‘கன்வர்ட்’ எனும் சொல்லே குர்ஆனில் இல்லை!

July 5, 2006

கல்லூரி அரங்கு ஒன்றில் தொலைக்காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது!

மாணவர் ஒருவர் எழுந்து வினா தொடுத்தார்..
“என்னுடைய கேள்வி சற்றுக் கடுமையாக இருக்கும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. விளக்கம் பெறவே இந்தக் கேள்வி. மதமாற்றத்தை இஸ்லாம் விரும்புகிறதா? கட்டாயமாக பிறரை மதம் மாற்றுங்கள் எனக் குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதாமே? இது ஏன்? இது சரியா? இஸ்லாம் இதனை ஊக்கப்படுத்துகிறதா?” படபடவென வினாக்களை பொழிந்து விட்டு மாணவர் அமர்ந்தார்.

விளக்கம் சொல்ல எழுந்த அறிஞரின் முகத்தில் வசீகரப் புன்னகை.

“நண்பர் ஒரு அருமையான கேள்வி கேட்டுள்ளார். போலித்தனமோ, பாசாங்கோ இல்லாமல் அவர் வெளிப்படையாக தம் மனதில் இருப்பதை கேட்டுள்ளார். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். மதமாற்றத்தைக் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டத்தை சுருக்கமாகச் சொல்கிறேன்.

நான் குர்ஆனை முழுமையாக ஓதி உணர்ந்தவன். குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் ‘கன்வர்ட்’ (Convert) - மதம் மாற்றுதல் எனும் சொல்லே இல்லை. ஆனால் ‘கன்வே’ (Convey) - எடுத்துரைத்தல் - அறிவித்தல் எனும் சொல் பல இடங்களில் உள்ளது.

இஸ்லாத்தின் கொள்கைகளைப் பிறருக்கு எடுத்துரைக்கலாம்; ஆனால் மதம் மாறும்படி வற்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை” என்ற அந்த மார்க்க அறிஞர், தொடர்ந்து ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

அந்த விளக்கங்களை பொறுமையுடன் கேட்ட அந்த மாணவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், “இஸ்லாம் குறித்து வெகுநட்களாக என் உள்ளத்தில் இருந்த தவறான கருத்து, உங்கள் விளக்கத்தின் மூலம் நீங்கி விட்டது. குர்ஆனின் பரந்த கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டேன்!”

‘இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள்’ என்று அந்தக்காலம் முதல், ‘அரேபியப் பணத்தைக் கொண்டு மதம் மாற்றுகிறார்கள்’ என்று இந்தக்காலம் வரை, இஸ்லாத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காய் சுமத்தப்பட்டு வரும் சூழலில், அவற்றிற்கெல்லாம் ஆணித்தரமான விளக்கத்தை எளிய முறையில் தருகிறது ‘நெஞ்சோடு’ என்னும் நூல்.

‘சமரசம்’ இதழின் பொறுப்பாசிரியர் சிராஜுல் ஹஸன், ‘திணமணி’ நாளிதழின் இணைப்பான ‘வெள்ளிமணி’யில் எழுதிய இஸ்லாமியக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இரண்டு தொகுப்புகளாக வந்திருக்கும் இந்நூல் ஒவ்வொன்றிலும் 25 கட்டுரைகள் இருக்கின்றன. இக்கட்டுரைகள் நூலாசிரியரின் வெவ்வேறு விதமான அனுபவங்களை விவரிக்கிறது.

கவர்ந்திழுக்கும் தலைப்புகள், எளிமையாக கதை சொல்வது போன்ற எழுத்து நடை, இயல்பான உரையாடல்கள், சுற்றி வளைக்காமல் சொல்ல வரும் கருத்தை நேரடியாக சொல்லும் பாங்கு ஆகியவை இந்நூலின் சிறப்பம்சங்களாக மிளிர்கின்றன.

அந்தக் கல்லூரி மாணவருக்கு இருந்த சந்தேகத்தைப் போல இஸ்லாம் குறித்து நிலவும் பல்வேறு ஐயங்களுக்கு எளிமையான விளக்கம் அளிக்கும் வகையில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு சில கட்டுரைத் தலைப்புகள்:

* இறைவனுக்கு எதற்கு இடைத்தரகர்கள்?

* பள்ளிவாசலில் மட்டும்தான் இறைவனா?

* முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளா?

* தர்கா சென்றால் நோய் தீருமா?

* இந்துக்கள் குர்ஆன் படிக்கலாமா?

* இயேசு அழைத்த இறைவன்

* இரண்டு கடவுள்கள் இருந்தால் என்ன தப்பு?

* நீங்கள் வணங்குவது அக்பரைத் தானே?

இது போன்ற கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகமில்லை.

நூல்: நெஞ்சோடு
ஆசிரியர்: சிராஜுல் ஹஸன்
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
இணையம்: www.iftchennai.org
விலை: ரூ 25.00