முஹம்மது (ஸல்) அவர்களின் திருமணம் பற்றிய அவதூறு!

May 2, 2008

“இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் களங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.” - சகோ. நல்லடியார்.

இஸ்லாமை கொள்கை ரீதியில் எதிர் கொள்ள இயலாத இந்த வக்கிர சிந்தனையாளர்கள், அதற்கு மாற்றுக் கொள்கை ஒன்றை சுட்டிக் காட்ட முடியாத இந்த அயோக்கிய சிகாமணிகள் பெரும்பாலும் கையிலெடுக்கும் ஆயுதங்கள் இரண்டு வகையானவை.

1. நபி (ஸல்) அவர்களின் மீது ஆபாச நடையில் அவதூறுகளை சுமத்தி தங்கள் உள்மன வக்கிரங்களை வெளிப்படுத்திக் கொள்வது.

2. முஸ்லிம்கள் சம்பந்தப் படும் வன்முறைச் சம்பவங்களை பூதாகரப் படுத்தி அவற்றிற்கு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கம் மீதே வன்முறைச் சாயம் பூச முற்படுவது.

இவர்களின் வரலாற்றுப் புரட்டுகள் பல முறை அம்பலப் படுத்தப் பட்டிருக்கும். இவர்களின் அவதூற்றுப் பிரச்சாரங்களுக்கு பல சகோதரர்கள் பல முறை தக்க பதில் கொடுத்திருப்பார்கள். அதையெல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் உளறல்களை மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு நினைவூட்டுவதற்காக அந்தப் பதிவுகளை இங்கு தொடராக பதிய இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

முதலில் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அவற்றிற்கான விளக்கங்களும்.

1. அவதூறு கிளப்பியவர்களிடம் ஆதாரம் வேண்டி..! - சகோ. சலாஹுத்தீனின் திண்ணை கடிதம்

2. மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம். - சகோ. அபூமுஹையின் விளக்கப் பதிவு!

3. இந்த வக்கிர சிந்தனையாளர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்களிலிருந்துதான் தங்கள் ‘ஆதாரங்களை’ காப்பியடிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம்.

4. தபகாத் இப்னு சஅது என்ற நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இவர்கள் மேற்கோள் காட்டும் நிகழ்வு ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதற்கான ஆதாரங்கள்

அன்னை ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேசும் இவர்கள் நேர்மையுடையவர்களாக இருந்தால் மேற்கண்ட பதிவுகளில் தெளிவாக விவரிக்கப் பட்டிருக்கும் ஆதாரங்கள் தவறானவை என்பதை முடிந்தால் நிரூபித்து விட்டு மேற்கொண்டு பேசலாம்!

பின் குறிப்பு: சென்ற ஆண்டு மார்ச் மாதம் எழுதிய பதிவு இது! அதே அவதூறு ஒரு வருடம் கழித்து மீண்டும் வேறு பெயர்களில் தலைக் காட்டி இருப்பதால், இது மீள் பதிவு செய்யப் படுகிறது!

வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 1 ஜைனப் (ரலி) திருமணம்!

March 21, 2007

“இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் களங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.” - சகோ. நல்லடியார்.

இஸ்லாமை கொள்கை ரீதியில் எதிர் கொள்ள இயலாத இந்த வக்கிர சிந்தனையாளர்கள், அதற்கு மாற்றுக் கொள்கை ஒன்றை சுட்டிக் காட்ட முடியாத இந்த அயோக்கிய சிகாமணிகள் பெரும்பாலும் கையிலெடுக்கும் ஆயுதங்கள் இரண்டு வகையானவை. 1. நபி (ஸல்) அவர்களின் மீது ஆபாச நடையில் அவதூறுகளை சுமத்தி தங்கள் உள்மன வக்கிரங்களை வெளிப்படுத்திக் கொள்வது. 2. முஸ்லிம்கள் சம்பந்தப் படும் வன்முறைச் சம்பவங்களை பூதாகரப் படுத்தி அவற்றிற்கு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கம் மீதே வன்முறைச் சாயம் பூச முற்படுவது.

இவர்களின் வரலாற்றுப் புரட்டுகள் பல முறை அம்பலப் படுத்தப் பட்டிருக்கும். இவர்களின் அவதூற்றுப் பிரச்சாரங்களுக்கு பல சகோதரர்கள் பல முறை தக்க பதில் கொடுத்திருப்பார்கள். அதையெல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் உளறல்களை மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு நினைவூட்டுவதற்காக அந்தப் பதிவுகளை இங்கு தொடராக பதிய இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

முதலில் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அவற்றிற்கான விளக்கங்களும்.

1. அவதூறு கிளப்பியவர்களிடம் ஆதாரம் வேண்டி..! - சகோ. சலாஹுத்தீனின் திண்ணை கடிதம்

2. மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம். - சகோ. அபூமுஹையின் விளக்கப் பதிவு!

3. இந்த வக்கிர சிந்தனையாளர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்களிலிருந்துதான் தங்கள் ‘ஆதாரங்களை’ காப்பியடிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம்.

4. தபகாத் இப்னு சஅது என்ற நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இவர்கள் மேற்கோள் காட்டும் நிகழ்வு ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதற்கான ஆதாரங்கள்

அன்னை ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேசும் இவர்கள் நேர்மையுடையவர்களாக இருந்தால் மேற்கண்ட பதிவுகளில் தெளிவாக விவரிக்கப் பட்டிருக்கும் ஆதாரங்கள் தவறானவை என்பதை முடிந்தால் நிரூபித்து விட்டு மேற்கொண்டு பேசலாம்!

இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!

October 27, 2006

அக்டோபர் 19 தேதியிட்ட திண்ணையில் சூபிமுகமது என்பவர் ‘வகாபிய பார்ப்பனீயத்தின் மூடநம்பிக்கை’ என்ற தலைப்பில் ‘பித்அத்’ எனப்படும் இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

‘நபிகள் நாயகம் சொல், செயல், அனுமதிக்குள் வராதது அனைத்தும் பிதுஅத் (இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது.) இது வாழ்வின் அனைத்து செயல்பாடுகளிலும் நிறைந்துள்ளது’ என்று சொல்லும் சூபி ‘நபிகள் நாயகம் பேசாத தமிழ் மொழி, உபயோகித்திராத இன்டெர்நெட், தொலைக்காட்சி சேனல்கள், விசிடி ஆகிய அனைத்துமே பிதுஅத்’ என்கிறார். இது தவறான புரிதல்.

இஸ்லாத்தின் கொள்கைகள், போதனைகளில், ஆன்மீகம், லௌகீகம் என இரு வகைகள் இருக்கின்றன. இறை சார்ந்த அடிப்படை நம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள், பிரார்த்தனைகளை உள்ளடக்கிய ஆன்மீக போதனைகளில் எந்த விதமான கூடுதல் குறைவுகளையும் யாரும் செய்வதற்கு அனுமதியில்லை. அதனால்தான் மவுலுது எனப்படும் கவிதைகளை ஒரு பிரார்த்தனையாக கருதி, அதை படிப்பதால் தனக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து படிப்பது ஒரு பித்அத் என மார்க்க அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உறவுகளை வலுப்படுத்துதல், தொழில் புரிதல், உண்ணுதல், பருகுதல் போன்ற இதர லௌகீக காரியங்களில், இஸ்லாம் சில வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக பன்றி மாமிசம் உண்ணுவது, மது அருந்துவது ஆகியவை தடை செய்யப் பட்டிருக்கிறன. இதுபோன்ற வரையறைகளுக்கு உட்பட்ட, கட்டுப்பாடுகளை மீறாத, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப் பட்டிராத வேறு எந்தச் செயலையும் செய்வது பித்அத் ஆகாது. எனவே சூபி பட்டியலிட்டிருக்கும் இன்டெர்நெட், தொலைக்காட்சி போன்றவை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப் படாதவரை தடுக்கப் பட்டவை அல்ல.

மார்க்க விஷயத்தில் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள், உலக விஷயங்களில் என்னை விட நீங்களே நன்கு அறிந்தவர்கள்

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே நவீனங்களுக்கு இஸ்லாம் என்றுமே எதிரியல்ல!

இஸ்லாம் எதையெல்லாம் தடை செய்துள்ளதோ அதைத் தவிர்த்துக் கொண்டு, அனுமதித்த விஷயங்களில் இன்றைய நவீனங்களையும், நாளை வரவிருக்கும் புதிய நவீனங்களையும் உபயோகித்துக் கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை!

ஒரு முஸ்லிம் இவ்வாறு வரம்பு மீறாமல் செயல்படும்போது, லௌகீக காரியங்கள் கூட ஆன்மீகமாக கருதப்படும் என்பது இஸ்லாமின் தனிச்சிறப்பு. ஒருவர் தன் மனைவிக்கு அன்புடன் ஒரு கவளம் உணவு ஊட்டுவது கூட அவருக்கு நன்மையை பெற்றுத்தரும் காரியமாகும்.

இந்த அடிப்படைகளை புரிந்து கொள்ளாததற்காக நாம் சூபிமுகமதுவை நொந்து பயனில்லை. பல முஸ்லிம்களே கூட இதை புரிந்து கொள்ளாமல்தான் இருக்கிறார்கள்.

நன்றி: திண்ணை October 26, 2006

இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? - 3

October 22, 2006

அன்புச் சகோதரர் எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் இறைத்தூதர்கள் குறித்து மேலும் சில கேள்விகள் எழுப்பியிருந்தார். அவற்றிற்கு பதிலாக எனக்குத் தோன்றிய சில விளக்கங்களை முன்வைக்கிறேன்.

//யூதம் மிகவும் பழையது என்று அறிகிறேன். அவர்களில் பல இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அறிகிறேன். ஆபிரஹாமுக்கு பிந்தைய இறைதூதர்களை யூதர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். http://www.shamash.org/lists/scj-faq/HTML/faq/12-11.html. ஆப்ரஹாமுக்கு பின் 46 யூத இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். 7 பெண் இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்த பக்கம் குறிப்பிடுகிறது. //

தகவலுக்கு நன்றி சகோ.எழில்! ஆபிரஹாமுக்கு பிந்திய இறைத்தூதர்களை யூத மதம் அங்கீகரிக்கவில்லை என தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். இத்தனை பேரை இறைத்தூதர்கள் என நம்பும் யூதர்கள், அவர்களின் குலத்திலேயே தோன்றிய, பிறக்கும்போதே அத்தாட்சிகளுடன் பிறந்த, (தந்தையின்றி தாயின் வயிற்றில் தோன்றியது, தொட்டில் பருவத்திலேயே பேசியது) இயேசுவை (அலை) ஏற்றுக் கொள்ளாமல் போனது விந்தையே.

//கிரிஸ்து தன்னை புரோபட் என்று கோரவில்லை. கிறித்து தன்னை இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டார். ஆகவே யூதர்கள் அவரை ஒரு புரோபட் என்று அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது சரியாக பொருந்தாது என்று நினைக்கிறேன். ஆகவே யூதமும் இஸ்லாமும் மட்டுமே இறைதூதர்களை கொண்டவை என்பதுதானே சரியாக இருக்கும்? //

இயேசு (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக முதன் முதலாக பேசியது, ‘நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தை கொடுத்திருக்கிறான். என்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்’ என்பதுதான். (குர்ஆன் 19:30). அப்படியிருக்க அவர் தன்னை இறைமகனாக கூறிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. கிருஸ்துவர்களுக்கிடையே கூட இதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

குறைஷிகளின் கொடுமை பொறுக்க முடியாமல் முஸ்லிம்களில் சிலர் ஹபஷா என்ற நாட்டிற்கு அடைக்கலம் நாடிச் சென்றனர். அப்போது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் ‘அஸ்மஹா நஜ்ஜாஷி’ என்ற கிருஸ்துவ மன்னர். அந்த முஸ்லிம்களைத் தொடர்ந்து குறைஷிகளின் குழு ஒன்று ஹபஷாவிற்கு சென்று மன்னரை சந்தித்து முஸ்லிம்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரினர். ஆனால் மன்னர் அதை மறுத்து விட்டார். ஏமாற்றமடைந்த குறைஷிகள் மறுநாள் மீண்டும் மன்னரிடம் சென்று, ‘அரசே, இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்’ என்றனர். மன்னர் முஸ்லிம்களை அழைத்து இது பற்றி விசாரித்தார். “எங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்; அவர் (ஈஸா (அலை)) அல்லாஹ்வின் அடிமை; அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்” என்று முஸ்லிம்களின் குழுவில் இருந்த ஜஅஃபர் (ரழி) கூறினார். இதைக் கேட்ட மன்னர் நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து “அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவு கூட நீ கூறியதை விட அதிகமாக கூறியதில்லை” என்றார். இதைக்கேட்டு முகஞ்சுழித்த மத குருமார்களிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகஞ்சுழித்தாலும் இதுவே உண்மை” என்று கூறிவிட்டார்.

டாவின்சி கோடு நாவலில் இயேசு அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்த பல விஷயங்களை நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது என்ற போதிலும் இந்த விஷயத்தில், அதாவது, இறைத்தூதரான இயேசு பிற்காலத்து கிருஸ்துவர்களால் இறைமகனாக்கப் பட்டார் என்ற கருத்து, கிருஸ்துவர்களிடையேகூட இது போன்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

//இஸ்லாமுக்கு பின்வந்த பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் போன்ற மதங்கள் முகம்மதை இறைதூதராக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இஸ்லாமியர்கள் பஹாவுல்லா போன்றவர்களை இறைதூதர் என்று ஒப்புக்கொள்வதில்லை.//

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டவர்கள், அவர் தம்மை இறுதித்தூதர் என்று சொன்னதை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?

//தூதுத்துவம் என்பது மேற்கண்ட மதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது இல்லையே?//

உங்களைப் போன்ற கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவினர் தூதுத்துவத்தை மறுக்கிறார்கள் என்பதால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லையே?

//சொல்லப்போனால், அந்த கால சமூகங்களில் ராணுவ தலைவர்களும், ராணுவ தலைவர்களுக்கு ஆலோசனை தரும் குருக்களும், அரசர்களும் தங்களை ஆண்டவனின் அருள் பெற்றவர்களாகவே சித்தரித்துக்கொண்டனர். http://en.wikipedia.org/wiki/Divine_right_theory
பெரும்பாலான ஐரோப்பிய அரசர்கள் தங்களை கடவுளின் அருள் பெற்றவர்களாகவும், தங்களை எதிர்ப்பவர்களை கடவுளுக்கு எதிராக நடந்துகொண்டதாக சிரச்சேதம் செய்ததையும் பார்க்கலாம். ஜப்பானிய அரசர்கள் தங்ளை கடவுளின் சந்ததியில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இன்றும் ஜப்பானிய அரசரை கடவுளாகக் கருதும் மதம் ஜப்பானில் இருக்கிறது. உலகத்தில் ஜப்பானிய அரச வம்சம் மட்டுமே வரலாற்று ரீதியாகவே தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. உலகத்தில் இந்த ஒரு அரச வம்சத்துக்கு மட்டுமே இப்படிப்பட்ட பெருமை உண்டு. எகிப்திய பேரரசர்களும் தங்களை கடவுள் வம்சத்தில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இந்திய அரசர்களும் தங்களை சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டனர். இதில் கவனித்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு விதமான வித்தியாசமான முறையில் கடவுளின் பெயரை பயன்படுத்தியிருப்பதை பார்க்கலாம்.

ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கவும், மக்களை கேள்வி கேட்காமல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கவும் அந்த காலத்திலும் இந்தகாலத்திலும் கடவுளின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்று கருதுகிறேன். (என்னைப் பொறுத்தமட்டில் அது தவறு அல்ல).

ஆனால், இன்று என்னிடம் உண்மையிலேயே ஜப்பானின் அரசர் கடவுளின் வம்சமா என்றோ அல்லது இங்கிலாந்து ராணி கடவுளால் நியமிக்கப்பட்ட பேரரசியா என்றோ கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? அதே பதிலைத்தான் நான் ஜனாப் முகம்மது நபி அவர்களுக்கும் கூற முடியும்.//

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்பது போன்ற அனுமானங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு முற்றிலும் நிராகரிக்கிறது. விரிவஞ்சி சில செய்திகளை மட்டும் இங்கு சுருக்கமாக சொல்கிறேன்.

நபியவர்கள் மக்காவில் வெளிப்படையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் குறைஷிகளில் பலர் இஸ்லாமை ஏற்கத் தொடங்கினர். தங்களது கடவுள் நம்பிக்கைகள் தகர்க்கப் படுவதை தடுக்க குறைஷிகள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராயினர். குறைஷிகளின் தலைவர்களுள் ஒருவனான உத்பா இப்னு ரபீஆ அவர்களின் சார்பாக நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்தான்.

“எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களை சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம்.” என்றான் உத்பா. இதற்கு பதிலாக நபியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களின் ஓரிறைப் பிரச்சாரத்தை கைவிட வேண்டும் என்பதுதான்.

இதற்கு பதிலளிக்குமுகமாக நபியவர்கள் குர்ஆனின் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார்கள். அதை கவனமாக கேட்டபின் தம் மக்களிடம் திரும்பிய உத்பா, “குறைஷிகளே, இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரிடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது” என்றான்.

இதன் பிறகும் தம் சமரச முயற்சியை கைவிடாத குறைஷித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை தங்களிடம் அழைத்து வரச் செய்து உத்பா சொன்னதையே மீண்டும்வலியுறுத்தி கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்: “உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லாஹ் என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன். உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.'’

சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்துவதும் ஒருங்கிணைப்பதும்தான் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால், அதை செயல்படுத்துவதற்கு இதை விட இன்னொரு சிறந்த சந்தர்ப்பம் நபியவர்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை. குறைஷித் தலைவர்களே முன்வந்து நபி (ஸல்) அவர்களை தங்களின் அரசராக ஏற்றுக் கொள்வதாக சொல்வதால் அவர்களின் அரசராக தம்மை முடிசூடிக் கொண்டு அந்த ஒழுங்கு படுத்துதலையும் ஒருங்கிணைப்பதையும் செய்திருக்கலாம். ஆனால், நபியவர்கள் அதை மறுத்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்த நிலைப்பாடு குறைஷிகளின் கோபத்தை மென்மேலும் தூண்டி விட்டது. நபியவர்களை கொல்வதற்கும் அவர்கள் திட்டம் தீட்டினர். அது நிறைவேறாததால், நபி (ஸல்) அவர்களையும் பிற முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களையும் குறைஷிகள் ஊரை விட்டே விலக்கி வைத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முஸ்லிம்கள் கடும் இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாயினர்.

குறைஷிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முஸ்லிம்கள் ஹபஷா என்ற நாட்டிற்கு புலம் பெயர வேண்டியிருந்தது. நபி (ஸல்) அவர்களும் மற்றும் பல முஸ்லிம்களும் தாங்கள் பிறந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவிற்கு சென்று வசிக்க வேண்டி வந்தது.

நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை ஒருங்கிணைப்பதுதான் தமது நோக்கம் எனக் கொண்டிருந்தால் அதைச் செய்யக் கிடைத்த வசதியான வாய்ப்பை நழுவ விட்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் இது போன்ற துன்பங்களுக்கு ஆளாக்கியிருப்பார்களா?

//நீங்கள் முன்னரே குறிப்பிட்ட பக்கத்தில் ரோமானிய அரசர் கூறியது போல பலரும், இறைதூதராக இருந்தால் செல்வாக்காக இருக்கலாம் என்று காப்பி அடிக்க முயன்றிருக்கலாம். பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் மதம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நடுவேயும் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பல பக்கங்கள் குறிப்பிடுகின்றன. மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜப்பானிய பேரரசரின் வம்சம் 1500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அதனால், அவரை உண்மையிலேயே கடவுளின் வம்சம் என்று கூறவியலுமா?//

இறைத்தூதர் என்ற பணி மிகுந்த செல்வாக்குடன் ஆட்சி அதிகாரத்துடன் சொகுசாக வாழ்வதல்ல. இறைத்தூதர்கள் அனைவருமே கடுமையான துன்பத்திற்கும் சோதனைகளுக்கும் ஆளாகியிருக்கின்றனர். செல்வாக்காக இருக்க நினைப்பவர்கள் காப்பி அடிப்பதற்கு கொஞ்சமும் லாயக்கில்லாதது இறைத்தூதர் பணி.

//சிந்தனைத்திறன் இருப்பதால் தானே கேள்வி கேட்கிறார்கள். சிந்தனைத்திறன் இருப்பதால்தான் ஒரு வரையறை செய்கிறார்கள்…. //

கேள்விகள் கேட்கத்தான் வேண்டும். கேட்டால்தானே பதில் கிடைக்கும்? ஆனால் கேள்விக்கான பதிலை தேடிப்பெற முயலாமல் ‘நேரடியாக பதில் தரப்பட வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது சிந்தனைத்திறன் உடையவர்களுக்கு முறையல்ல.

//ஒருவர் இறைதூதர்தான் என்பது இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒன்று அந்த இறைதூதர் மற்றவர் இறைவன். வேறு யாருக்கும் தெரியாது அல்லவா? அல்லது நீங்கள் சொல்வது போன்று வானவர் மூலம் சொல்லப்பட்டிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நான் வானவர் என்பதற்கு இந்த அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன. (இறக்கைகள், ஒளிவட்டம் ஆகியவை). நான் இவர் இறைதூதர் என்று சாட்சியம் கூறுகிறேன் என்று கூறலாம். அப்போது மக்கள் குழப்பமின்றி நம்புவார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் ஒரு அத்தாட்சி கேட்டதில் தவறே இல்லை. அந்த சாதாரண மக்கள் கேட்ட அத்தாட்சியை கொடுக்காததுதான் தவறு. அத்தாட்சி இல்லை, ஆனால் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று கோரினால், மக்கள் என்ன செய்வார்கள்? இன்றைக்கு ஒருவர் அதே போல நான் தான் இறைதூதர், எந்த அத்தாட்சியும் நான் கொடுக்க முடியாது. ஆனால், எல்லோரும் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் அத்தாட்சி கேட்கமாட்டீர்களா? அப்படி நீங்கள் கேட்டால் “அறியாதவர்” ஆகிவிடுவீர்களா? ஆகவே முகம்மது இறைதூதர்தான் என்று எப்படி அறிவீர்கள்? அதற்காகத்தான் சொன்னேன்… அவன் அனுப்பும் தூதர்களுக்கு எல்லோருக்கும் புரியக்கூடிய, ஒரே மாதிரியான எளிய அடையாளம் இருக்க வேண்டுமல்லவா. அதைத்தான் கேட்கிறேன்… வேறு எந்த மக்களுக்கும் இல்லாத ஒரு அடையாளம், இறைதூதர்களுக்கு மட்டும் இருக்கும் பொதுவான அடையாளம் இருக்கும்போதுதான் மக்களுக்கு இவர் இறைதூதர் என்று தெரியும். இறைவன் வந்து சாட்சி சொல்லாத பட்சத்தில், அல்லது இறைவனிடம் கேட்டு உறுதி படுத்திக்கொள்ள முடியாத பட்சத்தில்
1) எல்லா இறைதூதர்களுக்கும் ஒரு பொது அடையாளம் இருக்க வேண்டும்
2) இறைதூதர்களுக்கு மட்டுமே அந்த அடையாளம் இருக்க வேண்டும்
3) இறைதூதர்கள் தவிர வேறெந்த மக்களுக்கும் அந்த அடையாளம் இருக்கக்கூடாது.//

எந்த இறைத்தூதரும் அத்தாட்சி இல்லாமல் அனுப்பப் படவில்லை என்கிறது குர்ஆன். எந்த இறைத்தூதரும் ‘எந்த அத்தாட்சியும் கொடுக்க முடியாது, ஆனால் என்னை நம்ப வேண்டும்’ என்று சொன்னதில்லை. எந்த அளவிற்கு அத்தாட்சிகள் கொடுக்கப் பட்ட போதிலும் அதை ஒரு சாரார் மறுத்தே வந்திருக்கின்றனர். இறைவன் கூறுகிறான், “இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: ‘அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?’ என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.” (குர்ஆன் 2:118)

அந்த அத்தாட்சிகள் நீங்கள் கேட்பதுபோல யாராலும் மறுக்கவே முடியாத அத்தாட்சிகளாக இருந்திருந்தால், உலகம் முழுவதுமே அந்த ஓரிறைவனை வணங்குபவர்களாக இருந்திருப்பார்கள். ‘இன்னின்ன அத்தாட்சிகளை கொண்டவராக இருக்கிறாரா.. அப்படியென்றால் அவர் இறைத்தூதர்தான்’ என்று மறுபேச்சில்லாமல் அனைவரும் அவரை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். இங்கு சிந்தனைத் திறனுக்கு தேவையே இல்லை. நல்ல பகல் வெளிச்சத்தில் யானையையோ, முயலையோ பார்ப்பவர்கள், அது யானைதான் என்றும் முயல்தான் என்றும் சொல்வதற்கு சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் மறைந்திருக்கும் ஒரு பொருளைப் பற்றி விடுகதை போல சில உதவுக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருந்தால் அதன் விடையை கண்டுபிடிக்க கட்டாயம் சிந்தித்தே ஆக வேண்டும். அது போலத்தான் இறைத்தூதர்கள் விஷயத்திலும். போதுமான உதவிக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு சிந்தனைத் திறனும் வழங்கப் பட்டிருக்கிறது. “நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” - இதை நான் சொல்லவில்லை. குர்ஆன் பல இடங்களில் இவ்வாறு கேள்வி எழுப்புகிறது.

//…தெளிவாக தன்னுடைய இறைதூதரை பிரித்துகாட்ட ஒரு தெளிவான எல்லோருக்கும் புரியக்கூடிய அடையாளத்தை மற்ற யாராலும் காப்பி அடிக்க முடியாத அடையாளத்தை தரவேண்டும் அல்லவா? கருணையாளனாகிய இறைவனுக்கு மக்களை இப்படி இக்கட்டில் விடுவதில் என்ன பயன்?//

இதற்கும் குர்ஆனில் பதிலிருக்கிறது;

‘அல்லாஹ் நாடினால் எங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்’ (என்று கூறுவீராக.) (5:48)

மனிதர்களுக்கு சிந்தனைத் திறனை வழங்கிய இறைவன், அவர்களிடையே தனது தூதர்களை அனுப்பி தனது வேதத்தை போதிக்கச் செய்தான். தனது உயர்ந்த படைப்பாகிய மனிதன் அவனது அறிவைக்கொண்டு இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என இறைவன் விரும்புகிறான் போலும். பாடங்கள் போதிக்கப்பட்டபின் நடைபெறும் தேர்வில் யாரெல்லாம் தேறுகிறார்கள், யாரெல்லாம் தவறுகிறார்கள் என்று பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் சோதனைதான் இது. ஆனால் மனிதர்கள், ‘வினாத்தாட்களுக்கு பதிலாக எங்களுக்கு விடைத்தாட்கள் வழங்கப் பட்டிருந்தால் நாங்கள் அனைவருமே எளிதாக தேறியிருப்போமே’ என்கிறார்கள்.

“(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: ‘நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று (அவர்களிடம்) கூறுவீராக. ‘நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் மறுமை நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.‘ (22: 68-69)

“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:20)

இந்த விளக்கங்களை எழுத தூண்டுகோலாக இருந்த பதிவை எழுதிய சகோதரர் எழில் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!

October 20, 2006

இஸ்லாமின் அடிப்படை ‘இறைவன் ஒருவன்’ என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் கிளைகள்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதர், திருக்குர்ஆன் முழுவதுமே இறைவனின் வாக்கு, மறுமை உண்டு என்பது போன்ற நம்பிக்கைகள். முஸ்லிம்கள் குர்ஆனை அணுகும்போது இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அணுகுவர்.

குலாம் அவர்களின் பார்வையில் முஸ்லிம்களின் இத்தகைய அணுகுமுறை மூடநம்பிக்கையாக தெரிகிறது. அதற்காக அவர் 1400 ஆண்டுகால அரதப் பழசான சில வாதங்களை முன்வைக்கிறார். ஆம், இக்காரணங்கள் குர்ஆன் அருளப்பட்ட ஆரம்பக் காலங்களிலேயே முன்வைக்கப்பட்டு விளக்கமளிக்கப் பட்டவைதாம். அவற்றை இப்போது பார்ப்போம்.

ஒலிவடிவில் நபிகளாருக்கு இறக்கப்பட்ட குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டபோது ஸேரு, ஸபரு, பேஷ், ஷத்து, மத்து, நுக்தா போன்ற உயிர்க்குறிகள் இணைக்கப்பட்டதால் மாற்றத்திற்குள்ளாகி விட்டது என்பது குலாம் அவர்களின் வாதம். ஆனால் உண்மை இதற்கு நேர் மாறானது. அரபியை தாய் மொழியாக கொண்டவர்கள் ஸேரு, ஸபர் போன்ற உயிர்க்குறிகள் இல்லாத குர்ஆனை அதன் அசல் ஒலிவடிவிலேயே வாசிக்கக் கூடியவர்கள். ஆனால் அரபி மொழி அறியாதவர்களுக்கு இது இயலாத காரியம். இவர்கள் உயிர்க்குறிகள் இல்லாத குர்ஆனை ஓதுகையில் அதன் அசல் ஒலிவடிவிலிருந்து மாறுபட்டு பொருளும் மாறுபட வாய்ப்பு இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காகத்தான் ஸேரு, ஸபர் போன்ற உயிர்க்குறிகள் இணைக்கப் பட்டன.

திருக்குர்ஆன் ஒலி வடிவத்தில் அருளப்பட்டது என்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த ஒலிவடிவத்தைப் பாதுகாக்கும் ஒரு எற்பாடுதான் ஒலியை எழுத்து வடிவத்துக்கு மாற்றியது. ஜிப்ரயீல் என்ற வானவர் மூலம் வஹீயாக ஒலி வடிவில் அருளப்பட்டு முஹம்மது நபியால் மனனம் செய்யப்பட்ட குர்ஆன் எழுத்து வடிவில் மரப்பலகைகளிலும் பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோலிலும் எழுதி வைக்கப்பட்டு, கால மாற்றங்களுக்கு ஏற்ப வெவ்வேறு நுட்பப் பரிணாமம் பெற்று CD,PDA, முதல் இன்றைய இணையம் வரையில் அனைத்து மாற்றங்களையும் ஏற்றபோதிலும் கருமாற்றமோ பொருள் மாற்றமோ ஏற்படவில்லை. திருக்குர்ஆன் ஒலிவடிவத்தில் அருளப்பட்டது போல அன்று முதல் இன்று வரை ஒலி வடிவமாகவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது, இன்னும் உலகம் அழியும் வரை ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்.

‘’அகிலங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'’ ஒலி வடிவத்தில் இருக்கும் இந்த வார்த்தையை எழுத்து வடிவத்திற்கு மாற்றினாலும் அதனால் கருத்து முரண்பாடு எதுவும் ஏற்பட்டு விடாது. ‘’குலாம் ரஸுல்'’ என்ற ஒலியை எழுத்தில் வடித்தாலும் ‘’குலாம் ரஸுல்'’ என்று தான பொருள் படும் என்பதை குலாம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எழுத்து வடிவம் என்பது ஒரு பாதுகாப்பு முறை என்பதோடு, மேலும் கற்றுக் கொடுக்கவும், கற்கவும் எழுத்து முறைதான் சிறந்தது என்பது குலாம்களுக்கு தெரியாமல் போனாலும் இது அறிவுடையோர் அனைவரும் அறிந்ததே. ‘’ஆனா'’ ‘’ஆவன்னா'’ என்ற பாலர் பாடம் உச்சரிப்பில் தொடங்கி, எழுத்திலும் வரைந்து காட்டி கற்றுக் கொடுப்பது மொழியறிவு கல்வி முறை; கல்வியின் இந்த அடிப்படை முறையைத்தான் குலாம்களும் கற்று வந்தார்கள். அந்த எழுத்து வடிவில் அமைந்த ஒலியைக் கொண்டுதான் இன்று கட்டுரை வழியாக நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் குலாம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எழுத்து வடிவத்தின் ஒலியைக் கொண்டே அன்று ‘’அன்புள்ள அம்மா, இறையருளால் இங்கே நான் நலம், அங்கு நீங்கள் நலமா?'’ என்று கடிதங்களில் நலம் விசாரித்துக் கொண்டோம். இதுவே நவீன யுகத்தில் ஒலியைப் பதிவு செய்யும் கருவியின் மூலம் பதிந்து ஓசைகளை செய்தியாகப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் எழுத்து வடிவமானாலும், ஒலி வடிவமானாலும் அதிலிருந்து பெறப்படும் செய்தி ஒன்றுதான்!

தமிழ் மொழியிலும் முன்னர் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி இல்லாமல்தான் இருந்தது. முன்னர் குஙகும என்றுதான் எழுதுவர். தாய் மொழியாளருக்கு அது குங்குமம் என்று புரியும். வெளி நாட்டு சமயப் பரப்பாளர்கள் (வீரமாமுனிவர்) போன்றோர் வந்துதான் மெய்யெழுத்துக்களுக்கு புள்ளி வைக்கும் முறையை அறிமுகம் செய்தனர். அதுபோல ‘எ’னாவுக்குப் பின் வரும் ‘ஏ’யன்னா வரிவடிவம் வீரமாமுனிவர் அறிமுகப் படுத்தியதே. இதுபோன்ற சிறு திருத்தங்களால் தமிழ் மொழி மாற்றமடைந்து விட்டது எனக் கருத முடியாது.

ஒலிவடிவத்தில் அருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்பட்டாலும், ஓசை வடிவத்திலும் இன்னும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. குர்ஆனின் இவ்விரு வடிவங்களுக்குமிடையில் எந்த வித்தியாசங்களும் இல்லை என்பதுதான் உண்மை. ஸபர், ஸேர், பேஷ் என உயிர் குறிகள் இணைக்கப்படாத திருக்குர்ஆன் முதல் மூலப்பிரதிகள் இரண்டு, துருக்கி நாட்டின் ‘’இஸ்தான்புல்'’ நகரத்தின் அருங்காட்சியகத்திலும், மற்றொன்று ரஷியாவின் ‘’தாஷ்கண்ட்'’ நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது குலாம்களுக்கான ஒரு தகவல்!

ஆக, உயிர்க்குறிகள் இணைக்கப் பட்டதால் குர்ஆன் மாற்றத்திற்குள்ளாகவில்லை. மாறாக, இவை இணைக்கப் பட்டதால்தான் மாறுதலடையும் சாத்தியம் தவிர்க்கப் பட்டது.

திருக்குர்ஆன் உருவான காலச்சூழல் குறித்து குலாம் என்ன சொல்ல வருகிறார் என்பது சரியாக புரியவில்லை. திருக்குறள் குர்ஆனை விட காலத்தால் முந்தியது என்பதால், குறளின் தாக்கம் குர்ஆனில் இருக்கிறது என்கிறாரா? திருக்குறளைப் பற்றி அன்றைய அரபுலகம் அறிந்திருந்தது என்றால் அதற்கான ஆதாரங்களை குலாம் தெரிவிப்பாரா?

முதல் பத்தியில் சொன்னது போல, திருக்குர்ஆன் முழுவதுமே இறைவனின் வாக்கு என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘நபிகளாரின் மனத்தூண்டல் மூலமாக குர்ஆன் வெளிப்பட்டது’ என்ற வாதம் அந்தக்கால காஃபிர்களிலிருந்து இந்தக்கால கொய்ன்ராட் எல்ஸ்ட் வரை பலரால் முன்வைக்கப்பட்டு பொய்ப்பிக்கப்பட்ட ஒன்று. குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றைப் பற்றி சிறிதளவு கூட அறிந்திராதவர்கள்தான் ‘திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளாகும், ஹதீஸ்கள் நபிமுகமது பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி வரலாற்று தொகுப்பாகும்’ என்ற தவறான கருத்தைக் கொண்டிருக்க முடியும். குர்ஆன், ஹதீஸ் தொகுப்புகளைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்திருப்பவர்கள் இக்கூற்று உண்மையல்ல என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

‘திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகள்தான் என்பதை திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பாத்திகாசூரா சுட்டிக்காட்டுகிறது’ என்கிறார் குலாம். பாவம், அவர் இன்னும் அல்-பாத்திஹா எனும் முதல் அத்தியாயத்தைத் தாண்டி குர்ஆனுக்குள் புகவில்லை போலிருக்கிறது.

திருக்குர்ஆனுக்கு விளக்க உரை எழுதிய மார்க்க அறிஞர்கள் பாத்திஹா சூராவிற்கு இவ்வாறு விளக்கமளிக்கிறனர், “முதல் வசனத்தில் ‘பேரண்டம் முழுவதையும் படைத்துப் பரிபாலிப்பவனாகிய எனக்கே எல்லாப் புகழும்’ என்று தன்னிலை விதியில் சொல்லாமல் படர்க்கை முறையில் கூறப்பட்டிருப்பது ஏன்’ என்று ஒரு கேள்வி எழலாம். பதில் இதுதான்: அல்லாஹ் அடிப்படை நெறி ஒன்றை நமக்குக் கற்றுத் தருகிறான். ‘என்னுடைய அடியார்களே! நான் வழங்கும் அருட் கொடைகளுக்காகவும், உதவிகளுக்காகவும் எனக்கு நீங்கள் நன்றி செலுத்த நாடினால் - எனது மகத்துவத்தையும் மாண்பையும் போற்றிப் புகழ வேண்டுமானால் - அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறுங்கள்! ‘ இதைத் தொடர்ந்து அடியார்கள் செய்ய வேண்டிய பிரார்த்தனையையும் அவன் கற்றுத் தருகிறான். இவ்வாறு நாம் கேட்கும் பிரார்த்தனைக்கு பதிலாகவே குர்ஆன் முழுவதும் அமைந்துள்ளது. ஆம், நேர்வழி காட்டும்படி நாம் வேண்டுகிறோம். அதற்கு பதிலில் இந்த குர்ஆன் முழுவதையும் நம் முன்னால் சமர்ப்பித்து விடுகிறான் இறைவன்’. (ஆதாரம்: திருக்குர்ஆன் விளக்க உரை IFT வெளியீடு)

முஹம்மது (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் எதிர்கொண்ட சிக்கலான நெருக்கடியான பிரச்னைகளுக்கு தீர்வாக குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பதால் குர்ஆன் நபிகளாரின் வார்த்தைகளென உறுதிப்பட கூறலாமென்ற கருத்து விவாதிக்கப் படுவதாக குலாம் தெரிவிக்கிறார். இதுவும் அறியாதவர்களின் கூற்றுதான். குர்ஆனில் நபிகளாரை கடிந்து கொள்வது போல உள்ள வசனங்களுக்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார் குலாம்?

திருக்குர்ஆனின் சில வசனங்கள் கவிதைகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன என்பது குலாமின் மற்றொரு வாதம். இதற்கு குர்ஆனே பதிலளிக்கிறது, “இன்னும் (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்” (2:23 மற்றும் 10:38, 11:13) என்ற குர்ஆனின் இந்த சவால் இன்னும் எந்தக் கவிஞராலும் முறியடிக்கப் படவில்லை.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வகை வடிவத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப் படவில்லை என்கிறார் குலாம். ஆனால் வரலாறு வேறு விதமாக சொல்கிறது.

“திருக்குர்ஆனின் தொகுப்பு குறித்து மேலும் ஒரு விஷயத்தை வாசகர்கள் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, அதனுடைய இந்த அமைப்பு பிற்கால மக்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல; மாறாக இறைவனின் வழிகாட்டுதலுக்கேற்ப நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த அமைப்பில் தொகுக்கச் செய்தார்கள்.

இதற்காக கடைப்பிடிக்கப்பட்ட முறையாவது: குர்ஆனில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், நபி பெருமானார் (ஸல்) அவர்கள் உடனடியாக ‘காதிப்’ (எழுதுபவர்) ஒருவரை அழைத்து, அதனை முழுக்க முழுக்கச் சரியாக எழுதும்படிச் செய்து அதை ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்துக்கு முந்தியும், ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்துக்கு பிந்தியும் இடம் பெறச் செய்யுமாறு கூறுவார்கள். இது போலவே முழு அத்தியாயமும் அருளப்படாமல், ஒரு பகுதியே அருளப்பட்டால் குறிப்பிட்ட எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் அது அமைய வேண்டும் என்பதையும் கூறி விடுவார்கள். பின்னர், அதே வரிசைக் கிரமத்திலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுகையிலும், இதர நேரங்களிலும் குர்ஆனை ஓதி வந்தார்கள். மேலும் அதே வரிசைக் கிரமப்படியே பெருமானார் (ஸல்) அவர்களின் தோழர்களும் அதனை மனனம் செய்து வந்தனர்.

எனவே, குர்ஆனின் இறுதிப்பகுதி என்றைக்கு அருளப்பட்டு நிறைவு பெற்றதோ அக்கணமே குர்ஆனுடைய (இன்றைய) அமைப்பின் தொகுப்புப் பணியும் நிறைவு பெற்று விட்டது என்பது ஆதாரப்பூர்வமான வரலாற்று உண்மையாகும். ஆகவேதான், குர்ஆனை அருளிய இறைவனே அதன் தொகுப்பாளனாவான்; மேலும் எந்த நபியவர்களின் புனித உள்ளத்தில் அது இறக்கி வைக்கப்பட்டதோ அவர்களுடைய புனிதக் கரங்களாலேயே அதைத் தொகுக்கவும் செய்தான். அதில் எவரும் தலையிட உரிமையும் தகுதியும் பெற்றிருக்கவில்லை.” (ஆதாரம்: திருக்குர்ஆன் விளக்க உரை IFT வெளியீடு)

குலாம் இறுதியாக தான் இதுவரை எடுத்துவைத்த அபத்தமான வாதங்களின் பிண்ணனியில் ஒரு புதிய கண்ணோட்டத்தில் குர்ஆனை அணுக வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார். இதற்குப் பதிலாக, திருக்குர்ஆனை அணுகுவதற்கு சரியான அணுகுமுறையை மார்க்க அறிஞர்கள் விளக்குகின்றனர்:

“இந்தத் திருமறையை உண்மையிலேயே நன்கறிந்து கொள்ள வேண்டுமெனும் ஆர்வமுள்ளவர்கள் - அதன் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி - முதன் முதலில் ஏற்கனவே தம் உள்ளங்களில் நிலைப் பெற்றுவிட்ட இந்நூலைப் பற்றிய கருத்துக்களையும் எண்ணங்களையும் விருப்பு வெறுப்புகளையும் இயன்ற அளவு அகற்றி விட வேண்டும்; பிறகு இதை புரிந்து கொள்ள வேண்டுமெனும் ஒரே நோக்கத்தோடு, திறந்த மனத்தோடு இதனை படிக்கத் துவங்க வேண்டும். அவ்வாறில்லாமல் இந்நூலைப் பற்றி ஏற்கனவே சில கருத்துக்களை உள்ளத்தில் புகுத்திக் கொண்டு இதனை படிக்க முற்படுவோர் குர்ஆனின் வரிகளுக்கிடையே தம் கருத்துக்களையே படித்துக் கொண்டு போகிறார்களேயொழிய குர்ஆனின் கருத்துக்களை அவர்கள் அறிந்து கொள்வதில்லை! பொதுவாக எந்த ஒரு நூலையும் இவ்வாறு படிப்பது சரியான வழியாகாது. அதிலும் குறிப்பாக திருக்குர்ஆனை பொறுத்த மட்டில் இம்முறை சிறிதும் பயன் தராது. இவ்வாறு படிப்பவருக்கு குர்ஆன் தன் கருத்துக்களை புரிந்து கொள்ள வாய்ப்பளிப்பதேயில்லை.”

குலாம் அவர்கள் திருக்குர்ஆனை ஒரு முறையேனும் இத்தகைய முறையான கண்ணோட்டத்தில் அணுகி அதன் கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சித்தால், அவருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கத்தை அந்தக் குர்ஆனிலிருந்தே பெற வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: திண்ணை October 19, 2006

தொடர்புடைய பிற கட்டுரைகள்:

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்… - ஹெச்.ஜி.ரசூல்

குருட்டுத்தனக் கட்டுடைப்பு - வஹ்ஹாபி

இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? - 2

October 18, 2006

அன்புச் சகோதரர் எழில் அவர்கள் எனது முந்திய பதிவு தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி ஒரு தனி பதிவிட்டிருந்தார். இஸ்லாமை விமரிசித்து எழுதும் ஒரு சில வலைப்பதிவர்களைப் போலல்லாது மிக நாகரீகமான முறையில் எழுதியிருக்கும் இனிய சகோதரர் எழில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோ. எழில்,

ஒரு விஷயத்தை முதலில் தெளிவு படுத்தி விடுவது நலம் பயக்கும் என்று நினைக்கிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

தூதுத்துவம் என்பது யூதம், கிருஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை. இவர்களுக்கிடையில் வித்தியாசம் என்பது, இவர்கள் யார் யாரை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்தான். யூத மதம் ஆப்ரஹாமுக்கு (நபி இப்ராஹீம் (அலை)) பின் வந்த ஏசு உட்பட்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. கிருஸ்துவம் ஏசுவுக்கு (நபி ஈசா (அலை)) பின் வந்த முஹம்மது (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்லாம் இவர்கள் அனைவரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்வதோடு, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு தூதர்கள் யாரும் இல்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

இறைத்தூதர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. அவர்கள் எந்த தனி நபராலோ, அமைப்பாலோ நியமிக்கப் படுவதுமில்லை. உண்மையான இறைத்தூதர்கள் தக்க சான்றுகள் இன்றி தம்மைத் தாமே இறைத்தூதராக அறிவித்துக் கொள்வதுமில்லை. அவ்வாறு பொய்யாக அறிவித்துக் கொண்டவர்கள் தம் வாழ்நாட்களிலேயே பொய்ப்பிக்கப் பட்டதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு வேண்டுமானால் பா. ராகவன் தனது ‘நிலமெல்லாம் ரத்தம்’ நூலில் குறிப்பிடும் ‘ஷபாத்தி இஜ்வி’ என்ற பொய்த்தூதரை சொல்லலாம்.

இறைத்தூதர்களை அனுப்பிய இறைவன் அவர்கள் அனைவரையுமே தகுந்த அத்தாட்சிகளுடன் அனுப்பியதாக குர்ஆனில் பல இடங்களில் சொல்கிறான். ( ‘தமிழில் குர்ஆன்’ என்ற இந்த தளத்தில் ‘அத்தாட்சி’ என்ற சொல்லை தேடிப் பார்த்தால் ஏராளமான வசனங்களைப் பார்க்கலாம். அல்லது, இந்த வலைப்பக்கத்திலேயே உள்ள ‘Search In Quran’ -ல் ’signs’ என்ற ஆங்கில வார்த்தையை தேடலாம்.) ஏக இறைவன் மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் அந்த அத்தாட்சிகளை உணர்ந்து அந்த இறைத்தூதரை ஏற்றுக் கொண்டார்கள். நம்பிக்கை கொள்ளாத பிறர் “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்)” - (குர்ஆன் 25:7-8)

இறைத்தூதர்கள் இது போன்ற அசாதாரணமான அத்தாட்சிகள் இன்றி அனுப்பப் பட்டதை, இறைவன் மனிதர்களை சிந்திக்கத் தூண்டுகிறான் என்பதற்கு ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். தனது இருப்பை அறிவிப்பதற்கு ஏராளமான சான்றுகளை அளித்த இறைவன், அவற்றைப் பற்றி சிந்தித்து உணர்ந்து கொள்ளும்படி மனிதர்களை ஏவுகிறான். பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே ஆறாவது அறிவு எனப்படும் சிந்தனைத் திறன் தான். அத்தகைய திறன் படைத்த மனிதர்கள் ‘எனது சிந்தனைக்கே வேலை வைக்காமல், கேஜி பிள்ளைகளுக்கு புரிவது போல எனக்கும் அத்தாட்சியை காட்டு’ என்று அடம் பிடித்தால் எப்படி?

எனது முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்த உரையாடல், இறைத்தூதர்களுக்கான இலக்கண வரையறை அல்ல. அப்படி ஒரு இலக்கணத்தை இதுவரை யாரும் வரையறுக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாத்திற்கு கடும் எதிரியாக இருந்த ஒருவரின் வார்த்தைகளைக் கொண்டே, முஸ்லிமல்லாத ஒரு மன்னர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் அந்த உரையாடலை எடுத்துக் காட்டினேன். அதாவது, புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களுக்கு இந்த எளிய அத்தாட்சிகளே போதுமானதாக இருக்கிறது. அந்த விருப்பம் இல்லாதவர்களுக்கு எவ்வளவு அசாதாரண அத்தாட்சிகள் காண்பிக்கப் பட்டாலும் போதாது. மோஸஸ் (நபி மூசா (அலை)) அவர்களின் சமூகத்தாரிடம், இறைவன் ‘தூர்’ மலையை அவர்களின் தலைக்கு மேல் உயர்த்தி அவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்த தவ்ராத் வேதத்தை உறுதியுடன் பற்றிக் கொள்ளும்படி வாக்குறுதி வாங்கிய பின்பும் அவர்களில் பெரும்பாலோர் அதற்கு மாறு செய்தனர் என்பது இங்கு நினைவு கூறத் தக்கது.

//நல்ல குடும்பத்தில் பிறப்பவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்லர். .. எளியவர்கள் பின்பற்றுபவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்ல… நற்பண்புகளை போதிப்பவர்கள் அனைவரும் இறைதூதர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.//

ஒரு உதாரணம்:

ஒருவர்: “உன் அம்மாவைப் பற்றி கொஞ்சம் சொல்!”

மற்றவர்: “என் அம்மா மிக அன்பானவர், என் மேல் மிக பாசம் உடையவர், தினமும் எனக்கு உணவு ஊட்டுகிறார், எனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார்”

முதலாமவர்: “இதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? உன் அம்மா உன்னை கண்டிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவர் அன்பானவர், பாசமுள்ளவர் என்பது சரியல்ல. உடுப்பி ஹோட்டல் முதலாளி கூடத்தான் உனக்கு சாப்பாடு போடுகிறார். அவர் என்ன உனக்கு அம்மாவா? சாப்பாடு போடும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல. பள்ளிக் கூட ஆசிரியரும் உனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார். அவரும் உனக்கு அம்மா இல்லையே! நல்ல விஷயங்களை போதிக்கும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல”

முதலாமவரின் நண்பர்: “வெரி குட். இந்த ஆளுக்கு யாருமே அம்மா கிடையாது என்பதை நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்”

மற்றவர்: ??????

இந்த உரையாடல் அபத்தமாக தெரிகிறது அல்லவா? மன்னிக்கவும், உங்கள் கேள்விகள் அப்படித்தான் எனக்கு தெரிகின்றன.

//முகம்மது நபிகள் பொய் கூறாதவர் என்பதற்கு அத்தாட்சி தாங்கள் வழங்க வேண்டும்…முன்னர் சொன்ன சொல்லுக்கு மாற்றாக முகம்மது நபி நடக்கவே இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும்//

நான் அத்தாட்சி வழங்குவது இருக்கட்டும். அபூஸுஃப்யான் முஹம்மது (ஸல்) அவர்களில் காலத்திலேயே வசித்தவர். அவர்களை ஒழித்து விடவேண்டும் என்று பல முறை முயன்றவர். அப்படிப்பட்டவரே ‘நபிகளார் பொய்யுரைப்பார் என சந்தேகப் பட்டதில்லை’ என்றும் ‘அவர் மோசடி செய்ததில்லை’ என்றும் அத்தாட்சி வழங்கியிருக்கிறாரே, அது போதாதா உங்களுக்கு?

//யாராவது வெறுப்பு கொண்டு மதம் மாறினாலும், இஸ்லாம் பொய்யாகிறது.//

மன்னரின் கேள்வியையும் விளக்கத்தையும் கவனமாக பாருங்கள். “உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.” இஸ்லாம் மார்க்கத்தில் ‘இணைந்து‘ அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றிவிட்ட எவரும் அதை விட்டு வெளியேற மாட்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இஸ்லாம் மார்க்கத்தில் ‘பிறந்து‘ அதன் உண்மை விளக்கத்தை புரிந்து கொள்ளாமலேயே அதை விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி இங்கு சொல்லப் படவில்லை.

சுருக்கமாக சொல்வதென்றால், எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ஒரு முன் முடிவோடு அணுகினால், அதன் உண்மை நிலவரம் உங்களுக்கு புரிபடாமலேயே போய் விடும். ‘இறைத்தூதர் என்ற கருத்தே தவறு’ என்ற உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், நான் எவ்வளவு அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் காட்டினாலும் அதனால் பயனேதும் விளையப் போவதில்லை. என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என நானும் உங்களை வற்புறுத்தவில்லை. ‘இது முஸ்லிம்களின் நம்பிக்கை’ என்ற அளவில் இக்கருத்துக்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும். முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நம்பினால் நீங்களும் முஸ்லிமாகி விடுவீர்கள்! நம்பாமல் இருப்பதால்தான் நீங்கள் முஸ்லிமல்லாதவர்; இந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்யும், தவிர்க்க முடியாது. ஆகவே…

verse 109:6

‘’லகும் தீனுகும் வலியதீன் - உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு'’ குர்ஆன் 109:6

இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்?

October 16, 2006

அபூமுஹை அவர்களின் ‘இறைவன் மன்னிக்காத குற்றம்’ என்ற பதிவில் ‘உண்மையான இறைத்தூதரை எப்படி அறிந்து கொண்டு அவரை பின்பற்றுவீர்கள்?’ என்று ஒருவர் கேட்டிருந்தார். இறைத்தூதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இரு முஸ்லிமல்லாதவர்களுக்கிடையே நடைபெற்ற கீழ்க்கண்ட உரையாடல் நல்லதொரு விளக்கமளிக்கிறது. உரையாடிய இருவரில் ஒருவர் ரோம் மன்னர் ஹிர்கல் (ஹெர்குலஸ்). மற்றொருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிரியாக பாவித்திருந்த அபூஸுஃப்யான்.

அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம் அது. அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)

அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.

மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?

அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.

மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.

(தனது மொழிபெயர்ப்பாளடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.

அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.

மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?

அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.

மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’.

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?

அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.

மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.

மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?

அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)

மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?

அபூஸுஃப்யான்: ஆம்!

மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?

அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.

மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?

அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.

அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:

உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ‘’அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'’ என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார்.

அடுத்து, உன்னிடம் ‘’இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'’ எனக் கேட்டேன், ‘’இல்லை'’ என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.

அடுத்து உன்னிடம் ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோரின் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன்.

அடுத்து உன்னிடம் ‘’(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.

அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா'’? என்று உன்னிடம் கேட்டேன் ‘’அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'’ என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.

அடுத்து உன்னிடம் ‘’அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'’ என்று கேட்டேன். ‘’அதிகரிக்கின்றனர்'’ என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

அடுத்து உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.

அடுத்து உன்னிடம் ‘’அவர் மோசடி செய்ததுண்டா'’? என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.

அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ‘’அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'’ என்று கூறினாய். ‘’நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'’ என்றார்.

பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.

அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ‘’எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின் பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'’ என்று அபூஸுஃப்யான் கூறினார்.

அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார்.

(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!

August 18, 2006

‘இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம்’ என்ற துவேஷப் பிரச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப் பட்டு வருகிறது. ஊடகங்களின் துணையோடு இவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. உரக்கச் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? இவர்கள் சொல்வது போல், இஸ்லாம் வன்முறையை தூண்டும் மார்க்கமா?

குர்ஆன் என்ன சொல்கிறது?

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரை கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” (குர்ஆன் 5:32). அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் ஒரு உதாரணம்.

ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘இஸ்லாம் வன்முறையைத் தூண்டுகிறது’ என்கிற தமது துவேஷப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்ப்பதற்காக அடிக்கடி எடுத்துக்காட்டும் திருமறை வசனங்களிள் ஒன்று, அத்தியாயம் 9-ன் 5-ம் வசனம். “முஷ்ரிக் (எனப்படும் இறைவனுக்கு இணைவைப்பவர்)களை கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களை பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்” எனும் இந்த வசனத்தை பிரபல பத்திரிக்கையாளர் அருண் ஷோரி கூட தனது ‘ஃபத்வாக்களின் உலகம்’ என்ற நூலில் பக்கம் 572-ல் மேற்கோள் காட்டி இஸ்லாம் மீது அவதூறு சுமத்தியிருக்கிறறர். இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள், இதே வசனத்திற்கு முன்புள்ள 9:4-ஐயும் பின்புள்ள 9:6-ஐயும் கவனமாக தவிர்த்து விடுவார்கள். அருண் ஷோரியும் அதைத்தான் செய்திருக்கிறார்.

இந்த வசனம் எந்தச் சூழலில் யாரைக் குறித்து சொல்லப் பட்டது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில், இந்த அத்தியாயத்தை முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டியது அவசியம். அதோடு இந்த வசனம் இறங்கியதன் பிண்ணனியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிமல்லாதவர்களில் சில பிரிவினர் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு, அதற்கு மாறு செய்யாமலும், முஸ்லிம்களின் எதிரிகளுக்கு உதவி செய்யாமலும் இருக்கும் கூட்டத்தினருடன் ‘அந்த உடன்படிக்கையை பூரணமாக நிறைவேற்றுங்கள்’ என வசனம் 9:4 மூலம் நபி அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். அந்த ஒப்பந்தத்திற்கு மாறு செய்பவர்களுடன் சண்டையிடும்படி வசனம் 9:5-ல் கூறும் அதே நேரத்தில், அவர்களில் யாரேனும் புகலிடம் தேடி வந்தால் அவர்களுக்கு அபயமளிக்கும்படியும் வசனம் 9:6-ல் இறைவன் அறிவுறுத்துகிறான்.

இந்த உண்மையான விளக்கத்தை மறைத்து, சண்டையிடும்படி சொல்லும் வசனம் 9:5-ஐ மட்டும் out of context-ல் எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஜிஹாத் என்றால் என்ன?

இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.

‘முயற்சித்தல்’ எனப் பொருள்படும் ‘ஜஹத’ எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் ‘ஜிஹாத்’ எனும் பதம். இச்சொல்லுக்கு ‘அயராத போராட்டம்’, ‘விடா முயற்சி’, ‘கடின உழைப்பு’ என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் ‘ஜிஹாத்’ என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.

1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.

2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.

3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்

4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.

இவற்றுள் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.

மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்;

‘உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்’ (60:7)

‘மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்’. (60:8)

‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்’. (60:9)

அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், ‘ஜிஹாத்’ என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம் 4-ம் தான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனத்துடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், “உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்றார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்!” என்றார். “பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு” என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!” (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி). இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது ” பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்” எனறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்”. (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)

ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.

பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூற்றுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு.

( ஜிஹாத் பற்றி மேலும் அறிந்து கொள்ள: சுட்டி1 - சுட்டி2 - சுட்டி3 )

பயங்கரவாதத்தைப் பற்றி இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து என்ன?

‘பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தாங்கள் குர்ஆனையே பின்பற்றுவதாக சொல்கிறார்களே!’ என ஒரு சந்தேகம் எழலாம். இஸ்லாத்தின் கொள்கைகளை சில முஸ்லிம்களே சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். தங்களது தவறான புரிதல்களால் தனது மார்க்கத்திற்கு தாமே களங்கம் ஏற்படுத்துவதை இவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அத்தகையோரை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள். செப்-11 தாக்குதலைக் கண்டித்து மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் தலைவர்கள், அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளைச் சில வலைத்தளங்களில் தொகுத்து வைத்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலை கண்டித்து உடனடியாக அறிக்கை வெளியிட்டவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மார்க்க அறிஞர் எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழக தலைமை இமாம் ஷேக் முஹம்மது சையது தன்தாவி அவர்கள். ‘தீவிரவாதம் என்பது இஸ்லாத்திற்கு எதிரி ஆகும். தீவிரவாதத்திற்கும், தனது நாட்டை பாதுகாக்க, ஒடுக்குமுறைக்கு எதிராக போன்ற காரணங்களுக்காக இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஜிஹாதிற்கும் இடையில் உள்ள வித்தியாசம், வானுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் போன்றதாகும்’ என்பது இமாம் தன்தாவி அவர்களின் கருத்து.

இத்தாக்குதலைக் கண்டித்தவர்களில் முக்கியமான மற்றொரு மார்க்க அறிஞர் டாக்டர் யூசுப் அல் கர்ளாவி அவர்கள். ‘இஸ்லாம் நல்லிணக்கப் போக்கை விரும்பும் மார்க்கம். இது மனித உயிர்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கொடிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது.’ என இம்மார்க்க அறிஞர் கருத்து தெரிவித்திருக்கிறார். இவர் 1999-லிருந்தே அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு பாதகம் ஏற்படுத்தும் பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதற்கும் அத்தகைய செயல்களை செய்பவர்கள் யாராக இருப்பினும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதற்கும் இவையே அத்தாட்சிகள்.

****

இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம் மார்க்கமோ பிற முஸ்லிம்களோ எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும், அவ்வாறு தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப் படுத்தும் பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறதா, இல்லையா? இந்தப் பொறுப்பை அவர்கள் எவ்வழியில் நிறைவேற்ற இயலும்?

விளக்கம் பகுதி 4-ல்
(தொடரும்)

நன்றி: திண்ணை August 17, 2006

இக்கட்டுரைத் தொடரின்
பகுதி-1 குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!
பகுதி-2 இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!

பெண்ணுரிமை என்றால் என்ன?

May 20, 2006

ஜாஃபர் அலி என்னும் முஸ்லிம் வலைப்பதிவர் ‘எச்சரிக்கை’ என்ற அவரது வலைப்பதிவில் ‘மக்கள் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்’ என்ற நூலை வெளியீட்டாளர்களின் அனுமதியுடன் பதிவிட்டு வருகிறார். முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய தீமைகளைப் பற்றி இந்நூல் விளக்கமளிக்கிறது.

இந்நூலின் முன்னுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “வாசக நேயர்களே! இச்சிறிய நூலில் ஷரீஅத் தடை செய்துள்ள பல்வேறு காரியங்களை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஆதாரங்களுடன் நாங்கள் குறிப்பிட்டுள்ளதைக் காண்பீர்கள். விலக்கப்பட்ட இக்காரியங்கள் பெரும்பாலான முஸ்லிம்களிடையே பரவலாகக் காணப்படுபவையாகும். பெரும்பாலும் அவர்கள் செய்யக் கூடியவையாகும். இவற்றைக் குறிப்பிடுவதின் நோக்கம் மக்களுக்கு நலம் நாடுவதையும், தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வதையும் தவிர வேறு இல்லை.”

இந்த எச்சரிக்கை இஸ்லாத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு, முடிந்தவரை உண்மை முஸ்லிமாக வாழ முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்பது மிக தெளிவாக தெரியும் விஷயம். இந்த வலைப்பதிவை ஜாஃபர் அலி தமிழ்மணத்தில் பதிவு செய்யவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது.

இதை ஒருவாறு மோப்பம் பிடித்த நேசக்குமார் என்னும் மேதாவி, ‘பெண்ணுரிமைவாதிகளை எச்சரிக்கும் வலைப்பதிவர்’ என தலைப்பிட்டு தனது பதிவில் அறிமுகப்படுத்தி உள்ளார். இரண்டு காரணங்களுக்காக நான் நேசக்குமாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

1. ‘எச்சரிக்கை’ என்ற வலைப்பதிவை அறியாமல் இருந்த என் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்ததற்காக..

2. முஸ்லிம்களுக்கான எச்சரிக்கையை பெண்ணுரிமைவாதிகளுக்கான எச்சரிக்கை என குறிப்பிட்டதன் மூலம், முஸ்லிம்கள்தான் உண்மையான பெண்ணுரிமைவாதிகள் என பிரகடனப் படுத்தியதற்காக..

(உங்கள் உண்மையான நோக்கம் எதுவாக இருப்பினும்) நன்றி நேசக்குமார்!

மற்றபடி, ‘பெண்ணுரிமை என்றால் என்ன?’ என்று தலைப்பு வைத்ததற்காக நீளமான விளக்கங்கள் கொடுத்து நான் போரடிக்கப் போவதில்லை. தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நல்லடியாரின் இந்தப் பதிவை படிக்கலாம்.

புலால் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

January 14, 2006

சுந்தர் “நீங்கள் இவ்வுலகின் கடைசி மனிதனாக இருந்தால்?” என்ற தலைப்பில், தினமலரில் வெளியான ஒரு கட்டுரையின் சில பகுதிகளை பதிவிட்டிருக்கிறார். அக்கட்டுரையில் உள்ள இஸ்லாம் தொடர்பான சில கருத்துக்களுக்கு விளக்கங்கள், சற்று நீளமாகி விட்டதால் இங்கு தனி பதிவாக வைக்கிறேன்.

1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

தினமலர் கட்டுரை “சைவ உணவையே உண்டு வந்தார் முகமது நபி.” என்று குறிப்பிடுவதோடு, சில குர்ஆன் வசனங்களை குறிப்பிட்டு, ‘இறைவன் முஸ்லிம்களுக்கு பரிந்துரைக்கும் உணவு மரங்களிலிருந்து கிடைக்கும் காய் கனிகளும் பசுவிலிருந்து கிடைக்கும் பால் போன்றவையே’ என்பதுபோல தெரிவிக்கிறது.

ஆனால் கீழ்க்காணும் திருமறை வசனங்களை பார்க்கும்போது, தடுக்கப்பட்ட ஒருசிலவற்றை தவிர மற்ற உணவு வகைகள் அனைத்தையும், மாமிசம் உட்பட, இறைவன் மனிதர்களுக்கு ஆகுமானதாக ஆக்கி வைத்திருக்கிறான் என்பது தெரிகிறது.

5:1 முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன.

2:173 தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்கியிருக்கிறான்.

6:145 (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை

23:21 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினன இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அனேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்திலிருந்து) நீங்கள் புசிக்கின்றீர்கள்.

16:4 நீங்கள் கடலிலிருந்து நய(மும் சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து வெளிப்படுத்தவும் அவன்தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்.

மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அசைவ உணவு அருந்தியிருக்கிறார்கள் என்பதற்கும் அனேக ஆதாரங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு ஹதீஸ்:

Sahih Bukhari Volume 7, Book 65, Number 316:

Narrated Ibn ‘Abbas: The Prophet took out a bone with meat on it from a cooking pot and ate of it, and then offered the prayer without performing ablution anew.

அசைவ உணவு சாப்பிட இஸ்லாம் அனுமதிதான் அளித்திருக்கிறதே தவிர, அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சைவ உணவை மட்டுமே உண்ணக்கூடிய ஒருவர் ஒரு நல்ல முஸ்லிமாகவும் இருக்க முடியும்.

2. மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது இயற்கைக்கு மாற்றமானது அல்ல!

இயற்கைக்கு எதிரான மனிதன் செயல்படும்போது அது அவனை தண்டிக்கவே செய்கிறது என்பது நாம் கண்கூடாக கண்டு வரும் நிதர்சனமான உண்மை. தினமலர் கட்டுரை இதற்கு ஒரு நல்ல உதாரணத்தைக் காட்டுகிறது. “சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்… பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை “Mad Cow disease” என்றனர்.”

இவ்வாறு நிகழ்ந்தது உண்மைதான். இதற்கு காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற பிராணிகள் தாவர உண்ணிகள். இவற்றின் செரிமான அமைப்பு தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அது போலவே, சிங்கம், புலி போன்ற விலங்குகளின் செரிமான அமைப்பு மாமிச உணவு வகைகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதனால்தான் ‘புலி பசித்தாலும் புல் தின்பதில்லை’. இந்த இயற்கை அமைப்பிற்கு மாற்றமான உணவு வகைகளை இந்த பிராணிகள் உட்கொள்ள நேர்ந்தால், Mad Cow Disease போன்ற வியாதிகளின் மூலம் இயற்கை தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

ஆனால், மனிதன் புலால் உணவு உண்பது இயற்கைக்கு மாற்றமானதல்ல என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச உணவு, தாவர உணவு என இருவகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த அமைப்பு, இருவகை உணவுகளையும் மனிதன் உட்கொள்ளலாம் என்பதற்கு இயற்கையே வழங்கியிருக்கும் அனுமதி.

மேலும், பிராணிகள் மற்றும் மனிதர்களின் பற்கள் அமைப்பிலும் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது.

ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள், தாவர உணவு மட்டுமே உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை கொண்டிருக்கின்றன. இந்த பிராணிகள் இலை தழைகளை நன்கு மென்று உண்ண இந்த பற்கள் உதவுகின்றன. அது போல சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகளின் பற்கள், மாமிசத்தை கடித்து தின்பதற்கு வசதியாக கூராக அமைந்துள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே, மாமிச உணவு உண்ண வசதியாக கூரான முன்பற்களும், தாவர உணவுகளை மென்று உண்ண வசதியாக தட்டையான கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?

3. பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு புலால் உண்பவர்கள் காரணமல்ல.

“ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.” என்கிறது தினமலர் கட்டுரை.

அதாவது, பல கிலோ பசுமையான தாவர இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகளே சில கிலோ மாமிச உணவாக மாறுகிறது என்ற பொருள் தொனிக்கிறது. இருக்கலாம். ஆனால் அதற்காக மனிதர்கள் மாமிச உணவு உண்பதை நிறுத்திவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா போய்விடும்?
* ஆடு, மாடுகள் அப்போதும் தாவர இலைகளைத்தான் உண்ணும்.
* கால்நடைகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. உணவுக்காக அவை கொல்லப்படாததால் உலகில் அவற்றின் பெருக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும்.
* சைவ உணவு மட்டுமே உண்ணும் மனிதர்களும் தாவர உணவுவகைகளுக்காக கால்நடைகளுடன் போட்டியிட வேண்டும்.
* இந்த சூழ்நிலையில் பூமியின் பசுமைக்கவசம் வெகு சீக்கிரமே காணாமல் போகும்!

நன்றி: Islamic Research Foundation