நம்பிக்கையளிக்கும் ஒபாமாவின் பேச்சு!
January 22, 2009பாரக் ஒபாமாவின் பதவியேற்பு உரை பல தரப்பினருக்கும், குறிப்பாக சில இஸ்லாமிய நாடுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நம்பிக்கையளிப்பதாக அமைந்திருக்கிறது.
முஸ்லிம் உலகினை பரஸ்பர நலன் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் ஒரு புதிய வழிமுறையில் அணுக விழைகிறோம்” (To the Muslim world, we seek a new way forward, based on mutual interest and mutual respect) என்று அறிவித்திருக்கிறார் ஒபாமா.
ஒபாமா உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பட்டியலிட்டால், அவற்றுள் அதிமுக்கியமான முதல் பத்தில் ஐந்து இஸ்லாமிய நாடுகளுடனும் முஸ்லிம்களுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.
சீனா போன்ற நாடுகளின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்தும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் சாட்சியமாக விளங்குகிறது குவாண்டனாமோ சிறைச்சாலை. செப்-11 தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பல நாடுகளிலிருந்தும் கைது செய்யப்பட்ட சுமார் 700 பேர் இங்கு அடைக்கப்பட்டு, முறையான வழக்கு, விசாரணை எதுவுமின்றி கடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப் பட்டனர். அங்கு நடந்த கொடூரங்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தபிறகு சர்வதேச நெருக்குதலினால் வேறு வழியின்றி அமெரிக்கா அவர்களில் பலரை விடுதலை செய்தது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பில் இருந்த ஸாமி அல்-ஹாஜ் என்ற அல்ஜஸீராவின் கேமராமேனை அல்-காயிதாவின் உளவாளி என்ற சந்தேகத்தில் கைது செய்து குவாண்டனாமோ கொண்டு சென்றது அமெரிக்கா. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் சுமார் ஏழு ஆண்டுகள் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து கிட்டத்தட்ட நடைபிணமாகத்தான் வெளியே வந்தார் ஸாமி.
இப்போது இன்னும் 245 பேர் அங்கு அடைபட்டுக் கிடக்கும் நிலையில், அமெரிக்காவின் மானத்தை தொடர்ந்து கப்பலில் ஏற்றிக் கொண்டிருக்கும் அச்சிறையை தாம் பதவியேற்றதும் முதல் வேலையாக மூடப் போவதாக ஒபாமா அறிவித்திருந்தார். அதற்கு முதற்கட்டமாக அவர் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
பட்டியலில் அடுத்ததாக வருவது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை மீட்டுக் கொள்ளும் திட்டம். படைகள் ஈராக்கிலிருந்து படிப்படியாக வெளியேறினாலும் ஆப்கானிஸ்தானில் இன்னும் சில ஆண்டுகள் நீடித்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
அடுத்து, இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம். தமது ஆபத்பாந்தவனான புஷ் பதவியிறங்குமுன் ஹமாஸிற்கு மரண அடி கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் 3 வாரங்களாக வெறியாட்டம் போட்ட இஸ்ரேல் ராணுவம் ஒபாமா பதவியேற்பதற்கு முதல் நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள், அதிலும் பெருமளவில் குழந்தைகள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட இந்த அட்டூழியத்தில் புஷ்ஷும் மறைமுகக் கூட்டாளி என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஒபாமாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதைக் காண பாலஸ்தீன மக்களோடு முழு உலகமும் காத்திருக்கிறது.
அடுத்து ஈரானின் அணு ஆராய்ச்சி விவகாரம். ஈரானுக்கெதிராக புஷ் தொடை தட்டிக் கொண்டிருந்தபோது, தமது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக ஈராக்கைப் போலவே ஈரானையும் பிணக்காடாக மாற்றி விடுவாரோ என்ற ஒரு பதற்றம் நிலவி வந்தது. ஆனால் ஒபாமா இந்த விவகாரத்திற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஒபாமா வாக்களித்திருக்கும் புதிய கண்ணோட்டம், இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் உடனடியாக தீர்க்காவிட்டாலும், பிரச்னைகள் மேலும் வளர்வதை கட்டுப்படுத்தும் என்று நம்பலாம். குறிப்பாக பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய கண்ணோட்டம் சில மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஒருதலைப் பட்சமாக இஸ்ரேலை ஆதரிப்பதை விடுத்து, தவறிழைப்பவர்களை, அது ஹமாஸாக இருந்தாலும் இஸ்ரேலாக இருந்தாலும், அமெரிக்கா கண்டித்திருக்குமானால் ஆயிரக்கணக்கில் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டிருக்காது.
தாம் வாக்களித்தவற்றை ஒபாமா நிறைவேற்றுவாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
