இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? - 3

October 22, 2006

அன்புச் சகோதரர் எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் இறைத்தூதர்கள் குறித்து மேலும் சில கேள்விகள் எழுப்பியிருந்தார். அவற்றிற்கு பதிலாக எனக்குத் தோன்றிய சில விளக்கங்களை முன்வைக்கிறேன்.

//யூதம் மிகவும் பழையது என்று அறிகிறேன். அவர்களில் பல இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அறிகிறேன். ஆபிரஹாமுக்கு பிந்தைய இறைதூதர்களை யூதர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். http://www.shamash.org/lists/scj-faq/HTML/faq/12-11.html. ஆப்ரஹாமுக்கு பின் 46 யூத இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். 7 பெண் இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்த பக்கம் குறிப்பிடுகிறது. //

தகவலுக்கு நன்றி சகோ.எழில்! ஆபிரஹாமுக்கு பிந்திய இறைத்தூதர்களை யூத மதம் அங்கீகரிக்கவில்லை என தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். இத்தனை பேரை இறைத்தூதர்கள் என நம்பும் யூதர்கள், அவர்களின் குலத்திலேயே தோன்றிய, பிறக்கும்போதே அத்தாட்சிகளுடன் பிறந்த, (தந்தையின்றி தாயின் வயிற்றில் தோன்றியது, தொட்டில் பருவத்திலேயே பேசியது) இயேசுவை (அலை) ஏற்றுக் கொள்ளாமல் போனது விந்தையே.

//கிரிஸ்து தன்னை புரோபட் என்று கோரவில்லை. கிறித்து தன்னை இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டார். ஆகவே யூதர்கள் அவரை ஒரு புரோபட் என்று அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது சரியாக பொருந்தாது என்று நினைக்கிறேன். ஆகவே யூதமும் இஸ்லாமும் மட்டுமே இறைதூதர்களை கொண்டவை என்பதுதானே சரியாக இருக்கும்? //

இயேசு (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக முதன் முதலாக பேசியது, ‘நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தை கொடுத்திருக்கிறான். என்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்’ என்பதுதான். (குர்ஆன் 19:30). அப்படியிருக்க அவர் தன்னை இறைமகனாக கூறிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. கிருஸ்துவர்களுக்கிடையே கூட இதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

குறைஷிகளின் கொடுமை பொறுக்க முடியாமல் முஸ்லிம்களில் சிலர் ஹபஷா என்ற நாட்டிற்கு அடைக்கலம் நாடிச் சென்றனர். அப்போது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் ‘அஸ்மஹா நஜ்ஜாஷி’ என்ற கிருஸ்துவ மன்னர். அந்த முஸ்லிம்களைத் தொடர்ந்து குறைஷிகளின் குழு ஒன்று ஹபஷாவிற்கு சென்று மன்னரை சந்தித்து முஸ்லிம்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரினர். ஆனால் மன்னர் அதை மறுத்து விட்டார். ஏமாற்றமடைந்த குறைஷிகள் மறுநாள் மீண்டும் மன்னரிடம் சென்று, ‘அரசே, இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்’ என்றனர். மன்னர் முஸ்லிம்களை அழைத்து இது பற்றி விசாரித்தார். “எங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்; அவர் (ஈஸா (அலை)) அல்லாஹ்வின் அடிமை; அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்” என்று முஸ்லிம்களின் குழுவில் இருந்த ஜஅஃபர் (ரழி) கூறினார். இதைக் கேட்ட மன்னர் நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து “அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவு கூட நீ கூறியதை விட அதிகமாக கூறியதில்லை” என்றார். இதைக்கேட்டு முகஞ்சுழித்த மத குருமார்களிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகஞ்சுழித்தாலும் இதுவே உண்மை” என்று கூறிவிட்டார்.

டாவின்சி கோடு நாவலில் இயேசு அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்த பல விஷயங்களை நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது என்ற போதிலும் இந்த விஷயத்தில், அதாவது, இறைத்தூதரான இயேசு பிற்காலத்து கிருஸ்துவர்களால் இறைமகனாக்கப் பட்டார் என்ற கருத்து, கிருஸ்துவர்களிடையேகூட இது போன்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

//இஸ்லாமுக்கு பின்வந்த பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் போன்ற மதங்கள் முகம்மதை இறைதூதராக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இஸ்லாமியர்கள் பஹாவுல்லா போன்றவர்களை இறைதூதர் என்று ஒப்புக்கொள்வதில்லை.//

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டவர்கள், அவர் தம்மை இறுதித்தூதர் என்று சொன்னதை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?

//தூதுத்துவம் என்பது மேற்கண்ட மதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது இல்லையே?//

உங்களைப் போன்ற கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவினர் தூதுத்துவத்தை மறுக்கிறார்கள் என்பதால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லையே?

//சொல்லப்போனால், அந்த கால சமூகங்களில் ராணுவ தலைவர்களும், ராணுவ தலைவர்களுக்கு ஆலோசனை தரும் குருக்களும், அரசர்களும் தங்களை ஆண்டவனின் அருள் பெற்றவர்களாகவே சித்தரித்துக்கொண்டனர். http://en.wikipedia.org/wiki/Divine_right_theory
பெரும்பாலான ஐரோப்பிய அரசர்கள் தங்களை கடவுளின் அருள் பெற்றவர்களாகவும், தங்களை எதிர்ப்பவர்களை கடவுளுக்கு எதிராக நடந்துகொண்டதாக சிரச்சேதம் செய்ததையும் பார்க்கலாம். ஜப்பானிய அரசர்கள் தங்ளை கடவுளின் சந்ததியில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இன்றும் ஜப்பானிய அரசரை கடவுளாகக் கருதும் மதம் ஜப்பானில் இருக்கிறது. உலகத்தில் ஜப்பானிய அரச வம்சம் மட்டுமே வரலாற்று ரீதியாகவே தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. உலகத்தில் இந்த ஒரு அரச வம்சத்துக்கு மட்டுமே இப்படிப்பட்ட பெருமை உண்டு. எகிப்திய பேரரசர்களும் தங்களை கடவுள் வம்சத்தில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இந்திய அரசர்களும் தங்களை சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டனர். இதில் கவனித்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு விதமான வித்தியாசமான முறையில் கடவுளின் பெயரை பயன்படுத்தியிருப்பதை பார்க்கலாம்.

ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கவும், மக்களை கேள்வி கேட்காமல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கவும் அந்த காலத்திலும் இந்தகாலத்திலும் கடவுளின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்று கருதுகிறேன். (என்னைப் பொறுத்தமட்டில் அது தவறு அல்ல).

ஆனால், இன்று என்னிடம் உண்மையிலேயே ஜப்பானின் அரசர் கடவுளின் வம்சமா என்றோ அல்லது இங்கிலாந்து ராணி கடவுளால் நியமிக்கப்பட்ட பேரரசியா என்றோ கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? அதே பதிலைத்தான் நான் ஜனாப் முகம்மது நபி அவர்களுக்கும் கூற முடியும்.//

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்பது போன்ற அனுமானங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு முற்றிலும் நிராகரிக்கிறது. விரிவஞ்சி சில செய்திகளை மட்டும் இங்கு சுருக்கமாக சொல்கிறேன்.

நபியவர்கள் மக்காவில் வெளிப்படையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் குறைஷிகளில் பலர் இஸ்லாமை ஏற்கத் தொடங்கினர். தங்களது கடவுள் நம்பிக்கைகள் தகர்க்கப் படுவதை தடுக்க குறைஷிகள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராயினர். குறைஷிகளின் தலைவர்களுள் ஒருவனான உத்பா இப்னு ரபீஆ அவர்களின் சார்பாக நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்தான்.

“எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களை சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம்.” என்றான் உத்பா. இதற்கு பதிலாக நபியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களின் ஓரிறைப் பிரச்சாரத்தை கைவிட வேண்டும் என்பதுதான்.

இதற்கு பதிலளிக்குமுகமாக நபியவர்கள் குர்ஆனின் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார்கள். அதை கவனமாக கேட்டபின் தம் மக்களிடம் திரும்பிய உத்பா, “குறைஷிகளே, இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரிடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது” என்றான்.

இதன் பிறகும் தம் சமரச முயற்சியை கைவிடாத குறைஷித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை தங்களிடம் அழைத்து வரச் செய்து உத்பா சொன்னதையே மீண்டும்வலியுறுத்தி கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்: “உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லாஹ் என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன். உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.'’

சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்துவதும் ஒருங்கிணைப்பதும்தான் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால், அதை செயல்படுத்துவதற்கு இதை விட இன்னொரு சிறந்த சந்தர்ப்பம் நபியவர்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை. குறைஷித் தலைவர்களே முன்வந்து நபி (ஸல்) அவர்களை தங்களின் அரசராக ஏற்றுக் கொள்வதாக சொல்வதால் அவர்களின் அரசராக தம்மை முடிசூடிக் கொண்டு அந்த ஒழுங்கு படுத்துதலையும் ஒருங்கிணைப்பதையும் செய்திருக்கலாம். ஆனால், நபியவர்கள் அதை மறுத்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்த நிலைப்பாடு குறைஷிகளின் கோபத்தை மென்மேலும் தூண்டி விட்டது. நபியவர்களை கொல்வதற்கும் அவர்கள் திட்டம் தீட்டினர். அது நிறைவேறாததால், நபி (ஸல்) அவர்களையும் பிற முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களையும் குறைஷிகள் ஊரை விட்டே விலக்கி வைத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முஸ்லிம்கள் கடும் இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாயினர்.

குறைஷிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முஸ்லிம்கள் ஹபஷா என்ற நாட்டிற்கு புலம் பெயர வேண்டியிருந்தது. நபி (ஸல்) அவர்களும் மற்றும் பல முஸ்லிம்களும் தாங்கள் பிறந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவிற்கு சென்று வசிக்க வேண்டி வந்தது.

நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை ஒருங்கிணைப்பதுதான் தமது நோக்கம் எனக் கொண்டிருந்தால் அதைச் செய்யக் கிடைத்த வசதியான வாய்ப்பை நழுவ விட்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் இது போன்ற துன்பங்களுக்கு ஆளாக்கியிருப்பார்களா?

//நீங்கள் முன்னரே குறிப்பிட்ட பக்கத்தில் ரோமானிய அரசர் கூறியது போல பலரும், இறைதூதராக இருந்தால் செல்வாக்காக இருக்கலாம் என்று காப்பி அடிக்க முயன்றிருக்கலாம். பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் மதம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நடுவேயும் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பல பக்கங்கள் குறிப்பிடுகின்றன. மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜப்பானிய பேரரசரின் வம்சம் 1500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அதனால், அவரை உண்மையிலேயே கடவுளின் வம்சம் என்று கூறவியலுமா?//

இறைத்தூதர் என்ற பணி மிகுந்த செல்வாக்குடன் ஆட்சி அதிகாரத்துடன் சொகுசாக வாழ்வதல்ல. இறைத்தூதர்கள் அனைவருமே கடுமையான துன்பத்திற்கும் சோதனைகளுக்கும் ஆளாகியிருக்கின்றனர். செல்வாக்காக இருக்க நினைப்பவர்கள் காப்பி அடிப்பதற்கு கொஞ்சமும் லாயக்கில்லாதது இறைத்தூதர் பணி.

//சிந்தனைத்திறன் இருப்பதால் தானே கேள்வி கேட்கிறார்கள். சிந்தனைத்திறன் இருப்பதால்தான் ஒரு வரையறை செய்கிறார்கள்…. //

கேள்விகள் கேட்கத்தான் வேண்டும். கேட்டால்தானே பதில் கிடைக்கும்? ஆனால் கேள்விக்கான பதிலை தேடிப்பெற முயலாமல் ‘நேரடியாக பதில் தரப்பட வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது சிந்தனைத்திறன் உடையவர்களுக்கு முறையல்ல.

//ஒருவர் இறைதூதர்தான் என்பது இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒன்று அந்த இறைதூதர் மற்றவர் இறைவன். வேறு யாருக்கும் தெரியாது அல்லவா? அல்லது நீங்கள் சொல்வது போன்று வானவர் மூலம் சொல்லப்பட்டிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நான் வானவர் என்பதற்கு இந்த அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன. (இறக்கைகள், ஒளிவட்டம் ஆகியவை). நான் இவர் இறைதூதர் என்று சாட்சியம் கூறுகிறேன் என்று கூறலாம். அப்போது மக்கள் குழப்பமின்றி நம்புவார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் ஒரு அத்தாட்சி கேட்டதில் தவறே இல்லை. அந்த சாதாரண மக்கள் கேட்ட அத்தாட்சியை கொடுக்காததுதான் தவறு. அத்தாட்சி இல்லை, ஆனால் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று கோரினால், மக்கள் என்ன செய்வார்கள்? இன்றைக்கு ஒருவர் அதே போல நான் தான் இறைதூதர், எந்த அத்தாட்சியும் நான் கொடுக்க முடியாது. ஆனால், எல்லோரும் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் அத்தாட்சி கேட்கமாட்டீர்களா? அப்படி நீங்கள் கேட்டால் “அறியாதவர்” ஆகிவிடுவீர்களா? ஆகவே முகம்மது இறைதூதர்தான் என்று எப்படி அறிவீர்கள்? அதற்காகத்தான் சொன்னேன்… அவன் அனுப்பும் தூதர்களுக்கு எல்லோருக்கும் புரியக்கூடிய, ஒரே மாதிரியான எளிய அடையாளம் இருக்க வேண்டுமல்லவா. அதைத்தான் கேட்கிறேன்… வேறு எந்த மக்களுக்கும் இல்லாத ஒரு அடையாளம், இறைதூதர்களுக்கு மட்டும் இருக்கும் பொதுவான அடையாளம் இருக்கும்போதுதான் மக்களுக்கு இவர் இறைதூதர் என்று தெரியும். இறைவன் வந்து சாட்சி சொல்லாத பட்சத்தில், அல்லது இறைவனிடம் கேட்டு உறுதி படுத்திக்கொள்ள முடியாத பட்சத்தில்
1) எல்லா இறைதூதர்களுக்கும் ஒரு பொது அடையாளம் இருக்க வேண்டும்
2) இறைதூதர்களுக்கு மட்டுமே அந்த அடையாளம் இருக்க வேண்டும்
3) இறைதூதர்கள் தவிர வேறெந்த மக்களுக்கும் அந்த அடையாளம் இருக்கக்கூடாது.//

எந்த இறைத்தூதரும் அத்தாட்சி இல்லாமல் அனுப்பப் படவில்லை என்கிறது குர்ஆன். எந்த இறைத்தூதரும் ‘எந்த அத்தாட்சியும் கொடுக்க முடியாது, ஆனால் என்னை நம்ப வேண்டும்’ என்று சொன்னதில்லை. எந்த அளவிற்கு அத்தாட்சிகள் கொடுக்கப் பட்ட போதிலும் அதை ஒரு சாரார் மறுத்தே வந்திருக்கின்றனர். இறைவன் கூறுகிறான், “இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: ‘அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?’ என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.” (குர்ஆன் 2:118)

அந்த அத்தாட்சிகள் நீங்கள் கேட்பதுபோல யாராலும் மறுக்கவே முடியாத அத்தாட்சிகளாக இருந்திருந்தால், உலகம் முழுவதுமே அந்த ஓரிறைவனை வணங்குபவர்களாக இருந்திருப்பார்கள். ‘இன்னின்ன அத்தாட்சிகளை கொண்டவராக இருக்கிறாரா.. அப்படியென்றால் அவர் இறைத்தூதர்தான்’ என்று மறுபேச்சில்லாமல் அனைவரும் அவரை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். இங்கு சிந்தனைத் திறனுக்கு தேவையே இல்லை. நல்ல பகல் வெளிச்சத்தில் யானையையோ, முயலையோ பார்ப்பவர்கள், அது யானைதான் என்றும் முயல்தான் என்றும் சொல்வதற்கு சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் மறைந்திருக்கும் ஒரு பொருளைப் பற்றி விடுகதை போல சில உதவுக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருந்தால் அதன் விடையை கண்டுபிடிக்க கட்டாயம் சிந்தித்தே ஆக வேண்டும். அது போலத்தான் இறைத்தூதர்கள் விஷயத்திலும். போதுமான உதவிக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு சிந்தனைத் திறனும் வழங்கப் பட்டிருக்கிறது. “நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” - இதை நான் சொல்லவில்லை. குர்ஆன் பல இடங்களில் இவ்வாறு கேள்வி எழுப்புகிறது.

//…தெளிவாக தன்னுடைய இறைதூதரை பிரித்துகாட்ட ஒரு தெளிவான எல்லோருக்கும் புரியக்கூடிய அடையாளத்தை மற்ற யாராலும் காப்பி அடிக்க முடியாத அடையாளத்தை தரவேண்டும் அல்லவா? கருணையாளனாகிய இறைவனுக்கு மக்களை இப்படி இக்கட்டில் விடுவதில் என்ன பயன்?//

இதற்கும் குர்ஆனில் பதிலிருக்கிறது;

‘அல்லாஹ் நாடினால் எங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்’ (என்று கூறுவீராக.) (5:48)

மனிதர்களுக்கு சிந்தனைத் திறனை வழங்கிய இறைவன், அவர்களிடையே தனது தூதர்களை அனுப்பி தனது வேதத்தை போதிக்கச் செய்தான். தனது உயர்ந்த படைப்பாகிய மனிதன் அவனது அறிவைக்கொண்டு இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என இறைவன் விரும்புகிறான் போலும். பாடங்கள் போதிக்கப்பட்டபின் நடைபெறும் தேர்வில் யாரெல்லாம் தேறுகிறார்கள், யாரெல்லாம் தவறுகிறார்கள் என்று பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் சோதனைதான் இது. ஆனால் மனிதர்கள், ‘வினாத்தாட்களுக்கு பதிலாக எங்களுக்கு விடைத்தாட்கள் வழங்கப் பட்டிருந்தால் நாங்கள் அனைவருமே எளிதாக தேறியிருப்போமே’ என்கிறார்கள்.

“(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: ‘நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று (அவர்களிடம்) கூறுவீராக. ‘நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் மறுமை நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.‘ (22: 68-69)

“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:20)

இந்த விளக்கங்களை எழுத தூண்டுகோலாக இருந்த பதிவை எழுதிய சகோதரர் எழில் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

7 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/10/22/48/trackback/

  1. Ibnu,

    அருமையான தீர்க்கமான பொறுமையான அலசல். எழில் என்பவரின் கேள்விகளுக்கு அருமையான பதில் வைத்துள்ளீர்கள்.

    அவர் மேலும் கேள்வி கேட்பார் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஒருவேளை எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும், எதிர்கேள்வியோ பதிலோ கொடுத்தால் உள்வாங்கி ஓடிப்போவேன் என்பவர் தானோ இவர்?

    Thanks for an excellent analysis!!!

    Comment by அட்றா சக்கை — October 22, 2006 @ 5:42 pm

  2. சகோதரர் எழில் அவர்கள் விதண்டாவாதம் செய்வது போல் ஒரு தொனி இருந்தாலும் சரியான விளக்கம் தந்துள்ளிர்கள்
    திருப்தி அடையாத பட்சத்தில் கீலே தந்துள்ள குர் ஆனில் உள்ள வசனங்கள் பொருத்தமானது என்றே எண்னுகிறேன்.

    “(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: ‘நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று (அவர்களிடம்) கூறுவீராக. ‘நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் மறுமை நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.‘ (22: 68-69)

    “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:20)

    Comment by raj mohammed — October 22, 2006 @ 6:19 pm

  3. அன்பின் பஷிர் தங்களின் விளக்கம் அருமை தொடரட்டும் உங்களின் பணி ரமதான் வாழ்த்துக்கள்

    Comment by சின்னபுள்ள — October 22, 2006 @ 7:54 pm

  4. அட்றா சக்கை, raj mohammed, சின்னபுள்ள,

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!

    Comment by இப்னு பஷீர் — October 23, 2006 @ 8:17 am

  5. இப்னு,

    எழில் என்பவருக்குப் புரிந்து கொள்ளும் திறன் மிகக் குறைவாக இருப்பது போலத் தெரிகிறது. அவர் உங்களின் வாதங்களைப் புரிந்து கொள்ள மிகுந்த சிரமம் கொள்கிறார். அதோடு அவர் பிரசுரிக்கும் பின்னூட்டங்கள் இஸ்லாம் மீதான வெறுப்பையே காட்டுகிறது.

    உதாரணத்திற்கு அவர் பிரசுரித்த அநாதைப் பின்னூட்டம் ஃபெயித் ஃப்ரிடம்ம் என்ற தளத்திலிருந்து அப்படியே ஈயடிச்சான் காப்பியாக வைக்கப் பட்டுள்ளது.

    இந்த அளவு சிந்தனைக் குறைபாடுள்ளவர்களுக்கு நீங்கள் விளக்கம் அளிப்பது தங்களின் ஆற்றல் விரயம் என்பது என் கருத்து.

    Comment by அட்றா சக்கை — October 24, 2006 @ 8:00 pm

  6. இறைத்தூதர்கள் பற்றிய விவாதம்!

    Comment by இப்னு பஷீர் — October 31, 2006 @ 7:51 am

  7. Nice and good explantion to Mr. Yelil.

    This is to inform all muslim and non-muslim brothers that now PEACE TV airing a new channel from India in English and Hindi.

    There is question and answers session/debate from various groups. It is very interesting and we can gain more knowledge. Please try to see the program at 12.30am daily.. this time is for question and answer session.

    Comment by asalamone — October 31, 2006 @ 1:42 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.