இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!

August 4, 2006

காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1948-ல் காந்தி கொலைக்கு பிறகு, 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும், பிறகு 1992-ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகும், இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கம்தான் இது. இந்த இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, ‘சிமி (SIMI) போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்று சொல்கிறார். இந்தத் துவேஷத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இந்திய ஜனத்தொகையில் சுமார் 15% சதவிகிதமே இருக்கும் சிறுபான்மை சமுதாயத்தினர் இந்திய முஸ்லிம்கள் . இந்தச் சமுதாயத்திற்கு எந்த மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு இல்லை, சமுதாயத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த வலிமையான தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் இல்லை. பொருளாதாரத்தில் மிக நலிவடைந்த பிரிவினர் இவர்கள். கல்வியறிவிலும் இச்சமூகம் மிகவும் பின் தங்கியிருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தினரால் நடத்தப்படும் கல்லூரிகளில் கூட முஸ்லிம்களைவிட முஸ்லிமல்லாத மாணவர்கள் எண்ணிக்கையே அதிக அளவில் உள்ளது. ஊடகங்களும் இச்சமுதாயத்திற்கு எதிரான போக்கையே வெளிப்படுத்துகின்றன. இத்தகைய எளிய, ஒடுக்கப்பட்ட சமுதாயம்தான் இந்திய முஸ்லிம் சமுதாயம். இச்சமுதாயத்தின் மீது அத்வானி போன்றவர்களுக்கு குரோதம் ஏற்படக் காரணம் என்னவாக இருக்கும் ?

இக்கேள்விகளுக்குப் பேரா. அ. மார்க்ஸ் பதிலளிக்கிறார்:

‘ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறி வைப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதலில்: (இந்தியாவில்) இந்து மதத்திற்கு அடுத்த பெரிய மதம் இஸ்லாம். சில மாவட்டங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர்.

அடுத்தது: வரலாற்று ரீதியாய் இஸ்லாமியரை ‘எதிரி’யாக நிறுத்துவது எளிது.

கடைசியாக: இந்துமதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக்கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்.

கிறிஸ்தவம் உட்படப் பிறமதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை வென்றது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் குரு கோல்வல்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான். இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்கு சவாலாக இருந்தது” என வயிறெரிந்தார்.

ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தை பேணுபவை. ‘இமாசலப் பிரதேச’ மாநில பாரதீய ஜனதா அரசு பதவியிலிருந்த கொஞ்ச காலத்தில் செய்த காரியங்களிலொன்று ‘மணலி’ என்ற இடத்தில் ‘மனு’ கோயிலைப் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பித்தது. இவர்கள் இஸ்லாமை முதன்மை எதிரியாக கருதாமல் வேறென்ன செய்வார்கள்?” (அ.மார்க்ஸ் எழுதிய ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்’ - பக்கம் 28)

பேரா. அ.மார்க்ஸ் மேலும் சொல்கிறார்;

“இந்தியாவைப் பொருத்தமட்டில் சென்ற ஒரு நூற்றாண்டு காலமாக இங்கே உருப்பெற்ற இந்துத்துவ சிந்தனைகள் முதன்மையாக இஸ்லாத்தையே குறிவைத்து இயங்கின. இந்தியா-பாகிஸ்தான் தேசப் பிரிவினையை ஒட்டிய கொடிய வகுப்புக் கலவரங்கள் மத்தியில் இந்தியா சுதந்திரமடைந்தது.

அன்று தொட்டு இந்திய முஸ்லிம்களை இந்தியாவிற்கு விசுவாசமற்றவர்களாகவும், சந்தேகத்திற்குரியவர்களாகவும் பார்க்கக்கூடிய பார்வை ஒன்றை இந்துத்துவ சக்திகள் தவிர, காங்கிரசிலிருந்த இந்துத்துவ ஆதரவு சக்திகளும் உருவாக்கி வளர்த்தன .

காந்தி கொலையை ஒட்டி ஏற்பட்ட அவப்பெயரின் விளைவாகச் சற்றே பதுங்கியிருந்த இந்துத்துவ சக்திகள் 1980களில் மீண்டும் தீவிரமாக முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளத் தொடங்கின. 1982 மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ஒட்டியும், பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவது என்கிற திட்டத்தை முன்வைத்து விசுவ இந்து பரிசத் தீவிரமாக இயங்கத் தொடங்கியதற்குப் பின்பும் முஸ்லிம் வெறுப்புப்பிரச்சாரம் தீவிரமாகியது .

1992-ல் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்த வன்முறைகளில் இஸ்லாமியர்களின் உடைமைக்கும், உயிருக்கும் நாடெங்கிலும் உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டது. 1990களின் பிற்பகுதியில் ஆட்சியில் அமர்ந்த இந்துத்துவம் அரசதிகாரத்துணையோடு இந்திய முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியது. இதனுடைய உச்சக் கட்டமாக 2002ல் குஜராத் வன்முறைகள் அரங்கேறின. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து எழுபதினாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு வாசலிழந்தனர். அதிகாரத்திலிருந்தோர் பொறுப்பற்று பேசினர். குற்றவாளிகள் கம்பீரமாக உலா வந்தனர்”. (அ. மார்க்ஸ் எழுதிய ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ - பக்கம் 12)

“இந்த நாட்டுடனும் அதன் கலாச்சாரத்துடனும் அடையாளம் காணுவதெப்படி என்கிற பாடத்தை இசுலாமியருக்கு நாம் சொல்லிக் கொடுத்தாக வேண்டும்…. அதற்காக நாம் வன்முறையைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.” - இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் 1970 ஜூன் 11-ல் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி. இது பின்னர் ஆர்கனைஸரிலும் வெளிவந்தது. (நன்றி: ஆட்சியில் இந்துத்துவம் - பேரா. அ. மார்க்ஸ்)

இந்துத்துவ வெறியர்கள் முஸ்லிம்கள் மீது பழிபோட வேண்டும் என்பதற்காக எத்தகைய காரியத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் காந்தி கொலையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சில கலவரங்களும்.

“காந்தியை கொன்றபோது கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தான். ஒரு முஸ்லீம்தான் காந்தியை கொன்றது என்று கூறி முஸ்லீம்களுக்கு எதிராக மக்களைத் தூண்டலாம் என்கிற சதித் திட்டம். தங்களது மதவெறிக் காட்டுமிராண்டித் தனத்திற்கு தடையாக இருந்த காந்தியையும் கொல்வது, அதை வைத்தே முஸ்லீம்களை வேட்டையாடுவது. இதிலிருந்து தெரிவது என்னவெனில், எல்லாக் கலவரங்களுக்கும் முஸ்லீம்களே காரணம் என்ற தங்களது பொய்யை உண்மையாக்க சகல சகுனித்தனத்தையும் கையாளும் சங்பரிவாரிகளே கலவரங்களை ஆரம்பிப்பவர்கள்.” (எம்.அசோகன் எழுதிய ‘சாவர்க்கர் உண்மைச் சித்திரம்’ - பக்கம் 7)

இந்தச் சதித் திட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதுகிறார், ‘கோட்சேயை விட்டு காந்தியை கொன்று விட்டு, காந்தியை கொன்றவன் ஒரு முஸ்லிம் என ஒரு விஷமப் பிரச்சாரத்தை பார்ப்பனர்கள் பரப்பிவிட்டார்கள். அதன் விளைவாக, திருவண்ணாமலை, ஈரோடு, வாணியம்பாடி போன்ற ஊர்களில் கலவரம் நடந்தது. அச்சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தந்தை பெரியார் அவர்களை அழைத்து, ‘இவரை பேச வைத்தால்தான் அமைதியை உருவாக்க முடியும்’ என்று கருதி, அவரை வானொலியில் பேசச் செய்தார். வானொலியில் பேசிய தந்தை பெரியார், ‘மக்கள் அமைதி காக்க வேண்டும், யாரும் நிதானத்தை இழக்கக் கூடாது’ என வேண்டுகோள் விடுத்தார்.

இது 1948-ல் நடந்தது. இன்றைக்கும் அசோக் சிங்கால் போன்றவர்கள் இப்படி அவதூறு சொல்லித் தூண்டி விடுகிறார்கள்‘ (கி. வீரமணி எழுதிய ‘காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு - ஏன்? எதற்கு? எப்படி?’ - பக்கம் 102)

இஸ்லாம் மீதான துவேஷப் பிரச்சாரம் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாம் வளர்ந்தால் உயர் ஜாதியினரான தமது இருப்பு, செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை பாதிக்கப்படும் என அஞ்சும் இந்த வகுப்புவாதிகள், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷப் பிரச்சாரத்தை முழுமூச்சாக செய்து வருகிறார்கள்.

இந்திய ஊடகங்களில் பெரும்பகுதி அவர்கள் கைவசம் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மனதில் இஸ்லாம் குறித்த ஒரு தவறான பிம்பம் வலிந்து உருவாக்கப் படுகிறது. ஊடகங்களின் துணை கொண்டு முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்களாகப் பிரகடனப்படுத்தப்படும் அதே வேளையில் இந்துத் தீவிரவாத இயக்கங்களின் பயங்கரவாத செயல்கள் மறைக்கப்படுகின்றன. ‘ஒருவேளை சிலவகை வன்முறைச் செயல்கள் நியாயப் படுத்தப் படுகின்றனவா?‘ என கேள்வி எழுப்புகிறார் Indo-Asian News Service -ன் தலைமைச் செய்தி ஆசிரியர் எம்.ஆர்.நாராயண் சுவாமி.

‘கொலையை யாரும் ஒருபோதும் நியாயப் படுத்த முடியாது, அது மும்பை, டெல்லி, கோவை அல்லது கோத்ரா என எந்த இடத்தில் நிகழ்ந்ததாக இருந்தாலும் சரிதான். ஆனால், நம் நாட்டு மக்களை மதரீதியில் பிரித்து வைத்து அவர்களின் தேசிய அடையாளத்தை இழக்கச் செய்வதன் மூலம் ஒரு மனப்பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக, ‘பயங்கரவாதம் என்றால் என்ன’ என்பதை நன்கு புரிந்தவர்கள் கூட இந்து மதவாத கும்பல்களின் வன்முறைச் செயல்கள் நியாயமானவை எனக் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான எம்.ஆர். நாராயண் சுவாமி.

கடந்த ஏப்ரல் மாதம் 7 தேதி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாந்தேடில் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றிய உண்மைத் தகவல்கள் மாநிலத்திற்கு வெளியே ஒருவரும் அறிந்திருக்கவில்லை. விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக காவல்துறையும், இந்துத்துவ அமைப்புகளும், பத்திரிக்கைகளும் கடும் முயற்சி செய்தனர். காரணம் குண்டு வெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்கள் சங்பரிவார் அமைப்பினர்.

தீவிர ஆர்.எஸ்.எஸ் இயக்கவாதி ஒருவரின் வீட்டில் பைப் வெடிகுண்டுகளைப் தயாரிக்கும் பொழுது குண்டுகள் தவறுதலாக வெடித்ததில் 2 பஜ்ரங்தள் உறுப்பினர்கள் அதே இடத்தில் வெடித்துச் சிதறினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தான் இதுவரை மறைவாக நடந்து கொண்டிருந்த உண்மைத் தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை வெளிக் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து பதினைந்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். நாந்தேடிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த 3 வருடங்களாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் மூளையாகச் செயல்பட்பவர்கள் யார் என்பது பைப் வெடிகுண்டுகள் வெடித்ததன் மூலம் தெளிவாகி விட்டது. மும்பை குண்டு வெடிப்பிலும் இதே கும்பல் செயல்பட்டிருக்காது என்பது என்ன நிச்சயம்?

” 2 இந்து பயங்கரவாதிகள் குண்டு வெடித்து சாவு ”

” மகாராஷ்ட்ராவில் இந்துத் தீவிரவாதக் கும்பல் பிடிபட்டது ”

” பள்ளிவாசல்களை குண்டு வைத்து தகர்க்கும் சதித்திட்டம் அம்பலம் ”

இப்படியெல்லாம் எந்தப் பத்திரிக்கையிலும் தலைப்புச் செய்தியை பார்த்த நினைவில்லை. ‘ஆர்.எஸ்.எஸ்-ஸின் சுவடே இல்லாமல் இந்தியாவிலிருந்தே ஒழித்திட வேண்டும்’ என்று எந்த அரசியல்வாதியும் முழக்கமிடவில்லை. காரணம் தெரிந்ததுதான்!

இன்றைக்கு முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என பட்டம் சூட்டி ஒழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிச் செயல்படும் சங்பரிவார் அமைப்பினர்தான் இந்தியாவில் தீவிரவாதத்திற்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவர்கள் என்பதற்கும் அவர்களது வன்முறைச் செயல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கும் வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. உண்மை வெகு காலத்திற்கு உறங்கிக் கொண்டிருக்காது.

****

இந்துத்துவ மதவெறி அமைப்புகள், ஊடகங்களின் துணையுடன் ‘இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மார்க்கம்’ என துவேஷப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையில் பணிபுரியும் சிலரும் நிர்ப்பந்தத்தினாலே அல்லது வேறு காரணங்களினாலோ இதற்கு துணை புரிகின்றனர். இம்மூன்று சக்திகளின் குரல் ஒருமித்து உரத்து ஒலிக்கிறது. உரக்க சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா?

இவர்கள் சொல்வது போல் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மார்க்கமா?

விளக்கம் பகுதி - 3ல்..

(தொடரும்)

நன்றி: ‘திண்ணை’ Thursday August 3, 2006

பகுதி 1: குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!

21 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/08/04/propoganda/trackback/

  1. ஆழமான பதிவு; வேறுபட்டப் பார்வை. காவல்துறையும் உளவுத்துறையும் நேர்மையான விசாரணை மேற்கொண்டால் வெளியே வரும் உண்மைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம்.

    Comment by அழகு — August 4, 2006 @ 8:40 pm

  2. கருத்திற்கு நன்றி அழகு அவர்களே!
    //காவல்துறையும் உளவுத்துறையும் நேர்மையான விசாரணை மேற்கொண்டால்..//
    இதுதான் தேச நலனில் அக்கறை கொண்ட அனைவரின் விருப்பமாக இருக்கும்.

    Comment by இப்னு பஷீர் — August 5, 2006 @ 4:10 am

  3. ” 2 இந்து பயங்கரவாதிகள் குண்டு வெடித்து சாவு ”

    ” மகாராஷ்ட்ராவில் இந்துத் தீவிரவாதக் கும்பல் பிடிபட்டது ”

    \” பள்ளிவாசல்களை குண்டு வைத்து தகர்க்கும் சதித்திட்டம் அம்பலம் ”

    இப்படியெல்லாம் எந்தப் பத்திரிக்கையிலும் தலைப்புச் செய்தியை பார்த்த நினைவில்லை. //
    நமக்கென்று ஒரு நாளிpதழ் அவசியம் என்பதையும் இவை உணர்த்துகின்றன. இது காலத்தின் கட்டாயம் என்பதை முஸ்லீம் சமுதாயம் சிந்தித்து செயல்படுவதற்கான நேரம். இதற்கு பணம் படைத்தவர்களோ, தியாகம் உள்ளம் கொண்ட நல்லமனிதர்கள் தங்கள் சொந்த பணத்தைக்கொண்டோ அல்லது தனி இயக்கங்களோ ( கேரளத்தில் உள்ளது போல்) இதை செய்ய முன்வர வேண்டும்.

    Comment by MOHAMED SIRAJUDEEN — August 5, 2006 @ 7:32 am

  4. தங்கள் பதிவு சில கேள்விகளை எழுப்புகிறது. என்னிடம். அதற்கு தங்களிடம் விடை கிடைக்குமா?

    1. ///காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.///

    இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? அந்த இயக்கத்துக்கு தொடர்பில்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்து இருக்கிறதே!

    2. தாங்கள் எழுதியது முதலில் : ///இந்தச் சமுதாயத்திற்கு எந்த மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு இல்லை, /// பிறகு : /// சில மாவட்டங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர். ////

    இவை இரண்டும் முன்னுக்கு பின் முரண்படுகின்றன. இதில் எது உண்மை?

    3. ////“காந்தியை கொன்றபோது கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தான். ////

    இதற்கு என்ன ஆதாரம் தாங்கள் காட்ட முடியும்? நடுநிலை ஆதாரத்தை எதிர்பார்க்கிறேன்.

    கோட்சே தானாகவே சரண்டைந்தவன். காந்திஜி கொலையுண்டவுடனே அந்த செய்தியை நிறுத்திவைத்து ஒரு மணி நேரத்தில் கொன்றவன் இந்து என்று தெரிந்துகொண்டு அதை தேசத்துக்கு சேர்த்து ஒலிபரப்பினார்கள் என்று கேட்டுள்ளேன்.

    4. //// இந்துமதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக்கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான். ////

    இஸ்லாம் பெண்ண்டிமைப்படுத்தும் ஒரு மதம். பிற மதங்களை அழிக்க முற்படும் ஒரு கொள்கை மதம். தீவிரவாதத்தின் ஊற்று. என்று குற்றம்சாட்டப்படுகிறதே? அதற்கு தாங்கள் என்ன மறுப்பு சொல்வீர்கள். இம்மாதிரி குற்றச்சாட்டு உலகம் முழுவதும் உள்ள வேற்று மதத்தினரால் முன்வைக்கப்படுகிறதே? அதன் காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ்ஸா.

    5. ////ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தை பேணுபவை. ///

    இதற்கு என்ன ஆதாரம்? ஆர்.எஸ்.எஸ். கோவால்கரின் பேட்டியை தாங்கள் அளித்துள்ளீர்கள். அதற்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்த மறுப்பையும் அதை அந்த அமைப்பின் கொள்கையாக ஏற்கவில்லை என்று சொல்வதையையும் தாங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அம்மாதிரி மறுப்புக்கு தங்கள் விளக்கம் என்ன? மேலும், பாஜக மீது தாங்கள் கூறும் இந்த கூற்றுக்கு ஆதாரம் என்ன?

    6. //// பயங்கரவாதம் என்றால் என்ன’ என்பதை நன்கு புரிந்தவர்கள் கூட இந்து மதவாத கும்பல்களின் வன்முறைச் செயல்கள் நியாயமானவை எனக் கருதுகிறார்கள். ////

    நடுநிலையானவர்களும், மற்ற உலகத்தின் பல தேசத்து இஸ்லாம் அல்லாதவரில் பலரும், இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்று சொல்கிறார்களே, அதன் காரணம் என்ன? இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய பல அறிஞர்கள் இது திருக்குரானில் சொல்லப்பட்டது என்று சொல்கிறார்களே, அவர்கள் சொல்வது உண்மையான இஸ்லாமா இல்லையா? பல அறிஞர்களை உலகம் முழுதும் நாம் காட்டலாம். உதாரணத்துக்கு டாக்டர். இஸ்ரார் அகமது அவர்கள், பாகிஸ்தான்.

    7. ///இப்படியெல்லாம் எந்தப் பத்திரிக்கையிலும் தலைப்புச் செய்தியை பார்த்த நினைவில்லை. ///

    ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற சொற்றொடரும், இந்த பிம்பமும் இந்தியாவில் இந்துத்துவாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டது என்று தாங்கள் சொல்ல வருகிறீர்களா? அவ்வாறு என்றால், இந்த சொற்றொடர் உலகம் முழுதைய ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறதே! இது எப்படி? இதற்கும் இந்துத்துவாதான் காரணமா? இந்துத்துவா எப்படி உலகம் முழுதையும் ஏமாற்ற முடியும்?

    தங்களின் மேன்மையான விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,

    ஜயராமன்….

    Comment by ஜயராமன் — August 5, 2006 @ 8:50 am

  5. I APPRECIATE THE SAME WAY THE THOUGHTS OF MR.MOHAMED SIRAJUDEEN.

    ASALAMONE

    Comment by asalamone — August 5, 2006 @ 10:34 am

  6. //நமக்கென்று ஒரு நாளிதழ் அவசியம் என்பதையும் இவை உணர்த்துகின்றன. இது காலத்தின் கட்டாயம் என்பதை முஸ்லீம் சமுதாயம் சிந்தித்து செயல்படுவதற்கான நேரம்.//

    சிராஜுதீன், Aslamone, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    Comment by இப்னு பஷீர் — August 5, 2006 @ 4:50 pm

  7. //இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? அந்த இயக்கத்துக்கு தொடர்பில்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்து இருக்கிறதே!//

    ஜெயராமன் ஐய(ர்)…

    உச்ச நீதிமன்றத்திலும் காவிக்கும்பல் இருப்பதை நாடே அறியும். அதனால்தான் படுபாதக இந்த்துத்துவாவை ஒரு வாழ்க்கை நெறி என்றார்கள். அப்புறம் நன்றிகெட்ட RSS வேண்டுமானால் கோட்சேயை RSS பயங்கரவாதி அல்ல ஏன்று மறுக்கலாம், கோட்சேயின் தம்பி சொல்வதைக் கேளுங்கள் சாமி…

    காந்தியார் ஓர் அரக்கன் என்றும், அவரைக் கொன்ற கோட்சே கடவுள் என்றும் விளம்பரப்படுத் துகிற நாடகத்தை (மை நாதுராம் கோட்சே போல்தே!) சில ஆண்டுகளுக்கு முன்புவரை டில்லியிலும் மும்பை யிலும் நடத்திடக் கூச்சப்படாதவர்கள் எதற்காக கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லன் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

    கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்காரனல்ல என்று சொல்லுபவர்கள் கடைந்தெடுத்த கோழைகள் என்று சொல்லுபவர் யார் தெரியுமா? காந்தியார் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரும் நாதுராம் கோட்சேயின் தம்பியுமான கோபால் கோட்சேதான் அப்படி அப்பட்டமாகக் கூறி யவர்!
    28.1.1994 நாளிட்ட ஃப்ரன்ட் லைன் இதழில் நாதுராம் கோட்சேயின் தம்பியான கோபால் கோட்சேயின் பேட்டி வெளியாகியுள்ளது.

    கேள்வி: ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் நாதுராமிற்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று அத்வானி அண்மையில் கூறியிருக்கிறாரே?

    கோபால் கோட்சேயின் பதில்: இது கோழைத்தனமானது. அவரது கூற்றை நான் மறுக்கிறேன். `போ, காந்தியைக் கொல்லு!’ என்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால், நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது. இந்து மகாசபை அப்படி கூறியது. ஆனால் ஆர்.எஸ்.எஸின் பவுதிக் காரியவா ஆக இருந்த போது, 1944-இல் இந்து மகா சபையில் நாதுராம் பணியாற்றினார்.

    காந்தியாரை கோட்சே சுட்ட போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை; இந்து மகா சபையில்தான் உறுப்பினராக இருந்தார் என்று ஒன்றைக் கிளப்பி ஆர்.எஸ்.எஸ்ஐக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

    அப்படியே பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல - இந்து மகா சபையும் வேறு அல்ல! பஜ்ரங்தள் வேறு; விசுவ ஹிந்து பரிஷத் வேறு என்று சொல் அளவில் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை இரண்டும் சங்பரிவார் என்கிற தலைப்புக்குள் வரவில்லையா? 1930-களில் இந்து மகா சபையுடன் ஆர்.எஸ்.எஸ் உறவுகள் நிலையற்று இருந்தன. ஆனால் சில ஆண்டுகளில் பரஸ்பரம் பலன் அளிக்கிற முறையில் மாறின. மகாசபையின் இளைஞர் அணியாக தாருன் இந்து சபாவை நிறுவிய பாபுராவ் சவார்க்கர் 1931-ஆம் ஆண்டில் அந்த ஸ்தாபனத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைத்தார்.

    கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா?

    கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா, நான் (கோபால் கோட்சே) கோவிந்த் ஆகிய நாங்கள் சகோ தரர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸில் இருந்தோம். எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸில் வளர்ந் தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் என்கிறார்.

    இதற்கு என்ன பதில்? காந்தி யார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தன்னை ஆர்.எஸ்.எஸ். என்று கூறுகிறாரே, இதற்கு என்ன பதில்? உயிருள்ள சாட்சியா யிற்றே! ஆயுள் தண்டனை தானே பெற்றார், தூக்குத் தண்டனை பெறவில்லையே என்று சமாதானம் சொல்லப் போகிறார்களா?

    காந்தியைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயைப் பற்றி முழுத்தகவல்களுடன் ஒரு இணையதளம் செயல்படுகிறது. www.nathuramgodse.com என்னும் பெயருடைய அந்த இணைய தளத்தில் கோட்சேயின் தம்பி, கோபால் கோட்சேயின் பேட்டிகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

    முழு ஆய்வுக்கட்டுரையையும் படிக்க http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_25.html இங்கு வாருமய்யா!

    Comment by ஆரோக்கியம் உள்ளவன் — August 5, 2006 @ 5:27 pm

  8. திரு. ஜயராமன்,

    ///1. காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்./

    இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? ///

    உதாரணத்திற்கு ஒன்று; ஆர்.எஸ்.எஸ்-ஸிற்கும் காந்தி கொலைக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கும் வலைத்தளம் இது.
    http://pd.cpim.org/2004/0829/08292004_badri%20raina.htm
    கோட்சே தன் இறுதி மூச்சு வரை ஆர்.எஸ்.எஸ் ஆளாகத்தான் இருந்தான் என்பதையும் ஆதாரத்துடன் இதில் சொல்லி இருக்கிறார்கள். கோட்சேக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸிற்கும் தொடர்பில்லை என்றால் நீங்கள் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கலாமே!

    //2. தாங்கள் எழுதியது முதலில் : ///இந்தச் சமுதாயத்திற்கு எந்த மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு இல்லை, /// பிறகு : /// சில மாவட்டங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர். /

    இவை இரண்டும் முன்னுக்கு பின் முரண்படுகின்றன. இதில் எது உண்மை?//

    இதில் எந்த முரண்பாடும் இல்லை. முதலில் உள்ளது எனது வாக்கியம். அதில் நான் ‘மாநிலத்தை’ப் பற்றி குறிப்பிடுகிறேன். இரண்டாவது, பேரா.அ.மார்க்ஸ் அவர்களின் புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோள்.. அதில் அவர் ‘மாவட்டத்தை’ப் பற்றி குறிப்பிடுகிறார்.

    3. ////“காந்தியை கொன்றபோது கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தான். ////

    இதற்கு என்ன ஆதாரம் தாங்கள் காட்ட முடியும்? நடுநிலை ஆதாரத்தை எதிர்பார்க்கிறேன்.//

    ஆதாரம்தான் கொடுத்திருக்கிறேனே! இந்த வாக்கியமே திரு.எம்.அசோகன் எழுதிய ‘சாவர்க்கர் - உண்மைச் சித்திரம்’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதுதான். இந்நூலை வெளியிட்டவர்கள் ‘நாம் தமிழர் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை’.

    போதாக்குறைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களும் தனது புத்தகம் ஒன்றில் இதைப் பற்றி குறிப்பிடுகிறார். அந்த ஆதாரத்தையும் மேலே கொடுத்திருக்கிறேன்.

    4. //// இந்துமதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக்கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான். ////

    இஸ்லாம் பெண்ண்டிமைப்படுத்தும் ஒரு மதம். பிற மதங்களை அழிக்க முற்படும் ஒரு கொள்கை மதம். தீவிரவாதத்தின் ஊற்று. என்று குற்றம்சாட்டப்படுகிறதே? அதற்கு தாங்கள் என்ன மறுப்பு சொல்வீர்கள். இம்மாதிரி குற்றச்சாட்டு உலகம் முழுவதும் உள்ள வேற்று மதத்தினரால் முன்வைக்கப்படுகிறதே? அதன் காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ்ஸா.//

    இந்துத்துவாக்கள் முஸ்லிம்கள் மீது குரோதமாக இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என பேரா.அ.மார்க்ஸ் குறிப்பிட்டதைத்தான் நான் என் பதிவில் கொடுத்திருக்கிறேன். அவர் சொல்லும் காரணத்தை உங்களால் ஒப்புக் கொள்ள முடியாவிட்டால், வேறு காரணம் என்ன என்பதை நீங்களே சொல்லுங்களேன்.

    இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் குறிப்பிடும் அத்தனை துவேஷப் பிரச்சாரங்களுக்கும் முஸ்லிம்கள் பதில் சொல்லாமல் இல்லை. அவற்றைப் பற்றி விளக்குவது இந்தப் பதிவின் நோக்கமல்ல என்பதால் அதை தவிர்க்கிறேன்.

    5. ////ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தை பேணுபவை. /

    இதற்கு என்ன ஆதாரம்? ஆர்.எஸ்.எஸ். கோவால்கரின் பேட்டியை தாங்கள் அளித்துள்ளீர்கள். அதற்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்த மறுப்பையும் அதை அந்த அமைப்பின் கொள்கையாக ஏற்கவில்லை என்று சொல்வதையையும் தாங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அம்மாதிரி மறுப்புக்கு தங்கள் விளக்கம் என்ன? மேலும், பாஜக மீது தாங்கள் கூறும் இந்த கூற்றுக்கு ஆதாரம் என்ன?///

    இந்த வாக்கியமும் பேரா. மார்க்ஸ் சொன்னதுதான். அதற்கு அவரே ஆதாரம் கொடுத்திருக்கிறாரே? பதிவை கொஞ்சம் கவனமாக படித்தாலே விளங்கும். தவிர, ஆர்.எஸ்.எஸ்-ஸிற்கும் பா.ஜ.க-விற்கும் தொடர்பில்லை என்கிறீர்களா? எப்போதிலிருந்து?

    6. //// பயங்கரவாதம் என்றால் என்ன’ என்பதை நன்கு புரிந்தவர்கள் கூட இந்து மதவாத கும்பல்களின் வன்முறைச் செயல்கள் நியாயமானவை எனக் கருதுகிறார்கள். /

    நடுநிலையானவர்களும், மற்ற உலகத்தின் பல தேசத்து இஸ்லாம் அல்லாதவரில் பலரும், இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்று சொல்கிறார்களே, அதன் காரணம் என்ன? இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய பல அறிஞர்கள் இது திருக்குரானில் சொல்லப்பட்டது என்று சொல்கிறார்களே, அவர்கள் சொல்வது உண்மையான இஸ்லாமா இல்லையா? பல அறிஞர்களை உலகம் முழுதும் நாம் காட்டலாம். உதாரணத்துக்கு டாக்டர். இஸ்ரார் அகமது அவர்கள், பாகிஸ்தான்.//

    இஸ்லாத்தைப் பற்றி சரியாக தெரியாதவர்கள் சொல்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது. முஸ்லிம்களிலேயே ஒரு சிலர் இப்படி சொல்கிறார்களே என்றால், திருக்குர்ஆனில் எந்த வசனத்தை குறித்து அவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்பதை தயவு செய்து தெரிவியுங்கள். அதன் உண்மை விளக்கம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

    7. ///இப்படியெல்லாம் எந்தப் பத்திரிக்கையிலும் தலைப்புச் செய்தியை பார்த்த நினைவில்லை. /

    ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற சொற்றொடரும், இந்த பிம்பமும் இந்தியாவில் இந்துத்துவாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டது என்று தாங்கள் சொல்ல வருகிறீர்களா? ///

    அப்படி அல்ல. முஸ்லிம்கள் சிலர் வன்முறைச் சம்பவங்களில் சம்பந்தப் பட்டிருந்தால், ‘இஸ்லாமிய தீவிரவாதி’ என மதத்துடன் இணைத்து பட்டம் சூட்டும் ஊடகங்கள், இந்துத் தீவிரவாதிகள் கையும் களவுமாக மாட்டினால் கூட அடக்கி வாசிப்பது ஏன்? ஏன் இந்த பாரபட்சம்?

    Comment by இப்னு பஷீர் — August 5, 2006 @ 5:37 pm

  9. //2. தாங்கள் எழுதியது முதலில் : ///இந்தச் சமுதாயத்திற்கு எந்த (1) மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு இல்லை, /// பிறகு : /// சில (2)மாவட்டங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர். //// இவை இரண்டும் முன்னுக்கு பின் முரண்படுகின்றன. இதில் எது உண்மை?

    தத்தக்கா பித்தக்கான்னு உளறுரேன்னு எதுவும் நெனச்சுக்கிடாதீங்க ஜெயராமன் சார். கட்டுரையாளர் முதலில் சொல்லி இருப்பது (1)மாநிலம். நீங்கள் முரன்பாடாகக் குறிப்பிடுவது (2) மாவட்டம். அதாவது மாவட்ட அளவில் எங்களுக்கு பலமுண்டு என்று சொல்வதும் எந்த மாநிலத்திலும் பெரும்பான்மை இல்லை என்பதும் ஒன்றா?

    கொஞ்சம் 300 கிராம் சமாச்சாரத்தை கசக்கி யோசிச்சா முரன்பாடு உங்களிடம்தான் சார் இருக்கிறது என்பது புரியும். அப்புறம் என்னை தத்தக்கா பித்தக்கானு சொல்லக் கூடாது சரியா?

    Comment by தத்தக்கா பித்தக்கா — August 5, 2006 @ 5:42 pm

  10. ஐயா,

    தங்கள் நீண்ட பதிலுக்கும் என் கேள்விகளுக்கு விடை அளிக்கும் ஈடுபாடும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

    தங்கள் விடைகளில் முழு சமாதானம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

    என் கேள்விகளுக்கு தங்கள் பதிலில் விடை கிடைத்ததாக நான் எண்ணவில்லை. அதை விளக்குகிறேன்….

    1. ///1. காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்./

    இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? ///

    உதாரணத்திற்கு ஒன்று; ஆர்.எஸ்.எஸ்-ஸிற்கும் காந்தி கொலைக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கும் வலைத்தளம் இது.

    ஐயா, தாங்கள் விளக்கத்தில் குழப்பத்தையே காண்கிறேன். ஆர்.எஸ்.எஸ். என்ற இயக்கத்துக்கு கொலையில் தொடர்பு உண்டு என்று சொன்ன நீங்கள், இதற்கு ஆதாரமாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.ஸில் உறுப்பினர் என்று சொல்வது எப்படி ஆதாரமாகும்? எந்த இயக்கத்து உறுப்பினரின் செயல்களுக்கு அந்த அமைப்பே பொறுப்பு என்பது, மன்னிக்கவும், அபத்தமாக தோன்றுகிறது. இஸ்லாமியர்கள் குண்டுவைத்தால் அதற்கு இஸ்லாமை குறை சொல்லக்கூடாது என்று வாதிடும் நீங்கள் அதே குற்றத்தை பிறர் மீது சுமத்துகிறீர்கள்.

    தாங்கள் குறிப்பிட்ட புத்தகம் பற்றி முழுதாக அறியேன். தாங்கள் சுட்டிக்காட்டிய வலைப்பகுதியை ஆவலுடன் படித்தேன். அங்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொலைக்கு காரணம் என்பதற்கு சிறிதேனும் ஆதாரம் காணப்படவில்லை. மீண்டும் மீண்டும ஆர்.எஸ்.எஸ்.ஸின் உறுப்பினராக கோட்சே இருந்தார் என்று சொல்லப்படுகிறது. தங்கள் ஆதாரமாக காட்டப்படும் படேல் அவர்களின் கடித்த்திலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரசாரம் ஒரு அபாயகரமான சூழலை ஏற்படுத்தியது என்றுதான் காண்கிறதே ஒழிய கொலை செய்தார்கள் என்று எங்குமே குற்றம் சாட்டப்படவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டு (அபாயகரமான சூழலை ஏற்படுத்தியது….) பல அமைப்புகள் மேல் பல தடவை சொல்லப்பட்டது. இதில் எந்த அளவு ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், அவை கொலை குற்றத்துக்கு காரணமாகாது.

    திரு.வீரமணி அவர்களின் கருத்துக்களை நான் நடுநிலையான கருத்துக்களாக ஏற்க மாட்டேன். அவர் ஏதாவது ஆதாரத்தை முன்வைத்தால் அதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். அதே போல் மார்க்ஸ் அவர்களைப்பற்றியும் அறியேன். அவர் புத்தகத்தில் உள்ளது என்பதையே தாங்கள் ஆதாரமாக காட்டுவது சரியல்ல. அவ்வாறு இருந்தால், இஸ்லாமியர்களை அவதூறாக சொல்லும் பல நூறு நூல்களை எதிர்தரப்பினர் ஆதாரமாக காட்ட இயலும்.

    2. ////இஸ்லாத்தைப் பற்றி சரியாக தெரியாதவர்கள் சொல்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது. முஸ்லிம்களிலேயே ஒரு சிலர் இப்படி சொல்கிறார்களே என்றால், திருக்குர்ஆனில் எந்த வசனத்தை குறித்து அவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்பதை தயவு செய்து தெரிவியுங்கள். அதன் உண்மை விளக்கம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.////

    மன்னிக்கவேண்டும். இதை விளக்க வேண்டியது நான் இல்லை. பல இஸ்லாம் அறிஞர்கள் சொல்வது சரியான வழி இல்லை என்றும் தாங்கள் கூறுவது மட்டுமே சரி என்றும் தாங்கள் கூறுவதால், விளக்க வேண்டியது தாங்கள்தான். யார் எந்த குரான் வசனங்களை ஆதாரமாக கொண்டு சொல்கிறார்கள் என்று நான் அறியேன். அதில் ஈடுபாடும் இல்லை. அதற்கு எனக்கு அவசியமும் இல்லை. அம்மாதிரி இஸ்லாமியர்கள் சொல்வதை தாங்கள் மறுக்கவில்லை. தாங்களே அவர்களின் பல புத்தகங்களையும், இணைய செய்திகளையும் அறிந்திருப்பீர்கள். என்னைவிட இஸ்லாம் மத நுணுக்கங்களை தாங்களே அறிவீர்கள். தாங்கள் விளக்க முற்படாததே தங்களிடம் முழு சமாதானம் இல்லை என்ற அச்சத்தே தோற்றுவிக்கிறது. இரு வேறு இஸ்லாமிய பிம்பங்களை தங்கள் மத்த்தினரே உறுவாக்கினாலும், இதுதான் உண்மை என்று தாங்கள் சொல்வதைத்தான் ஏற்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் தாங்கள் சொல்லவில்லை…

    3. /// ஆதாரம்தான் கொடுத்திருக்கிறேனே! இந்த வாக்கியமே திரு.எம்.அசோகன் எழுதிய ‘சாவர்க்கர் - உண்மைச் சித்திர …///

    மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன். புத்தகத்தில் உள்ளது என்பது ஆதாரம் ஆகாது. திரு அசோகனை பற்றி நான் அறியவில்லை. ஆதலால், என்னால் இதன் நம்பகத்தன்மையை தெளிவாக்கவில்லை. தாங்கள் விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள். புத்தகங்கள் ஒரு எழுதப்பட்ட தனிமனித எண்ணங்கள்தானே. இஸ்லாமியர்களின் வாழ்க்கையை இழிவுபடுத்தியும், பேகாம்பரை இழிவுபடுத்தியும், காபா ஒரு சிவன் கோவில் என்றெல்லாம் ‘சரித்திர ஆதாரங்கள்’ என்று பல புத்தகங்களை தாங்கள் அறிவீர்களா? இம்மூன்று கருத்துக்களையும் தாங்கள் ஏற்கிறீர்களா? அவைகள் மிக பெயர் பெற்ற வரலாற்று அறிஞர்களால் எழுதப்பட்டனவை. ஒரு உதாரணத்திற்கு இவ்வாறு கூறினேன். இதன் பதிலை நான் அறிவேன்.

    4. ///இப்படியெல்லாம் எந்தப் பத்திரிக்கையிலும் தலைப்புச் செய்தியை பார்த்த நினைவில்லை. /

    ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற சொற்றொடரும், இந்த பிம்பமும் இந்தியாவில் இந்துத்துவாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டது என்று தாங்கள் சொல்ல வருகிறீர்களா? ///

    மீண்டும் மன்னிக்கவேண்டும். நான் கேட்டது உலகளாவிய ஊடகங்களில் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்றே பல இடங்களில் சுட்டப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. இம்மாதிரி தீவிரவாத நிகழ்ச்சிகள் இஸ்லாமிய வன்முறை என்றே சித்தரிக்கப்படுகின்றன.

    உதாரணத்திற்கு, பம்பாய் குண்டு வெடிப்புக்கு பாரீஸின் மிக பிரபல பத்திரிக்கையான ‘ல மான்ட்’, இஸ்லாமிய தீவிரவாதிகள் கைவரிசை என்றே தலையங்கம் எழுதியது. (இணையத்தில் தாங்கள் படித்துக்கொள்ளலாம்). இம்மாதிரி ஒரு மன பிம்பத்தை ஊடகங்கள் ஏற்படுத்துவது ஏன் என்று கேட்டேன். தாங்கள் விளக்கவில்லை. இதற்கும் இந்துத்துவா தான் காரணமா என்றேன்?

    தங்கள் சரியான விளக்கங்களை யோசித்தாவது வழங்குமாறு வேண்டுகிறேன்….

    நன்றி

    Comment by ஜயராமன் — August 5, 2006 @ 6:29 pm

  11. 5. ////ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தை பேணுபவை. /

    இதற்கு என்ன ஆதாரம்? ஆர்.எஸ்.எஸ். கோவால்கரின் பேட்டியை தாங்கள் அளித்துள்ளீர்கள். அதற்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்த மறுப்பையும் அதை அந்த அமைப்பின் கொள்கையாக ஏற்கவில்லை என்று சொல்வதையையும் தாங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அம்மாதிரி மறுப்புக்கு தங்கள் விளக்கம் என்ன? மேலும், பாஜக மீது தாங்கள் கூறும் இந்த கூற்றுக்கு ஆதாரம் என்ன?///

    இந்த வாக்கியமும் பேரா. மார்க்ஸ் சொன்னதுதான். அதற்கு அவரே ஆதாரம் கொடுத்திருக்கிறாரே? பதிவை கொஞ்சம் கவனமாக படித்தாலே விளங்கும். தவிர, ஆர்.எஸ்.எஸ்-ஸிற்கும் பா.ஜ.க-விற்கும் தொடர்பில்லை என்கிறீர்களா? எப்போதிலிருந்து?

    =========

    தங்கள் விளக்கத்தில் இரண்டு பிழைகளை காண்கிறேன். சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    முதலாவது, மார்க்ஸ் அளித்த ஆதாரத்திற்கு (கோவால்கரின் பேட்டி) ஆர்.எஸ்.எஸ். கொடுத்த விளக்கமும் அவர்கள் வர்ணாசிரம கொள்கையை புறக்கணிக்கப்பதாக பல சமயம் விடுத்த அறிக்கைகளையும் தாங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருந்தேன்? கோவால்கரின் பேட்டி ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை அல்ல என்று அந்த அமைப்பு தெளிவுபடுத்தியதை தாங்களோ, மார்க்ஸ் அவர்களோ குறிப்பிடவில்லை. அம்மாதிரி அவர்கள் கொடுத்த விளக்கத்தை பற்றி தங்கள் எண்ணம் என்ன என்று கேட்டிருந்தேன்? தாங்கள் பதில் அளிக்கவில்லை.

    மேலும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீது தாங்கள் (அதாவது மார்க்ஸ் கூட) சொல்லும் ஆதாரமான கோவால்காரின் பேட்டி, பாஜக என்ற கட்சி மீது தங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டேன்? தாங்கள் விளக்கவில்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஒரே குடையின் கீழ் விளங்கினாலும், பலப்பல விஷயங்களில் அவர்களுக்குள்ளேயே முரண்படுகின்றன. அதனால், தாங்கள் ஒரே மொத்தமாக ஆதாரம் கொடுக்காமல் கூறியிருக்கிறீர்கள். ஆர்எஸ்எஸ் வர்ணாசிரம கொள்கை உள்ளது என்று தாங்கள் வேறு ஆதாரம் காண்பிப்பதாக இருந்தாலும், அது பாஜக மீது எப்படி ஆதாரம் ஆகும்? உதாரணத்துக்கு, கோயம்புத்தூர் முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று சொல்ல்லாமா? தங்கள் உறவினர் குண்டு வைத்தால் தங்களையும் குற்றவாளி என்று சொல்லலாமா? இதுவே என் சந்தேகம்?

    நன்றி

    Comment by ஜயராமன் — August 5, 2006 @ 6:38 pm

  12. //காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1948-ல் காந்தி கொலைக்கு பிறகு, 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும், பிறகு 1992-ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகும், இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கம்தான் இது. இந்த இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, ‘சிமி (SIMI) போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்று சொல்கிறார்.//

    SIMI மட்டுமல்ல முஸ்லிம் லீக்கிலிருந்து ஆரம்பித்து ஜமா அத்தே இஸ்லாமி, தௌஹீத் ஜமா அத், JAQH, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நீதி பாசறை என அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப் பட வேண்டும்.

    அதற்கு தாய் மண்ணை உயிராக நேசித்து ஆங்கிலேயனிடமிருந்து அதனை மீட்க தங்களது இரத்தத்தால் வீர காவியம் எழுதிய தியாக செம்மல்களின் பரம்பரையில் வந்த இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் தயார்.
    அதற்கு முன் ஒரு முக்கிய கேள்வி:
    இந்த இஸ்லாமிய இயக்கங்கள் அவை தீவிரவாத இயக்கங்களோ அல்லது மிதவாத இயக்கங்களோ இவை தோன்றுவதற்கு காரணம் என்ன? இவற்றின் தோற்றக்காலம் என்ன என்பதைக் குறித்து சற்று எண்ணிப் பார்க்க கோருகிறேன்.
    இந்திய சரித்திரத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு சவாலாக இன அடிப்படையில் இயக்கத்தை தோற்றுவித்தது யார்?
    இந்திய மக்கள் ஒற்றுமையோடு தங்களது மண்ணின் விடுதலையை கனவு கண்டு கொண்டு ஆங்கில அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த போது அப்போராட்டத்தின் தாக்கத்தால் விரைவில் சுதந்திரம் கிடைத்து விடும் என கணக்கு கூட்டிய சில ஆரிய பார்ப்பன வந்தேறிகள் சுதந்திர இந்தியாவை தங்கள் பிடியில் கொண்டு வர, சுதந்திரத்திற்காக தங்கள் எண்ணிக்கையை விட அதிக அளவில் உயிர் தியாகம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயத்தை கருவறுக்க திட்டமிட்டு ஒரு அட்டூளிய அராஜக மனிததன்மையற்ற ஆயுதபடையை பயிற்சியளித்து ஆர் எஸ் எஸ் என்ற பெயரில் தயார் செய்து இந்திய சரித்திரத்தில் இன அடிப்படையில் ஓர் வன்முறை இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.
    ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவதற்காகவா இவர்கள் இந்த அராஜக இயக்கத்தைத் தோற்றுவித்தனர். இல்லை. பின் எதற்காக?
    ஆரிய வந்தேறி பார்ப்பனர்களின் மனு அரசுக்கு எதிராக இவர்களால் கணிக்கப்பட்ட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் இவர்களை போண்டோடு அழிப்பதற்காகத் தான் இக்கூட்டம் மூளைச் சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை கொண்டு ஓர் அக்கிரம இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.
    இல்லை என்று ஆர் எஸ் எஸ்ஸால் மறுக்க இயலுமா? இல்லையெனில்,
    இராணுவத்துக்கு நிகரான பயிற்சி பெற்ற ஆர் எஸ் எஸ் கர்ம வெறி வீரர்கள் எத்தனை முறை இந்திய எல்லையில் இந்தியாவிற்காக களமிறங்கியிருக்கின்றனர் கூற முடியுமா? எத்தனை பேரை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கியமாக சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது கூற இயலுமா?
    இல்லை இவர்களால் கூற இயலாது? ஒருவரைக் கூட காட்ட இயலாது. அதற்கு பதிலாக,
    இந்திய சுதந்திரப்போருக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு சாதமாக ஆர் எஸ் எஸ் செயல் பட்டதை ஆதாரத்துடன் குறிப்பிட இயலும். காட்டிக் கொடுத்த செயல் வீரர்கள் வாஜ்பேயியிலிருந்து ஆங்கில அரசுக்கு விசுவாசமாக செயல்பட்ட வந்தேறி ஆரிய பார்ப்பன வர்க்கங்களை லிஸ்ட் போட்டு காண்பிக்க இயலும்.
    இன்னும் கூற வேண்டுமெனில், இந்திய சுதந்திரப் போரில் தேசப்பற்று மிக்க சிலர் ஈடுபட்டதை தடுக்கும் முகமாக, “நம் சக்தியை தற்போது செலவளித்து விடக் கூடாது. அதனை சேமித்து வைக்க வேண்டும். நமது சக்தியை காட்ட வேண்டியது முஸ்லிம்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எதிராகத் தான்” என ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர்கள் பேசி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரையும் தடுத்ததை காண இயலும்.
    இவ்வாறு லட்சக்கணக்கான அப்பாவிகளை மூளைச் சலவைச் செய்து ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக திருப்பும் பொழுது அச்சமூகம் என்ன செய்ய வேண்டும். “வாருங்கள் சகோதரர்களே! நாம் அனைவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்கள் தான். எனவே நீங்கள் என் சகோதரர்கள் ஆகிறீர்கள். எனவே வந்து என் தலையை வெட்டி எடுத்துப் போங்கள்” என தலையை நீட்டி வைத்துக் கொண்டா நிற்க வேண்டும்.
    இந்த அராஜக இயக்கத்தின் தோன்றுதலால் தான் அதிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கும், எவ்வித பிரக்ஞையுமற்று இருக்கும் அப்பாவி சமுதாயத்தை உணர்வூட்டுவதற்கும், அவர்களின் சமூக அரசியல் நிலை நிற்பிற்காக போராடுவதற்கும் தான் மேற் குறிப்பிட இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றின.
    இதனை இவ்வியக்கங்களின் தோற்ற காலத்தையும் ஆர் எஸ் எஸின் தோற்ற காலத்தையும் ஒப்பிட்டு நோக்கினாலே புரிந்து கொள்ள இயலும்.
    எனவே இப்பொழுதும் ஒரு தேசப்பற்று மிக்க, தாய் மண்ணை உயிராக நேசித்து ஆங்கிலேயனிடமிருந்து அதனை மீட்க தங்களது இரத்தத்தால் வீர காவியம் எழுதிய தியாக செம்மல்களின் பரம்பரையில் வந்த இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் SIMI மட்டுமல்ல முஸ்லிம் லீக்கிலிருந்து ஆரம்பித்து ஜமா அத்தே இஸ்லாமி, தௌஹீத் ஜமா அத், JAQH, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நீதி பாசறை என அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறிய போராடுவதற்கு தயார்.
    அதற்கு முன் இதற்கான காரணத்தை ஏற்படுத்திய அக்கிரம, அராஜக, வெறிப்பிடித்த ஆர் எஸ் எஸையும் அதன் பரிவார இயக்கங்களையும் அடியோடு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறிய தேசப்பற்று மிக்க இந்திய முஸ்லிம்களாகிய எங்களோடு கைகோர்த்து போராட அத்வானியிருந்து ஆர் எஸ் எஸிற்கு காவடி தூக்கும் ஜெயராமன் வரை அனைவரும் தயாரா?

    இறை நேசன்

    Comment by இறை நேசன் — August 6, 2006 @ 8:57 am

  13. //தங்கள் உறவினர் குண்டு வைத்தால் தங்களையும் குற்றவாளி என்று சொல்லலாமா?//

    தங்கள் உறவினர் குண்டு வைத்தால் தங்களையும் குற்றவாளி என்று சொல்வது அபத்தம் தான்.

    ஆனால் தாங்கள் குண்டு வைக்க தங்கள் உறவினரின் பேச்சும் தூண்டுதலும் மட்டுமே காரணம் எனில்?..

    தாங்கள் குண்டு வைக்க தங்கள் உறவினரே களம் ஒதுக்கித் தந்தால்?..

    ஆனால் தாங்கள் குண்டு வைக்க தங்கள் உறவினரே ரத்த யாத்திரைகள் நடத்தினால்?..

    கண்டிப்பாக முதல் குற்றவாளி தங்கள் உறவினர் தான் என்பதில் சந்தேகம் உண்டா? சகோதரரே?

    இறை நேசன்

    Comment by இறை நேசன் — August 6, 2006 @ 1:34 pm

  14. திரு. ஜயராமன்,

    //தங்கள் விடைகளில் முழு சமாதானம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
    என் கேள்விகளுக்கு தங்கள் பதிலில் விடை கிடைத்ததாக நான் எண்ணவில்லை.//

    ஆர்.எஸ்.எஸ் ஒரு சாத்வீகமான அமைப்பு என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களை சமாதானப் படுத்த என்னால் இயலாது. அது எனக்கு அவசியமும் இல்லாதது. நான் படித்த, கேட்ட ஆதாரங்களின் அடிப்படையில் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்-ஸிற்கு பங்கு இருக்கிறது. அவை அனைத்தையும் நான் இங்கு பட்டியலிட்டாலும் நீங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆர்.எஸ்.எஸ்-ஸிற்கும் காந்தி கொலைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று யாராவது நம்புகிறார்கள் என்றால் அவர்கள்தான் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

    //2. இஸ்லாத்தைப் பற்றி சரியாக தெரியாதவர்கள் சொல்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது. முஸ்லிம்களிலேயே ஒரு சிலர் இப்படி சொல்கிறார்களே என்றால், திருக்குர்ஆனில் எந்த வசனத்தை குறித்து அவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்பதை தயவு செய்து தெரிவியுங்கள். அதன் உண்மை விளக்கம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்./
    மன்னிக்கவேண்டும். இதை விளக்க வேண்டியது நான் இல்லை. பல இஸ்லாம் அறிஞர்கள் சொல்வது சரியான வழி இல்லை என்றும் தாங்கள் கூறுவது மட்டுமே சரி என்றும் தாங்கள் கூறுவதால், விளக்க வேண்டியது தாங்கள்தான்..//

    இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும், ஹதீஸ் எனப்படும் நபிகள் நாயகம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைதான். இஸ்லாம் பற்றி கூறப்படும் கருத்துக்கள், இவ்விரண்டிற்கும் ஒத்துப் போனால் மட்டுமே அதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளலாம். அதற்கு மாறுதலான கருத்தை யார் சொன்னாலும், அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இந்த விஷயத்தில், யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல.. என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் எந்த இறைவசனம் குறித்து கருத்து சொன்னார்கள் என்று கேட்டேன்.

    // புத்தகத்தில் உள்ளது என்பது ஆதாரம் ஆகாது. திரு அசோகனை பற்றி நான் அறியவில்லை. ஆதலால், என்னால் இதன் நம்பகத்தன்மையை தெளிவாக்கவில்லை. தாங்கள் விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள். புத்தகங்கள் ஒரு எழுதப்பட்ட தனிமனித எண்ணங்கள்தானே…//

    இஸ்லாம் பற்றி யார் யாரோ சொல்வதற்கெல்லாம் விளக்கம் அளிக்க நான் கடமைப் பட்டவன் என்று நீங்கள் சொன்னது போல ஆர்.எஸ்.எஸ் பற்றி பிறர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது தாங்கள்தான் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். திரு. எம்.அசோகனின் புத்தகத்தை ஒரு புத்தகக் கண்காட்சியில்தான் கண்டேன். அதில் தனி மனித எண்ணங்கள் மட்டுமல்லாமல் பல ஆதாரங்களையும் அவர் தந்திருக்கிறார். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அப்புத்தகத்திற்கு ஆதாரபூர்வமாக மறுப்பு எழுதலாமே!

    /// உலகளாவிய ஊடகங்களில் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்றே பல இடங்களில் சுட்டப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. இம்மாதிரி தீவிரவாத நிகழ்ச்சிகள் இஸ்லாமிய வன்முறை என்றே சித்தரிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, பம்பாய் குண்டு வெடிப்புக்கு பாரீஸின் மிக பிரபல பத்திரிக்கையான ‘ல மான்ட்’, இஸ்லாமிய தீவிரவாதிகள் கைவரிசை என்றே தலையங்கம் எழுதியது. ///

    கோட்சே என்ற ஒரு தனிமனிதன் செய்த கொடூரச் செயலுக்கு அவன் சார்ந்திருந்த இயக்கம் பொறுப்பு வகிக்காது என்று நீங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தீர்கள். கோட்சேயின் செயலுக்கு அவன் சார்ந்திருந்த ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கத்தின் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டதே தவிர, அவனது மதமான இந்து மதத்தின் மீதல்ல.

    ஆனால் சில இஸ்லாமியர்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு, அவர்கள் மீதும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் மீதும் குற்றம் சாட்டப்படுவதோடு நில்லாமல், அவர்களின் மதமும், அந்த மதத்தைச் சார்ந்த மற்றவர்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் படுகிறார்கள். இது உலக மகா அபத்தம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    மேலும், சுவனப்பிரியன் பதிவில் நான் உங்களிடம் கேட்ட கேள்வி ஒன்று இன்னும் பதிலளிக்கப் படாமல் உள்ளது.
    http://suvanappiriyan.blogspot.com/2006/07/blog-post_15.html#c115304592355489097
    இந்த விவாதத்திற்கு தொடர்புடையதாக இருப்பதால் எனது அந்தக் கேள்விக்கு உங்கள் பதிலை தயவு செய்து தெரிவியுங்கள். (அதே ஜயராமன் தானே நீங்கள்?)

    நன்றி.

    Comment by இப்னு பஷீர் — August 6, 2006 @ 4:10 pm

  15. ஆரோக்கியம் உள்ளவன், இறைநேசன், தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

    தத்தக்கா பித்தக்கா என்ற பெயரில் பின்னூட்டமிட்ட நண்பரும் சரியான கருத்தொன்றைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். வலைப்பதிவுலகத்தில் இதுவரை கேள்விப்படாத பெயராக இருக்கிறதே!

    Comment by இப்னு பஷீர் — August 6, 2006 @ 4:15 pm

  16. Very good analysis.Thank you for advocating the poor Muslims of India in your article.

    Comment by Izzath — August 7, 2006 @ 8:56 am

  17. RSS is bad.That does not justify the support to islamic fundamentalism
    and terrorism.A.Marx is yet another supporter of islamic fundamentalism.
    He has no sense of objectivity when it comes to islam.

    Comment by ravisrinivas — August 7, 2006 @ 10:47 am

  18. Br. Izzath, thanks for your comments. I also visited your blog http://izzath.blogspot.com/ A very detailed analysis indeed. Why don’t you list your blog in Thamizmanam?

    Mr. Ravisrinivas, I could agree partially with your comments. You know which part I mean..!

    No form of terrorism can be justified, irrespective of religion. I can proudly say that only the muslim community condemns its own people if they involve in any terrorist activities. All others, including the Hindutvas and their supporters, while blaming another community for all the terrorist activities, trying to conceal their own peoples’ sinister motives and justify their terrorist activities.

    Regarding fundamentalism, I suggest you refer to this website for a definition of the word ‘fundamentalist’.
    http://www.irf.net/irf/faqonislam/index.htm
    Every muslim must strive to practice the fundamentals of Islam. In this sense, a good muslim will be proud to be a Fundamentalist.

    Regarding A. Marx, instead of throwing generalised allegations such as ‘no objectivity’, I suggest you read some of his books and try to refute his points with evidences.

    Comment by இப்னு பஷீர் — August 7, 2006 @ 2:31 pm

  19. //RSS is bad.That does not justify the support to islamic fundamentalism
    and terrorism.A.Marx is yet another supporter of islamic fundamentalism.
    He has no sense of objectivity when it comes to islam.//
    இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வது அயோக்கியத்தனம் என்பதாக விவாதம் நடக்கையில், திரும்பவும் அவ்வாறே சொல்லி அதை மாற்றாமல் அல்லது மாறாமல் பார்த்துக் கொள்வதுதான் சில அம்பிகளின் வேலை. அதில் இவரும் ஒருவரோ!!

    Comment by sultan — August 7, 2006 @ 2:32 pm

  20. ஏப்பா… யாராவது கவனித்தீர்களா… இமாம் அலி போன்றவர்களை சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட, மதம்மாறச் செய்து தீவிரவாதம் புரியச் செய்து இஸ்லாமிய இனத்தின் மீது துவேசம் வளர்க்கின்றனவோ என்றும் தோன்றுகிறது. பாருங்கள் அந்த இமாம் அலியை கடைசியில் உயிரோடு பிடிக்க வழியிருந்தும் பெங்களுரில் வைத்து கொன்றுதான் உடலைக் கொண்டுவந்தார்கள். எங்கே இரகசியத்தைச் சொல்லிவிடுவானோ என்று…மேலும் இஸ்லாமியர்கள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் மதம் மாற்றப்பட்ட கைக்கூலிகளை படிக்க வைத்து அல்லது வேலை பார்க்க வைத்து பின் தீவிரவாத செயல்களில் ஈடுபடவைக்கின்றனர் சிலர். பிறகு அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு.. இஸ்லாமியத் தீவிரவாதி என்று முத்திரை வேறு…. சமீபத்தில் கூட கோவையில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இப்படி ஒரு நாடகத்தை நடத்தி பின் உண்மை வெளியாகி வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவில்லையா…. இதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.. மதம் மாறிய அனைவரும் உண்மையிலேயே மனம் விரும்பி மதம் மாறினரா.. அல்லது ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா என்று முஸ்லிம் அமைப்புகள் அவர்களை ஆதரிப்பதற்கு முன் நன்கு ஆராய வேண்டும்.

    Comment by anonymous — August 27, 2006 @ 7:35 am

  21. எங்கேப்பா நம்ம ஐய(ர்)? காணோம்.

    தேசப்பற்றை மொத்த குத்தகைக்கு எடுத்ததாக வேஷமிடும் களவாணி ஆர் எஸ் எஸ் பரிவாரங்கள் எங்கே போயின?

    ஏதோ தேசத்திற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தது போல் வெளிவேஷமிட்டு நாட்டை துண்டாடும் கேடுகெட்டதுகள், உண்மையிலேயே தங்கள்வார்த்தைகளில் சுத்தம் உள்ளதுகள் எனில் எல்லா இயக்கங்களையும் ஒழித்து விட்டு ஓரணியில் திரள தயாரா என்ற என் அழைப்புக்கு பதில் சொல்லக் காணோமே?

    தேசப்பற்று எங்கே உள்ளது என்பது தெளிவாகின்றதா?

    அன்புடன்
    இறை நேசன்

    Comment by இறை நேசன் — December 10, 2006 @ 6:47 am

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.