கிச்சன் ஜர்னலிஸம்!

September 22, 2006

ஜன்னல் ஜர்னலிஸம் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிச்சன் ஜர்னலிஸம்? அதுதான் கமலா சுரைய்யா விஷயத்தில் நடந்தது.

சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு, கழிவுகளைத் தெருவிலுள்ளக் குப்பைத் தொட்டியில் கொட்ட வந்த சுரைய்யாவின் வீட்டு வேலைக்காரியை இடைமறித்தது ஒரு பரிதாபக் குரல்: “அம்மோய்! இந்தப் பக்கமா போடுங்கம்மோய்” என்று கெஞ்சிக் கூத்தாடிக் கமலா சுரைய்யா வீட்டுக் கழிவுகளை வாங்கிப் போய், அந்தக் கொஞ்சக் கழிவுகளோடு, தன்னிடம் மிகுதியாய் மிஞ்சியிருந்தவற்றைப் போட்டுக் கலக்கி, தானே சமைத்ததுபோல் ‘மடுத்த’ தட்டில் வைத்து ‘மாத்ருபூமி’யில் பரிமாறினார் அதன் ஃபோட்டோகிராஃபர்.

தொடர்ந்து படிக்க…

நன்றி: வஹ்ஹாபி

முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை:

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
- ஜவஹர்லால் நேரு -

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
- எஸ். எச். லீடர் -

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் -

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
- டாக்டர் ஜான்சன் -

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா -

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
- நெப்போலியன் -

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. கெல்லட் -

சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
- வில்லியம்மூர் -

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
- காந்திஜி -

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
- தாமஸ் கார்லைல் -

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
- டால்ஸ்டாய் -

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
- கிப்பன் -

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.
- கலைஞர் கருணாநிதி -

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.
- கவியரசி சரோஜினி நாயுடு -

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
- மைக்கேல் ஹெச். ஹார்ட் – ‘The 100′ என்ற நூலில்..

சுருக்கமாக சொல்வதென்றால், தெளிந்த சிந்தனையும் நடுநிலை நோக்கும் கொண்ட அறிஞர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வைப் புரட்டிப் பார்க்கையில் அதில் சுயநலமற்ற தொலைநோக்குக் கொண்ட சீரிய சிந்தனை பிரதிபலிக்கக் கண்டார்கள். கீழ்த்தரமான எண்ணங்களும் குறுகிய மனப்பான்மையும் உடையவர்கள் தங்கள் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அண்ணலார் மீது களங்கம் சுமத்த ஏதும் வாய்ப்பு கிடைக்காதா என இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி: திண்ணை Thursday September 21, 2006

ஏமாந்த நரிகள்!

September 17, 2006

கிருஸ்த்துவ மதத் தலைவர் 16-ம் போப் பெனடிக்ட் இஸ்லாம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து சில ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிட்டார். கிருஸ்த்துவ மதத்தின் உயர்ந்த பதவி வகிக்கும் போப் அவர்கள் இஸ்லாம் குறித்து இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியது முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். சில முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் போப் அவர்களை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தனர். இரு தரப்பிலும் உஷ்ணம் அதிகரிக்க, விவகாரம் பெரிதாக வெடித்து, இது உலகின் இரு பெரும் கலாச்சாரங்களுக்கிடையிலான போராக மாறிவிடுமோ என அனைவரும் அஞ்சும் சூழ்நிலை நிலவியது.

இது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலின் பேட்டி:

“இஸ்லாம் மதம் குறித்து விமர்சிருத்திருப்பதன் மூலம் புதிய போரை ஆரம்பித்து வைத்துள்ளார் போப். வரும் நாட்களில் அது பற்றி எரியப் போகிறது.

இந்த விஷயம் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையிலானது. இதை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். வி.எச்.பி.க்கு இதில் தொடர்பு இல்லை.

அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளட்டும். நாம் அமைதியாக அதை பார்ப்போம்.”

இதைப் படித்தபோது நான் முன்பு எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.

ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,
சில தூண்டி விடப்பட்டு..
சில தூண்டிலில் இடப்பட்டு..

நரிகளும் ஓநாய்களும்
கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!

போப் அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் அசோக் சிங்கால்களின் ஆசையில் மண்ணள்ளிப் போடப்பட்டுள்ளது.

எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..! - கமலா சுரையா

September 15, 2006

கமலா சுரையா சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாத துணிச்சலான பெண்மணி. அவர் மாதவிக்குட்டியாக இருந்தபோதிலிருந்தே, அவரது எழுத்து, செயல் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு அவர் இஸ்லாமை வேறு தழுவி, இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் மற்றும் இந்துத்துவ சக்திகளின் அக்னிப் பார்வைக்கும் இலக்காகியிருக்கிறார்.

தஸ்லிமா நஸ்ரினை ஆதாரமாக காட்டி, கமலா சுரையா ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் இன்னும் இஸ்லாமில் ‘மாட்டிக் கொண்டிருப்பது’ போல நேசக்குமார் என்பவர் (திண்ணையில்) எழுதியிருந்தார். ‘அப்படி எந்த நிர்ப்பந்தமோ கட்டாயமோ இல்லை’ என்பதையும் பத்திரிக்கைக்காரர்களின் திரிபுவாதம்தான் அது என்பதை சுரையாவே நேரடியாக விளக்கியதை தேஜஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. (இக்கட்டுரை அபூசுமையாவின் தமிழாக்கத்தில் திண்ணையில் வெளி வந்திருக்கிறது)

இது தவிர, ஆனந்த விகடன் 02-07-06 தேதியிட்ட இதழில் கமலா சுரையாவின் நேரடியான பேட்டி வெளியாகி இருக்கிறது.

அதில் “எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது. அதே நேரம், இஸ்லாம் சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்“. என்கிறார் சுரையா.

சுரையா1

‘இஸ்லாம் மதம் மடுத்து’ என்பதுதான் அவரது உண்மை நிலைப்பாடாக இருந்தால் இந்துத்துவ சக்திகள் அவரைக் கொல்ல ஏன் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்? மாறாக அவருக்கு போதிய பாதுகாப்பளித்து அவரை இஸ்லாமை விட்டு வெளியேறச் செய்திருக்கலாமே?

இனி அவரது ஆனந்த விகடன் பேட்டியிலிருந்து…

வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ். கடுமையான பாதுகாப்பு. தொலைபேசி அழைப்புகள்கூட சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உள்ளே… ஏராளமான புத்தகங்களுக்கு நடுவில், மும்முரமாக எழுதிக்-கொண்டு இருக்கிறார் கமலாதாஸ்.

‘என் கதை’ என்கிற சுயசரிதையின் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த இந்த மலையாளப் பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதால், நீதிமன்றம் இவருக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. மாதவிக்குட்டி என்கிற பெயரில் இருந்து கமலாதாஸாக மாறியவர், பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறி, இப்போது கமலா சுரையா!

‘’நான் பரபரப்புக்காக எழுதுவதில்லை. என் எழுத்தும் பேச்சும் பரபரப்பாக்கப் படுகிறது. நான் மதத்தை நம்புவதில்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை. அதனால்தான் என் பேனாவின் தாக்குதலை ஆயுதங்களால் எதிர்கொள்கிறார்கள்.

வீட்டுக்குள் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தாலும், என் எண்ணங்களும், எழுத்துக்களும் ஒரு நதியைப் போலப் பாய்ந்துகொண்டே இருக்கின்றன. மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாக என்னை இந்தத் தலைமுறை மதிக்கிறது. இருபது வயதாகும் ஓர் இளம் பெண் எழுத்தாளர், என் கைரேகையைப் பதித்து, அதையே என் அணிந்துரையாக நினைத்துச் சந்தோஷப்படுகிறாள்.

நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், ‘நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!’ என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்திய மான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்.'’

சுரையா2

‘’உங்கள் எழுத்துக்களால் நிறைய பேர் காயமடைகிறார்களே?'’

‘’யார் காயப்படுகிறார்கள்? பலவீனமானவர்கள் காயப்படுகிறார்கள். பிறரைக் காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் உடையவர்கள் காயப்படுகிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவர்கள் திருந்தட்டும். அதுதான் அவர்களுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது.'’

‘’இஸ்லாம் மதத்துக்கு நீங்கள் மாறிய பிறகு, நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்களே?'’

‘’நான் என் வாழ்நாள் முழுவதுமே எதிர்ப்புகளை எதிர்கொண்டுதான் வருகிறேன். உண்மையைத் தீவிரமாகப் பேசுகிற யாரும் எதிர்ப்புகளைச் சந்தித்தாக வேண்டும். எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது. அதே நேரம், இஸ்லாம் சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். அதனால், முஸ்லிம் தரப்பிலும் நிறைய எதிரிகளைச் சம்பாதித் திருக்கிறேன். இன்னொரு பக்கம் இந்துத்துவ சக்திகளும் என்னைக் கொல்ல தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், என் சுதந்திர எண்ணங்களைப் பதிவு செய்யாமல் எதற்காக நான் வாழ வேண்டும்? ‘’

‘’இந்த எதிர்ப்புகளுக்கு இடையில் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?'’

‘’நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் எழுத்துக்களுக்கு வருகிற எதிர்ப்புகள்தான் நான் உண்மையாக இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தும் உரைகல்.

சுரையா3

‘’குடும்ப அமைப்பும் சிதையக் கூடாது; ஆனால், பெண் விடுதலையும் அவசியம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதே முரண்பாடு என்று பெண்ணிய வாதிகள் பேசுகிறார்களே?'’

‘’பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, ‘கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்’ என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது.

தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்.'’

நன்றி: ஆனந்த விகடன், திண்ணை

தீவிரவாதத்திற்கான தீர்வு!

September 1, 2006

இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம் மார்க்கமோ பிற முஸ்லிம்களோ எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும், அவ்வாறு தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப் படுத்தும் பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறதா, இல்லையா? இந்தப் பொறுப்பை அவர்கள் எவ்வழியில் நிறைவேற்ற இயலும்?

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமுதாயத்தவர் எதிர்நோக்கும் கேள்விதான் இது! இக்கேள்விக்கு விடை காண முற்படுமுன், இப்பிரச்னையின் மூல காரணிகளையும் அவற்றின் பிண்ணனியைப் பற்றியும் சிறிது ஞாபகப் படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

2001 செப்டம்பர் 11-க்கு முன் ஒசாமா பின்லேடன் என்ற சவுதி அரேபியரைப் பற்றி உலக முஸ்லிம்களிலேயே பெரும்பான்மையினர் அறிந்திருக்கவில்லை. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இவரைக் குறிப்பிட்டு அமெரிக்கா குற்றம் சுமத்தியபோதுதான் இவரது பெயரை முழு உலகமும் அறிந்தது. ஆனால் இந்நிகழ்வுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவரை நன்கு அறிந்து, இவரது நடவடிக்கைகளை கண்காணித்து, ஊக்கமூட்டி, நிதி உதவி செய்து, ரஷ்யாவிற்கு எதிராக கொம்புசீவி இவரை வளர்த்து விட்டது, வேறு யாருமல்ல, அதே அமெரிக்காதான். அவர்கள் ‘வளர்த்த கடா’ தான் அவர்கள் மார்பை பதம் பார்த்தது.

இத்தாக்குதல் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும், ‘அமெரிக்க அரசு வேண்டு மென்றே தாக்குதல் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்தது’ என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்கிறது ‘Confronting the Evidences’ என்ற டாக்குமென்ட்டரி படம். இந்தப் படத்தை தயாரித்து, ‘வலி நிறைந்த கேள்விகள் - செப்டம்பர் 11 தாக்குதல் - ஓர் ஆய்வு’ (Painful Questions: An analysis of the September 11th Attack) என்கிற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டவர் எரிக் ஹஃப்ஸ்மித் (Eric Hufschmid) என்கிற அமெரிக்க புலனாய்வுச் செய்தியாளர்.

ஒசாமா பின்லாடனை அரசியல் காரணங்களுக்காக ஒரு போராளியாக வளர்த்து விட்ட அமெரிக்காதான், அவர் தங்களையே திருப்பி தாக்கியதும் அவரை ஒரு பயங்கரவாதியாக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அதன் பிறகு நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும்தான் உலக முஸ்லிம் சமுதாயத்தின் மீது இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாக இருக்கும். செப்-11 தாக்குதலுக்கு முன்பு வரை பெரும்பான்மை முஸ்லிம்களால் யாரென்றே அறியப்பட்டிராத ஒசாமா, ஏதோ உலக முஸ்லிம்களின் தலைவர் போலவும், அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பிரதிநிதி போலவும், உலக முஸ்லிம்கள் அனைவரின் நலனை பாதுகாப்பதற்காகவே அவர் இந்த தாக்குதலை நடத்தியது போலவும் ஊடகங்களில் சித்தரிக்கப் பட்டார். அந்தத் தாக்குதல், அமெரிக்காவின் முந்தைய அரசியல் செயல்பாடுகளின் பின்விளைவுதான் என்ற உண்மை மறைக்கப்பட்டு, ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற சொல்லாடலின் மூலம் அனைத்திற்கும் காரணம் இஸ்லாம் தான் என்ற மாயை உருவாக்கப் பட்டது. உலகெங்கிலும் முஸ்லிம்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப் பட்டனர். முஸ்லிம்கள் மீதான தேவையற்ற அச்சமும், வெறுப்புணர்வும், துவேஷமும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தூபமிட்டு வளர்க்கப் பட்டன. ஊடகங்களும் இதற்கு பெருமளவில் துணை புரிந்தன. யார் யாருடைய சதிச் செயலுக்காகவோ இஸ்லாம் மார்க்கமும் உலக முஸ்லிம் சமுதாயமும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப் பட்டனர். சுருக்கமாக சொல்வதென்றால், இஸ்லாமோஃபோபியா முழுவீச்சில் பெருகியது.

இந்த நிகழ்வுகளால் உலகெங்கிலும் அப்பாவி முஸ்லிம்கள் அல்லல் படுவது ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் சிறிதும் பெரிதுமாக தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் யாரும் மறுக்கவியலாது. சரி, இதற்கு தீர்வுதான் என்ன?

மிகச் சிக்கலாக வளர்ந்துவிட்ட இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, சிலர் எண்ணுவது போல இதற்கு தீர்வு காணும் பொறுப்பு இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமே உள்ள கடமை அல்ல. பல தரப்பினரின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் மட்டுமே இதை சாதிக்க முடியும். வன்முறைச் செயல்களுக்கு ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ எனப் பெயர் சூட்டி, பிரச்சினைகளுக்கான பழியை இஸ்லாம் மீது தூக்கிப் போடுவது எந்த வித தீர்வையும் தராது என்பதோடு, அத்தகைய அணுகுமுறை மேலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு மதச்சாயம் பூசுவதை நிறுத்தி அவற்றின் உண்மைக் காரணங்களை பாரபட்சமின்றி அலசி ஆராய்ந்து தீர்வு காண முயலுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

வித்தியாசமானதொரு அணுகுமுறையைக் கையாண்டு யெமன் நாடு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. ஒசாமா பின்லாடனின் மூதாதையர்களின் நாடான இது, பல ஆண்டுகளாகவே தீவிரவாதத்தின் மற்றொரு பெயராக இருந்தது. தீவிரவாதிகளின் தலைமையகமாக இந்நாடு உருவாகக் கூடிய அறிகுறிகள் இருந்தன. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

நீதிபதி ஹிதார் என்பவரது தலைமையில் இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு, தீவிரவாத செயல்களில் பங்கு பெற்று சிறையிலிருந்த இளைஞர்களை சந்தித்தது. “உங்கள் கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் குர்ஆனிலிருந்து நீங்கள் ஆதாரம் காட்டுவீர்களெனில், உங்களது போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். அப்படி இல்லாமல், நாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை நாங்கள் ஆதாரபூர்வமான நிரூபித்து விட்டால், நீங்கள் அனைவரும் வன்முறையை விட்டொழித்து விட வேண்டும்” என ஒரு ஒப்பந்தம் வைத்துக் கொண்டு, அவர்களுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியது இக்குழு.

இரண்டு வருடங்கள் கழித்து, இரு தரப்பினருக்குமே வெற்றி கிடைத்தது. ஆம்.. நீதிபதி ஹிதார் குழுவினர் முன்வைத்த கருத்துக்களை ஒப்புக் கொண்டதன் வாயிலாக 364 இளைஞர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டு நேர்வழிக்கு திரும்பினர். “டிசம்பர் 2002-க்கு பிறகு இங்கு எந்த தீவிரவாத சம்பவங்களும் நடக்கவில்லை.” என்கிறார் நீதிபதி ஹிதார். இவர்களில் யாருமே சண்டையிடுவதற்காக வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை என்றும் அவர் அறிவிக்கிறார்.

யெமன் நாட்டின் இந்த அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், மார்க்கம் குறித்த தவறான புரிதல்கள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களால் வன்முறைப் பாதையில் பயணிக்கும் இளைஞர்களை, பொறுப்புணர்வுள்ள மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை கொண்டு நேர்வழிக்கு திருப்பிவிட முடியும் என்பதுதான்.

இந்தியா போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள், தம் இளைய சமுதாயத்தினரின் மனதில் தீவிரவாத எண்ணங்கள் தலைதூக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு அந்தந்த நாட்டு பெரும்பான்மை சமுதாயத்தினருக்கு இருக்கிறது.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தீயச் செயல்களில் ஈடுபடுகிறான் என்றால் அவனைத் திருத்தும் நடவடிக்கைகளில் அந்தக் குடும்பத்தினருக்கு அவர்களின் அக்கம்பக்கத்தவரும் உதவ வேண்டும். மாறாக, அந்த ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து, அந்த இளைஞனின் செயல்களுக்காக அவனது குடும்பம் முழுவதையும் குற்றம் சுமத்தி அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் என்றால் பிரச்சினைக்கு எந்த வித தீர்வும் ஏற்படாது. இக்குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராட முற்படுவார்களேயல்லாது, தம் குடும்பத்து இளைஞனை நேர்வழிப்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்த இயலாமல் போகும்.

சிறுபான்மை முஸ்லிம்கள் தம் சமுதாய இளைஞர்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதை தடுத்து அவர்களை நேர்வழிக்கு சொண்டு வரும் முயற்சியில் பெரும்பான்மைச் சமுதாயம் தமது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிரிவினை சக்திகள் அடையாளம் காணப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையினரின் புரிந்துணர்வுடனான பங்களிப்பு இருந்தால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் தமது பங்கை சரிவர நிறைவேற்ற முடியும்.

இத்தகைய நல்லிணக்கமான சூழலை உருவாக்குவதில், அரசாங்கத்தின் பங்கும் இன்றியமையாதது. அரசாங்கம் இதில் எவ்வாறு பங்காற்றலாம் என்பதற்கு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் ரவிசங்கர் சுக்லாவிற்கு 20 மார்ச் 1954-ல் எழுதிய இக்கடிதம் விளக்கமளிக்கிறது.

என் அன்பான சுக்லாஜி,

மத்தியப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் நடவடிக்கைகள் குறித்து நீங்கள் எழுதியுள்ள ஜனவரி 27 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. உடனடியாக பதில் எழுதாமைக்கு வருந்துகிறேன்.

இந்திய முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு விதமான போக்குகள் இருக்கின்றன. அவற்றில் சில கண்டிக்கத் தக்கவையாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. எனினும் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது என நான் நினைக்கிறேன். பலதரப்பட்ட சூழல்களையும் நாம் ரொம்பவும் புறவயமாக மதிப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பொதுவில் மகிழ்ச்சியற்றும் திருப்தியற்றும் இருக்கிறார்கள் என்றால் தவறு நம் தரப்பில்தானே ஒழிய அவர்கள் தரப்பில் இல்லை. எந்த ஒரு பெருங்குழுவிற்கும் இது பொருந்தும். நாட்டுப் பிரிவினையாலும் அதன் பின்விளைவுகளாலும் இந்திய முஸ்லிம்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாதான் அவர்களின் சொந்த நாடு, அவர்களின் நலன்கள் இங்குதான் உள்ளன என்கிற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவது முழுக்க முழுக்க நம்முடைய பொறுப்பு. அதை நாம் செய்யத் தவறும்போது, முஸ்லிம்கள் அவர்களின் தலைவர்கள் சிலரால் தவறாக வழி நடத்திச் செல்லப்படுகிறார்கள் என நாம் சொல்வதில் அர்த்தம் இல்லை.

இந்திய முஸ்லிம்களின் சிந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு விரக்தி குடிகொண்டுள்ளது என்பது உண்மைதான். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பற்றி நான் பேசவில்லை. அவ்வாறு நிறையப் பேரும் இல்லை. ஆனால் பல்வேறு வழிகளில் முஸ்லிம்கள் மீது அழுத்தம் தொடர்ந்து ஏற்படுகிற மாதிரியான சூழல் இங்கு உருவாகியுள்ளது. அகில இந்திய அளவிலும், மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய இடமளிப்பது குறித்த பிரச்னை உள்ளது. கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவது குறித்த பிரச்சினை கூட உள்ளது. வணிகம் செய்வதிலும் அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. எனவே எதிர்காலம் குறித்த பாதுகாப்பின்மையை அவர்கள் உணர்வதில் வியப்பில்லை.

உருது மொழி குறித்த முஸ்லிம்களின் கோரிக்கை பற்றியும் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இது ரொம்பவும் முக்கியமான விசயம். வேறெதையும் விட முஸ்லிம்களை உளவியல் ரீதியில் பாதிக்கக் கூடிய விசயம். நமது கல்விக் கொள்கையின்படி உருது மொழியைக் கற்றுக் கொள்வதற்கான முழு வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்தித் தரவேண்டும். இப்படிச் செய்வது இந்தி மொழிக்கு எதிரானது அல்ல. தேசிய மொழி என்கிற வகையில் இந்திக்கு உறுதியான இடம் கொடுக்கப் பட்டுள்ளது. நமது நடைமுறைக் கொள்கை நாம் அறிவித்துள்ள கல்விக் கொள்கையுடன் பொருந்தாமலிருப்பதன் விளைவுதான் முஸ்லிம்கள் மனதில் ஆழமான விரக்தியுணர்வை ஏற்படுத்தியிருக்குமோ என நான் அஞ்சுகிறேன்.

இந்த நாட்டு மக்களில் முஸ்லிம்கள் ஒரு பெருந்தொகையினர் என்பதையும், அவர்களின் நல்லெண்ணத்தை நாம் எவ்வாறு பெறுவது என்பது ஒரு பெரிய பிரச்சினை என்பதையும் நாம் மறந்து விட்டது போலத் தோன்றுகிறது. பெரிய அளவில் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் எதிர்வினையைப் பொறுத்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்றுள்ள தேர்தல் ஒரு புதிய சூழலைப் பாகிஸ்தானில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் உறவுகள் மேம்படுவதற்கு வழிவகுப்பதாக அது உள்ளது. பாகிஸ்தான் மக்களின் பொதுவான உணர்வுகள் இந்தியாவுடன் நட்பு பாரட்டுவதாகவே உள்ளன. இந்தியாவில் உள்ள முஸ்லிம் குடிமக்களை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே எல்லாம் உள்ளது.

உங்கள் உண்மையுள்ள
ஜவஹர்லால் நேரு

(நன்றி: ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ - அ. மார்க்ஸ்)

தீவிரவாதம் மதங்களை கடந்த ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை கவனத்தில் கொண்டு, அதை ஒழிப்பதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடன் தங்கள் பங்கை செலுத்த முன்வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

நன்றி: திண்ணை August 31, 2006

இக்கட்டுரைத் தொடரின் முந்திய பகுதிகள்:

பகுதி-1 குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!
பகுதி-2 இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!
பகுதி-3 ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!
பகுதி-4 தீவிரவாதத்திற்கான தீர்வு!