குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!

July 29, 2006

ஜூலை 11 - மும்பையில் வெடித்த 6 அல்லது 7 குண்டுகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் கிடுகிடுக்க வைத்தன .

அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!

- எத்தனை குடும்பங்கள் தனது குடும்பத் தலைவனை இழந்தனவோ!

- எத்தனை குழந்தைகள் தம் தாயை இழந்தனவோ!

- கனவுகளைச் சுமந்து சென்ற எத்தனை இளைஞர்களும் யுவதிகளும் மடிந்து போனார்களோ!

- அரும்பும் வயதிலேயே எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தம் உயிரைத் தொலைத்தனவோ!

சென்றவர்கள் சென்று விட்டார்களென, இருப்பவர்களுக்கு யார்தான் ஆறுதல் சொல்ல முடியும்?

இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பதை பதைக்கச் செய்யும் இந்தக் கொடூர சம்பவத்திலும் ‘வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதையாக’, சிலர் அரசியல் ஆதாயம் தேட முனைந்திருப்பது கேவலமான ஒரு போக்கு.

வெடிப்புகள் நிகழ்ந்த மறுநாள் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் சிவ்ராஜ் படீல் இக்கொடூரச் செயலை செய்தவர்கள் யார் என்பதற்கு காவல் துறையினருக்கு இதுவரை துப்பு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். அதே நாளில், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்த எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, குண்டு வெடிப்புகளுடன் பாகிஸ்தானைத் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டினார். பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருப்பதாகக் கருதப்படும் தாவூத் இப்றாஹிம் இந்தக் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்டிருக்கலாம் என தான் சந்தேகப்படுவதையும் அவர் தெரிவித்தார். மேலும் , சிமி போன்ற அமைப்புகளின் தடயமே இல்லாத அளவிற்கு அவை இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். உள்துறை அமைச்சரும் காவல்துறையும் ‘இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை’ என்று சொல்லியிருந்த அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படி இந்தத் தகவல் கிடைத்தது என்பது அதிசயமே!

குண்டுவெடிப்பை சிமிதான் செய்திருக்க வேண்டும் என்ற ரீதியில் காவல்துறை விசாரணைகளை முடுக்கிவிட்ட வேளையில் , உத்தரபிரதேச முதல்வரான முலாயம் சிங் யாதவ் , “சிமி இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை” என்று அறிவித்தார். “நாங்கள் ஆட்சி அமைத்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில் அயோத்தியிலும், வாரணாசியிலுமாக இரு பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சிமி துளியேனும் சம்பந்தப் பட்டிருக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.

தங்களுக்கும் இந்தக் கொடூர சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சிமி அமைப்பு மறுத்ததோடு, திட்டமிட்டு தம் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது என்று குற்றஞ் சாட்டியது.

இந்தச் சூழ்நிலையில் ஜூலை 16-ம் தேதி ‘ஆஜ்தக்’ தொலைக்காட்சிக்கு ஜேக் ஸ்மித் என்ற பெயரில் ஒரு இ-மெயில் வந்தது. அதில், லஸ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான லஸ்கர்-இ-கஹர் என்ற இயக்கம்தான் மும்பை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகவும் இச்செயலை 16 பேர் கொண்ட படை நிறைவேற்றியதாகவும் அதில் ஒருவன் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும், தான் ம. பி. மாநில சிமி இயக்கத்தின் தலைவன் என்றும் மும்பையைப் போல பல்வேறு தாக்குதல்கள் மேலும் நடைபெறும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இது அத்வானியின் கூற்றை உறுதிப் படுத்தியது.

இதைத் தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது! வலைப்பதிவு எழுத்தாளர்கள் முதல் சோ, குருமூர்த்தி போன்ற அறிவுசீவிகள் வரை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தனர். அல்-காயிதா முதல் பாகிஸ்தான் வரை நார் நாராக கிழிக்கப் பட்டனர். இஸ்ரேலைப் பின்பற்றி இந்தியாவும் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தே தீர வேண்டும் என சோவும் குருமூர்த்தியும் வாதிட்டனர் . நெஞ்சில் உரமுமில்லாத, நேர்மைத் திறனுமில்லாத கையாலாகாத அரசு இது என கூச்சல் இட்டனர். லஸ்கரீ தொய்பா -தான் இப்போது லஸ்கரீ கஹார் எனப் பெயரை மாற்றிக் கொண்டு செயல்படுவதாக ‘ உளவுத்துறை நிபுணர்கள்’ தெரிவித்துள்ளதாக ஒருவர் திண்ணை டாட் காமில் எழுதினார்.

இவர்களின் ஆர்ப்பாட்டம் அதிக நாள் நீடிக்கவில்லை. ‘ஆஜ்தக் ‘ தொலைக்காட்சிக்கு ஜூலை 16-ம் தேதி இமெயில் அனுப்பிய ‘ தீவிரவாதி‘யை ஜூலை 20-ம் தேதி காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டார்கள். சிமி மற்றும் லஸ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளின் மீது பழி விழக் காரணமாக இருந்த இமெயிலை அனுப்பிய தீவிரவாதி சுமித் தம்ராகார் என்பவன். விளையாட்டாக இந்தக் காரியத்தை செய்தானாம் இவன்.

சுமித் மட்டுமல்ல.. மத்திய பிரதேச மாநிலம் கத்னி நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவனும் , தான் லஸ்கரீ ஹக் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்று இமெயில் அனுப்பி காவல் துறையினரிடம் மாட்டி இருக்கிறான்.

சில கேள்விகள் நம் மனதில் எழாமலில்லை:

* “நாங்கள் சிமி அமைப்பினர்” என்றும் “லஸ்கர் அமைப்பினர்” என்றும் இமெயில் அனுப்பி விளையாட்டுக் காட்டுபவர்களில் ஒரு ‘விளையாட்டுப் பிள்ளை’ கூட “நாங்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்தவர்கள், பஜ்ரங்தள்ளை சேர்ந்தவர்கள், சிவசேனாவை சேர்ந்தவர்கள்” என்றெல்லாம் இமெயில் அனுப்பி ஏன் விளையாடுவதில்லை?

* இவர்களின் இமெயில்களை துப்பறிவதற்காக காவல்துறையினரின் எவ்வளவு பொன்னான நேரம் வீணாகி இருக்கும்?

* இவர்களின் இமெயிலின் மூலமாக ஒரு பாவமும் அறியாத எத்தனை அப்பாவிகள் அவதிக்குள்ளாக்கப் பட்டிருப்பார்கள்? (உதாரணத்திற்கு ஒன்று: பீஹாரில் கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர் ஒருவர் இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டார்.

* இதெல்லாம் உண்மையிலேயே விளையாட்டுத்தானா? அல்லது, ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக தூண்டி விடப்பட்டு செய்ததா? அல்லது, உண்மைக் குற்றவாளிகள் பதுங்குவதற்கு அவகாசம் தேவைப்பட்டதால் காவல் துறையினரின் கவனம் திசை திருப்பப் பட்டதா?

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துக் கடுமையாகத் தண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற விளையாட்டுகளில் யாரும் ஈடுபடாமல் இருக்க, ‘இமெயில் விளையாட்டுப் பிள்ளை’களையும் அவர்களைத் தூண்டி விட்டவர்களையும் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், ‘இந்த அமைப்புதான் செய்திருக்கும்’ ‘அந்த இயக்கத்திற்கு தொடர்பு இருக்கிறது’ என்றெல்லாம் ஊகங்களை பரப்பி காவல்துறையினரை திசைதிருப்ப முயலும் அரசியல்வாதிகளும் ‘கருத்து கந்தசாமி’களும் கண்டிக்கப்பட வேண்டும். ஊடகங்கள் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

அப்போதுதான் நம் நாட்டின் இறையாண்மையும் நீதித்துறையின் மாண்பும் காக்கப் படும்.

***

இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, சிமி போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் என்று சொல்கிறார். இந்தத் துவேஷத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

விளக்கம் பகுதி - 2ல்

(தொடரும்)

நன்றி: திண்ணை Thursday July 27, 2006

மாயவரத்தானுக்கு நன்றி!

July 27, 2006

“ஐயையோ.. இங்கே பாருங்க.. நம்மூரிலயும் போலீஸ் திட்டமிட்டு அவதூறு பரப்ப வெறும் அப்பாவிகளை கைது செய்திருக்காங்க. அது சம்பந்தமா இந்த்துவா செய்தித்தாளில் வந்திருக்கும் செய்தி :
http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=140962 ”

ஒரு பின்னூட்டத்தில் இப்படி சொன்னவர் மாயவரத்தான். கோவையில் சமீபத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் போலீஸார் சிலரைக் கைது செய்ததைக் குறித்துத்தான் மாயவரத்தான் இப்படி கமெண்ட் கொடுத்திருந்தார். இது அவரின் வழக்கமான நக்கல் என்று யாராவது நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். கீழே உள்ள ஜூனியர் விகடன் கட்டுரை மாயவரத்தான் சொன்னது நூற்றுக்கு நூறு சரி என நிரூபிக்கிறது.

*****
கோவை ‘திடுக்’…

போலீஸ் கிளப்பிய குண்டு!

கோவையில் முக்கிய இடங்களில் குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக, ஐந்து நபர்கள் கோவை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து, ‘அப்பாடா… ஒரு பெரிய அசம்பாவிதத்தில் இருந்து தப்பினோம்’ என்று கோவை மக்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க… ‘இது முழுக்க முழுக்க உளவுத்துறை போலீ ஸாரின் சதி வேலை. பழிவாங்கும் நடவடிக்கையாக இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்’ என்று போலீஸார் மீதே குற்றச்சாட்டு அம்புகள் வீசப்படுகின்றன.

போலீஸ் தரப்பில் கூறுவதை முதலில் பார்த்துவிடுவோம். ‘‘கோவையில் குறிச்சி பிரிவு அருகே ஒரு வீட்டில் மர்ம நடவடிக்கைகள் நடப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைக்க, அந்த வீட்டை 21-ம் தேதி இரவு சந்தேகப்பட்டு சோதனை செய்தோம். அப்போது இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பெயர்கள், போட்டோக்கள், வீடுகள் ஆகியவை அடங்கிய புகைப்படங்கள் கிடைத்தன. ஒரு டைரி, சி.டி. மற்றும் வேறு ஆவணங்களும் கிடைத்தன. இதையடுத்து, ஹாரூண் பாஷா அவரின் அண்ணன் மாலிக் பாஷா இருவரையும் கைது செய்தோம். அவர்கள் கொடுத்த தகவலை வைத்து, கோவை அரசு மருத்துவமனையில் வைப்பதற்காகத் தயார் செய்திருந்த வெடிகுண்டுகளுடன் ரவி என்ற திப்புசுல்தான் மற்றும் அத்திக்கூர் ரஹ்மான் மற்றும் சம்சுதீன் ஆகியோரை கைது செய்தோம்’’ இதுதான் போலீஸ் தரப்பு.

பிடிபட்ட ஐவரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மீது கூட்டுச் சதி மற்றும் வெடிமருந்து தடை சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருகின்றன. இந்த விஷயங்களைப் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கோவை மாநகர கமிஷனர் கரண் சின்கா மற்றும் நுண்ணறிவு பிரிவு ஏ.சி-யான ரத்தினசபாபதி இருவரும், ‘‘அந்த ஐவரும் மனித நீதி பாசறை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். ஆயுதப் பயிற்சி மேற்கொண்டவர்கள்’’ என்று சொன்னார்கள்.

இதையடுத்து, நாம் மேற்கொண்டு விசாரணையில் குதித்தோம். மாலிக் பாஷா மற்றும் ஹாரூண் பாஷா இருவரின் வீட்டுக்குப் போனோம். இவர்களின் அண்ணன் அப்துல்லா பாஷா, ‘‘நாங்கள் அண்ணன் தம்பிகள் மொத்தம் ஆறு பேர். அனைவரும் ஒரே காம்பௌண்டில் தனித்தனி வீடுகளில் இருக்கிறோம். வெள்ளிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் நான்கைந்து ஜீப்களில் போலீஸார் எங்களது வீடுகளில் புகுந்தார்கள். என்ன ஏது என்று பதறிபோய் விசாரிக்க, ‘ஒண்ணுமில்லை, சாதாரண செக்-அப்’தான் என்று சொன்னார்கள். பிறகு, ‘போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு போங்கள்’ என்று சொல்லி, என்னையும் தம்பிகள் மாலிக் மற்றும் ஹாரூண் மூவரையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டனர். மீண்டும் சில போலீஸார் எங்களது வீட்டுக்குப் போனார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழிந்த பிறகு வீட்டில் இருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். பெரியார் தொடர்பான புத்தகங்களில் இருந்து, இஸ்லாம் மார்க்கம் தொடர்பான புத்தகங்கள் வரையில் நிறைய சேகரித்து வைத்து இருக்கிறேன். அவற்றில் சிலவற்றை போலீஸார் எடுத்து வந்தார்கள். நாங்கள் கிரைண்டர் மற்றும் மிக்ஸி தொழிலில் இருப்பதால் அது தொடர்பாக கன்டன்சர்கள் மற்றும் ஒயர்கள் வீட்டில் ஏகப்பட்டது இருக்கிறது. அதிலும் சிலவற்றை எடுத்துக் கொண்டார்கள்.

பிறகு, சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று வைத்திருந்தார்கள். விசாரணை எதுவும் செய்ய வில்லை. மறுநாள் இரவு என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டு, தம்பிகள் இருவர் மீதும் வெடிகுண்டு வழக்கு போட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலின்போது சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வாசகங்களுடன் நோட்டீஸ் போட்டதாக ஹாரூண் மீது போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டான். அதை மனதில் வைத்துக் கொண்டுதான், சமயம் பார்த்து அவன் மீது வழக்குத் தொடர்ந்து இருக்கிறார்கள்.

இன்னொரு தம்பி மாலிக், சற்று மனநிலை சரியில்லாதவன். அன்றைய தினம் போலீஸார் வந்த போது, அவர்களிடம் அவன் சற்று ஏடாகூடமாகப் பேசிவிட்டான். அவன் மீதும் வழக்குப் பதிவு செய்து விட்டார்கள்’’ என்றார் சோகமாக.

‘‘கைது செய்யப்பட்ட மற்ற மூவரைப் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?’’ என்றோம்.

‘‘அத்திக்கூர் ரஹ்மான் என்பவரை மட்டும் எனக்கு தெரியும். ஆறேழு மாதத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போதுதான் ஹாரூணும், ரஹ்மானும் ஒன்றாகக் கல்வி பயின்று இருக்கிறார்கள் என்ற தகவலை சொன்னார்கள். மற்ற இருவரும் யார் என்றே தெரியாது’’ என்றார்.

சிறுபான்மையினர் நல உதவி அறக்கட்டளையின் பொருளாளர் கோட்டை தங்கப்பா இதுபற்றி பேசும்போது, ‘‘முன்பு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்குகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் முஸ்லிம்கள் மீது தீவிரவாத எண்ணம் வர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் புனையப்பட்டிருக்கின்றன.

போலீஸார் கைது செய்திருப்பவர்களில் அத்திக்கூர் ரஹ்மான் என்பவர், போலீஸின் இன்ஃபார்மர். அவரைத் துணையாக வைத்துக்கொண்டு அப்பாவிகளான மீதி நால்வர் மீது வழக்கு புனைந்துள்ளது போலீஸ். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தினால் உண்மை நிலவரங்கள் தெரியவரும்’’ என்றார்.

திப்புசுல்தான் மற்றும் அத்திக்கூர் ரஹ்மான் இருவரும் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றோம். வீட்டின் உரிமையாளர் ராமசாமி நம்மிடம், ‘‘பக்கத்தில் இருக்கும் கல்லூரி மாணவர் பிரபு என்பவர்தான் ரஹ்மானை அழைத்து வந்து வீட்டை வாடகைக்குப் பிடித்து தந்தான். இன்னொரு நபர் திப்புசுல்தான், பின்னர் இவனோடு வந்து தங்கி கொண்டான்’’ என்றார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசியபோது, ‘‘ரஹ்மானுக்காக வீடு கேட்டு அழைத்து வந்த மாணவர் பிரபுவை நாங்கள் விசாரித்தபோது, அவர் என்னிடம் ‘போலீஸ் சி.ஐ.டி-யான நான் தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக வந்திருக்கிறேன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒருநாள் வ.உ.சி. பூங்கா அருகே போலீஸ் ஜீப்பில் இருந்தவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். ‘அவர் இன்ஸ்பெக்டர். பெயர் இளங்கோவன்’ என்று சொன்னார். இன்னொரு நாள் போலீஸ் என்று எழுதியிருந்த ஒரு ஜீப்பில் இருந்தவரிடம் என்னை அழைத்து சென்று பேசினார். கேட்டதற்கு ‘இவர் ஏ.சி.’ என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்த நான், ‘இவர் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்பினேன்’ என்று பிரபு சொன்னான். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அவன் போலீஸோடு தொடர்புடையவனாகதான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனவே எல்லாமே முழுக்க முழுக்க போலீஸின் செட்-அப் வேலை என்றே தோன்றுகிறது’’ என்றார்கள்.

‘‘சும்மா விட மாட்டோம்…’’

‘மனித நீதி பாசறை’யின் மாநில தலைவர் குலாம் முஹம்மதுவை சந்திதோம். அவர் நம்மிடம்,‘‘முஸ்லிம் மத மக்களின் மனித உரிமையைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் எங்களோட அமைப்பு. இந்த அமைப்பு, தமிழ்நாடு முழுக்க இருக்கு. இருபதாயிரம் பேர் எங்க அமைப்புல உறுப்பினரா இருக்காங்க. எல்லோருடைய முழு விவரங்களும் எங்ககிட்ட இருக்கு. கோவையில பிடிபட்ட இளைஞர்களுக்கும் எங்க அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்ல. அப்படியிருக்கும்போது இந்த விவகாரத்துல போலீஸ் எங்க பேரை சேர்க்கக் காரணம், கோவையில அசிஸ்டென்ட் கமிஷனரா இருக்கிற ரத்தினசபாபதிதான்!

கோவை சிறையில் இருக்கும் முஸ்லிம் இளைஞர் ஒருவரைப் பார்க்க அந்த இளைஞரோட அம்மாவும், சகோதரியும் போயிருக்காங்க. அப்படி போனவுங்ககிட்ட சோதனை என்ற பெயரில் போலீஸார் சொல்லவே நாகூசும் அளவுக்கு அசிங்கமா நடந்திருக்காங்க. அதோடு விடாம அவுங்க ரெண்டு பேரு பெயரிலும் போலீஸாரை தப்பான விஷயத்துக்குக் கூப்பிட்டதா கேஸ் போட்டிருக்காங்க.

இந்த விஷயம் எங்க கவனத்துக்கு வந்ததும் நாங்க தெளிவா விசாரிக்க ஆரம்பிச்சோம். அதனாலதான் போலீஸுக்கு எங்க மேல கடுப்பு. பழிவாங்க நேரம் பார்த்துட்டு இருந்த ரத்தினசபாபதி, இதைப் பயன்படுத்திக்கிட்டாரு. நாங்க இந்த விஷயத்தை சும்மா விடப்போறது இல்ல… முதல்வர் வரைக்கும் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்’’ என கண்கள் சிவக்கச் சொன்னார். - கே.ராஜா திருவேங்கடம் படம்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்

நோட்டீஸ் கொடுத்தால் பதிலடி!

கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு ஏ.சி-யான ரத்தினசபாபதி யிடம் கேட்டபோது, “ஜெயிலுக்குள் நடைபெறும் சம்பவங்களுக்கும், நுண்ணறிவு பிரிவுக்கும் சிறிதளவும் தொடர்பில்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பதாக மனித நீதி பாசறை தலைவர் சொல்லி இருக்கிறார். அவர்களிடம் இருந்து ஒரு நோட்டீஸ்கூட எனக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து இருப்பேன்.

கைது செய்யப்பட்டவர்கள் அந்த அமைப்பின் தீவிர உறுப்பினர்கள். அதைத்தான் பிரஸ்மீட்டில் சொன்னேன். அப்போதுகூட, ‘இந்த செயலில் அதன் தலைமையகத்துக்குத் தொடர்பிருக்குமா?’ என்று கேட்டபோது, ‘விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றுதான் சொன்னேன். அதற்காக அதன் தலைவருக்கும் இந்த செயலுக்கும் நேரடி தொடர்புள்ளது என்று அவர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல’’ என்றவரிடம்,

‘‘இந்த வழக்கே முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்டது என்கிறார்களே’’ என்று கேட்டோம்.

‘‘போலீஸ் இன்ஃபார்மரை வைத்து வழக்கை ஜோடித்தோம் என்றால், இன்ஃபார்மர் வீட்டில் இருந்தா வெடிகுண்டை கைப்பற்றுவோம்! அவர் வெளியில் வரும்படி சுலபமான செக்ஷன்களில் வழக்கு தொடர மாட்டோமா… சொல்பவர்கள் ஆயிரம் சொல்லத்தான் செய்வார்கள். அதையெல்லாம் பொருட் படுத்த தேவையில்லை’’ என்று முடித்தார்.

நன்றி: ஜூனியர் விகடன்
****

போலீஸார் அப்பாவிகளை கைது செய்திருக்கிறார்கள் என்பதை மிகச்சரியாக மோப்பம் பிடித்து தெரிவித்த மாயவரத்தானுக்கு நன்றி!

தூக்கில் தொங்க விடுங்கள்!

July 18, 2006

ஜூனியர் விகடனில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா-வின் பேட்டி

ஒவ்வொரு முறையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நடைபெறும் போது, எங்கள் இதயங்கள் சுக்குநூறாக்கப்படுகின்றன. உயிர் இழந்த அப்பாவிகளை எண்ணி இதயம் நொறுங்குகின்றது. காயமடைந்தவர்களின் அவல நிலை, இதயத்தை இறுக்குகின்றது. உறவினர்களை பயங்கரவாதச் செயல்களுக்கு பலிகொடுத்தவர்களின் கூக்குரல்கள், எமது நெஞ்சங்களை பிழிந்தெடுக்கின்றன. இதனுடன் சேர்ந்து இந்த பயங்கரவாத, மனிதகுல விரோதச் செயல்களை செய்தவர்கள் முஸ்லிம்கள் என்ற யூகங்கள், சம்பவம் நடந்த உடனே எழுப்பப்படுவது இதயத் துடிப்பையே நிறுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

இஸ்லாம் மிக தெளிவாக பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்துள்ளது. திருக்குர்ஆன் மிக தெளிவாக, ‘அப்பாவி ஒருவரின் உயிரைப் பறிப்பது முழு மனிதச் சமுதாயத்தை அழித்ததற்கு சமமானது’ என்று பறை சாற்றுகின்றது. எனவே இதுபோன்ற குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இஸ்லாத்தின் பார்வையில் மனித இனத்துக்கு எதிராக நடத்தப்பட்ட நடவடிக்கைளே.

உண்மை இப்படியிருக்க… இதுபோல் சம்பவங்கள் நடைபெறும்போது உடனடியாக அதனை மதத்துடன் தொடர்புபடுத்தி பேசுவது, மனிதாபிமானத்துக்கு விரோதமானதாகும். மும்பை ரயில்களில் குண்டு வெடிப்புகள் நடைபெற்ற உடனேயே அதனை நடத்தியவர்கள் முஸ்லிம் அமைப்புகள் என்று செய்திகள் உலவ தொடங்கின. ஆனால், குண்டுவெடிப்புகளில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கு இருப்பு பாதை ஒரம் வசிக்கும் ஏழை முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் முன்வந்தார்கள் என்பது மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படவில்லை.

முஸ்லிம்களை நோக்கி சுட்டு விரல் நீட்டப்படும் பின்னணியில் நடைபெறும் விசாரணைகள் காரணமாக, கடந்த காலங்களில் காவல் துறையினரின் விசாரணைகளும் ஒருமுகமாக சென்றுள்ளன. உண்மையான குற்றவாளிகளும் அவர்களைப் பின் நின்று இயக்கியவர்களும் தப்பித்துக் கொள்கின்றனர். விளைவு… குண்டு வெடிப்புகள் தொடர்கதையாகின்றன.

எடுத்துக்காட்டாக, பெங்களூர் சம்பவம் தொடர்பாக கர்நாடகக் காவல் துறையினர் சென்னையில் பஷீர் என்பவரைக் கைது செய்தனர். ஆனால், தமிழக காவல்துறையில் உள்ள சில திறமைமிகுந்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு, கர்நாடக காவல்துறையினரின் முடிவு தவறானது என்று நிரூபித்தனர். இதன் விளைவாக அப்பாவி பஷீர் பயங்கரவாதியாக சிறையில் தள்ளப்படுவதிலிருந்து தப்பினார். ஆனால், இதுபோன்ற பொறுப்பு உணர்வுடன் பெரும்பாலான காவல்துறையினர் நடந்துகொள்வது இல்லை. இதன் விளைவாக பயங்கரவாதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாமல் போய்விடுகின்றது.

மும்பை குண்டு வெடிப்புகள் நமது நாட்டில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கடைசி பயங்கரவாத நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனை. ‘இந்தப் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள்’ என சந்தேகமற தெரிந்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும். இதுவே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையும். எமது இதயத்தின் அமைதிக்கும் வழியாக இருக்கும்.

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

நன்றி: ஜூனியர் விகடன்

குமரன் எண்ணம் அவர்களுக்கு நன்றி!

July 17, 2006

நேசகுமாரின் பதிவொன்றில் குமரன் எண்ணம் ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார். அவற்றில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத சில கருத்துக்களும் இருப்பினும், ‘துவேஷங்களை பரப்பாதீர்கள்’ என்ற அவருடைய வேண்டுகோளுக்காக அவரை பாராட்டி என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய பின்னூட்டம்: (நான் பாராட்டும் கருத்துக்களை தடித்த எழுத்துக்களாக ஆக்கியிருக்கிறேன்.)

****
நேசக்குமார் அவர்களே

உங்களின் பதிவுகள் முஸ்லீம்கள் அனைவருமே தப்பானவர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே போட்டிருக்கிறீர்கள். இது தவறான கண்ணோட்டம் என்பது என் கருத்து. பாபர் மசூதி இடிப்புக்கு முன் இந்தியாவில் இருந்த முஸ்லீம் தீவிரவாதம் இப்பொழுது பல்மடங்காக அதிகரித்துள்ளது என்பது நிதர்சன உண்மை ஆகவே இந்த மதத் தீவிரவாதங்களுக்கு ஹிந்துக்களும் பொறுப்ப் ஏற்க வேண்டும். முஸ்லீம்கள் என்றாலே தவறு செய்பவர்கள் என்ற உங்களின் கருத்து வலைப் பதிவுகளில் வந்து கொண்டிருக்கும் பிராமிணர்கள் மாமா வேலை செய்பவர்கள் என்று சொல்வதைப் போலத் தான் உள்ளது. இரண்டுமே நகைப்புக்குறியது.

இறைவன் படைக்கும் சமயம் யாரையும் கெட்டவர்களாக படைப்பதில்லை என்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் உண்டு. அது போல ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறப்பதால் ஒருவர் கெட்டவராகி விட மாட்டார். எல்லா மதங்களிலும் குறைகள் உண்டு. எந்த மதமுமே 100 சதம் குறைவில்லாதது என்று கூறி விட முடியாது. ஆகவே நீங்கள் முஸ்லீம் மதம் மட்டும் தவறானது என்று கூறி வருவது சரியல்ல என்பது என் கருத்து. இந்தியா மட்டும் அல்ல மனித குலத்திற்கே மதங்களால் பிரச்சனைகள்தாம். அதனால் மதம் என்ற முறையே அழிந்து விட்டால்தான் பிரச்சனைகள் சரியாகும்.அதுவரை உங்களைப் போன்றவர்கள் ஒரு மத துவேஷம் கொண்டு எழுதி வருவது துவேஷங்களைப் பரப்பி அழிவையே கொண்டு வரும்.

நான் கூறுவதால் உங்களின் நிலைப்பாடுகள் மாறிவிடும் என்று எதிர்பார்த்து நான் இதனை எழுதவில்லை. ஒவ்வொருவரின் கொள்கைகளும் அவர்களுடைய எண்ணங்களும் அவர்கள் அந்தந்த கருத்துக்களைப் பற்றி பல காலம் யோசிப்பதால் உண்டாவது என்பது எனக்குத் தெரியும். நான் உங்களைக் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் இது போன்ற கருத்துக்களை நீங்கள் வெளியிடுவதால் நன்மையா அல்லது தீமையா என்று யோசித்துப் பாருங்கள். துவேஷங்களை பரப்புவதால் நன்மையா தீமையா என்று யோசியுங்கள். போரினால் இன்று யாருக்குமே நன்மை கிடையாது போர் என்று வந்தால் அழியப் போவது இரு தரப்புடன் மனித குலமும்தான். ஆகவே அன்பே சிவம், அன்பே கிறிஸ்து, அன்பே அல்லா என்று நாம் உணர வேண்டும்.

சண்டைகளும் சச்சரவுகளும் என்றுமே எதற்குமே தீர்வாக முடியாது. அதுவும் இரு தரப்புமே அழிந்து போகும் என்னும் பொழுது.

வாழ்க வையகம்!!!! வாழ்க வளமுடன்!!!!

நான் எந்த வித சர்ச்சைக்காகவும் இந்தப் பின்னூட்டத்தை இடவில்லை. இதனை சர்ச்சை நோக்குடன் பாராமல் பரந்த மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
****

நன்றி குமரன் எண்ணம் அவர்களே!

இதற்கு நேசகுமாரின் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன்.

வன்முறையும் பயங்கரவாதமும்!

July 13, 2006

Indo-Asian News Service -ன் தலைமைச் செய்தி ஆசிரியர் எம்.ஆர்.நாராயண் சுவாமி ‘When is violence ‘terror’ and when is it not?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நடுநிலைக் கண்ணோட்டம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்தக் கட்டுரை. ‘நடுநிலை என்பதெல்லாம் நமக்கு அன்னியமான வார்த்தை’ என்பவர்களுக்கு இது ஒரு eye-opener ஆக இருக்கக் கூடும்.

இதை தமிழாக்கம் செய்ய அவகாசம் இல்லாததால் ஆங்கில மூலத்தையே தருகிறேன்.

When is violence ‘terror’ and when is it not?

By M.R. Narayan Swamy

It is easy to denounce the vicious train bombings in Mumbai for what it is: plain terrorism. But in the politics of hatred planted in India from the 1980s, one question begs an answer: are some types of violence perhaps justified?

The Shiv Sena will surely answer in the affirmative. Two days before high-velocity bombs ripped through first class compartments of Mumbai suburban trains Tuesday evening, the Shiv Sena - which acts perennially as if it is above the law - masterminded violent attacks all over Maharashtra. Buses and cars were burnt, policemen attacked, roads and highways blocked and markets shut, causing huge economic losses. The reason? Mud was found splashed on a statue of party chief Bal Thackeray’s wife!

As could only have been expected, Bal Thackeray justified the needless violence. His son Uddhav, still trying to put his stamp on the party, gave an added religious twist: “If derogatory cartoons in a newspaper in far off Denmark can have repercussions in India, this incident is bound to provoke reactions from Shiv Sainiks.” Even Maharashtra Chief Minister Vilasrao Deshmukh, whose job it must be to roundly denounce any violence, did a wrong to Mumbai by calling the Shiv Sena-inspired destruction an “emotional reaction”.

If hurt caused by mud flung at a statue can justify mayhem, what about the fury in a community’s heart that sees innocent law abiding hundreds - a former MP included - horribly put to death just because some mad elements torched a train car and killed 59 Hindus?

No one can justify any killing, be it in Mumbai or Delhi or Coimbatore or Godhra. But the politics of polarizing people on religious lines, robbing them of their shared national identity, has given birth to a mindset where even people who should know better brand terrorism as terror but seem to think that violence by rightwing Hindu groups is somehow justified. It is not.

Those of us who witnessed the horror of 1984 on the streets of Delhi vividly remember the lies trotted out to justify the brutal killings of innocent Sikhs. We were told it was ‘natural reaction’ to the slaying of Indira Gandhi. There was nothing ‘natural’ about the slaughter of Sikhs.

And there was nothing ‘natural’ about Gujarat 2002.

An elderly, wrinkled Muslim man I interviewed in Ayodhya town shed tears as he related how a mob set upon his modest house after razing the Babri mosque, dragged out his teenage son (while he and other members of the family fled) and repeatedly stabbed him - and then threw the body into a well, all the while shouting Hindu religious slogans. “Sir, I am a poor man. What sin did I commit to see my own son murdered for no fault of his?” he asked in sorrow.

On a desolate street of Mumbai in 1993, when I spoke to a group of frightened Muslim men running scared of Shiv Sena mobs, one of them took out his visiting card that revealed him as a sub-divisional magistrate. “Sir, what use is this identity today?” he asked, staring at me. “Why did I remain in India after the 1947 partition?”

These were two despairing members of India’s largest religious minority. The younger ones today are not asking any questions. They are simply taking revenge, for real and perceived injustice done to their community.

Those associated with security agencies warn that the radicalization of young Muslims poses one of the gravest dangers to the Indian state. And this has not happened in a vacuum.

I hold no brief for fanatic Muslims, and there are, without doubt, many in that genre in this country. But fanaticism cannot be fought with fanaticism. If we are to remain a nation state, no chief minister should be allowed to justify mass killings with a glib “every action has a reaction” comment. The Babri mosque razing was a grave wound to the Muslim psyche besides the Indian secular state; Gujarat 2002 may have given birth to Islamic terrorism in India.

IANS -ன் வலைத்தளம்: http://www.ians.in/

நன்றி: Indian Muslim Info

மும்பை குண்டுவெடிப்பு!

July 12, 2006

அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!

- எத்தனை குடும்பங்கள் தனது குடும்பத் தலைவனை இழந்தனவோ!

- எத்தனை குழந்தைகள் தம் தாயை இழந்தனவோ!

- கனவுகளை சுமந்து சென்ற எத்தனை இளைஞர்களும் யுவதிகளும் மடிந்து போனார்களோ!

- அரும்பும் வயதிலேயே எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தம் உயிரைத் தொலைத்தனவோ!

சென்றவர்கள் சென்று விட்டார்களென, இருப்பவர்களுக்கு யார்தான் ஆறுதல் சொல்ல முடியும்?

மும்பையில் குண்டு வெடித்த செய்தியை அறிந்தபோது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.

இக்கொடூர சம்பவத்திற்கும் உடனே மதச்சாயம் பூசி, அனுதாபங்களை கொச்சை படுத்தி, சோகங்களை ஏளனம் செய்ய ஒரு கும்பல் புறப்பட்டிருப்பது வருந்தத் தக்கது.

நேசகுமார் என்பவர் ஒரு பின்னூட்டத்தில் எழுதுகிறார்;

இதில் என்ன கொடுமை என்றால், இதைச் செய்தது இந்திய இராணுவம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, யூதர்கள், அவர்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் இஸ்லாமிஸ்ட் கும்பல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் .

எப்படி அய்யா உங்களால் இதைப் போல சிந்திக்க முடிகிறது? உங்கள் கூற்றுப்படி எந்த ‘இஸ்லாமிஸ்ட் கும்பலும்’ பிரச்சாரத்தை ஆரம்பிக்குமுன்பாகவே அவர்கள் மேல் மறைமுகமாக பழி சுமத்தி சண்டைக்கு இழுக்கும் உங்கள் இழிகுணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டீர்களா?

போனமுறை இப்படி நூற்றுக்கணக்கானவர்களைப் பலிகொண்டவர்கள் சுகமாக கராச்சியில் பாகிஸ்தான் இராணுவப் பாதுகாப்புடன் வலம்வந்து கொண்டுள்ளார்கள்.

‘இதற்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?’ என்று யாராவது கேட்டால், அவர்களை ‘இஸ்லாமிஸ்ட் கும்பல்’ என குற்றம் சாட்டுவீர்கள். தெரிந்ததுதானே!

கோவையில் குண்டு வைத்தவர்களின் பேட்டியை எடுத்து வலைப்பதியும் மதவெறியர்களும் இங்கே வலம்வந்து கொண்டுள்ளார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேட்டியை வலைப்பதிபவர்கள் மத வெறியர்களா? சபாஷ்..! ‘காந்தியை கொன்ற கோட்ஸே குற்றவாளியே அல்ல’ என வெட்கமே இல்லாமல் சப்பைக்கட்டு கட்டுபவர்களையும் அதற்கு ஜால்ரா தட்டுபவர்களுக்கும் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?

இதையெல்லாம் சொன்னால் பீடி பத்தவைக்கிறார்கள் என்று புகார் சொல்லும் இன்னொரு கும்பல் - முதலைக்கண்ணீர் விட்டுக்கொண்டே.

‘பீடி’ உதாரணம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ‘சுருட்டு பத்தவைக்கிறார்கள்’ என்று வேண்டுமானால் சொல்லலாமா? துளி கூட மனிதாபிமானம் இல்லாமல், அனுதாபங்களை ஏளனப்படுத்தி, சோகங்களில் கூட சுயலாபம் அடைய முயல்பவர்களை வேறு எப்படி குறிப்பிடுவது?

இதயெல்லாம் உரத்துப் பேசினால் மதங்களுக்கிடையே உரசல் ஏற்படும் என்று பதறி ஓடிவந்து வாய் பொத்தும் திம்மிக் கும்பல் ஒன்று.

உண்மைதான்.. மதங்களுக்கிடையில் உரசலை ஏற்படுத்தி, மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் ஈனத்தனமான கும்பலுக்கு, உரசலை தவிர்க்க யாராவது யோசனை சொன்னால் பிடிக்காதுதான்.

வேடிக்கை மனிதர்கள் நாம். விட்டில் பூச்சிகள் போல தொடர்ந்து 1400 வருடங்களாக வீழ்ந்து கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்தும் பார்க்காதது போலவே போய்க்கொண்டிருக்கிறோம்….

என்று நிற்கும் இந்த வன்முறையின் ஜியாரத் என்றுதான் தெரியவில்லை .

பூனைக்குட்டி கடைசியாக வெளியில் வந்தே விட்டது! எங்கு எந்தப் பிரச்னை நடந்தாலும் பழியை தூக்கி இஸ்லாத்தின் மேல் போட்டு, ‘எல்லாவற்றிற்கும் இஸ்லாம்தான் காரணம்’ என்ற ஒரு மாயையை உண்டாக்க முயலும் உங்கள் உள்ளக் கிடக்கை, இதோ, வெளிப்பட்டு விட்டது. சிலையில் சேறு பூசினாலும், குண்டுவெடித்தாலும், ஏன்.. வெள்ளப்பெருக்கிற்கு கூட இஸ்லாம்தான் காரணம் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது. திருடன் தான் தப்பித்துக் கொள்வதற்காக எல்லோருக்கும் முன்பாக ‘திருடன்.. திருடன்..’ என்று கத்திக் கொண்டே ஓடும் கதைதான் நினைவிற்கு வருகிறது.

இஸ்லாத்தை நன்றாக புரிந்து அதைப் பின்பற்றும் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் இத்தகைய கொடூரச் செயலை செய்ய மாட்டான்.

குர்ஆன் சொல்கிறது;

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (5:32)

நல்ல வேளையாக, நேசகுமார் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். தெளிந்த சிந்தனையுடனான ஒரு சிறந்த பதிவை வழங்கிய கோவி.கண்ணன் பாராட்டுதலுக்குரியவர்.

ஆறு புத்தகங்கள்!

July 10, 2006

நண்பர் நல்லடியார் ஆறு விஷயங்களைப் பற்றி எழுதும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவருக்கு நன்றி சொல்லி, சமீபத்தில் எனது கவனத்தை ஈர்த்த ஆறு புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன்.

1. படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்: ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி

நான் படிக்கும் சுந்தர ராமசாமியின் முதல் புத்தகம் இது. மனிதருக்கு நன்றாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது. நாகர்கோவில் வட்டார வழக்கு உரையாடல்கள் கதைக்கு ஒரு தனித்தன்மையை ஏற்படுத்துகின்றன. சாம்பிளுக்கு கொஞ்சம்…

‘.. உங்களுக்குக் கதை தெரியாதா? நல்ல தமிழிலேயே சொல்றேனே. அவருக்கும் அவரு பெஞ்சாதிக்கும் சண்டை வந்திற்று. அவ “கெழவா எப்படியும் போக்களிஞ்சு போ. நான் போறேன் என் மக்கமாருகிட்டே”ன்னு சொல்லி சிலோனுக்கு கம்பி நீட்டிப்போட்டா. அங்கே பொண்ணும் பிள்ளைகளும் அந்தஸ்தாட்டு இருக்குது. இவரு இங்கே பிரஸ்ஸிலேயே அடுப்பை மூட்டிக் கஞ்சிப் போட்டுக்கிட்டு, தலையங்கம் எழுதறேன்னு காகிதத்தைப் பறண்டிக்கிட்டு இருந்தாரு. அப்பம் ஒரு செரங்கு வந்து…’

‘யாருக்கு?’

‘அவருக்குத்தான். முதுகிலே, மொரட்டுச் செரங்கு. அதுக்கு ஒரு நா இவளைக் கூப்பிட்டு மருந்துப் போடச் சொல்லியிருக்காரு…’

‘யாரெ?’

‘கேட்டுக்கிட்டே வாங்களேன்… அவ அந்தாலெ பெருக்கிக் கிட்டிருந்தவ வாரியல மூலையில சாத்திப்போட்டுச் சிரங்குக்கு மருந்து போட்டா.’

காதர் லேசாகச் சிரித்தான்.

இசக்கிக்கு உற்சாகம் கிளம்பி விட்டது.

‘சிரங்குக்கு மருந்து போடுதுக்கு வந்தவா சிரங்கு ஆறினதும் கையெ எடுக்கணுமா வேண்டாமா? எடுத்தாளில்லே. அப்புறம் நான் ஒரு நா பிரிண்டர் சாமுவேலுகிட்டே, “என்ன சாமுவேல் அண்ணேய், இவ கையெ எடுக்க மாட்டேங்காளே” அப்படீன்னு கேட்டேன். அதுக்கு அவன் “இசக்கி அண்ணாச்சி, அது எடுக்குதுக்கு வெச்ச கையில்லே”ன்னு நச்னு சொல்லிப் போட்டான்.’ (பக்கம் 180-181)

இப்புத்தகத்தைப் பற்றி ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட விமரிசனம் இந்தச் சுட்டியில் இருக்கிறது.

2. கேட்டுக் கொண்டிருக்கும் புத்தகம்: ரஹீக் - அஷ்ஷைக் ஸஃபியுர்ரஹ்மான் - தமிழில் அ. உமர் ஷரீஃப்

மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் Muslim World League என்ற இஸ்லாமிய நிறுவனம் நடத்திய உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்நூல், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரபூர்வமாக விவரிக்கிறது. அரபி மொழியில் எழுதப்பட்ட இந்நூலை அ. உமர் ஷரீஃப் தமிழில் மொழி பெயர்த்து ‘தாருல் ஹுதா’ பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ‘தாருல் ஹூதா’ இந்நூலை MP3 சி.டி.க்களாக வெளியிட்டிருக்கிறார்கள். அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில் இப்புத்தகம் படிக்கப் படுவதை காதில் வாங்கிக் கொண்டே புத்தகத்திலும் கண்களை ஓட விடுவது ஒரு வித்தியாசமான வாசிப்பனுவத்தை தருகிறது.

இப்புத்தகம் இந்த இணணயத் தளத்தில் முழுமையாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

3. படிக்கவிருக்கும் புத்தகம்: நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்

அறிமுகம் தேவையில்லாத அளவிற்கு பிரபலமான புத்தகம். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்தபோதே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு யூதராகவோ, கிருஸ்துவராகவோ, முஸ்லிமாகவோ அல்லாத பா.ராகவனின், பாலஸ்தீன் பற்றிய நடுநிலைக் கண்ணோட்டத்திலான ஒரு ஆய்வு நூல். தொடராக வந்தபோது ஒரு சில அத்தியாயங்கள்தான் படிக்க முடிந்தது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இப்புத்தகத்தை அடுத்து படிப்பதற்காக எடுத்து வைத்திருக்கிறேன்.

இந்த வலைப்பதிவிலும் இத்தொடர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

4. படிக்கவிருக்கும் புத்தகம்: நான் புரிந்து கொண்ட நபிகள் - அ. மார்க்ஸ்

ஜூன் இரண்டாம் வாரம் தஞ்சை அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக் கழக ஏற்பாட்டில் நடந்த புத்தக் கண்காட்சியில் கண்ணில் பட்டது இந்த புத்தகம். மார்க்ஸியவாதியான அ.மார்க்ஸ் இஸ்லாம் பற்றியும் நபிகள் பற்றியும் என்ன புரிந்து வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் புத்தகத்தை வாங்கி வந்தேன். பிரித்துப் படிக்க இன்னும் வேளை வரவில்லை.

இப்புத்தகம் பற்றிய மதிப்புரை இங்கே.

5. பாதி படித்த புத்தகம்: இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா

திமுக சார்பில் மருங்காபுரி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட கவிஞர் சல்மா எழுதிய புத்தகம் இது. வெளியூர் சென்றிருந்தபோது உறவினர் ஒருவரிடம் இரவல் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். பாதி படிப்பதற்குள் ஊருக்கு புறப்பட வேண்டியதாகி விட்டது. வேறு யாரிடமாவது ‘ஓசி’க்கு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இப்புத்தகத்தை எனக்கு அறிமுகப் படுத்திய நாகூர் ரூமியின் விமரிசனம் இங்கே.

6. மறுவாசிப்பு செய்யவிருக்கும் புத்தகம்: எங்கே பிராமணன்? - சோ

சில வருடங்களுக்கு முன் படித்த புத்தகம். கருத்துக்கள் எதுவும் நினைவிலில்லை. மறுவாசிப்பிற்காக தூசி தட்டி எடுத்து வைத்திருக்கிறேன்.

இப்புத்தகம் பற்றி கண்ணில் பட்ட திண்ணைக் கட்டுரை ஒன்று.

புத்தக விமரிசனம்: ஹெச்.ஜி.ரசூலின் ‘இஸ்லாமியப் பெண்ணியம்’

July 7, 2006

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய கொள்கைகளை விமரிசித்து எழுதி வரும் வேளையில், இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் இவரை ஆதரித்து பாராட்டி, தூபமிட்டு அதில் குளிர் காய்ந்து வரும் சூழ்நிலையில் இவரது நூலாகிய ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ மிகுந்த கவனத்தை பெறுகிறது. இந்நூல் குறித்த ஒரு சிறு விமரிசனமே இக்கட்டுரை.

இப்புத்தகம் எழுத வேண்டிய அவசியத்தை ஹெச்.ஜி.ரசூல் தனது முன்னுரையில் (பக்.3) இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘இஸ்லாமிய ஆண்கள் தங்கள் ஆதிக்கச் செயல்பாட்டை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதும், திருமறை வசனங்களை ஒருசார்பாக பயன்படுத்துவதும், வாழ்வியல் நிலைபாடுகளில் பாரபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது…. இந்நிலையில் திருக்குர்ஆனிலும் ஹதீசுகளிலும் பெண் சார்ந்த நலன்களை பிரதானப் படுத்தும் ‘பெண்ணிய வாசிப்பு’ மிகத் தேவையாக உள்ளது’.

இது வரவேற்கத்தக்க ஒரு அணுகுமுறை என்பதில் சந்தேகம் இல்லை. காலங்காலமாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘இஸ்லாம் பெண்ணியத்திற்கு எதிரான மார்க்கம்’ என நிறுவ முயன்று வருகின்றனர். இஸ்லாத்தின் கொள்கைகளை சரிவர புரிந்து கொள்ளாமல் அவற்றை குருட்டாம்போக்கில் நடைமுறைப் படுத்தும் சில முஸ்லிம்களின் செயல்பாடுகளைத்தான் இவர்கள் ஆதாரங்களாக கொள்கின்றனர். அவ்வாறில்லாமல், ரசூல் மிகச்சரியாக குறிப்பிட்டிருப்பதைப் போல, இஸ்லாமியக் கொள்கைகளை முறையாக விளங்கிக் கொள்வதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஹதீசுகள்தான் சரியான உரைகற்கள். முஸ்லிம்களின் செயல்பாடுகளை இந்த உரைகற்களைக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர, இவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கைகளை விளங்க முயற்சிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

*****

இவ்வாறு தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகத்தில் முதல் ஓரிரண்டு அத்தியாயங்களிலேயே கருத்துக்கள் பிசிறடித்து முரண்பாடுகள் பல்லிளிக்கத் தொடங்கி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு சில:

“ஆண் நினைத்த நேரத்தில் ‘தலாக்’ சொல்லி பெண்ணை விவாகரத்து செய்துவிடலாம்.” (பக்கம் 5)
“இஸ்லாமிய வாழ்க்கை முறையில் தலாக் என்பது மனைவியை நினைத்த நேரத்தில் கணவன் மணவிலக்கு செய்யும் மண முறிவு நிகழ்வாகும்.” (பக்கம் 8 )

என்று கூறும் ரசூல், பக்கம் 9 முழுக்கவே கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்களை தீர்க்க திருக்குர்ஆன் கூறும் தலாக்கின் முன்நிலை நடவடிக்கைகளையும், தலாக் சொல்லுதலில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளையும் விவரிக்கிறார். மேலும் பக்கம் 10-ல் முத்தலாக் சொன்னபிறகு அதே கணவன் மனைவி சேர்ந்து வாழ விரும்பினால் அதற்கான விதிமுறை வெகு கடுமையாக வகுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.

இந்த வழிமுறைகளும் விதிமுறைகளும், தலாக் என்பது குறிப்பிட்ட கால அவகாசங்களை அனுஷ்டித்து, பின்விளைவுகளைப்பற்றி நன்கு யோசித்து, இரு குடும்பத்தாரின் முக்கிய நபர்களை கலந்தாலோசித்து, ‘வேறு வழியே இல்லை’ எனும் பட்சத்தில் தீர்மானிக்க வேண்டிய ஒரு முடிவு என்பதை தெளிவு படுத்துகின்றன. உண்மை இவ்வாறிருக்க, இஸ்லாம் ஏதோ ஆண்களுக்கு நினைத்த மாத்திரத்தில் தலாக் செய்யும் உரிமையை வழங்கியிருக்கிறது என்கிற தொனியில் ரசூல் குறிப்பிட்டிருப்பது மிகத்தவறானது.

ஒரு பெண் எவ்வாறு ‘நினைத்த நேரத்தில்’ பிள்ளை பெற்றுக் கொள்ள இயலாதோ, அதேபோல இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஒரு ஆண் ‘நினைத்த நேரத்தில்’ தலாக் சொல்லவும் முடியாது என்பதுதான் உண்மை.

*****

‘பலதார மணம்’ என்ற அத்தியாயத்தில், “திருமறை வசனத்தில் தங்களுக்கு தேவையான ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து ஆண்கள் தங்கள் ஆதிக்க கருத்தியலுக்கு ஏற்ப இவற்றை வடிவமைத்து நடைமுறைப் படுத்திவிடுகிறார்கள்” என்பது ரசூலின் குற்றச்சாட்டு. (பக்கம் 5)

பல முஸ்லிம்களிடையே இஸ்லாமிய வாழ்வு நெறிமுறைகளைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையும், அவற்றை உள்ளது உள்ளபடி விளங்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அக்கறையின்மையுமே இதன் காரணங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை உடையவர்கள் அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி நீதமாக நடக்க வேண்டும் என்ற திருமறையின் கடுமையான நிபந்தனையையும் ‘மனைவியருக்கிடையே சமமாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் முடியாது (4:129) ‘ என்ற எச்சரிக்கையையும் பார்க்கும்போது, அவ்வாறு நடந்து கொள்ள முடிந்தவர்களுக்கு மட்டுமே பலதார மணத்திற்கான அனுமதி என்பது விளங்கும்.

*****
“இவைகள் அனைத்துமே கணவனுக்கு மாறு செய்யும் பெண்ணை தண்டிக்கவே கூறப்பட்டுள்ளன. ஆனால் மனைவிக்கு மாறு செய்யும் கணவனுக்கு என்ன விதமான தண்டனை என்பது குறித்து அதிக பட்சமும் மௌனமே பதிலாக கிடைக்கிறது” என ஐயத்தை கிளப்புகிறார் ரசூல். அதற்கான பதில் அவரது புத்தகத்திலேயே இருப்பதை, பாவம் ரசூல் அறியவில்லை போலும்.

“விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள் (அந்நூர் அத்தியாயயம் 24, வசனம்:2)” - பக்கம் 33

“திருமணத்திற்கு பிறகு முறை தவறிய பாலியல் குற்றம் இழைத்தவர்களுக்கு ரஜ்ம் என்னும் கல்லெறித் தண்டனை விதிக்கப் படுகிறது” - பக்கம் 34

இவை ரசூல் தனது புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கும், மனைவிக்கு மாறுசெய்த கணவர்களுக்கான தண்டனைகள்.

*****

“திருக்குர்ஆனிலும் ஹதீசுகளிலும் பெண் சார்ந்த நலன்களை பிரதானப் படுத்தும் ‘பெண்ணிய வாசிப்பு’ மிகத் தேவையாக உள்ளது” என்று தொடங்கிய ரசூல், ‘தர்கா கலாச்சாரம்’ என்ற அத்தியாயத்தில் தடுமாறி தடம் புரண்டு நிற்கிறார்.

“குடும்பம், வீடு என்கிற நிறுவனத்திற்குள் அன்றாடம் கட்டுண்டு கிடக்கும் இஸ்லாமியப் பெண்ணுக்கு தர்காக்கள் சமூக அளவில் வரையறுக்கப்பட்ட விடுதலையை உருவாக்கும் கேந்திரமாக செயல்படுகின்றன” என தர்காவிற்காக கொடி பிடிக்கிறார் ரசூல். திருக்குர்ஆனிலோ ஹதீசுகளிலோ அனுமதிக்கப்படாத இது, தனது சொந்தச் சரக்கு என்பதை ரசூல் குறிப்பிட மறந்துவிட்டார் போலும்.

தர்கா சியாரத் என்னும் பழக்கம், ‘வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனே’ என்னும் இஸ்லாத்தின் அடிப்படையையே அசைத்துப் பார்க்கும் ‘இணை வைத்தல்’ என்னும் கொடிய பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லும் அபாயகரமான பாதை என்பதையும் ரசூல் வசதியாக மறந்து விட்டார், அல்லது மறைத்து விட்டார்.

திருமறை வசனங்களை தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப மாற்றி பொருள் கொள்வது எவ்வளவு பெரிய தவறோ, அதே அளவிற்கு இஸ்லாத்தில் இல்லாத, அதன் அடிப்படை கொள்கைகளுக்கு மாற்றமான ‘தர்கா சியாரத்’ போன்ற வழக்கங்களுக்கு இஸ்லாமிய முலாம் பூசுவதும் தவறுதான். முன்னதை கடுமையாக தாக்கும் ரசூல் பின்னதை வலியுறுத்துவது விந்தையே!

*****
‘சாட்சி’ என்ற அத்தியாயம் (பக்கம் 14) போன்ற ஒரு சில இடங்களில் ரசூல் சரியான கருத்துக்களை முன்வைத்திருப்பினும், பொதுவாகவே இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக்கள் தெளிவில்லாமலும், பிரச்னைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மழுப்பலாகவும் தெரிகின்றன. பிறகொரு சந்தர்ப்பத்தில் இந்தக் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படுமேயானால், ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே!’ என நிலையை மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.

திருக்குர்ஆன் மற்றும் ஹதீசுகள் சார்ந்த இஸ்லாமியக் கொள்கைகளும் முஸ்லிம்களின் சில தவறான செயல்பாடுகளும் சரியான முறையில் வித்தியாசப்படுத்தி காட்டப்படாமல், இத்தகைய செயல்பாடுகள் இஸ்லாத்தின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன என்பது போன்ற ஒரு தவறான மனப்பிம்பத்தை இப்புத்தகம் ஏற்படுத்த முயல்கிறது.

சுருக்கமாக, ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ என்பதற்கு சரியான விளக்கத்தை இப்புத்தகம் தரத் தவறிவிட்டது!

நன்றி: திண்ணை

‘கன்வர்ட்’ எனும் சொல்லே குர்ஆனில் இல்லை!

July 5, 2006

கல்லூரி அரங்கு ஒன்றில் தொலைக்காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது!

மாணவர் ஒருவர் எழுந்து வினா தொடுத்தார்..
“என்னுடைய கேள்வி சற்றுக் கடுமையாக இருக்கும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. விளக்கம் பெறவே இந்தக் கேள்வி. மதமாற்றத்தை இஸ்லாம் விரும்புகிறதா? கட்டாயமாக பிறரை மதம் மாற்றுங்கள் எனக் குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதாமே? இது ஏன்? இது சரியா? இஸ்லாம் இதனை ஊக்கப்படுத்துகிறதா?” படபடவென வினாக்களை பொழிந்து விட்டு மாணவர் அமர்ந்தார்.

விளக்கம் சொல்ல எழுந்த அறிஞரின் முகத்தில் வசீகரப் புன்னகை.

“நண்பர் ஒரு அருமையான கேள்வி கேட்டுள்ளார். போலித்தனமோ, பாசாங்கோ இல்லாமல் அவர் வெளிப்படையாக தம் மனதில் இருப்பதை கேட்டுள்ளார். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். மதமாற்றத்தைக் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டத்தை சுருக்கமாகச் சொல்கிறேன்.

நான் குர்ஆனை முழுமையாக ஓதி உணர்ந்தவன். குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் ‘கன்வர்ட்’ (Convert) - மதம் மாற்றுதல் எனும் சொல்லே இல்லை. ஆனால் ‘கன்வே’ (Convey) - எடுத்துரைத்தல் - அறிவித்தல் எனும் சொல் பல இடங்களில் உள்ளது.

இஸ்லாத்தின் கொள்கைகளைப் பிறருக்கு எடுத்துரைக்கலாம்; ஆனால் மதம் மாறும்படி வற்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை” என்ற அந்த மார்க்க அறிஞர், தொடர்ந்து ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

அந்த விளக்கங்களை பொறுமையுடன் கேட்ட அந்த மாணவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், “இஸ்லாம் குறித்து வெகுநட்களாக என் உள்ளத்தில் இருந்த தவறான கருத்து, உங்கள் விளக்கத்தின் மூலம் நீங்கி விட்டது. குர்ஆனின் பரந்த கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டேன்!”

‘இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள்’ என்று அந்தக்காலம் முதல், ‘அரேபியப் பணத்தைக் கொண்டு மதம் மாற்றுகிறார்கள்’ என்று இந்தக்காலம் வரை, இஸ்லாத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காய் சுமத்தப்பட்டு வரும் சூழலில், அவற்றிற்கெல்லாம் ஆணித்தரமான விளக்கத்தை எளிய முறையில் தருகிறது ‘நெஞ்சோடு’ என்னும் நூல்.

‘சமரசம்’ இதழின் பொறுப்பாசிரியர் சிராஜுல் ஹஸன், ‘திணமணி’ நாளிதழின் இணைப்பான ‘வெள்ளிமணி’யில் எழுதிய இஸ்லாமியக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இரண்டு தொகுப்புகளாக வந்திருக்கும் இந்நூல் ஒவ்வொன்றிலும் 25 கட்டுரைகள் இருக்கின்றன. இக்கட்டுரைகள் நூலாசிரியரின் வெவ்வேறு விதமான அனுபவங்களை விவரிக்கிறது.

கவர்ந்திழுக்கும் தலைப்புகள், எளிமையாக கதை சொல்வது போன்ற எழுத்து நடை, இயல்பான உரையாடல்கள், சுற்றி வளைக்காமல் சொல்ல வரும் கருத்தை நேரடியாக சொல்லும் பாங்கு ஆகியவை இந்நூலின் சிறப்பம்சங்களாக மிளிர்கின்றன.

அந்தக் கல்லூரி மாணவருக்கு இருந்த சந்தேகத்தைப் போல இஸ்லாம் குறித்து நிலவும் பல்வேறு ஐயங்களுக்கு எளிமையான விளக்கம் அளிக்கும் வகையில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு சில கட்டுரைத் தலைப்புகள்:

* இறைவனுக்கு எதற்கு இடைத்தரகர்கள்?

* பள்ளிவாசலில் மட்டும்தான் இறைவனா?

* முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளா?

* தர்கா சென்றால் நோய் தீருமா?

* இந்துக்கள் குர்ஆன் படிக்கலாமா?

* இயேசு அழைத்த இறைவன்

* இரண்டு கடவுள்கள் இருந்தால் என்ன தப்பு?

* நீங்கள் வணங்குவது அக்பரைத் தானே?

இது போன்ற கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகமில்லை.

நூல்: நெஞ்சோடு
ஆசிரியர்: சிராஜுல் ஹஸன்
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
இணையம்: www.iftchennai.org
விலை: ரூ 25.00