செப்-11 இந்த பயங்கரத்துக்குப் பின்னால்...
அதிர வைக்கும் திகில் பார்வை!
(ஆனந்த விகடன் 4-செப்-05 இதழில் பா.ராகவன் எழுதிய கட்டுரை)
காலம் கலிகாலம்! இப்படியெல்லாம் நடக்குமா என்று கேள்வியே கேட்கக்கூடாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்!
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், பெண்டகன் என்கிற ராணுவத் தலைமையகத்தின் மீதும், 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் விமானம் மோதித் தாக்குதல் நடத்தியது மறக்கக்கூடிய சம்பவமா? இது தொடர்பாக அமெரிக்க அரசு ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அந்த கமிஷன் 2004-ம் ஆண்டு செப்டம்பரில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
சுமார் அறுநூறு பக்கம் கொண்ட அந்த அறிக்கை, பொருட்காட்சி அப்பளம் மாதிரி சுடச்சுட லட்சக் கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. ஒசாமா பின்லேடனையும் அன்னாரது ஆப்கன் பங்காளிகளையும் குற்றவாளிகளாகச் சுட்டிக்காட்டி, அமெரிக்க விமான நிலையங்கள், நிறுவனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், உளவு அமைப்புகளின் கையாலாகாத் தனத்தையும், வேறு சில ஒன்றுக்கும் உதவாத உள்நாட்டுக் குளறுபடிகளையும் மட்டும் கண்டித்துவிட்டு, தேச ஒற்றுமை, தேச நலன் என்று நாலு வார்த்தை நல்லபடியாகப் பேசிவிட்டு முற்றும் போட்டுவிட்டது இந்த அறிக்கை. 'தீவிரவாதத்துக்கு எதிராக' அமெரிக்க அரசு தொடங்கிய யுத்தத்துக்கு, பலமாக ஒரு ‘ஜே!’ போட்டதுதான் இந்த விசாரணைக் கமிஷன் அறிக்கையின் ஒரு வரிச் சுருக்கம்.
விஷயம் அத்துடன் முடிந்ததாகத் தான் அமெரிக்கர்கள் உள்பட அத்தனை பேருமே நினைத்தோம். அதுதான் இல்லை.
சமீபத்தில், எரிக் ஹஃப்ஸ்மித் (Eric Hufschmid) என்கிற புலனாய்வுச் செய்தியாளரின் ‘வலி நிறைந்த கேள்விகள் - செப்டம்பர் 11 தாக்குதல் - ஓர் ஆய்வு’ (Painful Questions: An analysis of the September 11th Attack) என்கிற புத்தகம் அமெரிக்காவில் வெளியானது. இந்தப் புத்தகத்துடன் சுமார் இரண்டேமுக்கால் மணி நேரம் ஓடக் கூடிய ஒரு குறுந்த கட்டையும் (CD) சேர்த்தே தருகிறார்கள். ‘Confronting the Evidences: A call to reopen 9/11 investigation' என்கிற பெயரில் வந்திருக்கும் இந்தக் குறுந்தகடு, அமெரிக்க அதிபரின் நாற்காலிக்கு அடியில் ஓசைப்படாமல் அணுகுண்டு வைக்கும் காரியத்தைக் கர்மசிரத்தையாகச் செய்கிறது.
விஷயம் மிகத் தீவிரமானது. செப்டம்பர் 11 அன்று அல்&கொய்தா நிகழ்த்திய தாக்குதலை அமெரிக்க அரசின் புலனாய்வு அமைப்புகள் முயன்றிருந்தால் தடுத்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம் என்று ‘9/11 கமிஷன்’ அறிக்கையே ஒரு மாதிரி சுற்றி வளைத்துச் சொல்லிவிட்டது. இந்த ‘Confronting the Evidences’ டாக்குமென்ட்டரி படமோ, ‘அமெரிக்க அரசு வேண்டு மென்றே தாக்குதல் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்தது' என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்கிறது.
ஒரு மகா பயங்கரத் தாக்குதல் திட்டமிடப்படுகிறது. அது பற்றிய விவரங்கள் அரசுக்குக் கிடைக்கின்றன. வசமாகக் கையில் சிக்கிய சில அல்-கொய்தா ஆட்களைக்கூட அமெரிக்க உளவுத்துறை அப்போது கோட்டை விட்டிருக்கிறது.
இந்த டாகுமெண்ட்டரி எழுப்பும் கேள்வி இதுதான்... "கோட்டை விடப்பட்டதா, அல்லது வேண்டுமென்றே தப்பியோட விட்டார்களா?"
நான்கு விமானங்கள் கடத்தப்படுகின்றன. உடனே என்ன செய்திருக்க வேண்டும்? அவற்றைப் பின் தொடர் வதற்கு எஃப்-16 ரகப் போர் விமானங்களை உடனே அனுப்பியாக வேண்டுமல்லவா? ஆனால், சொல்லிவைத்த மாதிரி செப்டம்பர் 11 அன்று மட்டும், தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயம் இருக்கிறது என்று உளவு அமைப்புகள் கழுதையாகக் கத்திக்கொண்டிருந்த நேரத்தில், எதற்காக அத்தனை எஃப்-16 ரகப் போர் விமானங்களையும், பயிற்சிக்காக என்று சொல்லி கனடாவுக்கும், அலாஸ்காவுக்கும் அனுப்பிவைத்தார்கள்?
இதுவும் தற்செயல் என்று அமெரிக்க அரசு சொல்கிறது. அல்ல, திட்டமிட்ட நடவடிக்கை என்கிறது இந்த டாக்குமெண்ட்டரி.
கடத்தப்பட்ட விமானங்களுள் ஒன்றான 'அமெரிக்கன் 77' என்கிற போயிங் 757, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் மீது மோதி, கடுமையான நாசத்தை விளைவித்தது என்று அமெரிக்க அரசு, போட்டோக்கள் வெளியிட்டு உலகுக்குக் காட்டியது. 'இந்தப் போட்டோக்கள் உண்மை என்றால், மோதியது போயிங் 757 இல்லை’ என்கிறது இந்த டாக்குமெண்டரி. காரணம், இந்தப் புகைப்படங்களின்படி, விமானம் மோதியதால் சேதமடைந்த பகுதிகளின் நீள, அகல, உயரங்களை வைத்துப் பார்க்கும்போது, அது விமானத்தின் அளவைவிடச் சிறியதாகவே இருக்கிறது! 'கடத்தப்பட்ட போயிங் 757 விமானம்தான் மோதியது என்றால், சேதம் இதைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும். அல்லது, வேறு விமானத்தைக் கொண்டு மோதி இருக்க வேண்டும்’ என்கிறது இந்த ஆவணப்படம்.
இன்னொரு விஷயம்... பெண்டகன் இருக்கும் இடத்தில் எந்த விமானமும் அத்தனை சுலப மாகப் பறந்து வந்துவிட முடியாது. உடனே மோப்பம் பிடித்து, தானியங்கி விமான எதிர்ப்பு ஏவுகணை கள் பாயத் தொடங்கிவிடும். ஆனால், ‘அமெரிக்கன் 77’ விமானம் பறந்து வந்து மோதியபோது, அந்த ஏவுகணைகளெல்லாம் என்ன ஆயின என்று கேட்கிறது இந்த டாக்கு மெண்ட்டரி.
இந்த டாக்குமெண்ட்டரியின் மிக முக்கியமான கட்டம், வர்த்தக மையக் கட்டடங்கள் இடிந்து விழுந்த விதம் பற்றியது. விமானம் மோதினால் ஒரு கட்டடம் எப்படித் தள்ளாடித் தடுமாறிச் சாய்ந்து விழவேண்டும்?! ஆனால், இந்தச் சம்பவத்தின்போது அப்படியே நொறுங்கித் தரைமட்டமானதே, அது எப்படி? இது குறித்து ஜெஃப் கிங் என்கிற இயற்பியல் விஞ்ஞானி, இந்தக் குறுந்தகட்டில் பேசுகிறார்.
இயற்பியலின்படி, கட்டடம் நொறுங்கிய விதம் கண்டிப்பாக விமானம் மோதியதால் இருக்க முடியாது என்பதே அவரது உறுதியான முடிவு. வர்த்தக மையக் கட்டடங்கள் இரண்டிலும் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு மூலையிலும் குண்டு வைத்து, ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்தால் மட்டுமே, அப்படி அப்பளம்போல் நொறுங்கி அதே இடத்தில் விழும். (பழைய கட்டடங்களை இடிப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தேசங்களில் இந்த முறைதான் கையாளப்படுகிறது.) விபத்தின்போது எழுந்த கரும்புகை, விமானம் மோதிய விநாடிக்குக் காலே அரைக்கால் விநாடி முன்பாகவே கட்டடத்தினுள் தெரிந்த தீப்பிழம்பு (புகைப்படங்களையும், வீடியோ ஆதாரங்களையும் அத்தனைத் துல்லியமாக அலசியிருக்கிறார்கள்!) ஆகிய வற்றை இதற்குச் சாட்சியாக வைத்து, கண்டிப்பாக வர்த்தக மையக் கட்டடங்களுக்குள் குறைந்தது 14 டன் வெடிபொருளாவது வைத்திருந்தால்தான் இப்படி நொறுங்கியிருக்க முடியும் என்று சத்தியம் செய்கிறது இந்த டாக்கு மெண்ட்டரி.
‘தினசரி பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து போகிற அந்த வர்த்தக மைய இரட்டைக் கோபுரத்தில், கார்த்திகை தீபத்துக்கு அகல் விளக்கு வைப்பது மாதிரி மூலைக்கு மூலை குண்டு வைப்பதெல்லாம் எப்படிச் சாத்தியம்?’ என்று கேட்கலாம். அதற்கும் பதில் இருக்கிறது. சொல்லி வைத்த மாதிரி செப்டம்பர் 11-ம் தேதிக்கு எட்டு நாள்கள் முன்பிலிருந்து, அடிக்கடி அந்தக் கட்டடத்தில் மின்சாரத் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதையும், அவ்வப்போது அங்கே இருட்டு சூழ்ந்ததையும், முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் அடிக்கடி மேற் கொள்ளப்பட்டதை யும் சுட்டிக் காட்டு கிறார்கள்.
செப்டம்பர் 11 சம்பவம் தொடர் பான கமிஷன் விசாரணைக்கு புஷ் உடன்பட மறுத்தது, சம்பவ இடத்திலிருந்து வெறும் 200 சாம்பிள்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துப் போக அனுமதித்தது, மிச்சமிருந்த மலை மலையான கட்டட மற்றும் இரும்புக் கழிவுகளை கற்பனைக்கெட்டாத வேகத்தில் டிஸ்போஸ் செய்தது (சென்னைக்குக்கூட கப்பல்களில் அந்தக் கட்டடக் கழிவுகள் ஏலத்துக்காக வந்தன!) என்று பலப் பல சந்தேகங்களை அடுக்கிக் கொண்டே போகிறது இந்த டாக்குமெண்ட்டரி.
இதன் சாராம்சம் என்ன?
செப்டம் பர் 11 அன்று அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியது ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா இயக்கம்தான். இதில் சந்தேகமில்லை. ஆனால், அந்தத் தாக்குதலைப் பல்வேறு அரசியல் காரணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முடிவு செய்தார். அதன் தொடர்ச்சி யாகவே, விமானம் மோதவிருந்த கட்டடங்களில் வெடிகுண்டுகளை முன்கூட்டியே வைத்து, கட்டடம் துளி மிச்சமில்லாமல் உருக்குலைய வழி செய்தார் கள். தீவிரவாதி களின் இலக்கு ஒருவேளை பெண்டகனாக இருக்கலாம் என்கிற சந்தேகம் அமெரிக்க அரசுக்கு இருந்திருக்கிறது. ஆனால், கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் எதுவும் அந்தப் பக்கம் வரவில்லை. (இரண்டு விமானங்கள் வர்த்தக மையக் கட்டடங்களின் மீது மோதின. ஒரு விமானம் பென்சில்வேனி யாவில் விழுந்து நொறுங்கிவிட்டது. இன்னொன்று எங்கே போனது என்று தெரியவில்லை என்பதே இந்த டாக்குமெண்ட்டரி எழுப்பும் அதிர்ச்சி விவரம்.) பெண்டகனைத் தாக்கி விட்டார்கள் என்று தெரிந்தால் உலகமே அதிரும் என்பதால், தானே ஏற்பாடு செய்து ஒரு விமானத்தைக் கொண்டு வந்து பெண்டகன் மீது மோதி, தீவிரவாதிகள் மோதியதாக உலகை நம்பச் செய்துவிட்டார்கள். ஆக, அமெரிக்கா மீது தொடுக்கப் பட்ட அந்தக் கொடூரமான தாக்குதலைச் செய்தது அல்-கொய்தா மட்டுமல்ல; அதை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, சதியை அதன் போக்கில் நடக்கவிட்டு, அதை மேலும் பயங்கரமாக எதிரொலிக்கச் செய்திருக்கிறது அமெரிக்க அரசு என்று சொல்லாமல் சொல்லிமுடிக்கிறது இந்த ஆவணப்படம்.
சரி, புஷ் எதற்காக இப்படியெல்லாம் குயுக்தியாகச் செய்யவேண்டும்?
இராக்கையும் ஆப்கானிஸ்தானை யும் தாக்குவதற்கு அமெரிக்க அரசு ஏற்கெனவே முடிவு செய்து விட்டிருந்தது. சதாம் உசேனும் ஒசாமா பின்லேடனும் என்றைக் கிருந்தாலும் அமெரிக்காவுக்குத் தலைவலிதான்! ஆனால் சரியான, வலுவான காரண மில்லாமல், உலக அளவிலான ஆதரவு இல்லாமல் இன்னொரு தேசத்தின்மீது போர் தொடுக்க முடியாது.
ஒசாமா பின்லேடனின் திட்டம், பதில் தாக்குதலுக்குச் சரியான காரணமாக இருக்கமுடியும் என்றபோதிலும், அமெரிக்கா மீது சர்வதேச அனுதாபம் முழுமையாக விழவேண்டுமென்றால், பாதிப்பு இன்னும் பலமானதாக இருக்க வேண்டுமென்று அமெரிக்க அரசு நினைத்திருக்கிறது. அதன் விளைவுதான் இந்த ஈவிரக்கமற்ற, கொடூரமான ரகசியச் சதிவேலை என்று குற்றம் சாட்டுகிறது இந்த டாக்குமெண்ட்டரி.
இதன் நம்பகத்தன்மை எத்தனை சதவீதம் என்பது பற்றியெல்லாம் இப்போது சொல்லிவிடமுடியாது. ஆனால், இது எழுப்பும் சில கேள்விகள் நம்மை ரொம்பவே நெருடுகின்றன. முக்கியமாக, ‘விமானம் மோதிக் கட்டடம் நொறுங்கியது என்பதைக்கூட ஒப்புக்கொள்ளலாம்; ஆனால், வலுவான இரும்புக் குழாய்கள் நொறுங்கிச் சிதற வாய்ப்பே இல்லை. வெடிவைத்துத் தகர்த்தாலொழிய, அவற்றைத் தூளாக்க முடியாது’ என்று விஞ்ஞானிகள் சிலர் சொல்லுவதைப் பரிசீலித்தே ஆகவேண்டும். அதே போலத்தான், பெண்டகனில் மோதிய விமானம் போயிங்தானா என்கிற கேள்வியும்.
புஷ் இதற்கெல்லாம் பதில் சொல்வாரா என்பது, அமெரிக்க மக்களை இந்த டாக்குமெண்ட்டரி எத்தனை தூரம் பாதிக்கப் போகிறது என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இது வெறும் ஆராய்ச்சி யாளர்களின் புலம்பலாக மட்டும் இருந்துவிடுமானால், அவர் தப்பித்து விடுவார்.
இந்த ஆவணப் படத்தை யார் பார்க்கிறார்களோ இல்லையோ, அவசியம் ஒசாமா பின்லேடன் பார்க்கவேண்டும். அமெரிக்க அரசின் 'திறமை'யை இந்த ஆய்வாளர்கள் பட்டியல் இடுவதைப் பார்த்து, அவரே வெட்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!.