செவிடா, இல்லையா?

June 29, 2006

ஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும் என்றும் அவருக்கு குழப்பமாக இருந்தது.

ஒன்றும் புரியாமல் தனது குடும்ப டாக்டரிடம் ஆலோசனை கேட்டு போனார் அந்த மனிதர். டாக்டர் ஒரு எளிய பரிசோதனை செய்து பார்க்கும்படி அவரிடம் சொன்னார். “உங்க மனைவியிடமிருந்து சுமார் 50 அடி தூரத்தில் நின்று சாதாரண குரலில் அவரிடம் ஏதாவது பேசுங்கள். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டு பதில் சொல்கிறாரா என்று பாருங்கள். இல்லையென்றால், 10 அடி நெருங்கி 40 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். அதற்கும் பதில் இல்லை என்றால், இன்னும் 10 அடி நெருங்கி சென்று பேசுங்கள். இப்படியாக தூரத்தை குறைத்துக் கொண்டே சென்று, எவ்வளவு தூரத்தில் இருக்கும்போது அவர் பதில் சொல்கிறார் என்பதை கவனித்து, என்னிடம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அன்று மாலை அந்த மனிதர் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என்று நினைத்த அவர், 50 அடி தூரத்தில் நின்று, சாதாரணமாக பேசும் குரலில், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை.

40 அடி தூரத்திற்கு நெருங்கி சென்று, மீண்டும், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை.

30 அடி தூரத்திலும் அதே கேள்விக்கு பதிலில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்று, அவர் மனைவியின் முதுகிற்கு பின் நின்று கொண்டு “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார்.

கோபத்துடன் திரும்பிய அவரது மனைவி சொன்னாள், “இதோட அஞ்சு தடவை சொல்லிட்டேன், கோழிக்கறி சாப்பாடு என்று. என்னாச்சு உங்களுக்கு?”

இதனால் அறியப்படும் நீதி யாதெனில், மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்க போகுமுன்னாலே நம்ம கிட்டே அதே குறை இருக்கா என்று பார்த்துக் கொள்வது நல்லது.

எது மோசடி?

June 2, 2006

‘திண்ணை’ - 1 ஜூன் 06

1. “இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்.” என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், ” திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் .” என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா?

2. “அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்.” என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா?

நன்றி: திண்ணை

இனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி!

3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை!

ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,
சில தூண்டி விடப்பட்டு..
சில தூண்டிலில் இடப்பட்டு..

நரிகளும் ஓநாய்களும்
கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!