இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!

October 27, 2006

அக்டோபர் 19 தேதியிட்ட திண்ணையில் சூபிமுகமது என்பவர் ‘வகாபிய பார்ப்பனீயத்தின் மூடநம்பிக்கை’ என்ற தலைப்பில் ‘பித்அத்’ எனப்படும் இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

‘நபிகள் நாயகம் சொல், செயல், அனுமதிக்குள் வராதது அனைத்தும் பிதுஅத் (இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது.) இது வாழ்வின் அனைத்து செயல்பாடுகளிலும் நிறைந்துள்ளது’ என்று சொல்லும் சூபி ‘நபிகள் நாயகம் பேசாத தமிழ் மொழி, உபயோகித்திராத இன்டெர்நெட், தொலைக்காட்சி சேனல்கள், விசிடி ஆகிய அனைத்துமே பிதுஅத்’ என்கிறார். இது தவறான புரிதல்.

இஸ்லாத்தின் கொள்கைகள், போதனைகளில், ஆன்மீகம், லௌகீகம் என இரு வகைகள் இருக்கின்றன. இறை சார்ந்த அடிப்படை நம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள், பிரார்த்தனைகளை உள்ளடக்கிய ஆன்மீக போதனைகளில் எந்த விதமான கூடுதல் குறைவுகளையும் யாரும் செய்வதற்கு அனுமதியில்லை. அதனால்தான் மவுலுது எனப்படும் கவிதைகளை ஒரு பிரார்த்தனையாக கருதி, அதை படிப்பதால் தனக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து படிப்பது ஒரு பித்அத் என மார்க்க அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உறவுகளை வலுப்படுத்துதல், தொழில் புரிதல், உண்ணுதல், பருகுதல் போன்ற இதர லௌகீக காரியங்களில், இஸ்லாம் சில வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக பன்றி மாமிசம் உண்ணுவது, மது அருந்துவது ஆகியவை தடை செய்யப் பட்டிருக்கிறன. இதுபோன்ற வரையறைகளுக்கு உட்பட்ட, கட்டுப்பாடுகளை மீறாத, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப் பட்டிராத வேறு எந்தச் செயலையும் செய்வது பித்அத் ஆகாது. எனவே சூபி பட்டியலிட்டிருக்கும் இன்டெர்நெட், தொலைக்காட்சி போன்றவை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப் படாதவரை தடுக்கப் பட்டவை அல்ல.

மார்க்க விஷயத்தில் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள், உலக விஷயங்களில் என்னை விட நீங்களே நன்கு அறிந்தவர்கள்

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே நவீனங்களுக்கு இஸ்லாம் என்றுமே எதிரியல்ல!

இஸ்லாம் எதையெல்லாம் தடை செய்துள்ளதோ அதைத் தவிர்த்துக் கொண்டு, அனுமதித்த விஷயங்களில் இன்றைய நவீனங்களையும், நாளை வரவிருக்கும் புதிய நவீனங்களையும் உபயோகித்துக் கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை!

ஒரு முஸ்லிம் இவ்வாறு வரம்பு மீறாமல் செயல்படும்போது, லௌகீக காரியங்கள் கூட ஆன்மீகமாக கருதப்படும் என்பது இஸ்லாமின் தனிச்சிறப்பு. ஒருவர் தன் மனைவிக்கு அன்புடன் ஒரு கவளம் உணவு ஊட்டுவது கூட அவருக்கு நன்மையை பெற்றுத்தரும் காரியமாகும்.

இந்த அடிப்படைகளை புரிந்து கொள்ளாததற்காக நாம் சூபிமுகமதுவை நொந்து பயனில்லை. பல முஸ்லிம்களே கூட இதை புரிந்து கொள்ளாமல்தான் இருக்கிறார்கள்.

நன்றி: திண்ணை October 26, 2006

5 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/10/27/p50/trackback/

  1. இப்னு பஷீர்….

    இதற்குப் பெயர்தான் சுத்தப் பயித்தியக் காரத்தனம்.

    ஒரு ஆன்மீகப் பெரியார் ஒருவர் காலத்தில், அவர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதை எப்போதும் தன்னுடனே கூட்டித் திரிவார். வணங்கும் நேரம் வந்ததும், அந்த நாயைப் பிடித்து அருகிலுள்ள ஒரு தூணில் பிடித்துக் கட்டிவிட்டு, வணங்க ஆரம்பிப்பார். அவரைப் பார்த்த சிஷ்யகோடிகள், அவரின் மறைவிற்குப் பிற்பாடு, இறை வணக்கம் செய்யும்போதெல்லாம், அதே கலரில், அதே வயதில் மற்றும் அதே வகையைச் சேர்ந்த நாயொன்றை அருகில் கட்டியே வணங்கலானார்கள். இது எப்பேர்ப்பட்ட மூடத்தனமோ அப்பேர்ப்பட்ட மூடத்தனம்தான், சூபிமுகம்மது எழுதியிருப்பது.

    இதைப்பற்றி நிறைய எழுதுங்கள். உதாரணமாக, கணுக்கால் உயர்த்தி கைலி அணிவது, நீளமான மேலங்கி அணிவது, தாடி கட்டாயம் வைப்பது, தொப்பி கட்டாயம் அணிவது, போன்ற இன்னபிற செயல்களும் உள்ளன.

    Comment by திருவடியான், — October 27, 2006 @ 6:43 am

  2. இப்னு பஷீர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
    இஸ்லாத்தை சரியான கண்ணோட்டத்தில் அணுகுகறீர்கள். அருமையான விளக்கம் கொடுக்கிறீர்கள். தங்களைப் போன்ற சகோதரர்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதல்களின் பக்கம் பலரும் வருவார்கள் இன்ஷா அல்லாஹ்.

    Comment by ABDULSALAM — October 27, 2006 @ 8:19 am

  3. மிக நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    Comment by podakkudian — October 28, 2006 @ 6:35 am

  4. முன்னரே திண்ணையில் சொல்லப் பட்டுள்ளது.

    சூபிக்குக் குலாமும் குலாமுக்குச் சூபியும் மாற்றி, மாற்றி முதுகு சொறிந்து கொள்கின்றனர் ‍ திண்ணையில்.

    Comment by வஹ்ஹாபி — October 28, 2006 @ 11:21 am

  5. திருவடியான், அப்துஸ்ஸலாம், பொதக்குடியான்,

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    வஹ்ஹாபி அவர்கள் குலாம் இந்த வார திண்ணையில் எழுதிய கட்டுரையை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பின்னூட்டத்தில் அதற்கான சுட்டி உடைந்து விட்டது போலிருக்கிறது.
    சூபி போன்றவர்களின் அரைகுறை கடிதங்களே குலாம் போன்றவர்களுக்கு ஆதார மேற்கோள்களாக இருப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது..

    Comment by இப்னு பஷீர் — October 31, 2006 @ 7:44 am

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.