மாறாக, அவர்கள் நாட்டு அரசாங்கங்கள் எடுத்த முடிவை, அவரவர்களின் படைத்தலைவர்களின் கட்டளையை தம் உயிரைக் கொடுத்தாவது அங்கு நிறைவேற்றுவார்கள். அப்படியானால், கோட்ஸேயின் ‘அரசாங்கம்’ எது? அவனது படைத்தலைவர்கள் யார் யார்? அவர்களின் எந்த கட்டளையை அவன் செயல் படுத்தினான்?
மேலும், கட்டுரையின் இறுதியில் மம இவ்வாறு சொல்வது அர்த்தமிழந்து போகிறது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல; ‘மேலும், எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்த வித்தியாசத்தை — இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கமோ, ஹிந்து மஹா சபையோ, சாவர்கர்ஜியோ எடுத்த முடிவை அவர் செயல் படுத்தவில்லை.’
எது எப்படி இருப்பினும், மம தான் சொல்ல வந்த கருத்துக்களை இந்த கட்டுரையில் ஒருவாறு சொல்லி முடித்து விட்டதாகவே தோன்றுகிறது. ஹிந்துஸ்தான் ஹிந்துக்களுக்கே உரித்தானது. கோட்ஸே செய்தது தப்பே இல்லை. காந்திஜி ஹிந்துக்களுக்கு துரோகம் இழைத்தவர். மகாத்மா என அழைக்கப்பட தகுதியில்லாதவர், போன்ற கருத்துக்களோடு மம இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.
எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. அது முஸ்லிம்களுக்கு பழகியும் போய்விட்டது.

நல்ல பதில் இப்னு பஷீர் அவர்களே…
//தமிழ் இணையத்தில் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதற்கென்றே சிலர் இயங்கிக் கொண்டிருக்கையில், டோண்டு ராகவன் போன்ற மூத்த வலைப்பதிவர்களும் இதை செய்யத்தான் வேண்டுமா?//
திரு ராகவன் வயதில் மூத்தவராக இருக்கலாம். ஆனால் அவரது கற்பு நிலை பற்றிய பதிவுகள் அந்த எண்ணத்தைப் புதைத்து அவர் மனதளவில் யார் எனக் காட்டிவிட்டன. ஆரோக்கியமற்று எழுதும் சிலரது பதிவுகளில் பின்னூட்டம் என்ற பெயரில் காழ்ப்பைக் கக்கிக் கொண்டிருந்தவர், தற்போது மம போன்ற ரெடிமேட்கள் கிடைத்தால் விடுவாரா?
மம என்பவர் ஒன்றும் புரட்சிகர சிந்தனை எழுதுபவர் அல்லர். அவரின் பார்ப்பனீயத்தின் வர்ணாசிரமத்தின் புழுத்துப் போன சிந்தனைகளான குலத்தொழில் காத்தல் குறித்த கருத்துகளுக்கு திரு கற்பக விநாயகம் என்பவர் அளித்த சாட்டையடி பதில்கள் http://www.thinnai.com/le0106062.html என்ற முகவரியில் உள்ளன.
நல்ல வேளை இவர்கள் காந்திஜி தற்கொலை தான் செய்து கொண்டார் என்று கூறிவிடவில்லை.
Comment by அட்றா சக்கை — January 16, 2006 @ 7:38 pm
//மேலும், எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்த வித்தியாசத்தை — இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கமோ, ஹிந்து மஹா சபையோ, சாவர்கர்ஜியோ எடுத்த முடிவை அவர் செயல் படுத்தவில்லை.’// - ம.ம
//அவன் காந்தியருகில் இருந்தவர்கள் யாரும் காயப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.// - டோ.ரா
Comment by SAKTHI KANAL — January 16, 2006 @ 8:11 pm
It is idiotic how people justify killing of Gandhi. Your article is wonderful, how you have answered the stupid justifications.
Comment by Cyril Alex — January 16, 2006 @ 11:03 pm
//* ‘பிரதமர் பதவி பெறுவதற்காகத் தேசம் துண்டாடடப் படுவதை ஒப்புக்கொண்ட நேருவுக்கு தேசமெங்கணும் சிலைகள், சாலையின் பெயர்கள், குழந்தைகள் பெயரால் பிறந்த தினக் கொண்டாட்டங்கள்!’ - ஆக, தேசம் துண்டாடப்பட்டதில் பலனடைந்தது நேருஜிதான், காந்திஜி அல்ல. நியாயமாக பார்த்தால் கோட்சேயின் கோபம் நேருஜியின் மீதல்லாவா சென்றிருக்க வேண்டும்? தள்ளாத வயதுடையவராக இருந்த காந்திஜியை ஏன் தாக்க வேண்டும்?//
பிரதமர் பதவிக்காக துண்டாடவிரும்பினார் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. முகமதலி ஜின்னா தான் பிரிக்க வேண்டும் என்று ஆங்கிலேயரிடம் கேட்டார்.
அன்று அவ்வாறு பிரிய வில்லை என்றால் இன்று எப்படி இருக்கும் என எண்ணிப் பாருங்கள். சிலரது வாதம் ஒன்றை இரண்டாக பிரிக்கும் பொழுது சிறியது பெரியது, கிழக்கு மேற்கு என்று தானே பிரிக்க வேண்டும்; அப்படி பாக்கிஸ்தான் என்று ஒன்று வந்தால் அடுத்தது இந்துஸ்த்தான் என வரவேண்டும் என மற்றவர்கள் விரும்பினர். ஆனால் காந்தி அதை ஏற்க வில்லை இது தான் கோபம். பிறகு இந்துஸ்தான்; காலிஸ்த்தான், தமிழ்ஸ்த்தான், கர்னாடகஸ்த்தான், கிறிஸ்த்துஸ்த்தான் என எல்லலோருமும் கேட்டால் என்ன வாகும் அதான் காந்தி இந்தி என்றே வைத்துக் கொண்டார்.
கோட்ஷே செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு வக்கலாத்தும் வாங்க முடியாது
Comment by இரத்தினவேலு — January 17, 2006 @ 12:10 am
Comment by மஞ்சமாக்கான் — January 17, 2006 @ 1:12 am
Comment by வெங்காயம் — January 17, 2006 @ 3:25 am
அட்றாசக்கை, சக்திகனல், சிறில் அலெக்ஸ், இரத்தினவேலு, மஞ்சமாக்கான், வெங்காயம்: தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. மஞ்சமாக்கான், வெங்காயம் ஆகியோரின் பின்னூட்டங்கள் கருத்து சார்ந்து இல்லாமல் தனிமனித தாக்குதல்களாக இருப்பதால் அவற்றை நீக்கிவிட்டேன்.
- இப்னு பஷீர்
Comment by ibnubasheer — January 18, 2006 @ 4:11 am
marhaba
Comment by islamiyatamilan — May 8, 2006 @ 4:54 am