ஆறு புத்தகங்கள்!
July 10, 2006நண்பர் நல்லடியார் ஆறு விஷயங்களைப் பற்றி எழுதும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவருக்கு நன்றி சொல்லி, சமீபத்தில் எனது கவனத்தை ஈர்த்த ஆறு புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன்.
1. படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்: ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
நான் படிக்கும் சுந்தர ராமசாமியின் முதல் புத்தகம் இது. மனிதருக்கு நன்றாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது. நாகர்கோவில் வட்டார வழக்கு உரையாடல்கள் கதைக்கு ஒரு தனித்தன்மையை ஏற்படுத்துகின்றன. சாம்பிளுக்கு கொஞ்சம்…
‘.. உங்களுக்குக் கதை தெரியாதா? நல்ல தமிழிலேயே சொல்றேனே. அவருக்கும் அவரு பெஞ்சாதிக்கும் சண்டை வந்திற்று. அவ “கெழவா எப்படியும் போக்களிஞ்சு போ. நான் போறேன் என் மக்கமாருகிட்டே”ன்னு சொல்லி சிலோனுக்கு கம்பி நீட்டிப்போட்டா. அங்கே பொண்ணும் பிள்ளைகளும் அந்தஸ்தாட்டு இருக்குது. இவரு இங்கே பிரஸ்ஸிலேயே அடுப்பை மூட்டிக் கஞ்சிப் போட்டுக்கிட்டு, தலையங்கம் எழுதறேன்னு காகிதத்தைப் பறண்டிக்கிட்டு இருந்தாரு. அப்பம் ஒரு செரங்கு வந்து…’
‘யாருக்கு?’
‘அவருக்குத்தான். முதுகிலே, மொரட்டுச் செரங்கு. அதுக்கு ஒரு நா இவளைக் கூப்பிட்டு மருந்துப் போடச் சொல்லியிருக்காரு…’
‘யாரெ?’
‘கேட்டுக்கிட்டே வாங்களேன்… அவ அந்தாலெ பெருக்கிக் கிட்டிருந்தவ வாரியல மூலையில சாத்திப்போட்டுச் சிரங்குக்கு மருந்து போட்டா.’
காதர் லேசாகச் சிரித்தான்.
இசக்கிக்கு உற்சாகம் கிளம்பி விட்டது.
‘சிரங்குக்கு மருந்து போடுதுக்கு வந்தவா சிரங்கு ஆறினதும் கையெ எடுக்கணுமா வேண்டாமா? எடுத்தாளில்லே. அப்புறம் நான் ஒரு நா பிரிண்டர் சாமுவேலுகிட்டே, “என்ன சாமுவேல் அண்ணேய், இவ கையெ எடுக்க மாட்டேங்காளே” அப்படீன்னு கேட்டேன். அதுக்கு அவன் “இசக்கி அண்ணாச்சி, அது எடுக்குதுக்கு வெச்ச கையில்லே”ன்னு நச்னு சொல்லிப் போட்டான்.’ (பக்கம் 180-181)
இப்புத்தகத்தைப் பற்றி ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட விமரிசனம் இந்தச் சுட்டியில் இருக்கிறது.
2. கேட்டுக் கொண்டிருக்கும் புத்தகம்: ரஹீக் - அஷ்ஷைக் ஸஃபியுர்ரஹ்மான் - தமிழில் அ. உமர் ஷரீஃப்
மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் Muslim World League என்ற இஸ்லாமிய நிறுவனம் நடத்திய உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்நூல், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரபூர்வமாக விவரிக்கிறது. அரபி மொழியில் எழுதப்பட்ட இந்நூலை அ. உமர் ஷரீஃப் தமிழில் மொழி பெயர்த்து ‘தாருல் ஹுதா’ பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ‘தாருல் ஹூதா’ இந்நூலை MP3 சி.டி.க்களாக வெளியிட்டிருக்கிறார்கள். அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில் இப்புத்தகம் படிக்கப் படுவதை காதில் வாங்கிக் கொண்டே புத்தகத்திலும் கண்களை ஓட விடுவது ஒரு வித்தியாசமான வாசிப்பனுவத்தை தருகிறது.
இப்புத்தகம் இந்த இணணயத் தளத்தில் முழுமையாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
3. படிக்கவிருக்கும் புத்தகம்: நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்
அறிமுகம் தேவையில்லாத அளவிற்கு பிரபலமான புத்தகம். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்தபோதே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு யூதராகவோ, கிருஸ்துவராகவோ, முஸ்லிமாகவோ அல்லாத பா.ராகவனின், பாலஸ்தீன் பற்றிய நடுநிலைக் கண்ணோட்டத்திலான ஒரு ஆய்வு நூல். தொடராக வந்தபோது ஒரு சில அத்தியாயங்கள்தான் படிக்க முடிந்தது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இப்புத்தகத்தை அடுத்து படிப்பதற்காக எடுத்து வைத்திருக்கிறேன்.
இந்த வலைப்பதிவிலும் இத்தொடர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
4. படிக்கவிருக்கும் புத்தகம்: நான் புரிந்து கொண்ட நபிகள் - அ. மார்க்ஸ்
ஜூன் இரண்டாம் வாரம் தஞ்சை அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக் கழக ஏற்பாட்டில் நடந்த புத்தக் கண்காட்சியில் கண்ணில் பட்டது இந்த புத்தகம். மார்க்ஸியவாதியான அ.மார்க்ஸ் இஸ்லாம் பற்றியும் நபிகள் பற்றியும் என்ன புரிந்து வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் புத்தகத்தை வாங்கி வந்தேன். பிரித்துப் படிக்க இன்னும் வேளை வரவில்லை.
இப்புத்தகம் பற்றிய மதிப்புரை இங்கே.
5. பாதி படித்த புத்தகம்: இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
திமுக சார்பில் மருங்காபுரி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட கவிஞர் சல்மா எழுதிய புத்தகம் இது. வெளியூர் சென்றிருந்தபோது உறவினர் ஒருவரிடம் இரவல் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். பாதி படிப்பதற்குள் ஊருக்கு புறப்பட வேண்டியதாகி விட்டது. வேறு யாரிடமாவது ‘ஓசி’க்கு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இப்புத்தகத்தை எனக்கு அறிமுகப் படுத்திய நாகூர் ரூமியின் விமரிசனம் இங்கே.
6. மறுவாசிப்பு செய்யவிருக்கும் புத்தகம்: எங்கே பிராமணன்? - சோ
சில வருடங்களுக்கு முன் படித்த புத்தகம். கருத்துக்கள் எதுவும் நினைவிலில்லை. மறுவாசிப்பிற்காக தூசி தட்டி எடுத்து வைத்திருக்கிறேன்.
இப்புத்தகம் பற்றி கண்ணில் பட்ட திண்ணைக் கட்டுரை ஒன்று.
