நம்பிக்கையளிக்கும் ஒபாமாவின் பேச்சு!

January 22, 2009

பாரக் ஒபாமாவின் பதவியேற்பு உரை பல தரப்பினருக்கும், குறிப்பாக சில இஸ்லாமிய நாடுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நம்பிக்கையளிப்பதாக அமைந்திருக்கிறது.

Photobucketமுஸ்லிம் உலகினை பரஸ்பர நலன் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் ஒரு புதிய வழிமுறையில் அணுக விழைகிறோம்” (To the Muslim world, we seek a new way forward, based on mutual interest and mutual respect) என்று அறிவித்திருக்கிறார் ஒபாமா.

ஒபாமா உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பட்டியலிட்டால், அவற்றுள் அதிமுக்கியமான முதல் பத்தில் ஐந்து இஸ்லாமிய நாடுகளுடனும் முஸ்லிம்களுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.

சீனா போன்ற நாடுகளின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்தும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் சாட்சியமாக விளங்குகிறது குவாண்டனாமோ சிறைச்சாலை. செப்-11 தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பல நாடுகளிலிருந்தும் கைது செய்யப்பட்ட சுமார் 700 பேர் இங்கு அடைக்கப்பட்டு, முறையான வழக்கு, விசாரணை எதுவுமின்றி கடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப் பட்டனர். அங்கு நடந்த கொடூரங்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தபிறகு சர்வதேச நெருக்குதலினால் வேறு வழியின்றி அமெரிக்கா அவர்களில் பலரை விடுதலை செய்தது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பில் இருந்த ஸாமி அல்-ஹாஜ் என்ற அல்ஜஸீராவின் கேமராமேனை அல்-காயிதாவின் உளவாளி என்ற சந்தேகத்தில் கைது செய்து குவாண்டனாமோ கொண்டு சென்றது அமெரிக்கா. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் சுமார் ஏழு ஆண்டுகள் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து கிட்டத்தட்ட நடைபிணமாகத்தான் வெளியே வந்தார் ஸாமி.

இப்போது இன்னும் 245 பேர் அங்கு அடைபட்டுக் கிடக்கும் நிலையில், அமெரிக்காவின் மானத்தை தொடர்ந்து கப்பலில் ஏற்றிக் கொண்டிருக்கும் அச்சிறையை தாம் பதவியேற்றதும் முதல் வேலையாக மூடப் போவதாக ஒபாமா அறிவித்திருந்தார். அதற்கு முதற்கட்டமாக அவர் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

பட்டியலில் அடுத்ததாக வருவது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை மீட்டுக் கொள்ளும் திட்டம். படைகள் ஈராக்கிலிருந்து படிப்படியாக வெளியேறினாலும் ஆப்கானிஸ்தானில் இன்னும் சில ஆண்டுகள் நீடித்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

அடுத்து, இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம். தமது ஆபத்பாந்தவனான புஷ் பதவியிறங்குமுன் ஹமாஸிற்கு மரண அடி கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் 3 வாரங்களாக வெறியாட்டம் போட்ட இஸ்ரேல் ராணுவம் ஒபாமா பதவியேற்பதற்கு முதல் நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள், அதிலும் பெருமளவில் குழந்தைகள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட இந்த அட்டூழியத்தில் புஷ்ஷும் மறைமுகக் கூட்டாளி என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஒபாமாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதைக் காண பாலஸ்தீன மக்களோடு முழு உலகமும் காத்திருக்கிறது.

அடுத்து ஈரானின் அணு ஆராய்ச்சி விவகாரம். ஈரானுக்கெதிராக புஷ் தொடை தட்டிக் கொண்டிருந்தபோது, தமது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக ஈராக்கைப் போலவே ஈரானையும் பிணக்காடாக மாற்றி விடுவாரோ என்ற ஒரு பதற்றம் நிலவி வந்தது. ஆனால் ஒபாமா இந்த விவகாரத்திற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஒபாமா வாக்களித்திருக்கும் புதிய கண்ணோட்டம், இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் உடனடியாக தீர்க்காவிட்டாலும், பிரச்னைகள் மேலும் வளர்வதை கட்டுப்படுத்தும் என்று நம்பலாம். குறிப்பாக பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய கண்ணோட்டம் சில மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஒருதலைப் பட்சமாக இஸ்ரேலை ஆதரிப்பதை விடுத்து, தவறிழைப்பவர்களை, அது ஹமாஸாக இருந்தாலும் இஸ்ரேலாக இருந்தாலும், அமெரிக்கா கண்டித்திருக்குமானால் ஆயிரக்கணக்கில் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டிருக்காது.

தாம் வாக்களித்தவற்றை ஒபாமா நிறைவேற்றுவாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தினமலர் இணையத் தளத்திற்கு அமீரகத்தில் தடை!

September 10, 2008

Photobucket

Photobucket

கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது.

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

இது குறித்து விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009) சத்தியமார்க்கம்.காம் ஒரு தலையங்கம் வெளியிட்டிருந்தது.

அத்தலையங்கம், “உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்” என்று முடிந்திருந்தது.

உப்புப் போட்டுத்தான் முஸ்லிம் சோறு தின்னுகிறான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று தினமலருக்கு முதல் அடி விழுந்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் இன்று முதல் தடை செய்யப் பட்டுள்ளது. தினமலர் விதைத்த வினைகளின் அறுவடையைத் தான் தடை செய்யப் பட்டப் படத்தில் பார்க்கின்றீர்கள்.

இது தொடக்கம்தான் …

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

காஷ்மீர் விவகாரம் - அது என்ன 370ஆவது பிரிவு?

July 8, 2008

காஷ்மீர்2

அமர்நாத் செல்லும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஜம்மு-காஷ்மீர் அரசு நிலம் வழங்கியதற்கு கிளம்பிய எதிர்ப்பு, பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்து மாநில அரசையே கவிழ்த்து விட்டது. இந்துத்துவவாதிகளும் இந்துத்துவ சார்பு ‘அறிவுஜீவி’களும் பொத்தாம்பொதுவில் காஷ்மீர முஸ்லிம் அமைப்புகளை குற்றம் சாட்டி, பகை நெருப்பை மூட்டி குளிர் காய்கிறார்கள். முஸ்லிம்களுக்கான வக்ஃப் வாரியம், ஹஜ் மானியம் போன்றவற்றை அமர்நாத் விவகாரத்துடன் ஒப்பிட்டு, இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் பெரும் சலுகைகளையும் வசதி வாய்ப்புகளையும் அனுபவித்து வருவது போன்ற தோற்றமும் ஏற்படுத்தப் படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப் படுகிறது.

அமர்நாத் யாத்ரீகர்களின் வசதிக்காக நிலம் வழங்கப் பட்டதை காஷ்மீர முஸ்லிம்கள் எதிர்த்திருக்கக் கூடாதுதான். ஆனால், வரலாற்றின் பக்கங்களை கொஞ்சம் பின்நோக்கிப் புரட்டிப் பார்த்தால், அந்த எதிர்ப்பின் பிண்ணனியில் இருக்கும் நியாயம் நமக்குப் புலப்படும்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…

கேள்வி: காஷ்மீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காஷ்மீருக்கு மட்டும் என்ன தனி உரிமை? அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதானே?

காஷ்மீர்ப் பிரச்சினையையும் நீங்கள் கொஞ்சம் வரலாற்று ரீதியாய்ப் பார்க்க வேண்டும். 1846க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத்தொகையில் 77 சதம் பேர் இஸ்லாமியர். டோக்ரா மன்னர்களின் கொடுமையான ஆட்சிக்கெதிராக 1931இல் காஷ்மீர மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக அரசியல் சீர்திருத்தத்திற்கான குழு ஒன்றை அன்றைய அரசு அமைத்தது.

இந்தப் பிண்ணனியில் 1939இல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசிய மாநாடு’ கட்சி தொடங்கப் பட்டது. இக்கட்சியின் சார்பாக பல்வேறு சனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ‘புதிய காஷ்மீர்’ கோரிக்கை 1944இல் முன்வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1945இல் ‘டோக்ரா மன்னர்களே, வெளியேறுங்கள்’ போராட்டம் தொடங்கப்பட்டது. ராஜா அரிசிங்கின் அரசு கொடும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதற்கிடையில் 1947 ஆக.15இல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.

மத அடிப்படையிலான நாட்டுப் பிரிவினையோடு இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியது. ஜோத்பூர், ஜீனாகத், அய்தராபாத், காஷ்மீர் போன்ற சமஸ்தானங்களைப் பொறுத்தமட்டில் ‘மக்கள் விருப்பை அறியக் கணிப்புத் தேர்தல் ஒன்று நடத்தி அதனடிப்படையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என இந்திய அரசு (அக்.5, 1947) அறிவித்தது.

ராஜா அரிசிங் இணைப்பு பற்றித் திட்டவட்டமாக முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947 அக்டோபர் 26இல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாகிஸ்தான் அரசாதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்ற நிபந்தனையோடு படைகளை அனுப்பி காஷ்மீரை இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டது. இணைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காஷ்மீரை விட்டே ஓடினார்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சீரானவுடன் கணிப்புத் தேர்தல் நடத்துவதாக நேரு வாக்களித்தார். ஆனால் அந்த முடிவை நிறைவேற்றும் முயற்சியை அவர் மேற்கொள்ளவேயில்லை.

இந்த அடிப்படையில் இந்திய-பாக் போர் ஒன்று நிகழும் வாய்ப்பு வளர்ந்தது. இந்தப் பிண்ணனியில் இந்தியாவே இந்தப் பிரச்சினையை ஜன.1,1948 அன்று அய்.நா அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் சென்றது. ஜன.20,1948 அன்று பாதுகாப்புக் குழு காஷ்மீர் பிரச்சினையை ஆராயக் குழு ஒன்றை நியமித்து அந்த அடிப்படையில் ஆக.13,1948 அன்று காஷ்மீர் தீர்மானத்தை அய்.நா நிறைவேற்றியது. போர் ஓய்வு, இராணுவத்தைத் திரும்பப் பெறுதல், கணிப்புத் தேர்தல் நடத்துவது என்கிற மூன்று அம்சங்களை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

அய்.நா. இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும்போதே காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய அவை ஒன்றை இந்தியா அமைத்தது. “அரசியல் சட்ட உருவாக்கத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களும் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. மற்றபடி அந்த மக்கள் பிரிந்து போக விரும்பினால் அந்த விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இந்த அரசியல் நிர்ணய சபை அதற்குத் தடையாக இராது” என இந்திய அரசு (நவ.21, 1949) வாக்களித்தது. 370ஆவது பிரிவு ஒன்றை உருவாக்கிக் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது. வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு தவிர பிற அம்சங்களில் சுயாட்சி உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டன.

அரசியல் நிர்ணய அவையில் 370ஆவது பிரிவு பற்றி என்.கோபாலசாமி அய்யங்கார் கூறியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர் கூறினார்: “காஷ்மீரில் இன்னும் போர் நீடிக்கிறது. சில பகுதிகள் எதிரிகள் வசம் உள்ளன. அய்.நா. அவையும் இதில் தலையிட்டுள்ளது. காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசு சில உறுதிகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் 370ஆவது பிரிவின் மூலம் சில சிறப்புரிமைகளை காஷ்மீர மக்களுக்குத் தருவது தவிர்க்க இயலாதது.”

இதுதான் 370ஆவது பிரிவு உருவான கதை. கணிப்புத் தேர்தலை இந்திய அரசு வஞ்சகமாக முறியடித்ததுதான் தவறேயொழிய 370ஆவது பிரிவைச் சேர்த்ததை எப்படித் தவறாகச் சொல்ல முடியும்! சொல்லப் போனால் காஷ்மீர மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட உரிமைகள் இந்திய யூனியனில் அடங்கியுள்ள சகல தேசிய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாமும் கோருவதுதான் நமது சனநாயக உணர்வுக்கு அடையாளமாக இருக்க முடியும்.

• காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டனவா?

இல்லவே இல்லை. முழுமையாக காஷ்மீர மக்கள் ஏமாற்றப் பட்டனர்.

- நவ.5, 1951: அரசியல் நிர்ணய அவை கூட்டப்பட்டது
- நவ.15, 1952: அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- ஆக.9, 1953: காஷ்மீர இணைப்பைச் சட்டப்பேரவையைக் கூட்டி நிறைவேற்றாமல் பிரிவினை முயற்சியில் இறங்கினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 22 ஆண்டுக்காலம் அவர் சிறையிடப்பட்டார்.
- பிப்ரவரி 1954: பலரும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு இணைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- மார்ச் 27, 1957: கணிப்புத் தேர்தல் நடத்த முடியாது என நேரு அறிவித்தார்.

• இருந்தாலும் 370ஆவது பிரிவு இன்னும் நீடிக்கிறதே?

பெயருக்குத்தான் நீடிக்கிறது. அந்தப் பிரிவின் அத்தனை உரிமைகளும் இன்று பறிக்கப் பட்டுள்ளன. குறுக்கப் பட்டுள்ளன. 1954-ல் தொடங்கி இது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தனது கூட்டாட்சி அதிகாரத்தை மைய அரசு காஷ்மீர் மீது பரப்பத் தொடங்கியது. 1965இல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு காஷ்மீர் முதல்வராவதற்கு ஒருவர் 25 ஆண்டுக்காலம் காஷ்மீரில் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது. 1984இல் 248ஆவது பிரிவு திருத்தப் பட்டது. இதன்படி காஷ்மீர் தொடர்பான போராட்ட எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றும் உரிமையை இந்தியப் பாராளுமன்றம் எடுத்துக் கொண்டது. ‘ஜம்மு - காஷ்மீர் கலவரப் பகுதிச் சட்டம்’ (ஜூலை 90), 1991 ஆண்டுப் ‘போராட்டத் தூண்டல் சட்டத் திருத்தம்’ ஆகியவற்றின் மூலம் கொடும் அடக்குமுறைக்கான உரிமைகளைக் காஷ்மீர மக்கள் மீது இந்திய அரசு எடுத்துக் கொண்டது. ‘பயங்கரவாதிகளை’ அடக்குதல் என்கிற பெயரில் காஷ்மீர மக்கள் ஊரடங்கு வாழ்வுக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர்.

பேராசிரியர் ஆஷிஷ் நந்தியைக் கண்டு நரேந்திரமோடி அஞ்சி நடுங்குவது ஏன்?

June 24, 2008

இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளுள் ஒருவர் எனவும் பின் காலனித்துவ ஆய்வுகளை துவக்கியவர் எனவும் மதிக்கப்படும் பேராசிரியர் ஆஷிஷ் நந்தி தற்போது ஒரு புதிய ‘அடையாள’த்தைப் பெற்றிருக்கிறார். குஜராத் மாநில காவல்துறைக் குறிப்புகளின்படி ‘சாதி, மதம், பிறப்பிடம் மற்றும் மொழியின் அடிப்படையில் பல்வேறு பிரிவினரிடையே பகையுணர்வை வளர்த்ததாக’ அவர் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கிறார். பேராசிரியர் நந்தியின் எழுத்துக்களுக்காக அவர் மீது குற்றம் சுமத்தப்படும் ஒரு நாள் வரும் என்று நிச்சயமாக அவரோ அவரது ஆதரவாளர்களோ கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் மிகச் சரியாகவே சொல்லி வருவது போல குஜராத்தில்தான் இப்படி நடக்க முடியாததெல்லாம் நடக்கும்.

AsisNandy
ஜனவரி 8-ம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் பேரா.நந்தி எழுதிய ‘நடுத்தர வர்க்கத்தினரைக் குற்றம் சுமத்துக’ என்ற கட்டுரையைக் குறித்து ‘தேசிய சமூக விடுதலை மன்றம்’ (National Council for Civil Liberties) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞர் சமர்ப்பித்த மனுவை அகமதாபாத் காவல்துறை பதிவு செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. முன்பு ஒருமுறை சில அற்பக் காரணங்களுக்காக ‘நர்மதையைக் காப்போம்’ இயக்கத்தின் தலைவியான சமூகநல ஆர்வலர் மேதா பட்கர் மீது வழக்குத் தொடர்ந்ததும் இதே அமைப்புதான் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. நீதிமன்றம் இவ்வழக்கை பிறகு தள்ளுபடி செய்தது.

உண்மையைச் சொல்வதென்றால், பேரா.நந்தியின் அக்கட்டுரை நரேந்திர மோடியை மீண்டும் பதவியிலமர்த்திய டிசம்பர் 2007 குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஆராய்ந்திருந்தது. குறிப்பாக, மூன்று விஷயங்களைப் பற்றி அக்கட்டுரை கருத்து தெரிவித்திருந்தது.

முதலாவதாக, 2002 கலவரங்களுக்குப் பிறகு குஜராத்தில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் முஸ்லிம்களின் அவல நிலையை அக்கட்டுரை இவ்வாறு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தது.


குஜராத்தின் முஸ்லிம்களும் ‘தங்களுக்கான இடம் இதுதான்’ என்பதை பழகிக் கொண்டு விட்டார்கள். தங்கள் சொந்த மாநிலத்திலேயே நீதியும் நிவாரணங்களும் மறுக்கப்பட்டு, தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களின் தயவில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில அரசு தர மறுக்கும் நிவாரண உதவிகளில் ஒரு பகுதியை அடிப்படைவாத நோக்கமுடைய சிலத் தன்னார்வல அமைப்பினர் தருகின்றனர். நிவாரண உதவிகளை வழங்கும் அதே வேளையில், குஜராத் முஸ்லிம்கள் குஜராத்திய மொழி பேசுவதை விடுத்து உருது பேச வேண்டும், பெண்கள் முக்காடிட வேண்டும், பிள்ளைகள் மதரஸாக்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்துகின்றனர்.

இரண்டாவதாக, முஸ்லிம்களின் அவல நிலையை சுட்டிக் காட்டியதோடல்லாமல், அக்கட்டுரை குஜராத்தில் மதச்சார்பின்மை அடிப்படையிலான அரசியல் கூட்டமைப்புகள் இயங்கும் சூழ்நிலையையும் விளக்குகிறது. இத்தகைய கூட்டமைப்புகள் மற்றும் தனிநபர்களைப் பற்றியும் பேரா.நந்தி தனது கட்டுரையில் விமர்சிக்கத் தவறவில்லை.


சங்பரிவார அமைப்புகளை எதிர்ப்பவர்களின் மதச்சார்பின்மை கொள்கை உரிய பலனை அளிக்கவில்லை. மதச்சார்பற்ற வழக்குரைஞர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்களின் மூலம் பயனடைபவர்கள்கூட மதச்சார்பின்மை கொள்கைகளை தேவைப்படும் நேரத்தில் ஒரு கருவியாக மட்டும் உபயோகித்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு இக்கொள்கைகள் புரிவதுமில்லை; அவர்கள் அவற்றை மதிப்பதுமில்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்களின் மதங்களே ஆறுதலளிக்கின்றன. அவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் தங்கள் நம்பிக்கைகளை மேலும் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். உண்மையில், ஆழமற்ற மதச்சார்பின்மைக் கொள்கைகள் காந்திய கொள்கைகளின் முதுகெலும்பையே முறித்து, அலி ஷரியதி, டெஸ்மண்ட் டுட்டு, தலாய் லாமா போன்றோர் உருவாவதையும் தடுக்கிறது. இவர்களைப் போன்றவர்கள் வறிய மற்றும் வலிமையற்ற மக்களின் துயரங்களில் தலையிட்டு அவற்றைப் போக்குவதற்கு குரல் கொடுக்கக் கூடியவர்கள்.

குஜராத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தினர், போலியான சமுதாயப் பற்று, மதாபிமானம் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு துணைபுரிவதையும் இக்கட்டுரை கடுமையாகச் சாடுகிறது.


படித்த நடுத்தர வர்க்கத்தினரின் பிடியிலிருந்து குஜராத்தை விடுவிப்பது எளிதானதன்று. இந்த வர்க்கத்தினர் போராட்ட மதவாதத்தின் மூலம் தங்களுக்கு ‘போர்க்குணம் கொண்ட சமுதாயம்’ என்றதொரு புதிய அடையாளமும் சுயமதிப்பும் கிடைப்பதாக நம்புகிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பெங்காலி பாபுகள், மஹராஷ்ட்ரிய பிராமணர்கள், காஷ்மீர் முஸ்லிம்கள் போன்றோரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். குஜராத்தின் இந்த வர்க்கம் தங்கள் கரங்களில் இரத்தக்கறை படியாமலேயே, திட்டமிடுதல், பணஉதவி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலமாகப் படுகொலைகளை அரங்கேற்றி அதன் இரத்த வாடையை நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இக்கொலைகளைச் செய்பவர்கள் பழங்குடிகள், தலித்கள் போன்ற மிக கீழ்த்தட்டைச் சேர்ந்த மக்கள்தான். சமீப காலத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் கல்வி நிறுவனங்களும் ‘வெறுப்புணர்வை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை’களாக மாறிப்போயிருக்கின்றன. தேசியவாதம் என்ற பெயரில் இரத்தவெறி கொண்ட பொறுப்பற்ற பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டு இது போன்ற அராஜக செயல்பாடுகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரா. நந்தியின் கருத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் அவற்றுடன் ஒத்துப்போவர் என்றுச் சொல்ல முடியாது என்றாலும், அவரது எழுத்துக்களில் வெற்று வாதங்கள் இருப்பதில்லை என்பதையும் சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவை தெளிவாக விவரிக்கின்றன என்பதையும் புரிந்து கொள்வர். எல்லோருடைய மனத்திலும் இயல்பாகத் தோன்றும் ஒரு கேள்வி, பேரா.நந்தியின் மீது கிரிமினல் வழக்குப் பதியும்படி காவல்துறைக்கு சமிக்ஞை கொடுக்கப்படும் அளவிற்கு இக்கட்டுரை குஜராத் அரசு வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? என்பதே.

பொதுவாகவே, தமது கொள்கைகளை எதிர்ப்பவர்களை இலக்காக்கி அவர்கள் மீது பலவகைகளில் களங்கம் சுமத்துவது ஹிந்துத்துவப் படையினரின் நடைமுறை. எதிர்க்கருத்துக் கொண்டவர்களை வாயடைத்துப் போகச் செய்யும் அரசியல் உத்தி இது. பேரா. நந்தி மீதான இந்த வழக்கும் இவ்வகையைச் சார்ந்ததே.

கடந்த ஆறு ஆண்டு கால குஜராத்தின் வரலாற்றில், சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வை விதைக்கும் இந்துத்துவச் செயல்திட்டங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்கள் அடக்கப் பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமூகநல ஆர்வலர்கள் சாராபாய், நஃபிஸா அலி, ஜி.என்.டேவி போன்றோர் இத்தகைய அடக்குமுறைகளுக்கு ஆளானதை குறிப்பிடலாம். பேரா. நந்தியின் விவகாரத்தில், ஒருவேளை அவர் ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கங்களின் எதிர்காலத் திட்டங்களை தெளிவாக முன்னறிவிப்புச் செய்தது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை போலும்.


உருது கவிதைகளின் ஸ்தாபகர் என மதிக்கப்படும் வலி குஜராத்தியின் அடக்கவிடம் நிர்மூலமாக்கப் பட்டது, இந்திய முஸ்லிம்களின் பன்முகப்பட்ட செறிவான கலாச்சார அடையாளங்களை அழிக்கும் ஒரு முயற்சியாகவே தோன்றுகிறது. சீக்கிய தீவிரவாதம் தலைதூக்குவதற்கு ராஜிவ் காந்தி காரணமாக இருந்தது போலவே, இந்தியாவில் அடிப்படைவாத இஸ்லாமின் வளர்ச்சிக்கு சங்பரிவாரங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை வருங்காலத் தலைமுறை நினைவுகூரும்.

பேரா. ஆஷிஷ் நந்தி மீது போடப்பட்டிருக்கும் கிரிமினல் வழக்கு, பாஜக மத்தியில் ஆட்சியிலிருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அவதூறுப் பிரச்சாரங்களை நினைவு படுத்துகிறது. 1998-ல் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து கல்வி பாடத்திட்டங்களை தமது கொள்கைகளுக்குத் தோதாக மாற்றியமைக்க முயன்றபோது, சங்பரிவாரங்களின் வரலாற்றுத் திரிப்புகளை எதிர்த்த அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் பலவிதமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. பாஜகவினர், அவர்கள் மாற்றிக் காட்ட விரும்பிய இந்திய வரலாற்றை ஒப்புக் கொள்ளாத அறிஞர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்களை திட்டமிட்டு அவமானப் படுத்தினர்; அவர்கள் காட்டும் ஆதாரப்பூர்வமான வரலாற்றை அங்கீகரிக்காமல் உதாசீனப் படுத்தினர். இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் ஆதரவில், பேராசிரியர்கள் சுமித் சர்க்கார், கே.என். பணிக்கர் ஆகியோரின் தலைமையில் நடந்து கொண்டிருந்த ‘விடுதலையை நோக்கி’ என்ற ஆய்வுத்திட்டம் நிறுத்தப் பட்டது. இவர்களைப் போன்ற நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களுக்கு, ‘ஹிந்து எதிர்ப்பு ஐரோப்பிய இந்தியர்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் பெயரிட்டார். மேலும், இந்த வரலாற்றாய்வாளர்களின் தாக்கம் இந்திய கல்வித்திட்டத்தில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மன்றம் (NCERT) மிக முனைப்புடன் செயல் பட்டது. 2001-ல், ‘இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது’ என்று காரணம் காட்டி பாடப்புத்தகங்களிலிருந்து பல பகுதிகளை NCERT நீக்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஆரிய சமாஜிகளின் குழு ஒன்று அப்போதைய மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோஹர் ஜோஷியைச் சந்தித்து, இத்திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருந்த வரலாற்றாய்வாளர்கள் ரொமிலா தாப்பர், ஆர்எஸ் ஷர்மா, அர்ஜுன் தேவ் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஜோஷியும் தம் பங்கிற்கு, ‘ஆயுதந்தரித்த பயங்கரவாதிகளை விட கல்வி சார்ந்த பயங்கரவாதிகள் மிக மோசமானவர்கள்’ என அவ்வப்போது தமது ‘சொந்த ஆய்வுக் கருத்தினை’ வலியுறுத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

இஸ்லாம் குறித்து அமெரிக்காவுக்கு ஏனிந்த அச்சம்?

February 6, 2008

ராம்சே கிளார்க் அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்). அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி…

கேள்வி: இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம் என்று சொல்கிறீர்களா?

பதில்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.

உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ‘மார்க் குவைன்’ என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ‘தேவையில்லாத தேவைகள்’ பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.

இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.

அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.

அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.

இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

நன்றி: சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்

“வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

November 12, 2007

இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், மலைஜாதியினர், பழங்குடியினரும் இவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் பொழுது மிகச்சிறுபான்மையாக 2.5 சதவீத அளவில் உயர்ஜாதி எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் பிராமணர்களும் வாழ்கின்றனர்.

என்றாலும் இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாள்தோறும் அராஜகங்களும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்றன. எவருக்கும் எவ்விதத் தொந்தரவும் கொடுக்காமல், தொழுநோயாளிகளைக் கூடத் தொட்டுத் தூக்கிச் சேவை புரிந்த மருத்துவர் முதல் கர்ப்பத்தில் இருந்தச் சிசு வரை எவ்விதத் தயவுதாட்சண்யமும் இன்றி வெட்டித் துண்டாக்கப் பட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கப்படுகின்றனர். பள்ளியில் சேவை புரியும் கன்னியாஸ்திரிகள் முதல் உலகமே அறியாமல், தான் உண்டு; தன் குடும்பம் உண்டு என்று வாழும் குடும்பப் பெண்கள் வரை நடுத்தெருவில் - பலர் முன்னிலையில் கற்பு சூறையாடப்படுகின்றனர். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் குறி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. பொருளாதாரம் திட்டமிடப்பட்டுக் களவாடப்படுகின்றன.

பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மதச்சார்பற்ற இந்தியாவின் காவல்துறை, இராணுவம், நீதித்துறை மற்றும் அரசாங்கங்களோ இவற்றையெல்லாம் கண்டுக் கொண்டே கைகட்டி, வாய்பொத்தி எதையும் காணாதவர்களாகவும் கேட்காதவர்களாகவும் இருப்பதோடு மட்டுமின்றி இயன்றவரை வன்முறைக்குத் துணைப் போகவும் செய்கின்றன.

இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட முஸ்லிம், தாழ்த்தப்பட்டச் சமுதாய மக்களோ போதிய உணர்வின்றி, தம் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜங்கள் நடக்கும் பொழுது மட்டும் “அய்யோ, அம்மா, கொல்கிறார்களே, இதைக் கேட்பார் யாருமே இல்லையா?” எனக் கதறி அழுவதும் ஒரு சில நாட்களில் பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள மக்களுக்குத் தங்களிடமிருந்தே இருப்பதில் சிறிதைப் பிச்சையாகப் போட்டு விட்டு அதனை அப்படியே மறந்து விடுவதுமாக வாழ்ந்து வருகின்றனர்.

அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து சாதனைகள் படைத்துக் கொண்டு உலக அரங்கில் போட்டிப்போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும், சுதந்திரம் அடைந்துச் சுமார் 60 ஆண்டுகளைக் கடந்து 21ஆம் நூற்றாண்டில் பீடு நடை போடும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவ, தாழ்த்தப்பட்ட மக்களின் எதார்த்த நிலை இது தான்.

போலியாக உலக அரங்கின் முன் தலை நிமிர்ந்து நிற்பதாகப் போலிப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் இந்தியாவை உண்மையிலேயே உலக அரங்கின் முன் தலை நிமிர வைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட அவலநிலைகள் இந்தியாவிலிருந்துக் களையப்பட வேண்டும்.

அதற்கு என்ன வழி? இதனை ஆராயும் முன் மேற்கண்ட இந்தியக் குடிமக்களின் அவலநிலைகளுக்குரியக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டியது முக்கியம்.

பல்வேறு இன, மத, மொழி, கலாச்சார மக்கள் நிறைந்த ஒரு நாடு, உண்மையிலேயே அது ஜனநாயக நாடாக ஆக வேண்டும் எனில், அங்கு வாழும் அனைத்து மக்களின் வாழ்வாதார நிலைகள் ஒரே சமச்சீரில் மேன்மையடைய வேண்டும். சமூகத்தில் எந்த இனமும் தாழ்நிலையில் இருக்கக் கூடாது. இயன்றவரை எல்லா இன மக்களின் கல்வி , பொருளாதார, வேலைவாய்ப்பு, சமூக நிலைகள் குறைந்தபட்சம் ஒரே நிலைக்கு எட்ட வேண்டும்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால், இன்று இந்திய மக்கள் தொகையில் சுமார் வெறும் 2.5 சதவீதத்தினரே இருக்கும் உயர் குடியினராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பிராமணச் சமூகம், அரசின் அனைத்து அதிகார உயர்மட்டப் பதவிகளையும் தங்கள் கையில் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் பிரபல ஊடகங்களிலிருந்து, மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, பாதுகாப்புத்துறை வரை அனைத்து இடங்களிலுள்ள அதிகார உயர்மட்டப் பதவிகளிலும் அவர்களே நிறைந்துக் காணப்படுகின்றனர்.இந்தியாவில் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் - கல்வியில் பிந்தங்கியுள்ளனர்; இவர்களுக்கு ஒரு சாதாரண கல் உடைக்கும் தொழிற்சாலையிலிருந்து, அரசு சார் உயர் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் வரை அனைத்திலும் உள்ள உயர் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன; சாதாரண கிராமப் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிப் பதவிகளில் இருந்து மாவட்ட, மாநில அரசு அதிகாரிப் பதவிகள் வரை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவம், நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் விரல் விட்டு எண்ணும் அளவிலான நபர்கள் வேலை செய்யும் படியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எல்லா இடங்களும் உயர்சாதியினரின் கைகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் அதிகாரங்கள் உடைய உயர்பதவிகளை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் செல்ல விடாமல் தடுப்பதில் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர் . இதற்காக உண்மையைப் பொய்யுடன் கலந்து அந்தப் பொய்யையும் உண்மையாகச் சமூகத்தில் நம்ப வைக்கும் உத்தியை இவர்கள் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர்.

ஓர் உதாரணத்திற்கு:

கடந்த அக்டோபர் 6-ம் தேதியிட்ட தி எகனாமிஸ்ட் எனும் ஆங்கிலச் சஞ்சிகையில், சமூகத்தில் தாழ்நிலையில் இருக்கும் கீழ்தட்டு மக்களின் நிலையை உயர்த்த முனையும் இந்தியாவின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தனியார் தொழிற்துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை, “இட ஒதுக்கீட்டு முறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவது சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு எவ்வகையிலும் பலனளிக்காது என்பது மட்டுமல்லாமல் தொழிற்துறையை அது வெகுவாகப் பாதிக்கும்” என வாதிடுகிறது.

மேலும், ‘மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த சாதிப்பிரிவினைகள் தான் உலகிலேயே மிக அசிங்கமான ஒரு சமூக அமைப்பாக இருக்க முடியும். மனுவின் சட்டப்படி தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பிராமணருக்கு அவர் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொன்னால், கொதிக்க வைக்கப்பட்ட எண்ணை அவரது வாயிலும் காதிலும் ஊற்றப்பட வேண்டும். இதன் காரணத்தினாலோ என்னவோ, சிறந்த வேலை வாய்ப்புகளில் பெரும்பகுதியை உயர்சாதியினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் அவை கிடைப்பதே இல்லை.

இந்த நிலைமையைச் சீர் செய்யவே, இந்திய அரசு, 1950-லிருந்தே கல்வி நிறுவனங்களிலும் பொதுத்துறையிலும் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்தியது. ஆயினும், சுமார் 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இக்கொள்கை போதிய பலனை நல்கியதா என்றால் இல்லை” என இக்கட்டுரைத் தொடர்கிறது.

இருப்பினும் பல அரசியல் காரணங்களுக்காக அரசு இக்கொள்கையை தனியார் துறையிலும் திணிக்க முயல்கிறது” எனக் குற்றம் சாட்டும் இக்கட்டுரை, “பிரதமர் மன்மோகன் சிங் தலித் மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிட்டத்தட்ட மிரட்டியதாகச்” சொல்கிறது. “ஏற்கெனவே பொதுத்துறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு கொள்கையை தனியார் துறையிலும் நடைமுறைப் படுத்த முயல்வது பைத்தியக்காரத்தனம்” எனவும் இக்கட்டுரை தெரிவிக்கிறது.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படச் செய்வது தனியார் நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இம்மக்களின் அவலநிலை தொடருவதற்குக் காரணமான உண்மையான குற்றவாளி, அரசாங்கமும் அழுகிப்போன அதன் கல்விக் கொள்கையும்தான்” என்ற அழுத்தமான ஒரு கருத்தையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.

கட்டுரையின் ஆரம்பப்போக்கைக் கவனிப்பவர்களை, “இந்தியாவின் கேடுகெட்ட சமூக நிலைக்குக் காரணம் புறந்தள்ளப்பட வேண்டிய மனுதர்மக் கொள்கையின் அடிப்படையிலான உயர்சாதியினரின் செயல்பாடுகளும், அவர்களே உயர் வேலைவாய்ப்புகளில் நிறைந்திருப்பதுமே” என்ற ஆணித்தரமாக எடுத்து வைக்கப்படும் அசைக்க முடியாத உண்மை, அக்கட்டுரையின் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்து விடுகின்றது.

தொடர்ந்து, “பொதுத்துறையில் தோல்வியடைந்த ஒரு கொள்கையை அரசு தேவையில்லாமல் தனியார் துறையிலும் திணிக்கப்பார்க்கின்றது” என்றக் குற்றச்சாட்டை வைத்து மக்களின் மனதில் “ஆம், சரி தானே” என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. பொதுத்துறையில் தோல்வி அடைவதற்கானக் காரணம் என்ன என்பதைக் குறித்துப் பேசாமலேயே தொடர்ந்து, “தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்றுக் கூறி மொத்த உண்மைகளையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகின்றது.

கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்த “உயர் சாதியினரின் மனுதர்மக் கொடுமை” என்ற உண்மை, கட்டுரையின் மையக்கருவாகக் கூறியப் பொய்யை உண்மைப்படுத்த கொடுக்கப்பட்ட ஒரு விலை மட்டுமே என்பதை அநேகமாக எவரும் அறிய வாய்ப்பின்றி அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் உண்மையான நிலை என்ன?.

இந்தியத் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவரைக் காட்டிலும் உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படுகிறது” என அமெரிக்கப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வு ஒன்று உண்மையைப் போட்டு உடைக்கின்றது.

அதே தி எகனாமிஸ்ட் சஞ்சிகையின் அக்டோபர் 20 இதழில், அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள், இக்கட்டுரையில் வைக்கப்பட்ட அந்தப் பொய்களை மறுத்து அவற்றுக்கு எதிராக பதிலளித்துள்ளனர்.

நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இப்பேராசிரியர்கள் கடந்த இரண்டாண்டு காலமாக இந்த ஆய்வை நிகழ்த்தி வந்துள்ளனர். இந்த ஆய்வு, நன்கு படித்தத் தகுதியுள்ள கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக மோடி நடத்திய இன ஒழிப்பு அராஜகத்தை எவ்விதம் தெஹல்காவினர் உலகிற்கு வெளிப்படுத்தினரோ, அதே பாணியில் இவர்கள் நடத்திய ஆய்வு முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தனியார் நிறுவனங்கள் செய்யும் மோசடியை வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு ‘விண்ணப்பித்த’ தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் ‘விண்ணப்பதாரர்களின்’ நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.

இந்திய இஸ்லாமியச் சமுதாயத்திற்கு கவலையளிக்கக் கூடிய வகையில், அசைக்கவியலா ஆதாரங்களுடன் இந்த ஆய்வறிக்கை சொல்லும் கருத்து, தனியார் துறைகளின் உயர்பதவிகளில் புகுந்துக் கொண்டு உயர்சாதியினர் நிகழ்த்தும் தகிடுதத்தங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றது. அத்துடன் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ஏன் அவசியம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.

மேற்கூறப்பட்ட உதாரணம், இந்தியாவில் உயர்சாதியினராகத் தங்களைக் கருதிக் கொள்ளும் 2.5 சதவீதம் மட்டுமே உள்ள பிராமணச் சமூகத்தினர் உயர் அதிகாரப் பதவிகள் அனைத்தையும் தொடர்ந்துத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிமுறைகளில் மிகச் சாதாரணமான ஒரு யுத்தி மட்டுமே.

தகுந்த ஆதாரங்களுடன் ஹிந்துத்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்த தெஹல்காவைப் போன்று, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தனியாரில் உயர்சாதியினரின் ஆக்ரமிப்பையும் தாழ்த்தப்பட்ட, முஸ்லிம்களுக்கான பாரபட்சத்தையும் தோலுரித்த அமெரிக்கப் பேராசிரியர்களின் செயல்கள் ஊக்கமளிக்கின்றன. ஆனால், இவை இந்தியச் சமூகத்தை மேல்மட்டத்திற்கு உயர்த்துவதற்கும், அனைவருக்கும் சமநீதி கிடைத்து உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கவும் போதாது.

அதற்கு, இந்தியாவின் அனைத்து அதிகார உயர்பதவிகளிலும் பாரபட்சமில்லாத அளவிற்கு அனைத்து மக்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய நீதித்துறை, உளவுத்துறை, காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய பாதுகாப்புத் துறைகளிலும், அரசு தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரப் பதவிகளிலும் உரிய அளவில் தங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

மக்களுக்கும் நாட்டுக்கும் மிகுந்த பயனளிக்கப்போகும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட முற்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, தானாக முன்வந்து கண்டித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டிப் பின்வாங்க வைத்த பாரபட்சமில்லாத நீதி நடைமுறைப்படுத்த வேண்டிய இந்திய உச்ச நீதிமன்றம், அசைக்க முடியாத வீடியோ ஆதாரங்களின் மூலம் இந்தியாவில் நிலைகொண்டு விட்ட ஹிந்துத்துவத்தின் முகமூடியை தெஹல்கா கிழித்து எறிந்தப் பின்னரும் இதுவரை அதனைக் குறித்து வாயைத் திறக்காதது மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தப் பின்னரும் எவ்விதச் சலனமும் இன்றி அமைதியாக இருப்பதிலிருந்து மேற்கூறப்பட்டதற்கான அவசியம் மேலும் உறுதியாகின்றது.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்ட தாய்லாந்து பிரதமர்

November 5, 2006

தாய்லாந்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் 2004 -ம் ஆண்டு ரமளான் மாதத்தில் 84 முஸ்லிம்கள் மரணமடைய நேரிட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரமளான் மாதத்தில் ஒரு நாள் (அக்டோபர் 25, 2004) ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தென் தாய்லாந்தின் காவல் நிலையம் ஒன்றின் அருகில் கூடினர். அவர்களில் பெரும்பாலோர் ஆர்வமிகுதியால் வேடிக்கை மட்டுமே பார்க்க வந்தவர்கள்.

தகுந்த ஆதாரமின்றி கைது செய்யப்பட்டிருந்த ஆறு பேரை விடுவிக்கக் கோரி அந்தக் கூட்டத்தினரில் சிலர் கோஷம் எழுப்பினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வரவழைக்கப்பட்ட ராணுவம் திடீரென அந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் மூண்டது. ராணுவத்தினர், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அப்பாவி மக்களையும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அவர்கள் மேற்சட்டை கழற்றப் பட்டவர்களாக கைகள் பின்புறம் பிணைக்கப்பட்ட நிலையில் சாலைகளில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தனர்.

ராணுவத்தின் பிடியில் தாய்லாந்து முஸ்லிம்கள்

அதன் பிறகு நடந்ததுதான் மிகக் கொடூரம். கைது செய்யப்பட்டவர்களை ராணுவம் சிறு சிறு ராணுவ வண்டிகளில் புளி மூட்டைகளை திணிப்பது போல திணித்து, சுமார் 5 மணி நேர பயண தூரத்திலிருந்த ராணுவ முகாம் ஒன்றிற்கு அனுப்பியது. ஒருவர் மேல் ஒருவராக மூன்று அல்லது நான்கு அடுக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அடுக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு உயிருடன் அனுப்பப்பட்ட பலர் அந்த ராணுவ முகாமை அடைந்தபோது பிணமாகி இருந்தனர். ஆம். அவர்களில் 78 பேர் மூச்சுத் திணறியே மரணமடைந்து விட்டனர்.

அப்போதைய தாய்லாந்து பிரதமராக இருந்த தக்சின் ஷினவட்ரா ராணுவத்தினரின் செய்கையை தற்காத்து பேசியதோடு, அவர்களின் மனிதாபிமானமற்ற செய்கையை நியாயப்படுத்தும் விதமாக ‘முஸ்லிம்கள் நோன்பு இருந்ததனால், ‘வீக்’காக இருந்திருப்பார்கள். அதனால்தான் மரணமடைந்திருப்பார்கள்’ என்று பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்தார். இவரது பேச்சு ஏற்கனவே வெந்து போயிருந்த முஸ்லிம்களின் மனதில் ஈட்டியைப் பாய்ச்சியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தாய்லாந்தில் அரசியல் சூழ்நிலை மாறி விட்டது. பிரதமர் தக்சின் மீது தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இறுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் அதே ரமளான் மாதத்தில் தக்சின் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தாய்லாந்தில் காலடி எடுத்து வைத்தால் ஊழல் வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் தக்சின் வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

ராணுவத்தின் ஆதரவுடன் தற்காலிக பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்கு தாய்லாந்தின் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். பிரதமரின் இந்த நல்லிணக்க முயற்சியால் தென் தாய்லாந்தில் அமைதி திரும்பும் சாத்தியம் தோன்றியிருக்கிறது.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

இந்தியச் சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள்!

November 3, 2006

இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

- 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 32.4 விழுக்காடாக இருக்கிறது.

- புதுதில்லி மக்கட்தொகையில் 11.7 விழுக்காடு உள்ளவர்கள் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சிறையிலிருக்கும் முஸ்லிம்களோ 27.9 விழுக்காட்டினர்.

- 9.1 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட குஜராத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் 25.1 விழுக்காட்டினர்.

இந்த எண்ணிக்கையில் குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப் பட்டவர்களோடு விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களும் அடங்குவர்.

இந்தப் புள்ளி விவரங்களோடு ஒப்புநோக்குகையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு சிறு விழுக்காட்டையே முஸ்லிம்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எதில் இட ஒதுக்கீடு வழங்க மறுத்தாலும், சிறையை நிரப்புவதில் அரசுகள் பாகுபாடின்றி இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள்தொகை வீதத்தை விட மிக அதிகப் பங்கு தருகிறார்கள்.

இந்திய முஸ்லிம்களின் இந்த பரிதாபமான நிலைக்கு யார் அல்லது எது காரணம்?

- வறுமைதான் முஸ்லிம்களில் பெரும் விழுக்காட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

- காவல் துறையினரின் பாரபட்சமான செயல்பாடுகளும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான சட்ட உதவி கிடைக்காமலிருப்பதும் பல அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணங்களாக இருக்கின்றன. “ஏதேனும் குற்றச் செயல்களில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தால், ஒருவரை கைது செய்யவேண்டிய இடத்தில் பத்து பேரை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில், தேவையில்லாத போதும் பல அப்பாவிகள் கைது செய்யப் படுகிறார்கள். கடைசியில் இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் படுவதில்லை” என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சையது ஷஹாபுத்தீன்.

ஒரு முஸ்லிம் மீது போலீசாரால் ஏதாவது ஒரு வழக்கு தொடுக்கப்பட்ட உடனேயே அவரை குற்றவாளியாகக் கருதிக் கொண்டு சமூகம் ஒட்டுமொத்தமாக அவரைப் புறக்கணிப்பதும் சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் பெருமளவு நீதி கிடைக்காமல் அடைபட்டிருக்க காரணமாகின்றது. இந்த அதிர்ச்சி தரும் உண்மையை சமூகம் இனிமேலாவது கண்டுகொள்ள வேண்டும். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் காவல் துறையின் வலுவிழந்த ஆதாரங்களால் குற்றம் நிரூபணம் செய்யப்படாமல் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டால் இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் இந்த அறிக்கையை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, ஏழை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டியது மிக அவசியம். இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்களும் பண வசதி படைத்த முஸ்லிம்களும் இச்சேவைக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும்.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

ஏமாந்த நரிகள்!

September 17, 2006

கிருஸ்த்துவ மதத் தலைவர் 16-ம் போப் பெனடிக்ட் இஸ்லாம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து சில ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிட்டார். கிருஸ்த்துவ மதத்தின் உயர்ந்த பதவி வகிக்கும் போப் அவர்கள் இஸ்லாம் குறித்து இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியது முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். சில முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் போப் அவர்களை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தனர். இரு தரப்பிலும் உஷ்ணம் அதிகரிக்க, விவகாரம் பெரிதாக வெடித்து, இது உலகின் இரு பெரும் கலாச்சாரங்களுக்கிடையிலான போராக மாறிவிடுமோ என அனைவரும் அஞ்சும் சூழ்நிலை நிலவியது.

இது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலின் பேட்டி:

“இஸ்லாம் மதம் குறித்து விமர்சிருத்திருப்பதன் மூலம் புதிய போரை ஆரம்பித்து வைத்துள்ளார் போப். வரும் நாட்களில் அது பற்றி எரியப் போகிறது.

இந்த விஷயம் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையிலானது. இதை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். வி.எச்.பி.க்கு இதில் தொடர்பு இல்லை.

அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளட்டும். நாம் அமைதியாக அதை பார்ப்போம்.”

இதைப் படித்தபோது நான் முன்பு எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.

ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,
சில தூண்டி விடப்பட்டு..
சில தூண்டிலில் இடப்பட்டு..

நரிகளும் ஓநாய்களும்
கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!

போப் அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் அசோக் சிங்கால்களின் ஆசையில் மண்ணள்ளிப் போடப்பட்டுள்ளது.

எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..! - கமலா சுரையா

September 15, 2006

கமலா சுரையா சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாத துணிச்சலான பெண்மணி. அவர் மாதவிக்குட்டியாக இருந்தபோதிலிருந்தே, அவரது எழுத்து, செயல் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு அவர் இஸ்லாமை வேறு தழுவி, இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் மற்றும் இந்துத்துவ சக்திகளின் அக்னிப் பார்வைக்கும் இலக்காகியிருக்கிறார்.

தஸ்லிமா நஸ்ரினை ஆதாரமாக காட்டி, கமலா சுரையா ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் இன்னும் இஸ்லாமில் ‘மாட்டிக் கொண்டிருப்பது’ போல நேசக்குமார் என்பவர் (திண்ணையில்) எழுதியிருந்தார். ‘அப்படி எந்த நிர்ப்பந்தமோ கட்டாயமோ இல்லை’ என்பதையும் பத்திரிக்கைக்காரர்களின் திரிபுவாதம்தான் அது என்பதை சுரையாவே நேரடியாக விளக்கியதை தேஜஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. (இக்கட்டுரை அபூசுமையாவின் தமிழாக்கத்தில் திண்ணையில் வெளி வந்திருக்கிறது)

இது தவிர, ஆனந்த விகடன் 02-07-06 தேதியிட்ட இதழில் கமலா சுரையாவின் நேரடியான பேட்டி வெளியாகி இருக்கிறது.

அதில் “எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது. அதே நேரம், இஸ்லாம் சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்“. என்கிறார் சுரையா.

சுரையா1

‘இஸ்லாம் மதம் மடுத்து’ என்பதுதான் அவரது உண்மை நிலைப்பாடாக இருந்தால் இந்துத்துவ சக்திகள் அவரைக் கொல்ல ஏன் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்? மாறாக அவருக்கு போதிய பாதுகாப்பளித்து அவரை இஸ்லாமை விட்டு வெளியேறச் செய்திருக்கலாமே?

இனி அவரது ஆனந்த விகடன் பேட்டியிலிருந்து…

வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ். கடுமையான பாதுகாப்பு. தொலைபேசி அழைப்புகள்கூட சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உள்ளே… ஏராளமான புத்தகங்களுக்கு நடுவில், மும்முரமாக எழுதிக்-கொண்டு இருக்கிறார் கமலாதாஸ்.

‘என் கதை’ என்கிற சுயசரிதையின் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த இந்த மலையாளப் பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதால், நீதிமன்றம் இவருக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. மாதவிக்குட்டி என்கிற பெயரில் இருந்து கமலாதாஸாக மாறியவர், பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறி, இப்போது கமலா சுரையா!

‘’நான் பரபரப்புக்காக எழுதுவதில்லை. என் எழுத்தும் பேச்சும் பரபரப்பாக்கப் படுகிறது. நான் மதத்தை நம்புவதில்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை. அதனால்தான் என் பேனாவின் தாக்குதலை ஆயுதங்களால் எதிர்கொள்கிறார்கள்.

வீட்டுக்குள் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தாலும், என் எண்ணங்களும், எழுத்துக்களும் ஒரு நதியைப் போலப் பாய்ந்துகொண்டே இருக்கின்றன. மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாக என்னை இந்தத் தலைமுறை மதிக்கிறது. இருபது வயதாகும் ஓர் இளம் பெண் எழுத்தாளர், என் கைரேகையைப் பதித்து, அதையே என் அணிந்துரையாக நினைத்துச் சந்தோஷப்படுகிறாள்.

நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், ‘நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!’ என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்திய மான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்.'’

சுரையா2

‘’உங்கள் எழுத்துக்களால் நிறைய பேர் காயமடைகிறார்களே?'’

‘’யார் காயப்படுகிறார்கள்? பலவீனமானவர்கள் காயப்படுகிறார்கள். பிறரைக் காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் உடையவர்கள் காயப்படுகிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவர்கள் திருந்தட்டும். அதுதான் அவர்களுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது.'’

‘’இஸ்லாம் மதத்துக்கு நீங்கள் மாறிய பிறகு, நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்களே?'’

‘’நான் என் வாழ்நாள் முழுவதுமே எதிர்ப்புகளை எதிர்கொண்டுதான் வருகிறேன். உண்மையைத் தீவிரமாகப் பேசுகிற யாரும் எதிர்ப்புகளைச் சந்தித்தாக வேண்டும். எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது. அதே நேரம், இஸ்லாம் சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். அதனால், முஸ்லிம் தரப்பிலும் நிறைய எதிரிகளைச் சம்பாதித் திருக்கிறேன். இன்னொரு பக்கம் இந்துத்துவ சக்திகளும் என்னைக் கொல்ல தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், என் சுதந்திர எண்ணங்களைப் பதிவு செய்யாமல் எதற்காக நான் வாழ வேண்டும்? ‘’

‘’இந்த எதிர்ப்புகளுக்கு இடையில் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?'’

‘’நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் எழுத்துக்களுக்கு வருகிற எதிர்ப்புகள்தான் நான் உண்மையாக இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தும் உரைகல்.

சுரையா3

‘’குடும்ப அமைப்பும் சிதையக் கூடாது; ஆனால், பெண் விடுதலையும் அவசியம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதே முரண்பாடு என்று பெண்ணிய வாதிகள் பேசுகிறார்களே?'’

‘’பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, ‘கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்’ என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது.

தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்.'’

நன்றி: ஆனந்த விகடன், திண்ணை