இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? - 2

October 18, 2006

அன்புச் சகோதரர் எழில் அவர்கள் எனது முந்திய பதிவு தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி ஒரு தனி பதிவிட்டிருந்தார். இஸ்லாமை விமரிசித்து எழுதும் ஒரு சில வலைப்பதிவர்களைப் போலல்லாது மிக நாகரீகமான முறையில் எழுதியிருக்கும் இனிய சகோதரர் எழில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோ. எழில்,

ஒரு விஷயத்தை முதலில் தெளிவு படுத்தி விடுவது நலம் பயக்கும் என்று நினைக்கிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

தூதுத்துவம் என்பது யூதம், கிருஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை. இவர்களுக்கிடையில் வித்தியாசம் என்பது, இவர்கள் யார் யாரை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்தான். யூத மதம் ஆப்ரஹாமுக்கு (நபி இப்ராஹீம் (அலை)) பின் வந்த ஏசு உட்பட்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. கிருஸ்துவம் ஏசுவுக்கு (நபி ஈசா (அலை)) பின் வந்த முஹம்மது (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்லாம் இவர்கள் அனைவரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்வதோடு, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு தூதர்கள் யாரும் இல்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

இறைத்தூதர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. அவர்கள் எந்த தனி நபராலோ, அமைப்பாலோ நியமிக்கப் படுவதுமில்லை. உண்மையான இறைத்தூதர்கள் தக்க சான்றுகள் இன்றி தம்மைத் தாமே இறைத்தூதராக அறிவித்துக் கொள்வதுமில்லை. அவ்வாறு பொய்யாக அறிவித்துக் கொண்டவர்கள் தம் வாழ்நாட்களிலேயே பொய்ப்பிக்கப் பட்டதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு வேண்டுமானால் பா. ராகவன் தனது ‘நிலமெல்லாம் ரத்தம்’ நூலில் குறிப்பிடும் ‘ஷபாத்தி இஜ்வி’ என்ற பொய்த்தூதரை சொல்லலாம்.

இறைத்தூதர்களை அனுப்பிய இறைவன் அவர்கள் அனைவரையுமே தகுந்த அத்தாட்சிகளுடன் அனுப்பியதாக குர்ஆனில் பல இடங்களில் சொல்கிறான். ( ‘தமிழில் குர்ஆன்’ என்ற இந்த தளத்தில் ‘அத்தாட்சி’ என்ற சொல்லை தேடிப் பார்த்தால் ஏராளமான வசனங்களைப் பார்க்கலாம். அல்லது, இந்த வலைப்பக்கத்திலேயே உள்ள ‘Search In Quran’ -ல் ’signs’ என்ற ஆங்கில வார்த்தையை தேடலாம்.) ஏக இறைவன் மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் அந்த அத்தாட்சிகளை உணர்ந்து அந்த இறைத்தூதரை ஏற்றுக் கொண்டார்கள். நம்பிக்கை கொள்ளாத பிறர் “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்)” - (குர்ஆன் 25:7-8)

இறைத்தூதர்கள் இது போன்ற அசாதாரணமான அத்தாட்சிகள் இன்றி அனுப்பப் பட்டதை, இறைவன் மனிதர்களை சிந்திக்கத் தூண்டுகிறான் என்பதற்கு ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். தனது இருப்பை அறிவிப்பதற்கு ஏராளமான சான்றுகளை அளித்த இறைவன், அவற்றைப் பற்றி சிந்தித்து உணர்ந்து கொள்ளும்படி மனிதர்களை ஏவுகிறான். பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே ஆறாவது அறிவு எனப்படும் சிந்தனைத் திறன் தான். அத்தகைய திறன் படைத்த மனிதர்கள் ‘எனது சிந்தனைக்கே வேலை வைக்காமல், கேஜி பிள்ளைகளுக்கு புரிவது போல எனக்கும் அத்தாட்சியை காட்டு’ என்று அடம் பிடித்தால் எப்படி?

எனது முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்த உரையாடல், இறைத்தூதர்களுக்கான இலக்கண வரையறை அல்ல. அப்படி ஒரு இலக்கணத்தை இதுவரை யாரும் வரையறுக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாத்திற்கு கடும் எதிரியாக இருந்த ஒருவரின் வார்த்தைகளைக் கொண்டே, முஸ்லிமல்லாத ஒரு மன்னர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் அந்த உரையாடலை எடுத்துக் காட்டினேன். அதாவது, புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களுக்கு இந்த எளிய அத்தாட்சிகளே போதுமானதாக இருக்கிறது. அந்த விருப்பம் இல்லாதவர்களுக்கு எவ்வளவு அசாதாரண அத்தாட்சிகள் காண்பிக்கப் பட்டாலும் போதாது. மோஸஸ் (நபி மூசா (அலை)) அவர்களின் சமூகத்தாரிடம், இறைவன் ‘தூர்’ மலையை அவர்களின் தலைக்கு மேல் உயர்த்தி அவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்த தவ்ராத் வேதத்தை உறுதியுடன் பற்றிக் கொள்ளும்படி வாக்குறுதி வாங்கிய பின்பும் அவர்களில் பெரும்பாலோர் அதற்கு மாறு செய்தனர் என்பது இங்கு நினைவு கூறத் தக்கது.

//நல்ல குடும்பத்தில் பிறப்பவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்லர். .. எளியவர்கள் பின்பற்றுபவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்ல… நற்பண்புகளை போதிப்பவர்கள் அனைவரும் இறைதூதர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.//

ஒரு உதாரணம்:

ஒருவர்: “உன் அம்மாவைப் பற்றி கொஞ்சம் சொல்!”

மற்றவர்: “என் அம்மா மிக அன்பானவர், என் மேல் மிக பாசம் உடையவர், தினமும் எனக்கு உணவு ஊட்டுகிறார், எனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார்”

முதலாமவர்: “இதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? உன் அம்மா உன்னை கண்டிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவர் அன்பானவர், பாசமுள்ளவர் என்பது சரியல்ல. உடுப்பி ஹோட்டல் முதலாளி கூடத்தான் உனக்கு சாப்பாடு போடுகிறார். அவர் என்ன உனக்கு அம்மாவா? சாப்பாடு போடும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல. பள்ளிக் கூட ஆசிரியரும் உனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார். அவரும் உனக்கு அம்மா இல்லையே! நல்ல விஷயங்களை போதிக்கும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல”

முதலாமவரின் நண்பர்: “வெரி குட். இந்த ஆளுக்கு யாருமே அம்மா கிடையாது என்பதை நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்”

மற்றவர்: ??????

இந்த உரையாடல் அபத்தமாக தெரிகிறது அல்லவா? மன்னிக்கவும், உங்கள் கேள்விகள் அப்படித்தான் எனக்கு தெரிகின்றன.

//முகம்மது நபிகள் பொய் கூறாதவர் என்பதற்கு அத்தாட்சி தாங்கள் வழங்க வேண்டும்…முன்னர் சொன்ன சொல்லுக்கு மாற்றாக முகம்மது நபி நடக்கவே இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும்//

நான் அத்தாட்சி வழங்குவது இருக்கட்டும். அபூஸுஃப்யான் முஹம்மது (ஸல்) அவர்களில் காலத்திலேயே வசித்தவர். அவர்களை ஒழித்து விடவேண்டும் என்று பல முறை முயன்றவர். அப்படிப்பட்டவரே ‘நபிகளார் பொய்யுரைப்பார் என சந்தேகப் பட்டதில்லை’ என்றும் ‘அவர் மோசடி செய்ததில்லை’ என்றும் அத்தாட்சி வழங்கியிருக்கிறாரே, அது போதாதா உங்களுக்கு?

//யாராவது வெறுப்பு கொண்டு மதம் மாறினாலும், இஸ்லாம் பொய்யாகிறது.//

மன்னரின் கேள்வியையும் விளக்கத்தையும் கவனமாக பாருங்கள். “உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.” இஸ்லாம் மார்க்கத்தில் ‘இணைந்து‘ அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றிவிட்ட எவரும் அதை விட்டு வெளியேற மாட்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இஸ்லாம் மார்க்கத்தில் ‘பிறந்து‘ அதன் உண்மை விளக்கத்தை புரிந்து கொள்ளாமலேயே அதை விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி இங்கு சொல்லப் படவில்லை.

சுருக்கமாக சொல்வதென்றால், எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ஒரு முன் முடிவோடு அணுகினால், அதன் உண்மை நிலவரம் உங்களுக்கு புரிபடாமலேயே போய் விடும். ‘இறைத்தூதர் என்ற கருத்தே தவறு’ என்ற உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், நான் எவ்வளவு அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் காட்டினாலும் அதனால் பயனேதும் விளையப் போவதில்லை. என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என நானும் உங்களை வற்புறுத்தவில்லை. ‘இது முஸ்லிம்களின் நம்பிக்கை’ என்ற அளவில் இக்கருத்துக்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும். முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நம்பினால் நீங்களும் முஸ்லிமாகி விடுவீர்கள்! நம்பாமல் இருப்பதால்தான் நீங்கள் முஸ்லிமல்லாதவர்; இந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்யும், தவிர்க்க முடியாது. ஆகவே…

verse 109:6

‘’லகும் தீனுகும் வலியதீன் - உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு'’ குர்ஆன் 109:6

12 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/10/18/p46/trackback/

  1. “உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு’’

    In reality how many islamic countries follow this.Why they
    deny freedom of worship to non-muslims and discriminate against
    them.

    Comment by annon — October 18, 2006 @ 3:34 pm

  2. அன்பு சகோதரர் இப்னு பஷீர் அவர்களே,
    மகதி அலைஹி சலாம் பற்றி தங்களுக்கு தெரிந்ததை எடுத்து எங்களுக்கு கூறுவீர்களா?

    Comment by FriendOfIslam — October 18, 2006 @ 6:31 pm

  3. Ibnu,

    Brilliant Post!

    Great analysis!

    Comment by அட்றா சக்கை — October 18, 2006 @ 6:39 pm

  4. இப்னு,

    இறைதூதர் என்பதை மறுப்பதற்கு எழில் சொன்ன குதர்க்கத் தனமான இலக்கணத்தை அழகாக மறுதலித்து முஹம்மது (ஸல்) ஒரு இறைதூதர் தான் என்று நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்.

    உங்களது பதிவின் இரண்டாம் பகுதியில் “இறைதூதர்” என்று யாருமே இருக்க முடியாது என்று எழில் கருதுவது என்பது எவ்வளவு அபத்தமானது என நிரூபித்திருக்கிறீர்கள்.

    நல்ல பதிவு.

    A. S

    Comment by anonymous — October 18, 2006 @ 6:43 pm

  5. இப்னு,

    இறைவன் தான் அனுப்பிய தூதர்களை எவ்வாறு மெய்ப்பிப்பான் என்பதை அழகிய வாதத்தில் நிரூபித்திருக்கிறீர்கள்.

    ஒரு சில அரபியர்களை வைத்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் காழ்ப்புடன் எழுதுவது தான் என் வழக்கம்.

    நன்றாக வாதம் செய்கிறீர்கள் கோபபடாமல்.

    வாழ்த்துக்கள்

    Comment by கால்மாரி தேவா — October 18, 2006 @ 6:47 pm

  6. //முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நம்பினால் நீங்களும் முஸ்லிமாகி விடுவீர்கள்! நம்பாமல் இருப்பதால்தான் நீங்கள் முஸ்லிமல்லாதவர்; //

    சரியான, நிறைவான பதில்.

    எழில் என்பவர் உண்மையிலேயெ ‘விளங்க’த்தான் கேட்டார் என்றால் இதுவே போதுமான பதில். ஆனால் பின்னூட்டச் சந்தில் அவரும் பரிவாரங்களும் ‘குரோதம்’ பாராட்டுவதை கணக்கிலெடுத்துக்கொண்டால் அவர்களுடைய ‘நோக்கம்’ புரிகிறது. எனவே, //மிக நாகரீகமான முறையில் எழுதியிருக்கும் இனிய சகோதரர் எழில்// என்பதற்கு அவரின் மொத்த எழுத்தும் பொருந்தவில்லை.

    இன்னொரு வேடிக்கை, பாருங்கள் நேச குமார் என்பவர் “அபூசுஃப்யான் வாள்முனையில் முஸ்லிமாக்கப்பட்டார்” என்று முன்பு கூவி வந்தார், (அதற்கும் சரியான பதிலாக உங்களின் முந்தைய பதிவு ‘இறைத் தூதர்கள் எப்படிப்பட்டவர்கள் -1′ அமைந்திருந்தது).

    முஸ்லிம்களுக்கெதிரான படைக்குத் தலைமை தாங்கிவந்தாலும், இஸ்லாத்தை ஒழித்துக்கட்ட நினைத்தாலும் அன்று அபூசுஃப்யானால் நபிகளைப் பற்றி அவதூறு பேச முடியாமல் போனது வரலாறாகிறது. ‘நேச’மான இவரோ அவதூறாக இன்று, ” அபூசுஃப்யான் ‘போரில் கிடைத்த (கனீமத்) பொருட்களால் தான் அப்படி பேசினார்” என்று திரிக்கிறார். காஃபிர்களின் தலைவராக இருந்தும் அபூ சுஃப்யான் நபிகளைப் பற்றி தவறாகப் பேச இயலவில்லை என்பதை அறியாதது போல நடிக்கிறார் இந்த நேச குமார் தம் எழுத்துப் பிழைப்புக்காக!

    Comment by Raj — October 18, 2006 @ 10:37 pm

  7. மிக நன்றாக இருக்கிறது விவாதம். பல புதிய விஷயங்களை புரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.

    எழிலின் பதிலை எதிர்நோக்கி… :-)

    –ஸ்ரீதர்

    Comment by ஸ்ரீதர் — October 19, 2006 @ 3:28 am

  8. அன்பின் இபுனு பஷீர்,

    உங்களின் பொறுமை போற்றத் தக்கது! கருத்துச் சிதையாத உரையாடல் உவமை அற்புதம்! இதைவிடச் சிறந்த பதிலை எழிலுக்கு யாரும் தரமுடியும் என்று தோன்றவில்லை.

    வாழ்த்துகள்!

    Comment by அழகு — October 19, 2006 @ 5:58 am

  9. //“உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு’’
    In reality how many islamic countries follow this.Why they
    deny freedom of worship to non-muslims and discriminate against
    them. //

    Annon, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிவிற்கு தொடர்பில்லாத கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறீர்கள். தவிர இதைப் பற்றி விரிவாக பேச வேண்டும். இப்போதைக்கு, ‘பல இஸ்லாமிய நாடுகளில் (உதாரணம்: பாகிஸ்தான், மலேஷியா) முஸ்லிமல்லாத அந்நாட்டு குடிமக்கள் தங்கள் மதநம்பிக்கைகளை கடைப்பிடிக்க தடையேதும் இல்லையே’ என்பதை மட்டும் என் பதிலாக வைக்கிறேன்.

    Comment by இப்னு பஷீர் — October 19, 2006 @ 11:36 pm

  10. //மகதி அலைஹி சலாம் பற்றி தங்களுக்கு தெரிந்ததை எடுத்து எங்களுக்கு கூறுவீர்களா?//

    Dear FriendOfIslam, மஹதி (அலை) அவர்கள் பற்றி நான் அதிகம் தெரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் தோன்ற இருக்கும் மஹதி (அலை) அவர்களும், மீண்டும் வர இருக்கும் ஈசா (அலை) அவர்களும் ஓரிறைக் கொள்கையையும், முஹம்மது (ஸல்) அவர்களை தலைவராகவும், குர்ஆனை தமது வேதமாகவும் ஒப்புக் கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதை மட்டும்தான் நான் அறிந்திருக்கிறேன்.
    தங்கள் வருகைக்கு நன்றி.

    Comment by இப்னு பஷீர் — October 19, 2006 @ 11:42 pm

  11. அட்றா சக்கை, A.S., கால்மாரி தேவா, ஸ்ரீதர், அழகு,

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    ஸ்ரீதர், எழில் ஒரு தனிப் பதிவில் பதிலளித்திருக்கிறார், பார்த்தீர்களா? வேலைப்பளு காரணமாக இன்னும் ஓரிரு நாட்களுக்கு அவருக்கு பதில் எழுத முடியாது என்று நினைக்கிறேன்.

    Comment by இப்னு பஷீர் — October 19, 2006 @ 11:45 pm

  12. //எழில் என்பவர் உண்மையிலேயெ ‘விளங்க’த்தான் கேட்டார் என்றால் இதுவே போதுமான பதில். ஆனால் பின்னூட்டச் சந்தில் அவரும் பரிவாரங்களும் ‘குரோதம்’ பாராட்டுவதை கணக்கிலெடுத்துக் கொண்டால் அவர்களுடைய ‘நோக்கம்’ புரிகிறது.//

    ராஜ், தங்கள் கருத்திற்கு நன்றி. சகோதரர் எழிலின் பதிவிலுள்ள பின்னூட்டங்களை நானும் பார்த்தேன். ஓரிரு புனைப்பெயர்கள் போதாது என்று அனாமத்தாகவும் வந்து இது போல பின்னூட்டமிடுபவர்கள் யாராக இருக்கும் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. ஆனால், சகோ.எழிலின் நோக்கம் அதுவல்ல என்பதை நம்புவோம்.

    நேசகுமாரைப் பற்றி தெரியும்தானே? கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் அவருக்கு. பதிலுக்கு கேள்வி கேட்டாலோ, அவர் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு விளக்கம் கேட்டாலோ, மனிதர் ‘காணாமல்’ போய் விடுவார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே கேள்விகளுடன் வந்து தலை காட்டுவார்.

    Comment by இப்னு பஷீர் — October 19, 2006 @ 11:54 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.