திரையை அகற்றுங்கள் நேசகுமார்!

November 21, 2006

நேசகுமார் என்ற புனைபெயரில் எழுதி வரும் நபர் தனது எழுத்துக்களின் தரத்தை மட்டுமல்லாது பிறரின் எண்ணத்தில் அவரைப் பற்றிய மதிப்பீட்டையும் தாழ்த்திக் கொண்டு வெகு காலமாகி விட்டது. இப்போதெல்லாம் அவரது வாதங்களை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு காரணம் நம்மிடம் பதில் இல்லை என்று அர்த்தமில்லை. பதில் விளக்கம் அளிப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதால்தான். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடிபோதையில் கலாட்டா செய்யும் ரவுடியிடம் ஒரு கண்ணியமான மனிதர் நின்று வாதாடிக் கொண்டிருந்தால் அதனால் கேவலமடைவது அந்த மனிதர்தான். The rowdy could even enjoy the altercation!

ஆனால், சென்ற வாரம் நான் படிக்க நேர்ந்த சில வலைப்பதிவுகள் என்னை இந்தப் பதிவை எழுதும்படி தூண்டின.

1. ஆப்பு என்பவர், நேசகுமார் என்ற பெயரில் எழுதுபவர் எழுத்தாளர் என்.சொக்கன்தான் என்பதை சில ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருந்தார்.

2. இறைநேசன் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறிச் சென்ற லட்சக்கணக்கான தலித் மக்களைப் பற்றி ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று ஒரு பதிவு எழுதியிருந்தார்.

3. இறைநேசனின் அந்தப் பதிவில் ‘நேசகுமார்’ என்ற பெயரில் வந்த பின்னூட்டம் ஒன்று போலி எனக் குறிப்பிட்டு நேசகுமார் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் எழுதியிருந்த கருத்துக்களும் வெளியிட்டிருந்த பின்னூட்டங்களும் முஸ்லிம்களின் மன உணர்வுகளை அளவுக்கதிகமாக சீண்டிப் பார்ப்பதாகவே இருந்தன. அதைத் தொடர்ந்த இன்னொரு பதிவில் நெதர்லாந்து நாளிதழ் வெளியிட்ட சர்ச்சைக்குறிய கார்ட்டூன்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார். (இவை ‘ஆரோக்கியம்’ என்ற பெயரில் ஏற்கனவே வெளியிடப்பட்டதுதான்!) எனக்கென்னவோ, இவ்வளவு ஆர்ப்பாட்டங்களும் ஆப்பு வெளிப்படுத்திய தகவல்களிலிருந்து பிறரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அரங்கேற்றப் பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

ஆப்பு சொன்னது போல நேசகுமார் என்ற பெயரில் எழுதுபவர் என்.சொக்கனாக இருக்கலாம். அல்லது வேறு யாரோவாகவும் இருக்கலாம். இந்த நபரைப்பற்றி எனக்கும் சில அனுமானங்கள் இருக்கின்றன. அவை சில காலமாகவே இவரது எழுத்துக்களையும் நடவடிக்கைகளையும் அவதானித்து வந்ததால் தோன்றியவை. அவை;

1. நேசகுமார் என்ற புனைபெயரில் எழுதுபவர், ஏற்கனவே வேறொரு பெயரில் (அல்லது ஒரிஜினல் பெயரில்) எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர்.

2. சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஒரு பதிப்பகத்தாருக்கும் இந்த எழுத்தாளருக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன.

3. இந்த எழுத்தாளரின் பணி கணினித்துறையுடன் சம்பந்தப்பட்டது.

4. இவர் பிராமண சமூகத்தை சார்ந்தவராக இருப்பதற்கு அநேக சாத்தியங்கள் இருக்கிறது.

5. இவருக்கு சில முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இவர்தான் நேசகுமார் என்ற பெயரில் எழுதுகிறார் என்ற உண்மை தெரியாது.

6. மேலே குறிப்பிட்ட பதிப்பகம் மற்றும் சில இணைய இதழ்களை நடத்துபவர்களுக்கு நேசகுமாரின் உண்மை முகம் தெரியும்.

7. இவர் பெங்களூரில் வசிக்கிறார். அல்லது சில காலத்திற்காவது பெங்களூரில் முன்பு வசித்திருந்திருக்கிறார்.

இந்த அனுமானங்கள் அனைத்துமே திரு. சொக்கனுடன் பொருந்திப் போகின்றன என்பதுதான் ஆச்சரியம். நேசகுமார் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு குழுவே இயங்கிக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

நேசகுமார் சொல்கிறார், ‘சொக்கன் என்பவருக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவர் யார், என்ன செய்கிறார் என்று தெரியாது. பார்த்ததோ, பேசியதோ இல்லை. இணையத்தின் மூலமாக ஏற்பட்டுள்ள நண்பர்கள் வட்டத்தில் கூட அப்படி யாருடனும் எனக்கு பழக்கம் கிடையாது’ என்று. நேசகுமார் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருப்பவர் சொக்கனாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் யாரென்றே எனக்கு தெரியாது என்று இவர் சொல்வது நம்பும்படியாக இல்லை.

சரி, இந்த நபரைப் பற்றி இப்போது ஆராய்ச்சி செய்ய என்ன அவசியம் வந்தது என நீங்கள் யோசிக்கலாம். தமிழ் இணையத்தில் மதத் துவேஷத்தை அறிமுகப்படுத்திய முன்னோடியான இந்த நபர் அடிப்படையில் ஒரு பொய்யர் என்பதை தோலுரித்துக் காட்டும் ஒரு முயற்சிதான் இது.

இஸ்லாத்தின் மீதான தனது வெறுப்பை கக்குவதற்காகவும் அதே சமயத்தில் தான் சார்ந்த சமூகம் பற்றிய கேள்விக்கணைகளை தவிர்ப்பதற்காகவும் தான் பிறந்த ஜாதி போன்ற அடையாளங்களை மறைத்து பொய் சொல்லிக் கொண்டிருப்பவர் இந்த நபர். பிறப்பின் மூலமாக அவரது பெற்றோரிடமிருந்து அவர் பெற்ற அந்த ஜாதி, அவர் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க பெண் தேடிய அந்த ஜாதி, அவரின் மூலமாக அவரது பிள்ளைகளுக்கு சென்று சேரும் அந்த ஜாதி… அவரால் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அளவிற்கு கேவலமான ஜாதியா என்ன?

இவரது பிறப்போடு ஒட்டிப் பிறந்த ஜாதி விஷயத்திலேயே பொய் சொல்லும் இந்த நபருக்கு, இஸ்லாம் பற்றி குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

ஆங்காங்கு பரிதாபமாக கிழிந்து தொங்கும் உங்கள் முகத்திரையை முற்றாக அகற்றுங்கள் நேசகுமார்! உங்களுக்கு உண்மை சொல்லவும் தெரியும் என்பதை முதலில் நிரூபணம் செய்யுங்கள். பிறகு பேசலாம் இஸ்லாம் பற்றி.

தெரிந்தோ தெரியாமலோ உங்கள் எழுத்துக்களால் நீங்கள் ஒரு பிராமணர் எனக் காட்டி வந்திருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் உங்களுக்கு ஆதரவு அளித்து பின்னூட்டமிடும் உங்கள் பிராமண நண்பர்களை பாருங்கள். ‘இவர் நம்மவர்’ என அவர்கள் நம்புவது அவர்களின் எழுத்துக்களிலேயே தெரிகிறது. ‘உன் நண்பன் யாரென்று சொல்! நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்ற பழமொழியை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? மேலும் ஆப்பு போன்றவர்கள் நீங்கள் சொக்கன்தான் என்று நம்புகிறார்கள். அதை அவர்கள் தங்கள் பதிவுகளில் வெளிப்படையாக எழுதவும் செய்கிறார்கள். நீங்கள் சொக்கனாக இல்லாமலிருந்தால், ஒரு பிராமணராகவும் இல்லாதிருந்தால், உங்களின் வெறுப்பூட்டும் எழுத்துக்களால் சொக்கனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவருக்கும் அவரது முஸ்லிம் நண்பர்களுக்குமிடையில் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை உண்டாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் முகத்திரையை விலக்கி உங்களை யார் என உண்மையாக அடையாளப் படுத்திக் கொள்வதுதான் சொக்கனுக்கு நீங்கள் செய்த அநீதிக்கு பரிகாரமாக இருக்கும்.

மலர் மன்னன், அரவிந்தன் நீலகண்டன், ஜெயராமன், வஜ்ரா சங்கர், கால்கரி சிவா, டோண்டு ராகவன் இவர்களெல்லாம் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்லாம் பற்றி விமரிசனம் செய்யவில்லையா? உங்களுக்கு மட்டும் ஏன் முகத்திரை தேவைப்படுகிறது? இருட்டில் மறைந்து நின்று கல்லெறியும் கோழைக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தியாசம்? வெளியில் வாருங்கள். நீங்கள் இஸ்லாம் பற்றி விவாதம் செய்ய வரும்போது, நீங்கள் சார்ந்த சமூகம் பற்றிய கேள்விகள் எழுந்தால் அதற்கும் பதிலளிக்க தயாராக வாருங்கள்.

அது உங்களால் முடியாதென்றால், பொத்திக் கொண்டு போங்கள்!

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்ட தாய்லாந்து பிரதமர்

November 5, 2006

தாய்லாந்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் 2004 -ம் ஆண்டு ரமளான் மாதத்தில் 84 முஸ்லிம்கள் மரணமடைய நேரிட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரமளான் மாதத்தில் ஒரு நாள் (அக்டோபர் 25, 2004) ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தென் தாய்லாந்தின் காவல் நிலையம் ஒன்றின் அருகில் கூடினர். அவர்களில் பெரும்பாலோர் ஆர்வமிகுதியால் வேடிக்கை மட்டுமே பார்க்க வந்தவர்கள்.

தகுந்த ஆதாரமின்றி கைது செய்யப்பட்டிருந்த ஆறு பேரை விடுவிக்கக் கோரி அந்தக் கூட்டத்தினரில் சிலர் கோஷம் எழுப்பினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வரவழைக்கப்பட்ட ராணுவம் திடீரென அந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் மூண்டது. ராணுவத்தினர், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அப்பாவி மக்களையும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அவர்கள் மேற்சட்டை கழற்றப் பட்டவர்களாக கைகள் பின்புறம் பிணைக்கப்பட்ட நிலையில் சாலைகளில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தனர்.

ராணுவத்தின் பிடியில் தாய்லாந்து முஸ்லிம்கள்

அதன் பிறகு நடந்ததுதான் மிகக் கொடூரம். கைது செய்யப்பட்டவர்களை ராணுவம் சிறு சிறு ராணுவ வண்டிகளில் புளி மூட்டைகளை திணிப்பது போல திணித்து, சுமார் 5 மணி நேர பயண தூரத்திலிருந்த ராணுவ முகாம் ஒன்றிற்கு அனுப்பியது. ஒருவர் மேல் ஒருவராக மூன்று அல்லது நான்கு அடுக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அடுக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு உயிருடன் அனுப்பப்பட்ட பலர் அந்த ராணுவ முகாமை அடைந்தபோது பிணமாகி இருந்தனர். ஆம். அவர்களில் 78 பேர் மூச்சுத் திணறியே மரணமடைந்து விட்டனர்.

அப்போதைய தாய்லாந்து பிரதமராக இருந்த தக்சின் ஷினவட்ரா ராணுவத்தினரின் செய்கையை தற்காத்து பேசியதோடு, அவர்களின் மனிதாபிமானமற்ற செய்கையை நியாயப்படுத்தும் விதமாக ‘முஸ்லிம்கள் நோன்பு இருந்ததனால், ‘வீக்’காக இருந்திருப்பார்கள். அதனால்தான் மரணமடைந்திருப்பார்கள்’ என்று பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்தார். இவரது பேச்சு ஏற்கனவே வெந்து போயிருந்த முஸ்லிம்களின் மனதில் ஈட்டியைப் பாய்ச்சியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தாய்லாந்தில் அரசியல் சூழ்நிலை மாறி விட்டது. பிரதமர் தக்சின் மீது தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இறுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் அதே ரமளான் மாதத்தில் தக்சின் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தாய்லாந்தில் காலடி எடுத்து வைத்தால் ஊழல் வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் தக்சின் வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

ராணுவத்தின் ஆதரவுடன் தற்காலிக பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்கு தாய்லாந்தின் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். பிரதமரின் இந்த நல்லிணக்க முயற்சியால் தென் தாய்லாந்தில் அமைதி திரும்பும் சாத்தியம் தோன்றியிருக்கிறது.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

இந்தியச் சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள்!

November 3, 2006

இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

- 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 32.4 விழுக்காடாக இருக்கிறது.

- புதுதில்லி மக்கட்தொகையில் 11.7 விழுக்காடு உள்ளவர்கள் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சிறையிலிருக்கும் முஸ்லிம்களோ 27.9 விழுக்காட்டினர்.

- 9.1 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட குஜராத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் 25.1 விழுக்காட்டினர்.

இந்த எண்ணிக்கையில் குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப் பட்டவர்களோடு விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களும் அடங்குவர்.

இந்தப் புள்ளி விவரங்களோடு ஒப்புநோக்குகையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு சிறு விழுக்காட்டையே முஸ்லிம்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எதில் இட ஒதுக்கீடு வழங்க மறுத்தாலும், சிறையை நிரப்புவதில் அரசுகள் பாகுபாடின்றி இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள்தொகை வீதத்தை விட மிக அதிகப் பங்கு தருகிறார்கள்.

இந்திய முஸ்லிம்களின் இந்த பரிதாபமான நிலைக்கு யார் அல்லது எது காரணம்?

- வறுமைதான் முஸ்லிம்களில் பெரும் விழுக்காட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

- காவல் துறையினரின் பாரபட்சமான செயல்பாடுகளும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான சட்ட உதவி கிடைக்காமலிருப்பதும் பல அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணங்களாக இருக்கின்றன. “ஏதேனும் குற்றச் செயல்களில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தால், ஒருவரை கைது செய்யவேண்டிய இடத்தில் பத்து பேரை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில், தேவையில்லாத போதும் பல அப்பாவிகள் கைது செய்யப் படுகிறார்கள். கடைசியில் இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் படுவதில்லை” என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சையது ஷஹாபுத்தீன்.

ஒரு முஸ்லிம் மீது போலீசாரால் ஏதாவது ஒரு வழக்கு தொடுக்கப்பட்ட உடனேயே அவரை குற்றவாளியாகக் கருதிக் கொண்டு சமூகம் ஒட்டுமொத்தமாக அவரைப் புறக்கணிப்பதும் சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் பெருமளவு நீதி கிடைக்காமல் அடைபட்டிருக்க காரணமாகின்றது. இந்த அதிர்ச்சி தரும் உண்மையை சமூகம் இனிமேலாவது கண்டுகொள்ள வேண்டும். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் காவல் துறையின் வலுவிழந்த ஆதாரங்களால் குற்றம் நிரூபணம் செய்யப்படாமல் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டால் இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் இந்த அறிக்கையை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, ஏழை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டியது மிக அவசியம். இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்களும் பண வசதி படைத்த முஸ்லிம்களும் இச்சேவைக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும்.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

குலாமின் உள்மனத்தூண்டல்!

“காபிர் என்பவர் பிறர் ஒருவரின் கருத்தை நிராகரிப்பவரே.” குலாம் அவர்களின் அக்டோபர் 26 திண்ணை கடிதத்தில் உள்ள இந்த வாசகத்தை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன். ‘காபிர்’ என்ற அரபு வார்த்தைக்கு பொருள் ‘நிராகரிப்பவர்’. முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஓரிறைக் கொள்கையை நிராகரிப்பவர் காபிர். மற்றவர்களின் பார்வையில் பல கடவுள் கொள்கையை நிராகரிக்கும் ஒரு முஸ்லிம் காபிர்.

தனது இந்தக் கருத்திற்கு உதாரணமாக குலாம் அவர்கள், ‘ சர் சையத் அகமத்கான் , குலாம் அகமது பர்வேஷ் போன்றோரின் கருத்துக்களை நிராகரிக்கும் ஹாபி, இப்னு பஷீர் - தான் காபிர்கள் என்று அர்த்தம் பெறுகின்றனர்‘ என்கிறார். ‘நபிமுகமதுவிற்கு அல்லா அருளிய உள்மனத் தூண்டலே திருக்குர்ஆன் என்பதை இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்கள் சர் சையத் அகமத் கான், குலாம் அகமது பர்வேஸ் உள்ளிட்ட பலர் விளக்கியுள்ளனர்’ என்கிறார் குலாம்.

சர் சையது அஹமது கான்

உள்மனத் தூண்டல் என்றால் என்ன என்பதைப் பார்க்குமுன் ஒரு சிறு அறிமுகம்: சர் சையது அஹமது கான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர். உருது மொழியில் பல நூற்களை இயற்றியிருக்கும் இவர் குர்ஆன் விளக்கவுரை எழுதத் தொடங்கி 7 தொகுதிகள் முடிவுற்ற நிலையில் மரணமடைந்தார். இவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தன. அவற்றுள் முக்கியமானது, இவர் மேற்கத்திய சிந்தனை கொண்டவராகவும், ஆங்கிலேயருடன் மிக இணக்கமாகவும் இருந்தார் என்பது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை முன்மாதிரியாக கொண்டுதான் அவர் அலிகார் பல்கலைக் கழகத்தைத் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் ஆங்கில மொழியை கற்பதே ஹராம் என மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுத்திருந்த சூழலில், இவர் முஸ்லிம்கள் படிப்பதற்காக ஆங்கிலேய பல்கலைக் கழகத்தை மாதிரியாக கொண்ட ஒரு பல்கலைக் கழகத்தை துவங்கினார் என்றால், எந்த விதமான எதிர்ப்புகளை சந்தித்திருப்பார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இனி, குலாம் அவர்களின் ‘ உள்மனத்தூண்டல்’ என்ற கூற்றுக்கு வருவோம். திருக்குர்ஆன் முழுவதும் இறைவனிடமிருந்து ஜிப்ரயீல் எனும் வானவர் மூலமாக ‘வஹி’ என்னும் இறைச்செய்தியாக நபிகளாருக்கு அருளப்பட்டது என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. ஆனால் குலாம் அவர்கள் இதற்கு மாற்றமான ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறார். குர்ஆன் வசனங்கள் ‘அல்லாவின் உள்மனத் தூண்டல் பெற்ற நபிமுகம்மதுவின் வார்த்தைகள்’ என்பது குலாம் அவர்களின் கருத்து. நபி முஹம்மது அவர்களின் உள்மனத்தில் புதைந்திருந்த வசனங்களை அல்லாஹ் தூண்டி வெளிப்படச் செய்தான் என்பது இதன் பொருள். இதற்கு நேர்மாறான பொருள் தரும் பல குர்ஆன் வசனங்களை நம்மால் காட்ட இயலும். ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

குலாம் அவர்கள், மேற்கண்ட தனது கருத்துக்கு ஆதரவாக சர் சையது அஹமது கான் போன்றவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆதாரத்தை குலாம் அவர்கள் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சர் சையது அஹமது கான் தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

The blessed person of the Prophet of God (the blessing and peace of God be with him) was endowed with three attributes:

I. The Prophecy, i.e. the commandments of God were revealed to him.

II. The Communication, i.e. he communicated or announced to he people what was revealed to him.

III. Government of the country, i.e. he ruled the country, en­forced the revealed commandments and looked after their pro­per observance, protected the people of the country and repulsed the enemy by force.

இறைத்தூதருக்கு வழங்கப் பட்ட தன்மைகளாக அவர் குறிப்பிடுவது;

1. இறைக் கட்டளைகள் அவருக்கு அருளப் பட்டன.

2. அந்த இறைக்கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பு.

3. நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு.

திருக்குர்ஆனுக்கு உருது மொழியில் விளக்கம் எழுதிய சர் சையது அஹமது கான் இந்தக் கட்டுரையில் இறைக் கட்டளைகள் இறைத்தூதருக்கு அருளப்பட்டதாக சொல்கிறாரே தவிர, இறைத்தூதரின் உள்மனதில் புதைந்திருந்தவை தூண்டி விடப்பட்டு வெளிக் கொணரப் பட்டதாக சொல்லவில்லை. சர் சையது அவர்களின் கருத்துக்களை குலாம் தவறாக புரிந்து கொண்டு மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

நன்றி: திண்ணை November 2, 2006