பேராசிரியர் ஆஷிஷ் நந்தியைக் கண்டு நரேந்திரமோடி அஞ்சி நடுங்குவது ஏன்?

June 24, 2008

இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளுள் ஒருவர் எனவும் பின் காலனித்துவ ஆய்வுகளை துவக்கியவர் எனவும் மதிக்கப்படும் பேராசிரியர் ஆஷிஷ் நந்தி தற்போது ஒரு புதிய ‘அடையாள’த்தைப் பெற்றிருக்கிறார். குஜராத் மாநில காவல்துறைக் குறிப்புகளின்படி ‘சாதி, மதம், பிறப்பிடம் மற்றும் மொழியின் அடிப்படையில் பல்வேறு பிரிவினரிடையே பகையுணர்வை வளர்த்ததாக’ அவர் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கிறார். பேராசிரியர் நந்தியின் எழுத்துக்களுக்காக அவர் மீது குற்றம் சுமத்தப்படும் ஒரு நாள் வரும் என்று நிச்சயமாக அவரோ அவரது ஆதரவாளர்களோ கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் மிகச் சரியாகவே சொல்லி வருவது போல குஜராத்தில்தான் இப்படி நடக்க முடியாததெல்லாம் நடக்கும்.

AsisNandy
ஜனவரி 8-ம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் பேரா.நந்தி எழுதிய ‘நடுத்தர வர்க்கத்தினரைக் குற்றம் சுமத்துக’ என்ற கட்டுரையைக் குறித்து ‘தேசிய சமூக விடுதலை மன்றம்’ (National Council for Civil Liberties) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞர் சமர்ப்பித்த மனுவை அகமதாபாத் காவல்துறை பதிவு செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. முன்பு ஒருமுறை சில அற்பக் காரணங்களுக்காக ‘நர்மதையைக் காப்போம்’ இயக்கத்தின் தலைவியான சமூகநல ஆர்வலர் மேதா பட்கர் மீது வழக்குத் தொடர்ந்ததும் இதே அமைப்புதான் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. நீதிமன்றம் இவ்வழக்கை பிறகு தள்ளுபடி செய்தது.

உண்மையைச் சொல்வதென்றால், பேரா.நந்தியின் அக்கட்டுரை நரேந்திர மோடியை மீண்டும் பதவியிலமர்த்திய டிசம்பர் 2007 குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஆராய்ந்திருந்தது. குறிப்பாக, மூன்று விஷயங்களைப் பற்றி அக்கட்டுரை கருத்து தெரிவித்திருந்தது.

முதலாவதாக, 2002 கலவரங்களுக்குப் பிறகு குஜராத்தில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் முஸ்லிம்களின் அவல நிலையை அக்கட்டுரை இவ்வாறு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தது.


குஜராத்தின் முஸ்லிம்களும் ‘தங்களுக்கான இடம் இதுதான்’ என்பதை பழகிக் கொண்டு விட்டார்கள். தங்கள் சொந்த மாநிலத்திலேயே நீதியும் நிவாரணங்களும் மறுக்கப்பட்டு, தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களின் தயவில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில அரசு தர மறுக்கும் நிவாரண உதவிகளில் ஒரு பகுதியை அடிப்படைவாத நோக்கமுடைய சிலத் தன்னார்வல அமைப்பினர் தருகின்றனர். நிவாரண உதவிகளை வழங்கும் அதே வேளையில், குஜராத் முஸ்லிம்கள் குஜராத்திய மொழி பேசுவதை விடுத்து உருது பேச வேண்டும், பெண்கள் முக்காடிட வேண்டும், பிள்ளைகள் மதரஸாக்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்துகின்றனர்.

இரண்டாவதாக, முஸ்லிம்களின் அவல நிலையை சுட்டிக் காட்டியதோடல்லாமல், அக்கட்டுரை குஜராத்தில் மதச்சார்பின்மை அடிப்படையிலான அரசியல் கூட்டமைப்புகள் இயங்கும் சூழ்நிலையையும் விளக்குகிறது. இத்தகைய கூட்டமைப்புகள் மற்றும் தனிநபர்களைப் பற்றியும் பேரா.நந்தி தனது கட்டுரையில் விமர்சிக்கத் தவறவில்லை.


சங்பரிவார அமைப்புகளை எதிர்ப்பவர்களின் மதச்சார்பின்மை கொள்கை உரிய பலனை அளிக்கவில்லை. மதச்சார்பற்ற வழக்குரைஞர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்களின் மூலம் பயனடைபவர்கள்கூட மதச்சார்பின்மை கொள்கைகளை தேவைப்படும் நேரத்தில் ஒரு கருவியாக மட்டும் உபயோகித்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு இக்கொள்கைகள் புரிவதுமில்லை; அவர்கள் அவற்றை மதிப்பதுமில்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்களின் மதங்களே ஆறுதலளிக்கின்றன. அவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் தங்கள் நம்பிக்கைகளை மேலும் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். உண்மையில், ஆழமற்ற மதச்சார்பின்மைக் கொள்கைகள் காந்திய கொள்கைகளின் முதுகெலும்பையே முறித்து, அலி ஷரியதி, டெஸ்மண்ட் டுட்டு, தலாய் லாமா போன்றோர் உருவாவதையும் தடுக்கிறது. இவர்களைப் போன்றவர்கள் வறிய மற்றும் வலிமையற்ற மக்களின் துயரங்களில் தலையிட்டு அவற்றைப் போக்குவதற்கு குரல் கொடுக்கக் கூடியவர்கள்.

குஜராத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தினர், போலியான சமுதாயப் பற்று, மதாபிமானம் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு துணைபுரிவதையும் இக்கட்டுரை கடுமையாகச் சாடுகிறது.


படித்த நடுத்தர வர்க்கத்தினரின் பிடியிலிருந்து குஜராத்தை விடுவிப்பது எளிதானதன்று. இந்த வர்க்கத்தினர் போராட்ட மதவாதத்தின் மூலம் தங்களுக்கு ‘போர்க்குணம் கொண்ட சமுதாயம்’ என்றதொரு புதிய அடையாளமும் சுயமதிப்பும் கிடைப்பதாக நம்புகிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பெங்காலி பாபுகள், மஹராஷ்ட்ரிய பிராமணர்கள், காஷ்மீர் முஸ்லிம்கள் போன்றோரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். குஜராத்தின் இந்த வர்க்கம் தங்கள் கரங்களில் இரத்தக்கறை படியாமலேயே, திட்டமிடுதல், பணஉதவி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலமாகப் படுகொலைகளை அரங்கேற்றி அதன் இரத்த வாடையை நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இக்கொலைகளைச் செய்பவர்கள் பழங்குடிகள், தலித்கள் போன்ற மிக கீழ்த்தட்டைச் சேர்ந்த மக்கள்தான். சமீப காலத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் கல்வி நிறுவனங்களும் ‘வெறுப்புணர்வை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை’களாக மாறிப்போயிருக்கின்றன. தேசியவாதம் என்ற பெயரில் இரத்தவெறி கொண்ட பொறுப்பற்ற பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டு இது போன்ற அராஜக செயல்பாடுகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரா. நந்தியின் கருத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் அவற்றுடன் ஒத்துப்போவர் என்றுச் சொல்ல முடியாது என்றாலும், அவரது எழுத்துக்களில் வெற்று வாதங்கள் இருப்பதில்லை என்பதையும் சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவை தெளிவாக விவரிக்கின்றன என்பதையும் புரிந்து கொள்வர். எல்லோருடைய மனத்திலும் இயல்பாகத் தோன்றும் ஒரு கேள்வி, பேரா.நந்தியின் மீது கிரிமினல் வழக்குப் பதியும்படி காவல்துறைக்கு சமிக்ஞை கொடுக்கப்படும் அளவிற்கு இக்கட்டுரை குஜராத் அரசு வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? என்பதே.

பொதுவாகவே, தமது கொள்கைகளை எதிர்ப்பவர்களை இலக்காக்கி அவர்கள் மீது பலவகைகளில் களங்கம் சுமத்துவது ஹிந்துத்துவப் படையினரின் நடைமுறை. எதிர்க்கருத்துக் கொண்டவர்களை வாயடைத்துப் போகச் செய்யும் அரசியல் உத்தி இது. பேரா. நந்தி மீதான இந்த வழக்கும் இவ்வகையைச் சார்ந்ததே.

கடந்த ஆறு ஆண்டு கால குஜராத்தின் வரலாற்றில், சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வை விதைக்கும் இந்துத்துவச் செயல்திட்டங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்கள் அடக்கப் பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமூகநல ஆர்வலர்கள் சாராபாய், நஃபிஸா அலி, ஜி.என்.டேவி போன்றோர் இத்தகைய அடக்குமுறைகளுக்கு ஆளானதை குறிப்பிடலாம். பேரா. நந்தியின் விவகாரத்தில், ஒருவேளை அவர் ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கங்களின் எதிர்காலத் திட்டங்களை தெளிவாக முன்னறிவிப்புச் செய்தது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை போலும்.


உருது கவிதைகளின் ஸ்தாபகர் என மதிக்கப்படும் வலி குஜராத்தியின் அடக்கவிடம் நிர்மூலமாக்கப் பட்டது, இந்திய முஸ்லிம்களின் பன்முகப்பட்ட செறிவான கலாச்சார அடையாளங்களை அழிக்கும் ஒரு முயற்சியாகவே தோன்றுகிறது. சீக்கிய தீவிரவாதம் தலைதூக்குவதற்கு ராஜிவ் காந்தி காரணமாக இருந்தது போலவே, இந்தியாவில் அடிப்படைவாத இஸ்லாமின் வளர்ச்சிக்கு சங்பரிவாரங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை வருங்காலத் தலைமுறை நினைவுகூரும்.

பேரா. ஆஷிஷ் நந்தி மீது போடப்பட்டிருக்கும் கிரிமினல் வழக்கு, பாஜக மத்தியில் ஆட்சியிலிருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அவதூறுப் பிரச்சாரங்களை நினைவு படுத்துகிறது. 1998-ல் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து கல்வி பாடத்திட்டங்களை தமது கொள்கைகளுக்குத் தோதாக மாற்றியமைக்க முயன்றபோது, சங்பரிவாரங்களின் வரலாற்றுத் திரிப்புகளை எதிர்த்த அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் பலவிதமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. பாஜகவினர், அவர்கள் மாற்றிக் காட்ட விரும்பிய இந்திய வரலாற்றை ஒப்புக் கொள்ளாத அறிஞர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்களை திட்டமிட்டு அவமானப் படுத்தினர்; அவர்கள் காட்டும் ஆதாரப்பூர்வமான வரலாற்றை அங்கீகரிக்காமல் உதாசீனப் படுத்தினர். இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் ஆதரவில், பேராசிரியர்கள் சுமித் சர்க்கார், கே.என். பணிக்கர் ஆகியோரின் தலைமையில் நடந்து கொண்டிருந்த ‘விடுதலையை நோக்கி’ என்ற ஆய்வுத்திட்டம் நிறுத்தப் பட்டது. இவர்களைப் போன்ற நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களுக்கு, ‘ஹிந்து எதிர்ப்பு ஐரோப்பிய இந்தியர்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் பெயரிட்டார். மேலும், இந்த வரலாற்றாய்வாளர்களின் தாக்கம் இந்திய கல்வித்திட்டத்தில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மன்றம் (NCERT) மிக முனைப்புடன் செயல் பட்டது. 2001-ல், ‘இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது’ என்று காரணம் காட்டி பாடப்புத்தகங்களிலிருந்து பல பகுதிகளை NCERT நீக்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஆரிய சமாஜிகளின் குழு ஒன்று அப்போதைய மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோஹர் ஜோஷியைச் சந்தித்து, இத்திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருந்த வரலாற்றாய்வாளர்கள் ரொமிலா தாப்பர், ஆர்எஸ் ஷர்மா, அர்ஜுன் தேவ் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஜோஷியும் தம் பங்கிற்கு, ‘ஆயுதந்தரித்த பயங்கரவாதிகளை விட கல்வி சார்ந்த பயங்கரவாதிகள் மிக மோசமானவர்கள்’ என அவ்வப்போது தமது ‘சொந்த ஆய்வுக் கருத்தினை’ வலியுறுத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

மலர் மன்னனின் சவால்!

May 23, 2008

இஸ்லாம், முஸ்லிம் போன்ற பெயர்கள் மீது அவருக்கு அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி பிடிவாதமாக ‘முகமதியம்’ ‘முகமதியர்’ என்றுதான் குறிப்பிடுகிறார் மலர் மன்னன்.

“Social Justice in Islam” என்ற நூலை அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜான் ஹார்டி (John B. Hardie) அவரது முன்னுரையில் எழுதுகிறார்:

“The name of the faith was significant; Islam means committing oneself to God, and those who do so are Muslims. The terms Muhammedanism and Muhammedan are frequently used in the West, but are not popular among Muslims themselves, since they hold, and rightly, that they are not worshippers of Muhammad, who was simply the Messenger or Apostle of Allah.”

‘இந்த மார்க்கத்தின் பெயர் முக்கியமானதொரு விஷயம். இறைவனுக்குக் கடமைப் பட்டவராக ஒருவர் தம்மை ஆக்கிக் கொள்வதற்குப் பெயர்தான் இஸ்லாம். அவ்வாறு செய்பவர்கள் முஸ்லிம்கள் ஆவர். ‘முகமதியம்’ ‘முகமதியர்’ போன்ற சொற்கள் மேற்கத்தியர்களால் அதிகமாக பயன்படுத்தப் பட்டாலும் முஸ்லிம்களிடையே இவற்றிற்கு ஆதரவு இல்லை. அவர்கள் முஹம்மதை வணங்குபவர்களல்ல என்பதால் அவர்கள் சொல்வது சரிதான். முஹம்மது ஒரு இறைத்தூதர்தானே தவிர வணங்கப் படுபவர் அல்லர்.’

இதை மூன்று வாரங்களுக்கு முன்பு ‘திண்ணை‘யில் எழுதியிருந்தேன்.

சென்ற வார திண்ணையில் மலர் மன்னன் இதற்கு பதிலளித்தபோது இப்படி ஒரு சவாலையும் வைத்திருந்தார்.

தங்கள் இறைத் தூதரை அவர்கள் வணங்குவதில்லை என்று சொல்வது ஒரு சம்பிரதாயமே ஆகும். வேண்டுமானால் ஒன்று கேட்டுப் பார்ப்போம். “எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல’ என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் “ஹிட் லிஸ்ட்’ பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?

மலர் மன்னன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த வார திண்ணையில் வந்திருக்கும் பதில்கள்:

இப்னு பஷீர்

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான நேசத்திற்கு உரியவர்கள். வணங்கப் படுபவர்கள் அல்லர். ‘வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே’ என்பதே இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை!

எனவே முஸ்லிம்களாகிய நாங்கள், எங்கள் இறைத்தூதரை மதிப்போம், அவரது வழிமுறைகளை பின்பற்றுவோம். ஆனால் அவரை வணங்க மாட்டோம். அவர் எங்கள் தலைவர், வணங்கப் படுபவர் அல்லர்.

அபூ முஹை

நான் பின்பற்றும் இஸ்லாத்தின் இறைத்தூதராகிய முஹம்மத் நபியை நான் வணங்கவில்லை! வணங்கவும் மாட்டேன்! என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.

நான் மட்டுமல்ல, எந்த முஸ்லிமும் இறைத்தூதர் முஹம்மத் நபியை வணங்கவில்லை, வணங்க மாட்டார்கள், வணங்கவும் கூடாது. என்றும் உரக்கச் சொல்லிக்கொள்கிறேன்.

‘’ஹிட் லிஸ்டில்'’ பதிவு செய்ய மலர் மன்னன் சிபாரிசு செய்யலாம்.

நன்றி!

இறை நேசன்

எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல. உலகைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் எவனோ அவன் மட்டுமே எங்கள் வணக்கத்திற்குரியவன்.

நான் அறிவித்து விட்டேன். எனது பெயர் “ஜிகாதிகளின்” ஹிட் லிஸ்டில் வரும் பொழுது திரு. மலர்மன்னன் மறக்காமல் எனக்குத் தெரியப்படுத்தவும்.

நன்றி.

துல் பிகர்

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், முஹம்மது நபி அவர்களை நாங்கள் வணங்க வேண்டும் என்றா? அப்படி நாங்கள் செய்யாததை செய்ததாக சொன்னால் உங்களுக்கு அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஜிஹாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் நாங்கள் சேரக் கூடாது என்பது தானா?

வேற வேலையே இல்லையா ஐயா, உங்களுக்கு என்று தான் கேட்க தோன்றுகிறது.

நல்லடியார்

நபிமார்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்பதையே நம்புபவர்களே முஸ்லிம்கள்! இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றும் முஸ்லிம்ககளின் பூர்வீக அடையாளத்தைச் சிதைப்பதாக இருப்பதாலேயே, முஹம்மதியர் என்ற சொற்பிரயோகம் முஸ்லிம்களைக் முழுமையாக அடையாளப்படுத்தாது என்பதே வஹ்ஹாபி மற்றும் இப்னு பஷீரின் வாதம்!

வஹ்ஹாபி

“எங்கள் இறைத் தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்லர்” என்று யாராவது ஒரு முஸ்லிம் கூறினால் அவரை ஜிஹாதிகளிடம் மலர் மன்னன் போட்டுக் கொடுத்து விடுவார் என்று சற்றே அச்சம் ஏற்பட்டாலும் உயிருக்கு அஞ்சி உண்மை சொல்லாமல் இருக்க வேண்டாம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்:

“எங்கள் இறைத்தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்லர்”

மேலும் சொல்கிறேன்: “எங்கள் வணக்கத்துக்கு உரியவன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனே!”

மலர் மன்னன் திருப்தி அடைந்தாரா என்பது தெரியவில்லை!

நன்றி: திண்ணை.காம்

நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 3)

May 16, 2008

எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறு தான் அளவுகோல்.

கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.

‘முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடந்தது?’ என்று கோடிட்ட இடத்தை நிரப்புகிற கேள்வியாக வரலாற்றை நினைவு வைத்திருக்கிறோம். அதுதான் தவறு. ‘ஏன் அந்தப் போர் நடந்தது? அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் என்னென்ன?’ என்பன போன்ற கேள்விகள் மூலம்தான் வரலாற்றை அணுக வேண்டும். கடந்த காலத்தின் துணை கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும் வருங்காலத்தைக் கணிக்கவும் பயன்படுகிற சமூக விஞ்ஞானமாக வரலாற்றை பார்ப்பதே சரியான அணுகுமுறை.

…ஆனந்த விகடன் 29-11-06 இதழில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

இந்தியாவின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் பலரின் குறிப்புகளில் அல்பிருனி, இப்னுபதூதா, ஃபாஹியான், யுவான் சுவாங் போன்றோரின் வரலாற்றுப் பயணக் குறிப்புகள் பிரசித்திப் பெற்றவை. குறிப்பாக அல்பிருனி கி.பி. 1017-ல் இந்தியா வந்து, சுமார் 13 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்து, சம்ஸ்கிருதம் கற்று, பல இந்தியத் தத்துவ அறிஞர்களைச் சந்தித்து, அப்போதைய இந்தியக் கலாச்சாரம், ஆன்மீகம், இலக்கியம் மற்றும் கணிதம் பற்றி மிக விளக்கமாகத் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது பல ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களும் இந்திய வரலாற்றைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை நடுநிலையற்று ஒருதலைச் சார்பானதாகவும் ஆதிக்க சக்திகளின் அரசியல் கொள்கைகளுக்குச் சாதகமானதாகவுமே புனையப் பட்டிருந்தன.

‘பிரித்தாளும் சூழ்ச்சி என்பது வெள்ளையரின் அரசியல் கொள்கை. எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்தியா’ ‘முஸ்லிம் இந்தியா’ ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும் இதன் மூலம் பொருளாகிறது.’ - பேராசிரியர் அ. மார்க்ஸ்

ஸ்டூவர்ட் மில் என்கிற ஆங்கிலேய வரலாற்றாசிரியர் ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற தமது வரலாற்று நூலில், இந்தியாவை ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’ என்று வகைப்படுத்தினார். இந்தியாவில் இன்று இந்துத்துவ சக்திகள் தூபமிட்டு வளர்த்து வரும் இந்து, முஸ்லிம் சமுதாயங்களுக்கிடையிலான பகை நெருப்பின் பொறி இங்குதான் பற்ற வைக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொடக்கக் காலத்தில் எவ்வித கருத்து வேற்றுமைகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். குறிப்பாக 1857 ல் நடந்த மாப்பிள்ளைக் கலகம் என அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. முஸ்லிம் மன்னர்களிடம் இந்துக்கள் அமைச்சர்களாகவும் இந்து மன்னர்களிடம் முஸ்லிம்கள் படைத்தலைவர்களாகவும் இருந்திருக்கின்றனர். வெள்ளையர்களின் வருகைக்கு முன்னர் இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த பிணைப்பினை இது உறுதி செய்கிறது. இவ்விரு தரப்பினருக்குமிடையில் நிலவிய இத்தகைய நேசத்தையே வெள்ளையரின் ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ பிரித்து வைத்தது.

சில ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களின் வரலாற்றுக் குறிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகவும் நம்பகத் தன்மையற்றவையாகவும் இருந்தன. எடுத்துக்காட்டாக, தங்களின் ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக விளங்கிய காரணத்திற்காக, சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் சில ஆங்கிலேய நூலாசிரியர்கள் வரலாற்றுத் திரிபுவாதத்தைக் கையாண்டனர்.

திப்புசுல்தான் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் ஆங்கிலேய நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரானப் போர்களில் பங்கு கொண்டு, அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். இன, மத பேதமின்றி இந்துக்கள், முஸ்லிம்கள் என எல்லாத்தரப்பினரிடமும் செல்வாக்குப் பெற்றவராக இருந்த திப்புவின் பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் கட்டுக்கதைகளை எழுதி வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர் காலத்தில் மெக்காலே என்பவரால் வடிவமைக்கப் பட்ட கல்வித் திட்டத்தில் இந்த ஆங்கிலேய நூலாசிரியர்களின் குறிப்புகள்தான் ‘இந்திய வரலாறு’ என்ற பெயரில் மாணவர்களுக்கு போதிக்கப் பட்டது. எந்த வித சார்பு நிலையோ பாரபட்சமோ இன்றி நடுநிலையாகவும் யதார்த்தமாகவும் பதியப் பட்டிருந்த அல்பிருனி போன்றோரின் வரலாற்றுக் களஞ்சியங்கள் மறக்கடிக்கப் பட்டன.

மெக்காலேவின் கல்வி முறை அமுல் படுத்தப்படுமுன் இந்தியாவில் இரண்டு விதமான கல்விக்கூடங்கள் இயங்கி வந்தன. அவை, சமஸ்கிருத பாடங்களை பயிற்றுவிக்கும் குருகுலங்கள், மற்றும் அரபி மொழிக் கல்வி போதிக்கும் மதரஸாக்கள். இவ்விரு வகை கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும் அரசாங்க உதவித் தொகை வழங்கப் பட்டு வந்தது. இக்கல்வி முறையைத்தான் மெக்காலே மாற்றி அமைக்க விரும்பினார். இது தொடர்பாக அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 2 பிப்ரவரி 1835-ல் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்;

“இந்திய மாணாக்கர்களுக்கு எந்த மொழியில் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம் இருக்கையில், எந்த ஒரு பாடத்திலும் நமது ஆங்கில மொழியுடன் ஒப்பிடும் அருகதையுள்ள புத்தகங்கள் எதுவுமே இல்லாத மொழிகளில் நாம் பாடம் நடத்துவதா?

ஐரோப்பிய அறிவியல் பாடங்களை நம்மால் போதிக்க முடியும் எனும் போது அவற்றிற்கெல்லாம் நேர்மாறான முறைகளைக் கொண்ட பாடங்களை நாம் போதிப்பதா?

பொதுப்பணத்தில் நடத்தப்படும் கல்விக்கூடங்களில் ஆழமான தத்துவ இயலையும் உண்மை வரலாறுகளையும் போதிப்பதற்கு நாம் ஆதரவு காட்டுவதா?

அல்லது நம் இங்கிலாத்தில் குதிரைக்கு லாடம் அடிப்பவர்களுடன் கூட ஒப்பிட முடியாத மருத்துவ சித்தாந்தங்களையா?

அல்லது ஆங்கிலேயப் பள்ளிச் சிறுமிகளுக்கு சிரிப்பு வரவழைக்கும் வானவியல் சாஸ்திரங்களையா?

அல்லது முப்பது அடி உயர மன்னர்களையும் அவர்களின் முப்பதாயிரம் ஆண்டு கால அரசாட்சிகளையும் பற்றிய வரலாறுகளையா?

அல்லது தேனாலும் வெண்ணெயாலும் ஆன கடல்களைப் பற்றிய புவியியலையா?”

மெக்காலே மேற்குறிப்பிட்ட ‘பாடங்கள்’ எந்த மொழியில் இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை!

மெக்காலே மேலும் சொல்கிறார்;

“நமது கட்டுப்பாட்டில் உள்ள நிதியை எப்படி வேண்டுமானாலும் செலவளிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. அதைப் பயனுள்ள கல்வியைப் போதிப்பதற்கே செலவளிக்க வேண்டும். சமஸ்கிருதம், அரபியை விட ஆங்கிலம் கற்றுக் கொள்வதே மிகவும் சிறந்தது. இந்தியர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்….. நம்மிடம் உள்ள வசதிகளைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி போதிக்க நம்மால் இயலாது. அதனால் நாம் ஒரு சிறு வகுப்பினரை உருவாக்க வேண்டும். அவர்கள் நம் அரசாங்கத்திற்கும் நம் ஆட்சிக்குக் கீழ் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பார்கள். இந்த வகுப்பினர் இந்திய ரத்தமும் நிறமும் உடையவர்கள்; அதே சமயம் ஆங்கிலேய சிந்தனை, பண்பாடு, அறிவாற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்ட அறிவியலைக் கொண்டு தங்கள் உள்ளூர் மொழிகளை நாகரீகப் படுத்துவார்கள். தாங்கள் கற்ற அறிவை பிற மக்களுக்கு முன் எடுத்து வைப்பார்கள்”

மெக்காலேவின் திட்டங்களை இந்தியர்களின் ஒரு சாரார் கடுமையாக எதிர்த்தார்கள். குறிப்பாக இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இந்தியாவை ஆக்ரமித்து அடிமைப்படுத்தியிருக்கும் அன்னியர்களின் ஆங்கில மொழி கற்பது தேசவிரோதமானது என்பதால் ‘அதை கற்பது ஹராம்’ என்று (ஃபத்வா) அறிவித்தனர்.

ஆனால், மற்றொரு சாராரோ ஆங்கிலேயருடன் ஒத்துப் போய், மெக்காலே குறிப்பிட்ட சிறப்புச் சலுகை பெற்ற பிரிவினராக ஆனார்கள். அந்தப் பிரிவினர் யார் என்பது இன்று அனைவருக்கும் கூறாமலே புரிந்து கொள்ள முடியும்.

‘பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் சமஸ்கிருத கல்லூரியில் பயின்று ஹிந்து இலக்கியம், அறிவியல் ஆகியவற்றை கற்றிருந்தும் என்ன பிரயோசனம்? இக்கல்வி எங்கள் வாழ்க்கைத் தரத்தை எவ்வகையிலும் மேம்படுத்தவில்லை. எங்கள் சமூகத்தினர் எங்களைப் போன்றவர்களை கண்டுகொள்வதே இல்லை என்பதால் அவர்களிடமிருந்து நாங்கள் உதவியும் ஊக்கமும் பெற முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை’ என்று சொல்லி ஆங்கிலேயரிடம் உதவி வேண்டி விண்ணப்பித்தவர்கள் இந்தப்பிரிவினரைச் சார்ந்தவரே.

இவ்வாறு அன்று இந்தியாவை ஆக்ரமித்து ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயருக்கு இணக்கமாக செயல்பட்டு, உதவிகளைப் பெற்று, மேற்கத்தியக் கல்வியையும் பயின்ற அந்தப் பிரிவினர் தான் இன்று இந்தியாவின் அனைத்து அதிகார உயர் பதிவிகளிலும் கோலோச்சிக் கொண்டு தேசபக்திக்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மை வரலாறுகள் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்பட்டதன் விளைவுதான் இதெல்லாம்.

மெக்காலே-வின் திட்டப்படி மேற்கத்தியக் கல்வியை பயின்ற இப்பிரிவினர் தாம் பெற்றக் கல்வியை மெக்காலே சொன்னது போல பிற மக்களுக்கும் கற்பிக்கப் பயன்படுத்தினார்களா என்பது விவாதத்திற்குறிய விஷயம்.

ஆங்கிலேய ஆட்சிக்கு விசுவாசமாக உழைக்கக் கூடிய, ஆங்கிலம் பேசக்கூடிய குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப் பட்ட மெக்காலே-வின் கல்வித்திட்டம்தான் இன்றும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்ட, புனைந்துரைகளும் திரிப்புகளும் நிரம்பிய ‘இந்திய வரலாறு’ தான் இன்றும் இந்திய மாணவர்களுக்கு போதிக்கப் படுகிறது.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

பகுதி - 1
பகுதி - 2

நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 2)

May 6, 2008

- கடந்த கால நிகழ்வுகளின் - அனுபவங்களின் தொகுப்பு தான் வரலாறு..!
- இலக்கியங்கள் ‘காலத்தின் கண்ணாடி’ என்று போற்றப்படுகின்றன. வரலாறுகளும் அப்படித்தான்!
- வரலாறு ஓர் அதிசயக் கண்ணாடி. நம்முடைய முகம் நேற்று எப்படி இருந்தது என்பதை இன்றைக்குக் காட்டும் அற்புதக் கருவி அது!

…’முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்’ நூலின் பதிப்புரையில் எச். அப்துர் ரகீப்

சார்பின்மையுடன் பதியப்பட வேண்டிய வரலாற்றின் பக்கங்களை சிலர் கயமைத்தனமாக திரித்து வைத்திருக்கின்றனர் என்பதும் கவலைக்குரியதொரு வரலாற்று உண்மைதான்!

ஜனநாயக விரோத சக்திகள் மக்களிடையே தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கிலும், தமக்கு மாற்றமான கொள்கை உடையவர்களின் புகழையும் செல்வாக்கையும் குலைக்கும் விதத்திலும் பொய்ப் பிரச்சாரங்களை (Propaganda) அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பது அந்த வரலாற்றின் பக்கங்களிலிருந்தே நமக்குப் புலப்படும்.

காலனி ஆதிக்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்.க்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தகையப் பங்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனாலும், சங் பரிவாரங்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது ஒரு தேசிய மதிப்பைப் பெற்றுத்தர மிகவும் தேவைப் படுவதால் அதை ஒரு சொத்தாக பயன்படுத்திக் கொள்ள மிகவும் கவனமாக உள்ளன.

“எனவே, காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகித்ததாக சுதந்திரப் போராட்ட வரலாறு திரித்து எழுதப்படுகிறது. இது அவர்களது தலைவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாகச் சித்தரிக்கவும், மறுபுறத்தில் அவர்களது உண்மையான தோற்றத்தை மறைத்துக் கொள்ளவும் தேவைப்படுகிறது.” - பேராசிரியர் பணிக்கர்.

இது போல, இருட்டான தங்கள் கடந்த கால வரலாற்றை தங்கள் நிகழ்கால, எதிர்கால திட்டங்களுக்கு சாதகமாக இருக்கும்படி பாசிஸ சக்திகள் திருத்தி எழுதுவதுதான் வரலாற்றுத் திரிப்பு. காலகாலமாகவே இது நடந்து வந்திருக்கிறது.

ஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவர் ஜோசப் கோயபல்ஸ். ஹிட்லரின் பிரச்சாரத்துறை அமைச்சராக இருந்த இவர், ‘ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி ‘உண்மை’யாக்குபவர்’ என பிரசித்திப் பெற்றவர். இவரது உத்தரவின்படி ஜெர்மனியில் ஊடகங்கள் அனைத்துமே கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப் பட்டன. பிரச்சாரத்துறை அனுமதித்த செய்திகளை மட்டுமே நாளிதழ்கள் வெளியிட முடியும். அரசிற்கு எதிரான கொள்கையுடையவர்கள் மற்றும் யூதர்கள் எழுதிய புத்தகங்கள் நூலகங்களிலிருந்தும் கடைகளிலிருந்தும் நீக்கப்பட்டுத் தெருவில் போட்டு எரிக்கப்பட்டன.

கோயபல்ஸின் பிரச்சார வலையிலிருந்து பள்ளிச் சிறுவர்களும் தப்பவில்லை. பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டிய பாடங்களை நாஜிகள்தான் முடிவு செய்தனர். நாஜி கொள்கைகளை பள்ளிகளில் போதிப்பதற்கு ஆசிரியர்களுக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கப் பட்டது. பாடங்களில் யூதர்களும் கம்யூனிஸவாதிகளும் மிக மோசமானவர்களாக சித்தரிக்கப் பட்டிருந்தனர். மனித குலத்தினில் இரு வகை இருப்பதாகவும், அதில் ஜெர்மனியர்களின் ஆரிய இனம் உயர்ந்த குலம் என்றும் ஆரியரல்லாத மற்றவர்கள் தாழ்ந்த குலம் என்றும் மாணவர்கள் போதிக்கப் பட்டனர். தாழ்ந்த குலத்தினரெல்லாம் உயர்ந்த குலத்தினரின் அடிமைகளாக இருப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் என்றும் போதிக்கப் பட்டது.

வரலாற்றைத் திரிப்பு மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் புரிவோருக்கு சுலபமான இலக்கு பள்ளிச் சிறுவர்கள் தான்; பள்ளிச்சிறார்கள் மிகப் பயனளிக்கும் இலக்கும் கூட. குழந்தைகளுக்கு வரலாற்றுடன் அறிமுகம் ஏற்படுவது பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் மூலமாகத்தான். பள்ளிகளில் போதிக்கப்படும் பாடங்களை குழந்தைகள் அப்படியே நம்பி விடுவர். அது பொய்யாக இருக்குமோ என்ற சிந்தனை கூட தோன்றாத பருவம் அது. சிறார்களின் கள்ளங்கபடமற்ற மனதில் நஞ்சைத் தடவுவதைப்போல பொய்யான கருத்துக்களை விதைக்கின்றனர் வரலாற்றுத் திரிப்புவாதிகள்.

வரலாற்றுத் திரிப்பு என்பது பெரும்பாலும் இரண்டு வகையாகச் செய்யப் படுகிறது;

1. உண்மையான நிகழ்வு ஒன்றை மறைப்பது, அல்லது அதனை எதிர்மறையாக மாற்றிப் பதிவது. உதாரணமாக, இந்து ராணி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்த ஔரங்கசீப் மீது ‘கோவிலை இடித்தார்’ என்று பழி சுமத்தப்படுவதைக் குறிப்பிடலாம்.

2. நடக்காத ஒன்றை நடந்ததாகப் பதிவது. உதாரணமாக, திப்புசுல்தான் முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற கட்டுக்கதையைச் சொல்லலாம்.

இந்திய வரலாற்றில் இது போன்ற கட்டுக்கதைகளைச் ‘செருகிய’ பெருமை ஆங்கிலேயர்களையே சாரும். கோயபல்ஸின் காலத்திற்கு நூறாண்டுகள் முன்பாகவே ஆங்கிலேயர்கள் இத்’திருப்பணி’யைத் தொடங்கி விட்டனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்….

பகுதி - 1

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

முஹம்மது (ஸல்) அவர்களின் திருமணம் பற்றிய அவதூறு!

May 2, 2008

“இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் களங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.” - சகோ. நல்லடியார்.

இஸ்லாமை கொள்கை ரீதியில் எதிர் கொள்ள இயலாத இந்த வக்கிர சிந்தனையாளர்கள், அதற்கு மாற்றுக் கொள்கை ஒன்றை சுட்டிக் காட்ட முடியாத இந்த அயோக்கிய சிகாமணிகள் பெரும்பாலும் கையிலெடுக்கும் ஆயுதங்கள் இரண்டு வகையானவை.

1. நபி (ஸல்) அவர்களின் மீது ஆபாச நடையில் அவதூறுகளை சுமத்தி தங்கள் உள்மன வக்கிரங்களை வெளிப்படுத்திக் கொள்வது.

2. முஸ்லிம்கள் சம்பந்தப் படும் வன்முறைச் சம்பவங்களை பூதாகரப் படுத்தி அவற்றிற்கு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கம் மீதே வன்முறைச் சாயம் பூச முற்படுவது.

இவர்களின் வரலாற்றுப் புரட்டுகள் பல முறை அம்பலப் படுத்தப் பட்டிருக்கும். இவர்களின் அவதூற்றுப் பிரச்சாரங்களுக்கு பல சகோதரர்கள் பல முறை தக்க பதில் கொடுத்திருப்பார்கள். அதையெல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் உளறல்களை மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு நினைவூட்டுவதற்காக அந்தப் பதிவுகளை இங்கு தொடராக பதிய இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

முதலில் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அவற்றிற்கான விளக்கங்களும்.

1. அவதூறு கிளப்பியவர்களிடம் ஆதாரம் வேண்டி..! - சகோ. சலாஹுத்தீனின் திண்ணை கடிதம்

2. மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம். - சகோ. அபூமுஹையின் விளக்கப் பதிவு!

3. இந்த வக்கிர சிந்தனையாளர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்களிலிருந்துதான் தங்கள் ‘ஆதாரங்களை’ காப்பியடிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம்.

4. தபகாத் இப்னு சஅது என்ற நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இவர்கள் மேற்கோள் காட்டும் நிகழ்வு ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதற்கான ஆதாரங்கள்

அன்னை ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேசும் இவர்கள் நேர்மையுடையவர்களாக இருந்தால் மேற்கண்ட பதிவுகளில் தெளிவாக விவரிக்கப் பட்டிருக்கும் ஆதாரங்கள் தவறானவை என்பதை முடிந்தால் நிரூபித்து விட்டு மேற்கொண்டு பேசலாம்!

பின் குறிப்பு: சென்ற ஆண்டு மார்ச் மாதம் எழுதிய பதிவு இது! அதே அவதூறு ஒரு வருடம் கழித்து மீண்டும் வேறு பெயர்களில் தலைக் காட்டி இருப்பதால், இது மீள் பதிவு செய்யப் படுகிறது!