குமரன் எண்ணம் அவர்களுக்கு நன்றி!
July 17, 2006நேசகுமாரின் பதிவொன்றில் குமரன் எண்ணம் ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார். அவற்றில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத சில கருத்துக்களும் இருப்பினும், ‘துவேஷங்களை பரப்பாதீர்கள்’ என்ற அவருடைய வேண்டுகோளுக்காக அவரை பாராட்டி என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய பின்னூட்டம்: (நான் பாராட்டும் கருத்துக்களை தடித்த எழுத்துக்களாக ஆக்கியிருக்கிறேன்.)
****
நேசக்குமார் அவர்களே
உங்களின் பதிவுகள் முஸ்லீம்கள் அனைவருமே தப்பானவர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே போட்டிருக்கிறீர்கள். இது தவறான கண்ணோட்டம் என்பது என் கருத்து. பாபர் மசூதி இடிப்புக்கு முன் இந்தியாவில் இருந்த முஸ்லீம் தீவிரவாதம் இப்பொழுது பல்மடங்காக அதிகரித்துள்ளது என்பது நிதர்சன உண்மை ஆகவே இந்த மதத் தீவிரவாதங்களுக்கு ஹிந்துக்களும் பொறுப்ப் ஏற்க வேண்டும். முஸ்லீம்கள் என்றாலே தவறு செய்பவர்கள் என்ற உங்களின் கருத்து வலைப் பதிவுகளில் வந்து கொண்டிருக்கும் பிராமிணர்கள் மாமா வேலை செய்பவர்கள் என்று சொல்வதைப் போலத் தான் உள்ளது. இரண்டுமே நகைப்புக்குறியது.
இறைவன் படைக்கும் சமயம் யாரையும் கெட்டவர்களாக படைப்பதில்லை என்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் உண்டு. அது போல ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறப்பதால் ஒருவர் கெட்டவராகி விட மாட்டார். எல்லா மதங்களிலும் குறைகள் உண்டு. எந்த மதமுமே 100 சதம் குறைவில்லாதது என்று கூறி விட முடியாது. ஆகவே நீங்கள் முஸ்லீம் மதம் மட்டும் தவறானது என்று கூறி வருவது சரியல்ல என்பது என் கருத்து. இந்தியா மட்டும் அல்ல மனித குலத்திற்கே மதங்களால் பிரச்சனைகள்தாம். அதனால் மதம் என்ற முறையே அழிந்து விட்டால்தான் பிரச்சனைகள் சரியாகும்.அதுவரை உங்களைப் போன்றவர்கள் ஒரு மத துவேஷம் கொண்டு எழுதி வருவது துவேஷங்களைப் பரப்பி அழிவையே கொண்டு வரும்.
நான் கூறுவதால் உங்களின் நிலைப்பாடுகள் மாறிவிடும் என்று எதிர்பார்த்து நான் இதனை எழுதவில்லை. ஒவ்வொருவரின் கொள்கைகளும் அவர்களுடைய எண்ணங்களும் அவர்கள் அந்தந்த கருத்துக்களைப் பற்றி பல காலம் யோசிப்பதால் உண்டாவது என்பது எனக்குத் தெரியும். நான் உங்களைக் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் இது போன்ற கருத்துக்களை நீங்கள் வெளியிடுவதால் நன்மையா அல்லது தீமையா என்று யோசித்துப் பாருங்கள். துவேஷங்களை பரப்புவதால் நன்மையா தீமையா என்று யோசியுங்கள். போரினால் இன்று யாருக்குமே நன்மை கிடையாது போர் என்று வந்தால் அழியப் போவது இரு தரப்புடன் மனித குலமும்தான். ஆகவே அன்பே சிவம், அன்பே கிறிஸ்து, அன்பே அல்லா என்று நாம் உணர வேண்டும்.
சண்டைகளும் சச்சரவுகளும் என்றுமே எதற்குமே தீர்வாக முடியாது. அதுவும் இரு தரப்புமே அழிந்து போகும் என்னும் பொழுது.
வாழ்க வையகம்!!!! வாழ்க வளமுடன்!!!!
நான் எந்த வித சர்ச்சைக்காகவும் இந்தப் பின்னூட்டத்தை இடவில்லை. இதனை சர்ச்சை நோக்குடன் பாராமல் பரந்த மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
****
நன்றி குமரன் எண்ணம் அவர்களே!
இதற்கு நேசகுமாரின் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன்.
