யூசுப் கான் - கான் சாஹிப் - மருதநாயகம்

February 18, 2007

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான் சாஹிபுடையது. சத்ரபதி சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்ற வரலாற்று நாயகர்களைப் பற்றி வரலாற்று புத்தகங்களைவிட திரைப்படங்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் நாம் வாழ்கிறோம். கான் சாஹிபிற்கு அந்தக் கொடுப்பினை(?) கூட (இதுவரை) இல்லை.

ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

இவரது வாழ்வைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளில் சில சுவாரசியமான பக்கங்களை இனி பார்ப்போம்:

khan sahib book coverஇவர் பிறப்பிலேயே முஸ்லிமா, அல்லது வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாக மாறியவரா என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதுபற்றி ‘மஹதி’ எழுதிய ‘மாவீரர் கான் சாஹிப்’ என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்கப் பட்டிருக்கிறது.

கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று சொல்லும் ஒரே ஒரு குறிப்பு எஸ்.ஸி.ஹில் என்பவர் எழுதிய “Rebel Commandant Yusuf Khan” என்ற நூலில் காணப்படுகிறது. 318 பக்கங்கள் கொண்ட அந்த நூல் கான் சாஹிப் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட பின் 150 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டது. இந்த நூலாசிரியரிடம் ஓர் அரசாங்க அலுவலர், கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், பெயர் மருதநாயகம் பிள்ளை என்றும், பின்னால் முஸ்லிம் ஆகி யூசுப்கான் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தாராம். அவர் தம் கூற்றுக்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை. கான் சாஹிபின் வாழ்க்கையைக் கூறும் வேறு எந்த நூலிலும் இந்தக் குறிப்பு காணப்படவில்லை.

கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாகியிருந்தால் அது அவர் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான சம்பவமாகும். எங்கே முஸ்லிம் ஆனார், யாரால் முஸ்லிம் ஆக்கப் பட்டார் என்ற விபரங்கள் பிரபலமாகியிருக்கும். கான் சாஹிப் உயிர்த் தியாகம் புரிந்து 150 ஆண்டுகள் வரையும் யாரும் அதைப் பற்றி தெரிவிக்கவோ, எழுதி வைக்கவோ இல்லை. வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்குச் சான்றுகளும் இல்லை. யூசுப்கானோ, அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ, ஆற்காட்டு நவாபோ, ஆங்கிலேயரோ அவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டதே இல்லை. கான் சாஹிபின் வரலாற்றை எழுதிய மற்றவர்களும் தெரிவிக்கவில்லை. ஆகையால் கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பது கட்டுக் கதையாகும்.

மாறாக, அவர் பிறவி முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

“கான் சாயபு சண்டை” என்ற நாட்டுப் பாடல் கான் சாஹிப் தூக்கிலிடப் பட்டவுடன் ஓர் இந்தியக் கவிஞரால் பாடப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு பாடப் பட்டிருக்கிறது.

“விகடமிடுவோர்கள் குலகாலன் - வெற்றி
விசைஆலிம் குலம் விளங்க வருதீரனான
ரதகஜதுரக படையாளன் - நல்ல
நடனமிகுபரு நகுலதுடி நிபுணகொடியான்”

இதிலிருந்து கான் சாஹிப் ஆலிம் குலவிளக்கு என்பது தெளிவாகிறது. (ஆலிம் = இஸ்லாமிய மார்க்க அறிஞர்). அந்தக் காலத்திலேயே வாழ்ந்த ஒரு கவிஞருக்குத் தெரிந்திராத ஒரு தகவலை 150 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அரசாங்க அலுவலர் எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை.

தவிர-

கான்சாஹிப் தூக்கிலிடப்பட்ட ஏழே நாட்கள் கழித்து ஆங்கிலேயர் ஒருவர், ஸ்காட்லாந்தில் இருந்த தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கான் சாஹிப் ஆங்கிலேயருடன் வீரப் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் எழுதியதாவது:

“கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம்
Khan Sahib is by birth a moor and is descended from the ancient seed of the nation.”

இந்தக் குறிப்பும் எஸ்.ஸி.ஹில் எழுதிய நூலில் பக்கம் 286-ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

(Moor = The word was used more generally in Europe to refer to anyone of Arab or African descent).

இதனால் கான்சாஹிப் வேளாளர் குலத்தில் பிறக்கவும் இல்லை; பெயர் மருதநாயகம் பிள்ளையும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை இவர் மக்களால் போற்றப்பட்ட, மதுரையின் தலைவராக விளங்கியதால் ‘மதுரை நாயகம்’ என்று அழைக்கப்பட்டு, பின் பேச்சுவழக்கில் மதுரை என்பது மருதை என்று மருவி ‘மருதநாயகம்’ ஆகியிருக்கலாம்.

அல்லது கான்சாஹிபின் முன்னோர்களில் யாராவது மருதநாயகம் பிள்ளையாக வாழ்ந்திருக்கலாம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறியவர்களின் வழித்தோன்றல்கள்தாமே!

=======

ஆதார நூல்: ‘மாவீரர் கான் சாஹிப்’ - நூலாசிரியர்: ‘மஹதி’ - பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்

சில ஆதார சுட்டிகள்:
- தி ஹிந்து
- ஆன்சர்ஸ்.காம்

10 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2007/02/18/p61/trackback/

  1. நண்பர் ரசிகவ் அவர்கள் அன்புடன் குழுமத்தில் மருதநாயகம் பற்றிய வரலாற்று தொடர் ஒன்றை எழுதி இருக்கிறார்…படிக்க் : http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/bc034e1e2239e524/

    Comment by ப்ரியன் — February 19, 2007 @ 6:40 am

  2. தகவலுக்கு நன்றி ப்ரியன்!

    Comment by இப்னு பஷீர் — February 19, 2007 @ 8:21 am

  3. மருதநாயகத்திற்க்கு இருந்த இந்திய தேசப்பற்று ஏன் இன்றைய முஸ்லீம்களுக்கு இல்லை ? அரபி தேசபற்றே ஏன் மேலோங்கி நிற்க்கிறது ?

    கரு.மூர்த்தி

    Comment by கரு.மூர்த்தி — February 20, 2007 @ 6:10 am

  4. //மருதநாயகத்திற்க்கு இருந்த இந்திய தேசப்பற்று ஏன் இன்றைய முஸ்லீம்களுக்கு இல்லை ? அரபி தேசபற்றே ஏன் மேலோங்கி நிற்க்கிறது ? - கரு.மூர்த்தி//

    கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி திரு. கரு மூர்த்தி அவர்களே, அரபி தேசபற்று என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்திய முஸ்லிம்கள் பெருமளவில் அரபு நாடுகளில் பணி புரிவதையா?

    Comment by இப்னு பஷீர் — February 20, 2007 @ 9:15 am

  5. மருதநாயகம் பிறவி முஸ்லீமாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் மருதநாயகம் வெறும் முரடனாக மட்டுமல்லாமல் புத்திசாலியாகவும் இருந்திருக்கிறார். ஒரு வேளை முஸ்லீம் படையில் இருந்ததால், அதில் மேலும் முன்னேர தன்னை முஸ்லீமாக மாற்றிக்கொண்டிருக்கலாம். அவர் பிறந்து வளர்ந்த பகுதிகளில் அந்த காலகட்டத்தில் முஸ்லீம்கள் அதிக அளவு வாழ்ந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் பார்க்கவேண்டும்

    Comment by தமிழன் — February 20, 2007 @ 1:25 pm

  6. //மருதநாயகம் வெறும் முரடனாக மட்டுமல்லாமல் புத்திசாலியாகவும் இருந்திருக்கிறார்.//

    என்ன கொடுமை அய்யா இது? தேசத்துரோகிகள் வீரர்களாம்! உண்மை வீரர்கள் முரடர்களாம்!

    Comment by மரைக்காயர் — February 20, 2007 @ 2:27 pm

  7. //மருதநாயகம் பிறவி முஸ்லீமாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் மருதநாயகம் வெறும் முரடனாக மட்டுமல்லாமல் புத்திசாலியாகவும் இருந்திருக்கிறார்.//

    தமிழன், ஒரு வாதத்திற்காக கான் சாஹிப் பிறவி முஸ்லிம் அல்ல என்று வைத்துக் கொண்டால்கூட, அவர் புத்திசாலியாக இருந்ததால்தான் முஸ்லிமாக மாறினார் என்றாகிறது. இதுதான் உங்கள் கருத்தா?

    //ஒரு வேளை முஸ்லீம் படையில் இருந்ததால், அதில் மேலும் முன்னேர தன்னை முஸ்லீமாக மாற்றிக்கொண்டிருக்கலாம். //

    கான் சாஹிப் முஸ்லிம் படையில் இருந்ததால் முஸ்லிமாக மாறியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் நெல்லூர் வீரர் முஹம்மது கமால் என்ற முஸ்லிம் மன்னரின் படையில் சேருமுன் பல ஆண்டுகள் புதுச்சேரியில் பிரஞ்சுப் படையிலும் அதன் பிறகு தஞ்சை மராட்டிய மன்னரின் படையிலும் இருந்திருக்கிறார். பிரஞ்சுப்படையில் சேரும்போதே அவர் யூசுப் கான் தான்.

    //அவர் பிறந்து வளர்ந்த பகுதிகளில் அந்த காலகட்டத்தில் முஸ்லீம்கள் அதிக அளவு வாழ்ந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் பார்க்கவேண்டும் //

    கான் சாஹிப் பிறந்து வாழ்ந்தது மதுரையை அடுத்த பனையூர் என்ற கிராமம். அக்காலத்தில் முஸ்லிம்கள் மதுரை பாண்டிய மன்னரிடம் படைவீரர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். படையெடுத்து வந்த பகைவரை அடித்துத் துரத்தியிருக்கிறார்கள். குறிப்பாக மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது அவரை எதிர்த்த வீரர்களில் முஸ்லிம்களும் மிகுந்திருந்தனர்.

    Comment by இப்னு பஷீர் — February 20, 2007 @ 2:53 pm

  8. //கான் சாஹிப் பிறந்து வாழ்ந்தது மதுரையை அடுத்த பனையூர் என்ற கிராமம்.//

    ஆனால் வரலாறு, மருதநாயகம் பிறந்தது ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமம் என்று கூறுகிறது.

    Comment by தமிழன் — February 20, 2007 @ 4:30 pm

  9. //ஆனால் வரலாறு, மருதநாயகம் பிறந்தது ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமம் என்று கூறுகிறது.//

    ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலும் பனையூர் என்ற பெயரில் சிற்றூர்கள் இருந்தபோதிலும் கான் சாஹிப் பிறந்தது மதுரையை அடுத்த பனையூர்தான் என்று வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றமான வரலாற்று குறிப்பு எதுவும் உங்களிடம் இருந்தால் சொல்லுங்களேன். தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன்.

    Comment by இப்னு பஷீர் — February 21, 2007 @ 10:49 am

  10. மருதநாயகம் பற்றிய குறிப்பு

    Comment by தமிழன் — February 22, 2007 @ 1:19 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.