பெண்ணுரிமை என்றால் என்ன?

May 20, 2006

ஜாஃபர் அலி என்னும் முஸ்லிம் வலைப்பதிவர் ‘எச்சரிக்கை’ என்ற அவரது வலைப்பதிவில் ‘மக்கள் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்’ என்ற நூலை வெளியீட்டாளர்களின் அனுமதியுடன் பதிவிட்டு வருகிறார். முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய தீமைகளைப் பற்றி இந்நூல் விளக்கமளிக்கிறது.

இந்நூலின் முன்னுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “வாசக நேயர்களே! இச்சிறிய நூலில் ஷரீஅத் தடை செய்துள்ள பல்வேறு காரியங்களை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஆதாரங்களுடன் நாங்கள் குறிப்பிட்டுள்ளதைக் காண்பீர்கள். விலக்கப்பட்ட இக்காரியங்கள் பெரும்பாலான முஸ்லிம்களிடையே பரவலாகக் காணப்படுபவையாகும். பெரும்பாலும் அவர்கள் செய்யக் கூடியவையாகும். இவற்றைக் குறிப்பிடுவதின் நோக்கம் மக்களுக்கு நலம் நாடுவதையும், தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வதையும் தவிர வேறு இல்லை.”

இந்த எச்சரிக்கை இஸ்லாத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு, முடிந்தவரை உண்மை முஸ்லிமாக வாழ முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்பது மிக தெளிவாக தெரியும் விஷயம். இந்த வலைப்பதிவை ஜாஃபர் அலி தமிழ்மணத்தில் பதிவு செய்யவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது.

இதை ஒருவாறு மோப்பம் பிடித்த நேசக்குமார் என்னும் மேதாவி, ‘பெண்ணுரிமைவாதிகளை எச்சரிக்கும் வலைப்பதிவர்’ என தலைப்பிட்டு தனது பதிவில் அறிமுகப்படுத்தி உள்ளார். இரண்டு காரணங்களுக்காக நான் நேசக்குமாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

1. ‘எச்சரிக்கை’ என்ற வலைப்பதிவை அறியாமல் இருந்த என் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்ததற்காக..

2. முஸ்லிம்களுக்கான எச்சரிக்கையை பெண்ணுரிமைவாதிகளுக்கான எச்சரிக்கை என குறிப்பிட்டதன் மூலம், முஸ்லிம்கள்தான் உண்மையான பெண்ணுரிமைவாதிகள் என பிரகடனப் படுத்தியதற்காக..

(உங்கள் உண்மையான நோக்கம் எதுவாக இருப்பினும்) நன்றி நேசக்குமார்!

மற்றபடி, ‘பெண்ணுரிமை என்றால் என்ன?’ என்று தலைப்பு வைத்ததற்காக நீளமான விளக்கங்கள் கொடுத்து நான் போரடிக்கப் போவதில்லை. தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நல்லடியாரின் இந்தப் பதிவை படிக்கலாம்.

பொய் சொன்ன ஹிர்ஸி அலி

May 18, 2006

நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அயான் ஹிர்ஸி அலி ஒரு பொய் சொன்னதால் தமது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. சோமாலியாவின் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்தார். இஸ்லாத்தை தாக்கி இவர் எழுதியும் பேசியும் வந்ததால் மிக விரைவில் இவர் புகழ் அடைந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். இவர் எழுதிய ஒரு கதையை படமாக எடுத்த இயக்குனர் தியோ வான்கோ கோபம் கொண்ட முஸ்லிம் ஒருவனால் கொல்லப்பட்டார். ஹிர்ஸி அலியின் ‘புகழ்’ மேலும் உலகெங்கும் பரவியது.

1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம் அடைவதற்காக ஹிர்ஸி அலி சமர்ப்பித்த விண்ணப்பத்தில் அவர் பொய்யான பெயர் மற்றும் தகவல்களை தந்திருந்தது சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அவரது குடியுரிமை பறிக்கப் படலாம் என நெதர்லாந்தின் குடியுரிமை அமைச்சர் மறைமுகமாக தெரிவித்தார். தனது குட்டு வெளிப்பட்டதால் வேறு வழியில்லாமல் ஹிர்ஸி அலி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

தான் பொய் சொன்னதை ஒப்புக் கொண்ட ஹிர்ஸி அலி, தான் நெதர்லாந்தில் இருப்பதை தன் குடும்பத்தினர் கண்டுபிடித்து விடுவார்களோ என தாம் பயந்ததாலேயே அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். (கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படாமல் இஸ்லாத்தைப் பற்றி விமரிசனம் செய்து வந்த ஹிர்ஸி அலியையே பயப்பட வைத்த அவரது குடும்பத்தினர் நிச்சயமாக பயங்கரமான ‘பயங்கரவாதி’களாகத்தான் இருக்க வேண்டும்!!)

ஹிர்ஸி அலிக்கு அடுத்த புகலிடம் தயாராகி விட்டது. ‘அ’வில் ஆரம்பித்து ‘கா’வில் முடியும் நாடு அவரை வரவேற்று, தங்க இடம் கொடுத்து ஒரு வேலையும் போட்டுக் கொடுக்க தயாராக உள்ளது. (சரியான நாட்டை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசெல்லாம் கிடையாது!).

மேலே குறிப்பிட்ட அதே நாடுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாரிக் ரமதான் என்ற சுவிஸ் நாட்டு முஸ்லிம் அறிஞர் ஒருவரின் விசாவை கேன்சல் செய்து அவரை தன் நாட்டில் பணிபுரிய விடாமல் தடுத்தது. தாரிக் ரமதான் Times பத்திரிக்கையால் உலகின் 100 தலைசிறந்த விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனாவாதிகளுள் ஒருவர் என குறிப்பிடப்பட்டவர். அ….கா நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் அழைப்பை ஏற்று அங்கு பேராசிரியராக பணிபுரிய அவர் ஒப்புக் கொண்டபின் விசா வழங்கப்பட்டது. தாரிக் ரமதான் அ…கா நாட்டில் ஒரு வீட்டை வாங்கி, தனது நான்கு பிள்ளைகளுக்கு அங்கு பள்ளிகளில் இடம் பிடித்து, வீட்டிற்கு வேண்டிய பொருட்களை விமானமேற்றி அனுப்பி விட்டு தானும் கிளம்ப தயாரானபோது…. விசா கேன்சல் செய்யப்பட்டு விட்டது.

பொய் சொன்ன ஹிர்சி அலியை வரவேற்கும் நாடு, புகழ் பெற்ற அறிஞரான தாரிக் ரமதானை மறுக்க காரணம் என்ன? ஹிர்சி அலி போல அல்லாமல் ஒரு உண்மையான முஸ்லிமாக அவர் இருப்பதுதானோ!

எளிதில் பிரபலமாகலாம்!

மிக விரைவில் உலகப்புகழ் பெற ஒரு எளிய வழி இருக்கிறது. இஸ்லாத்தை தாக்கி ஓரிரண்டு கட்டுரைகள் எழுதுங்கள். முடிந்தால் அதை புத்தகமாக வெளியிடுங்கள். நீங்கள் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த, முஸ்லிம் பெயரை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பவராக இருந்தால் இன்னும் உசிதம். அதிலும் இஸ்லாமிய பெயர் கொண்ட பெண்மணியாக இருந்தால் மிக மிக நல்லது.

நீங்கள் எழுதுவதற்கு ஆதாரம்? - அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்! குர்ஆன் வசனங்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றுள் உங்களுக்கு பிடித்த, அல்லது பிடிக்காத ஒரிரண்டு வசனங்களை வெட்டி ஒட்டி ஒப்பேற்றி விடலாம்.

Out of context என்பார்களே? - அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? யாராவது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! நீங்கள் சொல்வதற்கெல்லாம் முழு விளக்கம் கொடுப்பதற்குள் அவர்களுக்கு தாவு தீர்ந்து விடும். அந்த விளக்கங்களெல்லாம் ரொம்ப போரடிக்கும் என்பதால் யாரும் அதை படிக்க மாட்டார்கள்.

உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி அதிகம் தெரியாதா? - ஒன்றுமே தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. இணையத்தில் தேடினால் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்கள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றிலிருந்து சில கட்டுரைகளை மொழி பெயர்த்து உங்கள் ‘சேவை’யை தொடங்கலாம்.

பலத்த எதிர்ப்பு வருமே? - வரட்டுமே! அதற்காகத்தானே எழுதுகிறீர்கள்? அப்போதுதானே பிரபலமாக முடியும்?

அவதூறு பிரச்சாரம் என்பார்களே? - அதற்கெல்லாம் பார்த்தால் முடியுமா? ‘பேச்சு சுதந்திரம்’, ‘கருத்து சுதந்திரம்’, ‘பெண்ணுரிமை’, ‘அடிப்படைவாதம்’, ‘தீவிரவாதம்’ என நான்கைந்து வார்த்தைகளை போட்டு மிரட்டலாக ஒரு பதில் விளக்கம் கொடுத்து விட்டால் பிரச்னை தீர்ந்தது!

நீங்கள் எழுதுவதையெல்லாம் யாராவது படிப்பார்களா? - கவலையை விடுங்கள்! இது போன்ற ‘புரட்சிக் கருத்து’க்களை மோப்பம் பிடிப்பதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். இஸ்லாத்தை தாக்கி எழுதும் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் பிரபலமாக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள். ‘சீர்திருத்தச் செம்மல்’, ‘சமுதாயக் காவலன்’ ‘புரட்சித் தென்றல்’, போன்ற பட்டங்கள் கூட உங்களை தேடி வரும்.

குறுகிய காலத்தில் உங்கள் வளர்ச்சியைக் கண்டு நீங்களே பிரமித்துப் போய்விடுவீர்கள்!

என்ன.. தயாரா?

ஹெச்.ஜி.ரசூலின் அசட்டு வாதம்!

May 17, 2006

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் ‘அல்லாவும் வகாபும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

(முன் குறிப்பு: ஹெச்.ஜி.ரசூல் வஹாபிசம் பற்றி முன்பு திண்ணையில் எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பெயரிலேயே ஒருவர் பதில் / விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து விவாதம் தொடங்கியது.)

ரசூல் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’

இஸ்லாத்தை வஹ்ஹாபிசமாகவும் வஹ்ஹாபை அல்லாஹ்வாகவும் உருவகப்படுத்துவது தவறா? இல்லவே இல்லை! குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைவனின் பெயர்களுள் ஒன்றே வஹ்ஹாப் என்பது! அத்தியாயம் 3 வசனம் 8 “இன்னக அன்தல் வஹ்ஹாப்” என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!’ என்பதாகும்.

மேலும் இறைவசனம் 17:110 இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் (இறைவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன”

குர்ஆனிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெயரைக் கொண்டு இறைவனை அழைப்பது எப்படி மோசடியாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல் தான் விளக்க வேண்டும்.

ஹெச்.ஜி.ரசூல் மேலும் சொல்கிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப். ‘

இதைத் தொடர்ந்து, வஹ்ஹாபிசத்தை தோற்றுவித்தவர் என இவர்களால் ‘குற்றம் சுமத்தப்படும்’ முகம்மது இப்ன் அப்துல் வகாப் என்ற மனிதரைப் பற்றி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ரசூல். இங்குதான் அவரது அசட்டு வாதம் வெளிப்படுகிறது.

இறைவனின் பெயர்களுள் ஒன்று வஹ்ஹாப் (பெரும் கொடையாளி) என்பதை முன்பு பார்த்தோம்.
அப்துல் வஹ்ஹாப் என்பது மனிதர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். இதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள். ரசூல் குறிப்பிடும் மனிதரின் பெயரும் அப்துல் வஹ்ஹாப் தான்!

இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என இதற்கு பல உதாரணங்களை தரலாம். இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதையும் ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும்.

இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்!

பின்குறிப்பு:

“இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்.” - நேசகுமார்

நல்ல ஜோக்!

தமிழ்மணப் பட்டை சோதனை

May 16, 2006

தமிழ்மணக் கருவிப் பட்டைக்காக இந்த இடுகை..