திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்! - 2

February 15, 2008

காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;

‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’

மேலும் ‘திப்பு சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்‘ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?

சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்? இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?

‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை‘ என்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?

இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

*************

‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28

திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.

***************
திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?‘ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

நன்றி: திண்ணை

ஆதாரச் சுட்டிகள்:

Dr. K. Hussain - http://www.sabrang.com/cc/comold/june99/forum.htm
Prof Sheik Ali - http://www.tipusultan.org/index.htm
About Dewan Purniah - http://www.kamat.com/jyotsna/blog/purnaiah.htm
Dr. K.L. Kamat - http://www.kamat.com/kalranga/itihas/tippu.htm
விடுதலை - http://viduthalai.com/20080106/news10.html
கோபா வலைப்பதிவு - http://blackboards.blogspot.com/2007/01/blog-post_16.html
சமண/பௌத்த மதங்களை அழித்த சைவம் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=16188&mode=threaded

குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா? தொடரும் பொய்ப் பிரச்சாரங்கள்!

February 8, 2008

இஸ்லாமின் அடிப்படை குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள். குர்ஆன் முழுக்க முழுக்க இறைவாக்கு என்பதும் அது இறக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அந்த இறைவனாலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று. இதை பல முஸ்லிம்களை விட நன்றாக புரிந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள். இந்த நம்பிக்கையை எப்படியாவது தகர்த்து விட்டால் இஸ்லாமின் அடிப்படையையே தகர்த்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு இவர்களுக்கு இருக்கிறது போலும். அதனாலேயே ‘குர்ஆன் இறைவாக்கு அல்ல’ குர்ஆன் முஹம்மது நபியால் எழுதப் பட்டது’ ‘குர்ஆன் மாற்றம் செய்யப்பட்டது’ என்பன போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் அவ்வப்போது முடுக்கி விடப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு வலைப்பதிவு கண்ணில் பட்டது. அதில் இப்படி எழுதியிருந்தார்கள்:

“ஏமனில் 1972இல் ஒரு குரான் குகைக்குள் ஏராளமான பழங்கால குரான்களை ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த குரான்கள் கிமு 700இலிருந்து இந்த குகைக்குள் கிடக்கின்றன (அந்த கால வழக்கப்படி பழைய குரான்களை எரிப்பதோ அழிப்பதோ இல்லை. அவற்றை ஒரு குகைகுள் பூட்டி வைத்துவிடுவார்கள்). இந்த குரான்களை மைக்ரோபிலிமில் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஜெர்மனி சென்று இந்த குரான்களில் இருக்கும் ஏராளமான வித்தியாசங்களள ஆராய்ந்து வருகின்றனர் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள். இவ்ர்களிடம் 35000 மைக்ரோபிலிம் காப்பிகள் இருக்கின்றன. ஏமன் அரசாங்கம் இவர்கள் எடுத்தது அறிந்து இந்த குகையை மூடிவிட்டது. பல்வேறு வகை குரான்கள் இருந்திருக்கின்றன என்று தெரியவந்தால், இஸ்லாமுக்கு ஆபத்து என்று இந்த குகை மூடப்பட்டதாக தெரிகிறது.”

இந்தப் பிரச்சாரகர்களின் பயனற்ற முயற்சிகளைக் கண்டு இவர்கள் மேல் பரிதாபம்தான் மேலிடுகிறது. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா? இயேசு கிருஸ்துவின் காலத்திற்குப்பின், அதாவது கி.பி.யில் தோன்றியவரே முஹம்மது (ஸல்) அவர்கள். அவர்களின் 40 வயதிலிருந்து சுமார் 23 ஆண்டு காலக்கட்டத்தில் சிறு சிறு பகுதிகளாக இறக்கப் பட்டது குர்ஆன். இது சரித்திர உண்மை. ஆனால் மேற்கண்ட தகவலின் படி கி.மு. 700லிருந்து குகைக்குள் பூட்டி வைக்கப் பட்டிருந்த குரான்களை ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்களாம். கி.பி-யைச் சேர்ந்த குர்ஆன் எப்படி கி.மு-வுக்கு சென்றது? குகையை எப்படி பூட்டுவார்கள்? 1972-ல் இதைக் கண்டுபிடித்த ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் 35 ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களது கண்டுபிடிப்புகளை வெளியிடாதது ஏன்? அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் இன்றைய குர்ஆனுக்குமிடையில் என்னென்ன வித்தியாசங்களை அவர்கள் கண்டு பிடித்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அந்த வலைப்பதிவில் விடையில்லை.

ஏதோ ஒரு வலைப்பதிவில் யாரோ ஒருவர் எழுதிய அபத்தமான ஒரு கட்டுக்கதையை நான் ஏன் திண்ணையில் எழுத வேண்டும் என்றால், அதற்கு காரணம் இருக்கிறது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு கட்டுக்கதையை ஆதாரமாகக் கொண்டு, சென்ற வார திண்ணையில் நேசக்குமார் இப்படி எழுதுகிறார்.

“குரான் முஹம்மதின் மறைவுக்கு மிகவும் பிற்காலத்தில் பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு உருவானதை இன்றைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பல முக்கியமான மாற்றங்கள் குரானில் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் சரியோ தவறோ ஒரு குரானை மட்டுமே அரசு அதிகாரபூர்வமான குரானாக அறிவித்து ஏனைய குரான்களை எரித்துவிட்டதாலும், அதற்குப் பின்பும் குரான் தொடர்ந்து அடித்து திருத்தப்பட்டு எழுதப்பட்டிருப்பதை அரபு நாட்டு மசூதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் சுவடிகளை ஆய்ந்து பார்க்கும்போது கண்டுபிடித்திருப்பதையும் இன்று செய்திகளில் பார்க்க முடிகிறது.”

முந்திய கதையில் ஏமன் நாட்டு குகையாக இருந்தது பிந்திய கதையில் அரபு நாட்டு மசூதியாகியிருக்கிறது. ‘ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள்’ ‘இன்றைய ஆய்வாளர்களாக’ மாற்றம் பெற்றிருக்கிறார்கள். மற்றபடி கதையென்னவோ அதேதான். இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மாற்றங்கள் என்னென்ன? எந்த நாட்டு அரசு ஒரு குரானை மட்டும் அதிகாரபூர்வமானதாக அறிவித்தது? அதற்குப் பிறகும் குரானின் எந்தெந்த வசனங்களெல்லாம் அடித்து திருத்தப் பட்டன? அவற்றை அடித்துத் திருத்தியவர்கள் யார்? கேள்விகள் நிறைய இருக்கின்றன. பதில்தான் வந்தபாடில்லை!

குர்ஆன் வசனங்கள் சிறு சிறு பகுதிகளாக இறங்கிக் கொண்டிருந்த பொழுதிலேயே, இறைத்தூதர் அவர்களின் காலத்திலேயே, ஓலைச் சுவடிகளிலும் ஏடுகளிலுமாக பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருந்தது. அண்ணலாரின் மறைவுக்கு மறு ஆண்டு, உமர் அவர்களின் ஆலோசனையின்படி, அப்போதைய கலிஃபா அபூபக்கர் அவர்களின் காலத்தில் இறை வசனங்கள் மிகுந்த கவனத்துடன் ஒன்று சேர்க்கப்பட்டு குர்ஆனின் முதல் முழு எழுத்துப் பிரதி உருவாக்கப் பட்டது. இவ்வாறு ஒன்று சேர்த்து எழுதப்பட்ட முதல் குர்ஆன் பிரதி இன்றும் இருக்கிறது. குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டது என வாதிடுபவர்கள் இந்த முதல் குர்ஆன் பிரதியோடு ஒப்பிட்டு மாறுபடுவதை விளக்கமாக எடுத்து வைத்து எழுதலாம்.

ஒலி வடிவில் இருந்த குர்ஆன் எழுத்து வடிவில் ஆக்கப் பட்டதை வைத்து ‘குர்ஆன் மாறுதலடைந்தது’ என்று கூட சிலர் வாதிடுகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப் பட்ட பதில் திண்ணையில் இந்தச் சுட்டியில் இருக்கிறது.

திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!

குர்ஆன் தொகுக்கப் பட்டதையும் மாற்றங்கள் எதுவுமின்றி பாதுகாக்கப் பட்டிருப்பதையும் பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்களுக்கு இந்தச் சுட்டியில் உள்ள நூலை பரிந்துரைக்கிறேன்.

வான்மறை குர்ஆன் ஓர் அறிமுகம்

நன்றி: திண்ணை

இஸ்லாம் குறித்து அமெரிக்காவுக்கு ஏனிந்த அச்சம்?

February 6, 2008

ராம்சே கிளார்க் அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்). அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி…

கேள்வி: இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம் என்று சொல்கிறீர்களா?

பதில்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.

உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ‘மார்க் குவைன்’ என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ‘தேவையில்லாத தேவைகள்’ பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.

இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.

அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.

அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.

இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

நன்றி: சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!

February 2, 2008

1 பிப்ரவரி 08 ‘திண்ணை’ இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது. தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள்.

***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.

சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.

சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.

திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, ‘பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்’ என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி ‘ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது’ என்று கண்டித்தார்.

ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். “ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'’ என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை ‘விலைக்கு வாங்கி’, அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.

சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற ‘அவசியம்’ ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.

திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்” என்று எழுதுபவர் வேறு யாருமல்லர். முஸ்லிம்களை ‘துருக்கர்’ என்றும் ‘முகமதியர்’ என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!

திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் ‘சம்பவத்தை’ தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த ‘ஆதாரம்’ பற்றி விசாரித்தபோது, ‘கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை’ என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு தமது ஜாதிப்பற்றை நிலைநாட்டிக் கொண்டார். அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து ஆபாச சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?

மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் ‘அன்பே சிவம்’ என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!

********************
வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம்.

அன்றைய பாரதியும் இன்றைய சுஜாதாவும் அச்சு ஊடகங்களில் செய்ததை, திரிபுவாதமே நோக்கமாக கொண்ட சிலர் இணையப் பக்கங்களில் செய்து வருகின்றனர். கூலிக்கு மாரடிப்பவர்களைப் போல அற்ப பிரதிபலன்களுக்காக எதை வேண்டுமானாலும் எழுத தயாராக உள்ள அனாமதேயங்களும் இவர்களுள் அடக்கம். எதையாவது எழுதி வைப்பதும் அவற்றிற்கான விளக்கம் கோரப்படும்போதும் ஆதாரங்கள் கேட்கப்படும்போதும் ஓடி ஒளிந்து கொள்வதும் இவர்களின் அடையாளம். விளக்கமளிக்கப்படாத இவர்களின் வார்த்தைகள், தொடர்பற்ற சங்கிலி வளையங்களைப் போல இணைய வெளியில் சுற்றி வருகின்றன. அச்சு ஊடகங்களைப் போலன்றி, இணையத்தில் இவர்கள் பொய்களை உலவ விடும்போதெல்லாம் அதற்கான எதிர்ப்புகளும் உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதில் விளக்கங்கள்தான் வந்தபாடில்லை!

குஜராத் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்களின் ஆவிகள் நரேந்திர மோடியை இன்னும் விரட்டுவதாக கரண் தாப்பர் ‘Devil’s Advocate’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோடியை பேட்டி கண்டபோது குறிப்பிட்டார். ‘ஆவிகள்’ என அவர் குறிப்பிட்டது அந்தப் படுகொலைகள் தொடர்பாக மோடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையே! அந்த ‘ஆவி’களைப் போலவே இந்த இணைய திரிபுவாதிகளின் வார்த்தைகளும் இன்னும் இவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான விளக்கங்கள் அளிக்கப்படும் வரை அவை விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

நன்றி: திண்ணை