ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!

August 18, 2006

‘இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம்’ என்ற துவேஷப் பிரச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப் பட்டு வருகிறது. ஊடகங்களின் துணையோடு இவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. உரக்கச் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? இவர்கள் சொல்வது போல், இஸ்லாம் வன்முறையை தூண்டும் மார்க்கமா?

குர்ஆன் என்ன சொல்கிறது?

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரை கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” (குர்ஆன் 5:32). அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் ஒரு உதாரணம்.

ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘இஸ்லாம் வன்முறையைத் தூண்டுகிறது’ என்கிற தமது துவேஷப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்ப்பதற்காக அடிக்கடி எடுத்துக்காட்டும் திருமறை வசனங்களிள் ஒன்று, அத்தியாயம் 9-ன் 5-ம் வசனம். “முஷ்ரிக் (எனப்படும் இறைவனுக்கு இணைவைப்பவர்)களை கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களை பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்” எனும் இந்த வசனத்தை பிரபல பத்திரிக்கையாளர் அருண் ஷோரி கூட தனது ‘ஃபத்வாக்களின் உலகம்’ என்ற நூலில் பக்கம் 572-ல் மேற்கோள் காட்டி இஸ்லாம் மீது அவதூறு சுமத்தியிருக்கிறறர். இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள், இதே வசனத்திற்கு முன்புள்ள 9:4-ஐயும் பின்புள்ள 9:6-ஐயும் கவனமாக தவிர்த்து விடுவார்கள். அருண் ஷோரியும் அதைத்தான் செய்திருக்கிறார்.

இந்த வசனம் எந்தச் சூழலில் யாரைக் குறித்து சொல்லப் பட்டது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில், இந்த அத்தியாயத்தை முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டியது அவசியம். அதோடு இந்த வசனம் இறங்கியதன் பிண்ணனியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிமல்லாதவர்களில் சில பிரிவினர் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு, அதற்கு மாறு செய்யாமலும், முஸ்லிம்களின் எதிரிகளுக்கு உதவி செய்யாமலும் இருக்கும் கூட்டத்தினருடன் ‘அந்த உடன்படிக்கையை பூரணமாக நிறைவேற்றுங்கள்’ என வசனம் 9:4 மூலம் நபி அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். அந்த ஒப்பந்தத்திற்கு மாறு செய்பவர்களுடன் சண்டையிடும்படி வசனம் 9:5-ல் கூறும் அதே நேரத்தில், அவர்களில் யாரேனும் புகலிடம் தேடி வந்தால் அவர்களுக்கு அபயமளிக்கும்படியும் வசனம் 9:6-ல் இறைவன் அறிவுறுத்துகிறான்.

இந்த உண்மையான விளக்கத்தை மறைத்து, சண்டையிடும்படி சொல்லும் வசனம் 9:5-ஐ மட்டும் out of context-ல் எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஜிஹாத் என்றால் என்ன?

இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.

‘முயற்சித்தல்’ எனப் பொருள்படும் ‘ஜஹத’ எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் ‘ஜிஹாத்’ எனும் பதம். இச்சொல்லுக்கு ‘அயராத போராட்டம்’, ‘விடா முயற்சி’, ‘கடின உழைப்பு’ என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் ‘ஜிஹாத்’ என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.

1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.

2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.

3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்

4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.

இவற்றுள் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.

மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்;

‘உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்’ (60:7)

‘மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்’. (60:8)

‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்’. (60:9)

அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், ‘ஜிஹாத்’ என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம் 4-ம் தான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனத்துடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், “உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்றார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்!” என்றார். “பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு” என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!” (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி). இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது ” பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்” எனறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்”. (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)

ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.

பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூற்றுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு.

( ஜிஹாத் பற்றி மேலும் அறிந்து கொள்ள: சுட்டி1 - சுட்டி2 - சுட்டி3 )

பயங்கரவாதத்தைப் பற்றி இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து என்ன?

‘பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தாங்கள் குர்ஆனையே பின்பற்றுவதாக சொல்கிறார்களே!’ என ஒரு சந்தேகம் எழலாம். இஸ்லாத்தின் கொள்கைகளை சில முஸ்லிம்களே சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். தங்களது தவறான புரிதல்களால் தனது மார்க்கத்திற்கு தாமே களங்கம் ஏற்படுத்துவதை இவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அத்தகையோரை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள். செப்-11 தாக்குதலைக் கண்டித்து மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் தலைவர்கள், அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளைச் சில வலைத்தளங்களில் தொகுத்து வைத்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலை கண்டித்து உடனடியாக அறிக்கை வெளியிட்டவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மார்க்க அறிஞர் எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழக தலைமை இமாம் ஷேக் முஹம்மது சையது தன்தாவி அவர்கள். ‘தீவிரவாதம் என்பது இஸ்லாத்திற்கு எதிரி ஆகும். தீவிரவாதத்திற்கும், தனது நாட்டை பாதுகாக்க, ஒடுக்குமுறைக்கு எதிராக போன்ற காரணங்களுக்காக இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஜிஹாதிற்கும் இடையில் உள்ள வித்தியாசம், வானுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் போன்றதாகும்’ என்பது இமாம் தன்தாவி அவர்களின் கருத்து.

இத்தாக்குதலைக் கண்டித்தவர்களில் முக்கியமான மற்றொரு மார்க்க அறிஞர் டாக்டர் யூசுப் அல் கர்ளாவி அவர்கள். ‘இஸ்லாம் நல்லிணக்கப் போக்கை விரும்பும் மார்க்கம். இது மனித உயிர்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கொடிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது.’ என இம்மார்க்க அறிஞர் கருத்து தெரிவித்திருக்கிறார். இவர் 1999-லிருந்தே அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு பாதகம் ஏற்படுத்தும் பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதற்கும் அத்தகைய செயல்களை செய்பவர்கள் யாராக இருப்பினும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதற்கும் இவையே அத்தாட்சிகள்.

****

இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம் மார்க்கமோ பிற முஸ்லிம்களோ எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும், அவ்வாறு தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப் படுத்தும் பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறதா, இல்லையா? இந்தப் பொறுப்பை அவர்கள் எவ்வழியில் நிறைவேற்ற இயலும்?

விளக்கம் பகுதி 4-ல்
(தொடரும்)

நன்றி: திண்ணை August 17, 2006

இக்கட்டுரைத் தொடரின்
பகுதி-1 குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!
பகுதி-2 இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!

ஒரு தாயின் கடைசி தருணங்கள்!

August 11, 2006

இந்தப் படங்களுக்கு விளக்கம் தேவையில்லை!

படம்1

படம்2

படம்3

படம்4

சின்னக்கருப்பனின் ‘திண்ணை’ கட்டுரை!

இந்திய முஸ்லிம்கள் லெபனான் மக்களுக்காக அனுதாபப்படுவது அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமல்ல. மதங்களைத் தாண்டிய மனிதாபிமானம் அது. இன்னும் சொல்லப்போனால், இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சுன்னி முஸ்லிம்கள். லெபனான் (குறிப்பாக ஹிஸ்புல்லா இயக்கம்) பெருமளவில் ஷியா முஸ்லிம்களை கொண்டது.
இந்த வேற்றுமைகளை மறக்கடித்து துயருறும் அம்மக்களுக்காக உதவி எதையும் செய்ய முடியாவிட்டாலும், மனதளவிலாவது அவர்களுக்காக அனுதாபப்பட வைப்பது மதமல்ல, மனிதாபிமானம்தான்.

லெபனான் மக்கள் மீதான இஸ்ரேலின் அராஜகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் மனிதாபிமானம் உள்ள அனைவரின் வேண்டுகோளாக இருக்கும். இதற்கும் சில விதிவிலக்குகள் உண்டு.
independent

லெபனானியருக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பதால், முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே சிலர் இஸ்ரேலை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்று எண்ணுகிறார்கள் போலும். இவர்களின் கவனம் லெபனானில் நடக்கும் அராஜகத்தை விட, ‘முஸ்லிம்கள் நிற்கும் அதே அணியில் நாமும் நிற்பதா?’ என்ற வறட்டுக் கவுரத்தில் இருப்பதாகத்தான் படுகிறது.

இதன் தொடர்பில், இந்த வார திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. நடுநிலைக் கண்ணோட்டத்தில் நல்லதொரு அலசல். ‘பாலஸ்தீனர்களுக்காகவும், தெற்கு லெபனானில் வாழும் ஷியா மக்களுக்காகவும் எனது ஆதரவு’ என்று சொல்லும் அதேவேளையில், டார்·புரில் அராபிய முஸ்லிம்கள் கறுப்பின முஸ்லிம்களைத் தாக்கிக் கற்பழித்துச் சூரையாடும்போதும், சோமாலியாவில் கென்யா நோக்கித் துரத்தப்படும் மக்களுக்காகவும் இதே தீவிரத்துடன் இவர்கள் ஏன் போராடவில்லை என இடது சாரிகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இவர் சாடத் தவறவில்லை.

இக்கட்டுரையை இங்கு பதிக்க அனுமதி அளித்த திரு. சின்னக் கருப்பன் அவர்களுக்கு நன்றி!

*****

திரு நேசகுமாருக்கு பதில்!

By சின்னக்கருப்பன்

ஷியா சுன்னி பிளவுக்கும் ஈரான் ஈராக் பிளவுக்கும் என்ன சம்பந்தம்? ஈராக்கின் பெரும்பான்மை ஷியா. ஈரானின் பெரும்பான்மையும் ஷியாதான். ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மையும் பாகிஸ்தானில் பெரும்பான்மையும் சுன்னிதான். ஏன் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் எல்லைக்கோட்டுக்காக அடித்துக்கொள்கின்றன? இத்தனை வேற்றுமைகளோடும் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நேசக்குமாரே கூறுகிறார். ஏன் இந்தியாவுக்கு நேபாளத்துக்கும் பனிப்போர் வெகுகாலமாக நிலவிவருகிறது? இதனாலெல்லாம்தான் நான் கூறினேன். சம அந்தஸ்துள்ள குடிமகன்களாக உள்ள நாட்டில் “வெளியார் தூண்டுதல் இல்லையென்றால்” சமாதானமாகவே பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற உத்திரவாதம் இருக்கும். அதனால்தான் இந்தியாவின் காஷ்மீர் பிரச்னைக்கும், இந்தியாவில் வெடிக்கும் குண்டுகளுக்கும் காரணம் பாகிஸ்தானே அல்லாது, இந்திய முஸ்லிம்கள் ஆதார காரணம் இல்லை என்று எழுதினேன்.

நிச்சயம் பாகிஸ்தானாலோ, சவூதி அரேபியாவாலோ வளர்த்துவிடப்பட்ட ஒரு சில கறுப்பு ஆடுகளை கண்டுபிடிப்பது கடினம் இல்லைதான். ஆனால், அதுவே எல்லா முஸ்லீம்களையும் குற்றவாளிகளாக்கி விடாது. ஸ்டாலினும் லெனினும் எப்படிப்பட்ட கொடுங்கோலர்கள் என்பதும், சமத்துவம் மிக்க சமுதாயம் என்ற பெயரில் எத்தனை அட்டூழியங்கள் செய்தார்கள் என்பதும் ஆவணமாகக் காணக்கிடைக்கிறது. எந்த ஒரு படிப்பறிவுள்ள மனிதனும் இந்த கொடுங்கோலர்களை ஆதரிக்க மாட்டான். ஆனால், இந்தியாவில் இந்த கொடுங்கோலர்களை படங்கள் வைத்து பூஜிக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளும், தொண்டர்களும் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் இந்துக்களே. அதற்காக எல்லா இந்துக்களையும் கூண்டில் ஏற்றபோகிறோமா? சரி 150 முஸ்லீம் தீவிரவாதிகள் இல்லை என்றால் எத்தனை பேர்? சிமி ஒரு மாணவர் அமைப்பாகத்தான் இருந்தது. அதில் பல முஸ்லீம் மாணவர்கள் மதத்தின் அடிப்படையில்தான் சேர்ந்தார்களே அல்லாது, இந்தியாவுக்கு எதிரான போராட்டம் என்ற காரணத்தினாலா சேர்ந்தார்கள்? இந்தியாவில் ஏபிவிபி என்ற ஆர்.எஸ்.எஸ் மாணவர் சங்கம், எஸ்.எ·ப்.ஐ என்ற கம்யூனிஸ்ட் மாணவர் சங்கம் போன்ற சங்கங்கள் இருக்கும்போது, முஸ்லீம் மாணவர்கள் தங்களுக்கு என ஒரு சங்கத்தை அமைத்துக்கொள்ள விழைந்ததில் என்ன தவறு இருக்க முடியும்? அதன் தலைமையில் இருந்த சில தீவிரவாதிகளால் தவறான வழிக்கு அதனை கொண்டு சென்றதால், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. அது தீவிரவாதத்தை நோக்கி போகிறது என்றதும் அதிலிருந்து விலகியவர்கள் ஏராளமாகத்தான் இருப்பார்கள். சிமி அமைப்பில் இத்தனை மாணவர்கள் இருந்தார்கள் அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று பேசுவது அப்பாவிகளை குற்றம் சாட்டுவதுதான்.

சிறையில் இருக்கும் பலரை குற்றவாளி என்று நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர்கள் வெளியே சென்று சந்தோஷமாக தற்கொலைப் படையாக சாவார்கள் என்று எழுதுகிறீர்கள். ஒருவர் குற்றம் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் அவரை குற்றவாளியாக நடத்துவது எந்த ஒரு சட்டத்தின் கீழும் சாத்தியமில்லாதது. இதனைத்தான் “புரோபைலிங்” என்று மக்கள் எதிர்க்க வேண்டும். ஒருவர் தவறு செய்யும் முன்னர் அவருக்கு தண்டனை கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. ஏன் தவறான எண்ணத்துக்காகக்கூட தண்டனை கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எது சரியான எண்ணம் எது தவறான எண்ணம் என்பதை யார் நிர்ணயிப்பது?

சரி இன்றைக்கு முஸ்லீம்கள் மீது பழியை போடுகிறார்கள். நாளை தேவர்கள் மீதோ அல்லது தலித்துகள் மீதோ இப்படிப்பட்ட ஒட்டுமொத்த பழி விழாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? அப்போதும் இடைவிடாத பத்திரிக்கை பிரச்சாரங்களால், அப்பாவிகள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை சகித்துக்கொள்ள வேண்டுமா? பார்ப்பனர் சிலர் செய்த தவறுகளுக்காக (உண்மையோ பொய்யோ, அதுதான் பிரச்சாரம்) முழு பார்ப்பன குலமும் இன்று தூற்றப்படுகிறது. அதனை சகித்துக்கொள்ள வேண்டுமா? மனித உரிமை மீறல்களைச் சகித்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆபத்தானது. நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும். அது ஆபத்தானது. அந்த மதம்தான் அந்த ஜாதிதான் என்று கை காட்டிவிட்டு போவது இன்றைக்கு எளிதாக இருக்கலாம். நாளைக்கு உங்கள் ஜாதிக்கும் உங்கள் மதத்துக்கும் அதே நிலை நேரும்போது, உங்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது, நீங்கள் உரத்த குரலெழுப்ப உங்களுக்கு ஒருவிதமான தார்மீக உரிமையும் இருக்காது.

இந்து ஆன்மீக பாரம்பரியம் தலித்துகளுக்காக உரத்த குரலெழுப்பி வருவது அவருக்கு தெரியாமல் இருக்கலாம். கண்ணன் பாண்டவர்களையும் துரியோதனாதிகளையும் ஒதுக்கி விதுரன் வீட்டில் தங்கியதிலிருந்து ராமானுஜர் தலித்துகளுக்காக போராடியதிலிருந்து, நாராயண குரு ஈழவர்களுக்காக உழைத்ததிலிருந்து இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்கள். இந்த சமூகத்தில் தலித்துகளின் நிலைக்கு சமூக அமைப்பு காரணம். அந்த சமூக அமைப்பில் இருக்கும் தலித்துகளின் நிலைமைக்கு எதிராக குரலெழுப்பி வருவது இந்து ஆன்மீக பாரம்பரியம். அந்த ஆன்மீக பாரம்பரியமே, உலகெங்கும் இருந்த அடிமை முறை இந்தியாவில் இல்லாமல் செய்தது. இராமன் குகனை தன் சகோதரனாக வரிக்கும் போதும், மாட்டிடையன் கண்ணன் பரம்பிரம்மமாக இருக்கும்போதும், இந்து ஆன்மீகம் சமூக நிலைகளை தாண்டி மனிதர்களை மதிக்கவே மக்களுக்கு போதிக்கிறது. அதுவே சங்கரருக்கு புலையர் வடிவில் ஈசன் வந்து போதிப்பதாகவும் புராணம் எழுதப்பட வைக்கிறது. ஏற்றத்தாழ்வு கொண்ட சமூக நிலை மனித சமுதாயத்துக்கு பொது. எல்லா மனித சமுதாயங்களுக்கும் பொது. ஆனால், ஏற்றத்தாழ்வை தாண்டி மனிதனை மனிதனாக பார்க்க வைப்பது ஆன்மீகம். என்னைப்பொறுத்த மட்டில் இந்து ஆன்மீகம்.

என் ஆதரவு யாருக்கும் தேவையில்லை, அது யாருக்கும் பிரயோசனமில்லை என்றாலும், ஒரு கேள்வி என்று வந்தால், நிச்சயம் என் ஆதரவு பாலஸ்தீனர்களுக்காகவும், தெற்கு லெபனானில் வாழும் ஷியா மக்களுக்காகவும் தான் இருக்கும்.

பாலஸ்தீனர்களின் போராட்டம் பாண்டவர்களின் போராட்டம் போன்றது. யுதிஷ்டிரன் கண்ணனை துரியோதனனிடம் சமாதானம் பேச அனுப்பும்போது சொல்கிறான். பாண்டவர்களுக்கு ஐந்து நாடு கொடுக்கச் சொல், இல்லையேல் ஐந்து ஊர் கொடுக்கச்சொல். இல்லையேல் ஐந்து வீடுகள் கொடுக்கச்சொல் என்று அனுப்பி வைக்கிறான். துரியோதனன், ஐந்து ஊசி குத்தும் இடம் கூட கொடுக்க முடியாது என்றபின்னரே யுத்தம் ஆரம்பிக்கிறது. துரியோதனன் போல நிற்கும் இஸ்ரேல் இன்று பாலஸ்தீனர்களுக்கு செய்வது அதர்மம்.

இன்று பாலஸ்தீனர்களின் சொந்த வாழ்விடங்களில் அவர்களது வீடு பத்திரமில்லை. அவர்கள் வாழும் வீடுகள் ஏதேனும் காரணம் சொல்லி இடிக்கப்படுகின்றன. அவர்களது நிலங்கள் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு யூதர்கள் வாழும் செட்டில்மெண்டுகளாக ஆக்கப்படுகின்றன. காஜா பகுதியிலும், மேற்கு கரை பகுதியிலும் யூதர்கள் ஒரு செட்டில்மெண்டிலிருந்து மறு செட்டில்மெண்டுக்குப் போகும் சாலைகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. காஜா பகுதியிலும் மேற்குக்கரை பகுதியிலும் பாலஸ்தீன அரசு இருக்கிறது என்று சொல்வது கேலிக்கூத்தான விஷயம். தன்னுடைய ஆக்கிரமிப்புக்கு இன்று தெற்கு லெபனானில் இதே வேலையை அமெரிக்க அண்ணன் உதவி கொண்டு செய்துகொண்டிருக்கிறது. இதற்கு எந்த ஒரு மனிதாபிமானம் உள்ள மனிதனும் ஆதரவு தெரிவிக்க முடியாது. அப்படிப்பட்ட வேலையை இந்தியா செய்தாலும் நான் எதிர்ப்பேன். அதுதான் இந்து தர்மம் எனக்குச் சொல்லும் பாடம்.

ஏன் போர்முறைக்கும் கூட தர்மம் இருக்கிறது. அப்பாவி மக்கள் மீது குண்டு மழையை ஆகாய விமானத்திலிருந்து வீசும் இஸ்ரேலை எந்த இந்து ஆதரிக்க முடியும்? ஆயுதம் ஏந்தாத போர்வீரனோடு கூட போர் புரியாத தர்மமே இராமன் காட்டும் தர்மம். ஆயுதம் இழந்த இராவணனையும் இன்று போய் நாளை வா என்று அனுப்புகிறான் பெருந்தகை. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம், எப்படி அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழியும் இஸ்ரேலை ஆதரிக்க முடியும்? மக்கள் கூட்டத்துக்கு நடுவிலிருந்து இராணுவத்தை நோக்கி சுட்டு பொதுமக்களை பலிகடா ஆக்கும் போர்முறையை பல தீவிரவாதக் குழுக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அப்படிப்பட்ட போர்முறையை ஆதரித்து வளர்க்கும், சகித்துக்கொள்ளும் மக்கள் தங்களுக்கே ஊறு ஏற்படுத்திக்கொள்கிறார்கள். நியாயமான காரணங்களுக்காகக் கூட அநியாயமான போர்முறையை ஏற்றுக்கொள்வதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அன்றைய ராவணன்கள் கூட கடைபிடிக்காத அதர்மப் போர்முறைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். என்னவென்பது? அப்படிப்பட்ட அதர்மப் போர் புரியும்போது, கையை கட்டிக்கொண்டு போர் புரிந்து ஏராளமாய் இழப்பை பல ராணுவங்கள் பெற்றிருக்கின்றன. ஆனால், இஸ்ரேலிய ராணுவம் அப்படி ஏதும் தன் கையை கட்டிக்கொள்வதில்லை. இன்று பாலஸ்தீன மக்கள் மீது, ஆயுதம் தாங்காத பாலஸ்தீன மக்கள் மீது மேற்குக்கரையிலும் காஜா பகுதியிலும் அடக்குமுறையை அத்துமீறி செய்வது இஸ்ரேலிய ராணுவமே என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். தெற்கு லெபனானில் ஹிஸ்பொல்லா இல்லையென்றால், காலாற்படையாலேயே உள்ளே புகுந்துவிடுவார்கள் இஸ்ரேலியர்கள். அவர்களுக்கு தேவை அந்த ஆற்றின் நீர். இதற்காகத்தான் கோலன் ஹைட்சும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

இஸ்ரேல் தனது பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை தன் அருகாமை நாடுகளின் ஒத்துழைப்பு, நட்பு மூலமாகத்தான் பெற முடியும். இன்றைக்கு இஸ்ரேலுக்கு இருக்கும் அமெரிக்க அண்ணன் கொடுக்கும் பாதுகாப்பின் தைரியத்தில் பேயாட்டம் ஆடினால், அது அதன் எதிர்காலத்துக்குத்தான் ஆபத்தாக முடியும். இன்றைக்கு அமெரிக்கா கொடுக்கும் பாதுகாப்பை ஆக்கப்பூர்வமாக உபயோகப்படுத்தி அருகாமை நாடுகளுடனும், பாலஸ்தீனத்துடனும் நட்பை உருவாக்க செலவழிக்க வேண்டும். ஏறத்தாழ இதே பிரச்னைதான் பாகிஸ்தானுக்கும். அதுவும் அமெரிக்க அண்ணன் கொடுக்கும் பாதுகாப்பின் தைரியத்தில் ஆட்டம் போடுகிறது. அது அதற்கே ஆபத்தாகத்தான் முடியும். ஏற்கெனவே அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு புரிந்ததா என்றுதான் தெரியவில்லை. வாஜ்பாயி பிரதமராக இருக்கும்போது சொன்னார். “என் நண்பனை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். ஆனால் என் பக்கத்து வீட்டுக்காரனை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாது. பக்கத்து வீட்டுக்காரனுடன் நான் நட்பாகத்தான் இருந்தாக வேண்டும்”. பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய அரசியல் அறிவுரை அது.

ஆனால் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் இடதுசாரிகளும், முஸ்லீம் அரசியல் வாதிகளும், டார்·புரில் அராபிய முஸ்லிம்கள் கறுப்பின முஸ்லிம்களைத் தாக்கிக் கற்பழித்துச் சூரையாடும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இதே தீவிரத்துடன் போராட்டம் நடத்தவில்லை என்பது பற்றிக் கவலை தெரிவியுங்கள். அது நியாயம். சோமாலியாவில் கென்யா நோக்கித் துரத்தப்படும் மக்களுக்காக போராடுவதில்லை என்று கவலை தெரிவியுங்கள் அது நியாயம். பாகிஸ்தானிலும், ஈராக்கிலும், ஷியா சுனி போராட்டங்களில் பிளவுபட்ட முஸ்லீம் சமூகம் மசூதிகளைத் தீக்கிரையாற்றுவது பற்றி இஸ்லாமிய அரசியல்வாதிகள் கவலை கொள்வதில்லை என்று ஆதங்கப் படுங்கள் அது நியாயம். ஆனால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் நியாயமானது என்று சொல்லாதீர்கள்.

இடதுசாரிகளும், முலாயம் சிங் யாதவ் போன்றவர்களும், காங்கிரஸ் கட்சியும் முஸ்லீம் ஆதரவு என்ற பெயரில் நியாயமான போராட்டங்களில் ஈடுபடாமல், வெறும் யூத வெறுப்பை வளர்க்கும் போராட்டங்களில் மட்டும் தம் ஆதரவைத் தருகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் இஸ்ரேல் நாடு இந்த விஷயத்தில் நடந்து கொண்டது சரி என்பது இதன் பொருள் அல்ல.

பாலஸ்தீன மக்களைப் போன்றே, சூடானில் டார்பாரில் துயருரும் கறுப்பின மக்களும். அம்மக்களைப் போன்றே சோமாலியாவிலிருந்து கென்யா ஓடும் அகதி மக்களும். அவர்களைப் பற்றி தெருவில் போராட்டம் நடத்தமாட்டார்கள் நம் இடது சாரியினர். அவர்களுக்கு கறுப்பின மக்களின் ஓட்டு தேவையில்லையே?

உலகளாவிய அரசு என்பதிலும் எனக்கு நாட்டமில்லை. சிறுசிறு நாடுகளாக பிராந்திய அணுகுமுறை என்பதிலும் எனக்கு நாட்டமில்லை. உலகளாவிய அரசு இயந்திரங்கள் எதிர்க்கமுடியாத சர்வாதிகாரத்தையே கொண்டுவரும் என்று நம்புகிறேன். பிராந்திய அணுகுமுறை, இஸ்ரேல் பிரச்னை போல தீர்க்கப்பட முடியாததாகவே இருக்கும். ஏனெனில், அங்கு இருக்கும் பாலஸ்தீன இஸ்ரேல் கட்சியினரின் பின்னால் உலகளாவிய ராஜதந்திர காய்நகர்த்தல்களும் மூலங்களுக்கான போட்டியும்தான் இருக்கும்.

ஒரு ஜனநாயக நாடு இன்னொரு ஜனநாயக நாட்டின் மீது போர் தொடுத்ததில்லை என்பதை பலர் அடிக்கடி கூறுவார்கள். பிரச்னைகளின் தீர்வு ஜனநாயக அதிகாரப்பரவலை விரிவுபடுத்துவதே என்பது தவிர எனக்கு வேறெதும் தோன்றவில்லை

நன்றி: திண்ணை

எ.பி.க: ஒரு கேள்வி!

August 7, 2006

மேத்தா

உன்னுடைய கொடியை
உயர்த்திப் பிடித்துக் கொள்!
எதற்காக
அடுத்தவர் கொடிக்கம்பத்தை
அறுக்கத் துடிக்கிறாய்?

உன்னுடைய மார்க்கத்தில்
பூக்களைத் தூவிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் மார்க்கத்தில்
முட்களைப் பரப்புகிறாய்?

உன்னுடைய படத்தை
ஆணியில் மாட்டிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் படத்தின் மேல்
ஆணி அறைகிறாய்?

உன்னுடைய நிறைகளை
ஊரெங்கும் சொல்லிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் குறைகளை
ஆராய்ச்சி செய்கிறாய்?

உன்னுடைய தோட்டத்தில்
வேலி போட்டுக் கொள்!
எதற்காக
அடுத்தவர் தோட்டத்தில்
அத்து மீறுகிறாய்?

ஊரை எழுதுகிறாய்!
பேரை எழுதுகிறாய்!
எப்போது
உண்மையில் நீ யாரென்று
எழுதப் போகிறாய்?

மதத்தைச் சொல்கிறாய்!
சாதியைச் சொல்கிறாய்!
எப்போது
மனிதன் என்று நீ
சொல்லப் போகிறாய்?

****
“மனிதனைத் தேடி..” - மு. மேத்தா
கவிதா பதிப்பகம், சென்னை-17

இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!

August 4, 2006

காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1948-ல் காந்தி கொலைக்கு பிறகு, 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும், பிறகு 1992-ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகும், இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கம்தான் இது. இந்த இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, ‘சிமி (SIMI) போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்று சொல்கிறார். இந்தத் துவேஷத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இந்திய ஜனத்தொகையில் சுமார் 15% சதவிகிதமே இருக்கும் சிறுபான்மை சமுதாயத்தினர் இந்திய முஸ்லிம்கள் . இந்தச் சமுதாயத்திற்கு எந்த மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு இல்லை, சமுதாயத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த வலிமையான தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் இல்லை. பொருளாதாரத்தில் மிக நலிவடைந்த பிரிவினர் இவர்கள். கல்வியறிவிலும் இச்சமூகம் மிகவும் பின் தங்கியிருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தினரால் நடத்தப்படும் கல்லூரிகளில் கூட முஸ்லிம்களைவிட முஸ்லிமல்லாத மாணவர்கள் எண்ணிக்கையே அதிக அளவில் உள்ளது. ஊடகங்களும் இச்சமுதாயத்திற்கு எதிரான போக்கையே வெளிப்படுத்துகின்றன. இத்தகைய எளிய, ஒடுக்கப்பட்ட சமுதாயம்தான் இந்திய முஸ்லிம் சமுதாயம். இச்சமுதாயத்தின் மீது அத்வானி போன்றவர்களுக்கு குரோதம் ஏற்படக் காரணம் என்னவாக இருக்கும் ?

இக்கேள்விகளுக்குப் பேரா. அ. மார்க்ஸ் பதிலளிக்கிறார்:

‘ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறி வைப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதலில்: (இந்தியாவில்) இந்து மதத்திற்கு அடுத்த பெரிய மதம் இஸ்லாம். சில மாவட்டங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர்.

அடுத்தது: வரலாற்று ரீதியாய் இஸ்லாமியரை ‘எதிரி’யாக நிறுத்துவது எளிது.

கடைசியாக: இந்துமதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக்கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்.

கிறிஸ்தவம் உட்படப் பிறமதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை வென்றது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் குரு கோல்வல்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான். இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்கு சவாலாக இருந்தது” என வயிறெரிந்தார்.

ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தை பேணுபவை. ‘இமாசலப் பிரதேச’ மாநில பாரதீய ஜனதா அரசு பதவியிலிருந்த கொஞ்ச காலத்தில் செய்த காரியங்களிலொன்று ‘மணலி’ என்ற இடத்தில் ‘மனு’ கோயிலைப் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பித்தது. இவர்கள் இஸ்லாமை முதன்மை எதிரியாக கருதாமல் வேறென்ன செய்வார்கள்?” (அ.மார்க்ஸ் எழுதிய ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்’ - பக்கம் 28)

பேரா. அ.மார்க்ஸ் மேலும் சொல்கிறார்;

“இந்தியாவைப் பொருத்தமட்டில் சென்ற ஒரு நூற்றாண்டு காலமாக இங்கே உருப்பெற்ற இந்துத்துவ சிந்தனைகள் முதன்மையாக இஸ்லாத்தையே குறிவைத்து இயங்கின. இந்தியா-பாகிஸ்தான் தேசப் பிரிவினையை ஒட்டிய கொடிய வகுப்புக் கலவரங்கள் மத்தியில் இந்தியா சுதந்திரமடைந்தது.

அன்று தொட்டு இந்திய முஸ்லிம்களை இந்தியாவிற்கு விசுவாசமற்றவர்களாகவும், சந்தேகத்திற்குரியவர்களாகவும் பார்க்கக்கூடிய பார்வை ஒன்றை இந்துத்துவ சக்திகள் தவிர, காங்கிரசிலிருந்த இந்துத்துவ ஆதரவு சக்திகளும் உருவாக்கி வளர்த்தன .

காந்தி கொலையை ஒட்டி ஏற்பட்ட அவப்பெயரின் விளைவாகச் சற்றே பதுங்கியிருந்த இந்துத்துவ சக்திகள் 1980களில் மீண்டும் தீவிரமாக முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளத் தொடங்கின. 1982 மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ஒட்டியும், பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவது என்கிற திட்டத்தை முன்வைத்து விசுவ இந்து பரிசத் தீவிரமாக இயங்கத் தொடங்கியதற்குப் பின்பும் முஸ்லிம் வெறுப்புப்பிரச்சாரம் தீவிரமாகியது .

1992-ல் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்த வன்முறைகளில் இஸ்லாமியர்களின் உடைமைக்கும், உயிருக்கும் நாடெங்கிலும் உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டது. 1990களின் பிற்பகுதியில் ஆட்சியில் அமர்ந்த இந்துத்துவம் அரசதிகாரத்துணையோடு இந்திய முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியது. இதனுடைய உச்சக் கட்டமாக 2002ல் குஜராத் வன்முறைகள் அரங்கேறின. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து எழுபதினாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு வாசலிழந்தனர். அதிகாரத்திலிருந்தோர் பொறுப்பற்று பேசினர். குற்றவாளிகள் கம்பீரமாக உலா வந்தனர்”. (அ. மார்க்ஸ் எழுதிய ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ - பக்கம் 12)

“இந்த நாட்டுடனும் அதன் கலாச்சாரத்துடனும் அடையாளம் காணுவதெப்படி என்கிற பாடத்தை இசுலாமியருக்கு நாம் சொல்லிக் கொடுத்தாக வேண்டும்…. அதற்காக நாம் வன்முறையைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.” - இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் 1970 ஜூன் 11-ல் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி. இது பின்னர் ஆர்கனைஸரிலும் வெளிவந்தது. (நன்றி: ஆட்சியில் இந்துத்துவம் - பேரா. அ. மார்க்ஸ்)

இந்துத்துவ வெறியர்கள் முஸ்லிம்கள் மீது பழிபோட வேண்டும் என்பதற்காக எத்தகைய காரியத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் காந்தி கொலையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சில கலவரங்களும்.

“காந்தியை கொன்றபோது கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தான். ஒரு முஸ்லீம்தான் காந்தியை கொன்றது என்று கூறி முஸ்லீம்களுக்கு எதிராக மக்களைத் தூண்டலாம் என்கிற சதித் திட்டம். தங்களது மதவெறிக் காட்டுமிராண்டித் தனத்திற்கு தடையாக இருந்த காந்தியையும் கொல்வது, அதை வைத்தே முஸ்லீம்களை வேட்டையாடுவது. இதிலிருந்து தெரிவது என்னவெனில், எல்லாக் கலவரங்களுக்கும் முஸ்லீம்களே காரணம் என்ற தங்களது பொய்யை உண்மையாக்க சகல சகுனித்தனத்தையும் கையாளும் சங்பரிவாரிகளே கலவரங்களை ஆரம்பிப்பவர்கள்.” (எம்.அசோகன் எழுதிய ‘சாவர்க்கர் உண்மைச் சித்திரம்’ - பக்கம் 7)

இந்தச் சதித் திட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதுகிறார், ‘கோட்சேயை விட்டு காந்தியை கொன்று விட்டு, காந்தியை கொன்றவன் ஒரு முஸ்லிம் என ஒரு விஷமப் பிரச்சாரத்தை பார்ப்பனர்கள் பரப்பிவிட்டார்கள். அதன் விளைவாக, திருவண்ணாமலை, ஈரோடு, வாணியம்பாடி போன்ற ஊர்களில் கலவரம் நடந்தது. அச்சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தந்தை பெரியார் அவர்களை அழைத்து, ‘இவரை பேச வைத்தால்தான் அமைதியை உருவாக்க முடியும்’ என்று கருதி, அவரை வானொலியில் பேசச் செய்தார். வானொலியில் பேசிய தந்தை பெரியார், ‘மக்கள் அமைதி காக்க வேண்டும், யாரும் நிதானத்தை இழக்கக் கூடாது’ என வேண்டுகோள் விடுத்தார்.

இது 1948-ல் நடந்தது. இன்றைக்கும் அசோக் சிங்கால் போன்றவர்கள் இப்படி அவதூறு சொல்லித் தூண்டி விடுகிறார்கள்‘ (கி. வீரமணி எழுதிய ‘காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு - ஏன்? எதற்கு? எப்படி?’ - பக்கம் 102)

இஸ்லாம் மீதான துவேஷப் பிரச்சாரம் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாம் வளர்ந்தால் உயர் ஜாதியினரான தமது இருப்பு, செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை பாதிக்கப்படும் என அஞ்சும் இந்த வகுப்புவாதிகள், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷப் பிரச்சாரத்தை முழுமூச்சாக செய்து வருகிறார்கள்.

இந்திய ஊடகங்களில் பெரும்பகுதி அவர்கள் கைவசம் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மனதில் இஸ்லாம் குறித்த ஒரு தவறான பிம்பம் வலிந்து உருவாக்கப் படுகிறது. ஊடகங்களின் துணை கொண்டு முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்களாகப் பிரகடனப்படுத்தப்படும் அதே வேளையில் இந்துத் தீவிரவாத இயக்கங்களின் பயங்கரவாத செயல்கள் மறைக்கப்படுகின்றன. ‘ஒருவேளை சிலவகை வன்முறைச் செயல்கள் நியாயப் படுத்தப் படுகின்றனவா?‘ என கேள்வி எழுப்புகிறார் Indo-Asian News Service -ன் தலைமைச் செய்தி ஆசிரியர் எம்.ஆர்.நாராயண் சுவாமி.

‘கொலையை யாரும் ஒருபோதும் நியாயப் படுத்த முடியாது, அது மும்பை, டெல்லி, கோவை அல்லது கோத்ரா என எந்த இடத்தில் நிகழ்ந்ததாக இருந்தாலும் சரிதான். ஆனால், நம் நாட்டு மக்களை மதரீதியில் பிரித்து வைத்து அவர்களின் தேசிய அடையாளத்தை இழக்கச் செய்வதன் மூலம் ஒரு மனப்பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக, ‘பயங்கரவாதம் என்றால் என்ன’ என்பதை நன்கு புரிந்தவர்கள் கூட இந்து மதவாத கும்பல்களின் வன்முறைச் செயல்கள் நியாயமானவை எனக் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான எம்.ஆர். நாராயண் சுவாமி.

கடந்த ஏப்ரல் மாதம் 7 தேதி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாந்தேடில் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றிய உண்மைத் தகவல்கள் மாநிலத்திற்கு வெளியே ஒருவரும் அறிந்திருக்கவில்லை. விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக காவல்துறையும், இந்துத்துவ அமைப்புகளும், பத்திரிக்கைகளும் கடும் முயற்சி செய்தனர். காரணம் குண்டு வெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்கள் சங்பரிவார் அமைப்பினர்.

தீவிர ஆர்.எஸ்.எஸ் இயக்கவாதி ஒருவரின் வீட்டில் பைப் வெடிகுண்டுகளைப் தயாரிக்கும் பொழுது குண்டுகள் தவறுதலாக வெடித்ததில் 2 பஜ்ரங்தள் உறுப்பினர்கள் அதே இடத்தில் வெடித்துச் சிதறினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தான் இதுவரை மறைவாக நடந்து கொண்டிருந்த உண்மைத் தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை வெளிக் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து பதினைந்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். நாந்தேடிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த 3 வருடங்களாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் மூளையாகச் செயல்பட்பவர்கள் யார் என்பது பைப் வெடிகுண்டுகள் வெடித்ததன் மூலம் தெளிவாகி விட்டது. மும்பை குண்டு வெடிப்பிலும் இதே கும்பல் செயல்பட்டிருக்காது என்பது என்ன நிச்சயம்?

” 2 இந்து பயங்கரவாதிகள் குண்டு வெடித்து சாவு ”

” மகாராஷ்ட்ராவில் இந்துத் தீவிரவாதக் கும்பல் பிடிபட்டது ”

” பள்ளிவாசல்களை குண்டு வைத்து தகர்க்கும் சதித்திட்டம் அம்பலம் ”

இப்படியெல்லாம் எந்தப் பத்திரிக்கையிலும் தலைப்புச் செய்தியை பார்த்த நினைவில்லை. ‘ஆர்.எஸ்.எஸ்-ஸின் சுவடே இல்லாமல் இந்தியாவிலிருந்தே ஒழித்திட வேண்டும்’ என்று எந்த அரசியல்வாதியும் முழக்கமிடவில்லை. காரணம் தெரிந்ததுதான்!

இன்றைக்கு முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என பட்டம் சூட்டி ஒழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிச் செயல்படும் சங்பரிவார் அமைப்பினர்தான் இந்தியாவில் தீவிரவாதத்திற்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவர்கள் என்பதற்கும் அவர்களது வன்முறைச் செயல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கும் வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. உண்மை வெகு காலத்திற்கு உறங்கிக் கொண்டிருக்காது.

****

இந்துத்துவ மதவெறி அமைப்புகள், ஊடகங்களின் துணையுடன் ‘இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மார்க்கம்’ என துவேஷப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையில் பணிபுரியும் சிலரும் நிர்ப்பந்தத்தினாலே அல்லது வேறு காரணங்களினாலோ இதற்கு துணை புரிகின்றனர். இம்மூன்று சக்திகளின் குரல் ஒருமித்து உரத்து ஒலிக்கிறது. உரக்க சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா?

இவர்கள் சொல்வது போல் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மார்க்கமா?

விளக்கம் பகுதி - 3ல்..

(தொடரும்)

நன்றி: ‘திண்ணை’ Thursday August 3, 2006

பகுதி 1: குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!

லெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்!

August 2, 2006

லெபனான் மீது இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஹிஸ்புல்லாஹ் படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல், லெபனானின் மக்கள் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக விமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இரு தினங்களுக்கு முன் வரலாற்று பிரசித்தி பெற்ற லெபனானின் கானா பிரதேசத்தில் (Qana - உலக கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதும் இயேசுவின் முதல் அற்புதம் வெளியான திருமண விருந்து நிகழ்ச்சி நடந்த இடம்) இஸ்ரேலின் தாக்குதலால் வீடுகளை இழந்த பெண்களும் குழந்தைகளும் தங்கியிருந்த ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் அமெரிக்கா தனக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஏவுகணைகளை வீசி 37 குழந்தைகள் உட்பட 100 க்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்களை கொன்றொழித்தது.

Cana Massacre

இவ்வளவு குரூரமான, இரக்கம் உள்ள மனிதர்களால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாத கொடுஞ்செயலை இஸ்ரேல் செய்த பிறகும் இஸ்ரேலின் கொடுஞ்செயலுக்கு எதிராக -அதன் பயங்கரவாத செயலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் யாரும் மேற்கொள்ள தயாரில்லை. உலக நாடுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவைகளுக்கு ஏன் இந்த இழி நிலை? பச்சிளம் குழந்தைகளை கொத்து கொத்தாக கண்முன் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் செயல் பயங்கரவாதமில்லையா? இதற்கு எதிராக போராட யாரும் களமிறங்காததன் காரணம் என்ன?

அரபு-இஸ்ரேலிய பிரச்னைகளில் இஸ்ரேல் புரியும் அட்டூழியத்தைப் பொறுத்தவரை உலக நாடுகள் கடைபிடிக்கும் மவுனத்திற்கும் பாராமுகத்திற்கும் காரணம் அமெரிக்க ஊடகங்களே.

அரபு-இஸ்ரேலிய பிரச்னையில் அவைகள் தந்த உண்மைக்குப் புறம்பான, நியாயமற்ற பாரபட்சமான செய்திகளின் விளைவுகள் தான் இவை.

அல் ஜஸீரா: உலகிற்கு அரபு தொலைக்காட்சிகளின் சவால்’ (Al-Jazeera: How Arab TV News Challenged the World) என்ற நூலை எழுதிய ஹுக் மைல்ஸ் (Hugh Miles), The Straight Times இதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேல்-லெபனான் பிரச்னையை எவ்வாறு பாரபட்சமாக சித்தரிக்கின்றன என்பதை விளக்கியுள்ளார். அந்தப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி: லெபனான் நிகழ்வுகளை அரபு ஊடகங்களை விட அமெரிக்க ஊடகங்கள் வித்தியாசமாக சித்தரிக்கின்றன என எவ்வாறு கூறுகிறீர்கள்?

பதில்: இந்தப் போருக்கு முந்திய நிகழ்வுகளை அமெரிக்க ஊடகங்கள் ஒரு தவறான கண்ணோட்டத்தில் புரிந்து வைத்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலை அவை ‘நியாயமான எதிர்வினை’ என்பது போல குறிப்பிடும் அதே வேளையில், இப்பிரச்னையின் வரலாற்றுப் பிண்ணனியையோ, இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 9000-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளைப் பற்றியோ குறிப்பிடுவதில்லை. இக்கைதிகளுள் பெண்களும், 14 வயது கூட நிரம்பாத சிறுவர்களும் அடங்குவர்.

ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு ஈரான் மற்றும் சிரியாவுடன் கொள்கைரீதியில் தொடர்புகள் இருந்த போதிலும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் நம்புவது போல, ஹிஸ்புல்லாஹ் இவ்விரு நாடுகளின் தூண்டுதலின் பேரில்தான் செயல்படுகிறது என்பது உண்மையல்ல. பல ஆண்டுகளாகவே ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஷேக் நஸ்ரல்லா தனது சுய முடிவுகளின்படியே செயல்படுகிறார் என்பதுதான் உண்மை.

இஸ்ரேலிய குழந்தைகள் யாரும் தாக்குதலில் இறந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் அமெரிக்க ஊடகங்கள், அரபு குழந்தைகள் யாரும் இறந்தால் அதை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை.

காஸா பகுதி குறித்த அமெரிக்க செய்திகள் ‘ஆக்ரமிப்பு’ ‘ஆக்ரமிக்கப்பட்ட பகுதி’ போன்ற சொற்களை பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, மேற்கு கரையும் காஸா பகுதியும் ‘சர்ச்சைக்குரிய பகுதி’ (’contested’ or ‘disputed’) அல்லது வெறுமனே ‘இஸ்ரேல்’ என்றே குறிப்பிடப் படுகின்றன.

இஸ்ரேல் நடத்தும் அரசியல் படுகொலைகளை அமெரிக்க ஊடகங்கள் ‘குறிவைக்கப்பட்ட தாக்குதல்’ (targeted killings) என வர்ணிக்கின்றன. இஸ்ரேலின் ராணுவம் ‘பாதுகாப்புப் படை’ (security forces)யாகிறது. சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்ட பிரதேசங்கள் கூட ‘குடியிருப்புப் பகுதிகள்’ (neighbourhood) என அழைக்கப்படுகின்றன.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்