இறை மறுப்பாளர்களின் மதம்!

March 11, 2009

According to Merriam-Webster online dictionary, Religion ia “a cause, principle, or system of beliefs held to with ardor and faith“. எளிமையாகச் சொல்வதென்றால் “மதம் என்பது சில காரணங்கள், கொள்கைகள் மீது ஒருவர் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வது“. கடவுளை நம்பிக்கைக் கொண்டவர்களின் மதத்தில் கடவுள் இருக்கிறான். கடவுளை நம்பாதவர்களின் மதத்தில் கடவுள் இருப்பதில்லை. இரு தரப்பினருமே வெவ்வேறான நம்பிக்கைகளைக் கொண்ட மதவாதிகள் தான்.

இதைத்தான் ஐன்ஸ்டீன் சொல்கிறார். “நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி. இது ஒரு புதுவகையான மதம்தான். (I am a deeply religious nonbeliever. This is somewhat new kind of religion.)

கடவுள் என்னும் கோட்பாட்டை மறுப்பவர்கள் தங்களை ‘பகுத்தறிவுவாதிகள்’ என, சற்றும் பொருத்தமேயில்லாத ஒரு பெயரால் அழைத்துக் கொள்கிறார்கள். நமக்குத் தெரிந்து தமிழகத்தில்தான் இந்த ‘பகுத்தறிவு நாடகம்’ அமோகமாக நடந்து வருகிறது. மற்ற நாடுகளில் ‘கடவுள் இல்லா மதவாதிகள்’ தங்களை ‘Rationalists’ என்று அழைத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. சரி, பகுத்தறிவுவாதி என்ற பெயர் ஏன் இவர்களுக்குப் பொருந்தாது?

Rational: 1 a: having reason or understanding b: relating to, based on, or agreeable to reason

மேற்கண்ட அகராதிப் பொருள்படி, பகுத்தறிவு என்பது ‘காரண காரியங்களை நன்கு புரிந்து அதன் அடிப்படையில் ஒரு கொள்கையில் நம்பிக்கைக் கொள்வது‘ எனலாம். ‘கடவுள் இல்லா மதவாதி’களின் அடிப்படைக் கொள்கை ‘கடவுள் என்று ஒருவர் இல்லை’ என்பதுதான். இதை இவர்கள் ஆராய்ந்து அறிந்து, காரண காரியங்களின் அடிப்படையில்தான் நம்புகிறார்களா என்றால் இல்லை. கடவுள் இல்லை என்பதை இவர்கள் யாரும் நேரில் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லவில்லை. ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. இந்தப் பிரபஞ்சத்தை படைத்து இயங்கச் செய்திருப்பவன் கடவுள் அல்ல என்றால் வேறு எந்தச் சக்தி அதைச் செய்தது என்பதை அவர்கள் விவரிக்கவில்லை. எந்தச் சக்தியுமே இல்லாமல் அவை தானாகத் தோன்றியது என்பதையும் இவர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்டவில்லை. சுருக்கமாக, ‘பகுத்தறிவுக் கொள்கை’ என்று சொல்லிக் கொள்வதற்கு எந்தத் தகுதியுமற்றதாக இருக்கிறது இவர்களின் கொள்கை.

இறை நம்பிக்கையாளர் ‘இறைவன் இருக்கிறான்’ என்று நம்புகிறார். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன் என்பதால் அவன் மாபெரும் சக்தியுடைவன். மனிதர்களின் புலன்களுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் அவன் இருக்கிறான் என்பதை, நாம் கண்ணால் காணக்கூடிய வேறு பல அத்தாட்சிகளைக் கொண்டு உணர்ந்துக் கொள்ள முடியும். இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதால், அவனைக் கண்களால் காண இயலாது. ‘உன் கடவுளை எனக்குக் காட்டு’ என்று யாராவது கேட்டால் அவர்களுக்கும் காட்ட முடியாது.

இறை நம்பிக்கையாளர் தனது நம்பிக்கைக்கு ஆதாரமாக physical evidence எதனையும் காட்ட முடியாது என்பது மட்டுமே, ‘கடவுள் இல்லா மதவாதிகளின்’ ஒரே ஆதாரம். அவர் ‘இறைவன் இருக்கிறான்’ என்கிறார். இவரோ ‘உன் இறைவனை என் கண்ணால் பார்க்க முடியவில்லை. அதனால் இறைவனே இல்லை’ என்கிறார். இதில் பகுத்தறிவு எங்கிருந்து வந்தது?

இறைவன் மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற போதிலும் ‘அவன் இருக்கிறான்’ என்பதை வேறு பல அத்தாட்சிகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர் உணர முடியும். அவற்றைப் பிறருக்கு விளக்கவும் அவரால் முடியும். ஆனால், அந்த அத்தாட்சிகளை புரிந்துக் கொள்ள மனப்பக்குவம் வேண்டும். ‘என் கண்களுக்கு புலப்படுவது மட்டுமே உண்மையாக இருக்க முடியும்’ என்ற குறுகிய சிந்தனையை விட்டு வெளிவர வேண்டும். இந்த உலகத்தையும் தாண்டி, பிரபஞ்சம் எவ்வளவு பெரிதானது என்பதைப் பற்றி சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ‘எனக்குத் தெரியாது என்றால் அது இல்லாதது’ என்ற குருட்டுப்பூனை மனப்போக்கை விட்டொழிக்க வேண்டும்.

அடிப்படை காரணங்களோ, சரியான புரிந்துணர்வோ இல்லாமல் ஒரு விஷயத்தில் நம்பிக்கை கொள்வது மற்றும் தெளிவற்ற மனநிலையில் இருப்பதை Irrational என்கிறது ஆங்கில அகராதி (Irrational: not rational: as a (1): not endowed with reason or understanding (2): lacking usual or normal mental clarity or coherence b: not governed by or according to reason) அதாவது பகுத்தறிவற்ற நிலை. இந்நிலையில் உள்ளவர்கள் தங்களை ‘பகுத்தறிவுவாதிகள்’ என்று அழைத்துக் கொண்டால் அது முரணானது அல்லவா? இவ்வாறு, இல்லாத ஒரு விஷயத்தை தொடர்ந்து நம்பிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று அழைக்கலாம்?

According to the dictionary supplied with Microsoft Word: delusion = a persistent false belief held in the face of strong contradictory evidence, especially as a symptom of psychiatric disorder” (pp28)

Delusion: தவறு என நிரூபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அவற்றை நம்புதல்; ஒரு மனநோய்க்கான அறிகுறி.

தருமியிடம் சில கேள்விகள்!

March 2, 2009

அதிரை பாரூக் என்பவரிடமிருந்து வந்த தொடர் மின்னஞ்சல்களால் எரிச்சலடைந்த பதிவர் தருமி, அதைப் பற்றி ஒரு பதிவெழுதியிருக்கிறார். அவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பின்னரும் பாரூக் அவற்றைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தது தவறுதான். இடம், பொருள், ஏவலை பாருக் அனுசரிக்க வேண்டும்.

ஆனால் பாருக் செய்ததை விட பெரும் தவறு ஒன்றை தருமி தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார். அவர் அறியாமலேயே அவ்வாறு செய்கிறாரா அல்லது தெரிந்தே செய்கிறாரா என்பதை நான் அறியேன். அவரிடம் சில கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

தருமி அவரது பதிவில் எழுதியது:

//ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் கடவுள்களைக் காக்க பிறந்த பிறவிகளாகத் தங்களை நினைத்துக் கொண்டு, தங்கள் மதக் கருத்துக்களே உன்னதமானவை என்ற நினைப்பில் இருக்கும்போது எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது? ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் அடுத்த மதத்தினர் அல்லது என்னைப் போன்ற மத மறுப்பாளன் ஆயிரத்தெட்டு குறைகளையோ, கேள்விகளையோ எழுப்ப முடியும். ஆனால் வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு. ஒரு வேத புத்தகம் எப்படி வந்தது; யார்மூலம் வந்தது; எப்படி மாறாமல் இருந்தது என்று சொல்லப்படுவதெல்லாம் முக்கியமல்ல; அதன் content தான் முக்கியம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பொருளடக்கங்கள் எல்லா மதத்திலேயும் குறைபாடு கொண்டதாகவே நான் உறுதியாகக் கருதுகிறேன்; ஓரளவு அதை நிரூபித்துமிருக்கிறேன்.//

தருமி, தாம் பிறந்த மதமாகிய கிருஸ்துவத்திலிருந்து வெளியேற நேர்ந்ததைப் பற்றி சில பதிவுகள் எழுதியிருக்கிறார். அப்பதிவுகளில் அவர் கிருஸ்துவம், இந்து மதம் ஆகியவற்றிலுள்ள சில குறைபாடுகளை எடுத்துச் சொல்லி விட்டு, இஸ்லாம் பற்றிப் பல கேள்விகளை முன்வைத்தார். அவற்றைப் படிப்பவர்களுக்கு, “கிருஸ்துவத்திலிருந்து இவர் வெளியேறியதற்கு இஸ்லாம் எவ்வகையில் காரணமாகும்?” என்ற நியாயமான கேள்வி எழும். ஒருவேளை கிருஸ்துவத்திலிருக்கும் குறைபாடுகள் பிடிக்காமல் அதிலிருந்து வெளியேறி வேறு ஒரு மதத்தில் இணையும் எண்ணத்தில் இவர் இருந்திருக்கலாம். அந்த நோக்கத்தில் அவர் இந்து மதம், இஸ்லாம் ஆகியனவற்றைப் பற்றி அறிய முற்பட்டிருக்கலாம். அந்த முயற்சியில் அவருக்குப் பல கேள்விகள் தோன்றியிருக்கலாம். இதுவரை எல்லாம் சரிதான். ஆனால், அவரது கேள்விகள் அவரைப் பொருத்த மட்டில் வெறும் கேள்விகளாகவே இருக்கையில், ‘எல்லா மதங்களும் குறைபாடு உடையவை’ என்ற உறுதியான(?) முடிவிற்கு அவர் எப்படி வந்தார்?

//மூன்று ‘புத்தகங்களை’ வாசித்துப் பார்க்கச் சொல்லியுள்ளீர்கள். நல்லது; நன்றி. நீங்கள் சொல்லியுள்ளவைகளை ஏதோ கொஞ்சமேனும் வாசித்திருக்கிறேன்.அந்த வாசிப்பிலேயே போதுமென்ற அளவிற்கு எதிர்மறைக் கருத்துக்கள் உருவாகிவிட்டன// - தருமி

அதிரை பாரூக் என்பவர், தாம் உறுதியாக நம்பிக்கைக் கொண்டு தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது மார்க்கத்தைப் பற்றி மற்றவர்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மின்னஞ்சல்கள் அனுப்புகிறார். அது தவறு என்றால், அரைகுறையாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு கொள்கையைப் பற்றி உறுதியான(?) முடிவெடுத்து அதை எல்லோரும் பார்க்கும் வகையில் தனது வலைப்பதிவில் பதிவர் தருமி பதிந்து வைத்திருப்பது பெரும் தவறல்லவா? உதாரணமாக, ரஷ்ய மொழியின் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அறிந்திருக்கும் ஒருவர் ‘அம்மொழியின் இலக்கியங்கள் குறைபாடுடையவை’ என உறுதியாக நம்புவதாக அறிவித்தால் அவரது மனநிலை சந்தேகத்திற்குரியது அல்லது அவருக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்ற முடிவிற்கு வருவதுதான் நியாயம்.

நாம் அறிந்திராத விஷயங்களில் சந்தேகங்கள், கேள்விகள் எழுவது மனித இயல்பு. அது நமக்கு ஆர்வமுடைய துறையாக இருந்தால் அதற்கான பதில்களைத் தேடிப்பெற முனைவோம். இல்லையேல் அவற்றை மறந்து விட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவோம். இஸ்லாம் பற்றி இத்தனை கேள்விகளை முன்வைத்த தருமி, அதற்கான பதில்கள் பல சகோதரர்களால் விளக்கமாகச் சொல்லப்பட்ட போது, அவற்றைப் படித்திருப்பாரா என்பதுகூடச் சந்தேகம்தான். அவர் தன் கேள்விகளுக்கு பதில் தேடுபவராக இருந்து, சொல்லப்பட்ட பதில்களில் திருப்தி அடையாமலிருந்தால் அதைச் சுட்டிக் காட்டியிருக்கலாம். அதை விடுத்து, பதில் விளக்கங்கள் அளிக்கப் பட்ட போதெல்லாம் அதைப் பற்றி விவாதிக்காமல் மவுனமாக இருந்து விட்டு, சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே கேள்விகளைத் தூசு தட்டிக் கடை பரப்பினால் அவரது நோக்கம் என்னவாக இருக்கும்? கேள்விகள் வெறும் கேள்விகளாகவே சுற்றிக் கொண்டிருக்கட்டும் என்ற எண்ணமா? வெறும் கேள்விகளை மட்டுமே வைத்து அவர் எதை நிரூபித்தார்?

தருமி கேட்ட கேள்விகளுள் பலவற்றிற்கு பதிவர்கள் அபூமுஹை, நல்லடியார், சுல்தான் மற்றும் சிலர் தெளிவாகவே ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கின்றனர்.

அபூமுஹையின் பதிவுகள்:

மதமாற்றம் ஏன்? - 1

மதமாற்றம் ஏன்? - 2

மதமாற்றம் ஏன்? - 3

மதமாற்றம் ஏன்? - 4

மதமாற்றம் ஏன்? - 5

நல்லடியாரின் பதிவுகள்:

ஒரு பயணியின் குழப்பம்

தட்டுங்கள் திறக்கப்படும்

யாகாவா ராயினும் நாகாக்க - 1

எண்ணங்கள்

தருமி வாங்கிய Nokia போன்

ஒற்றைச்சாளர வீடும், வீடில்லாத சாளரங்களும்.

மதங்களும் பெண்ணியமும்.

சுல்தானின் பதிவுகள்:

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி

இவ்வளவு நடந்த பிறகும் தருமி, “வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு” என்று சொல்வது நகைப்பிற்குரியதல்லவா? கண்ணை மூடிக் கொண்டிருந்தால் எல்லாமே இருட்டாகத்தானே அய்யா தெரியும்?

தான் இருந்த மதத்தை விட்டு வெளியேறுவதோ புதியதொரு மதத்தைத் தழுவுவதோ, ஒருவரது வாழ்வின் திருப்புமுனை என்று சொல்லத்தக்க அதி முக்கியத்துவம் வாய்ந்ததொரு நிகழ்வு. ஆனால் வெறும் கேள்விகளை மட்டுமே வைத்து தருமி தனது மதத்தை விட்டு வெளியேறியதாகச் சொல்வது பொருத்தமாகத் தெரியவில்லை. கிருஸ்துவத்தைப் பற்றிக்கூட அவர் முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை போலும். கிருஸ்துவம் தொடர்பாக பகுத்தறிவாளர் என்ற பதிவர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்குக்கூட முறையாக பதிலளிக்காமல் தருமி நழுவுவதிலிருந்து இது தெளிவாகிறது.

எனினும் தருமி அவர் சார்ந்திருந்த மதத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது சொந்த முடிவு. அவர் எந்த உண்மையான காரணத்திற்காக வெளியேறினார் என்பதும் நமக்குத் தேவையில்லாத ஒன்று. அதேபோல், தான் அரைகுறையாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு கொள்கையைப் பற்றி நக்கலாகப் பதிவெழுதுவது நிச்சயமாக அவருக்குத் தேவையில்லாத ஒன்று! இதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். அப்படி ஒரு தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் தருமி, அதிரை பாருக்கின் தொடர் மின்னஞ்சல் படையெடுப்பைக் குற்றம் சொல்லும் தகுதியையும் இழந்து விடுகிறார்.

“இது ஓர் எரிதம்” என்ற சிறிய அடையாளச் சொடுக்களைப் புரிந்து கொள்ளும் மின்னஞ்சல்களின் எளிய வசதியைப் பயன் படுத்திக் கொள்ளாமல் பாரூக்கின் படையெடுப்புக்காக ஒரு பதிவெழுதி அவருக்கு இலவச விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார் பதிவர் தருமி.

கல்லூரி மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு பதில் விளக்கம் அளித்து அவர்களின் அறிவுக்கண்ணை திறந்துவிடும் ஒரு பேராசிரியராகப் பணி புரிந்ததாகச் சொல்லிக் கொள்பவர், தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்கள் வரும்போது தன் மனக்கதவுகளை பூட்டி வைத்துக் கொள்வது விந்தையிலும் விந்தைதான். இந்த நிலையில் அவர் இருக்கும்வரை எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவரிடம் எப்படி ஏற்படப் போகிறது?