ஜூனியர் விகடன் 27-08-06 தேதி இதழில், சுதாங்கன் எழுதும் 'உஷார் உளவாளி!' தொடரின் 28-ம் அத்தியாயம். தாடி என்ற மத அடையாளம்கூட தாங்கள் நிகழ்த்தப் போகும் பயங்கரத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அல்-ஹஸ்மியும், அல்-மிதாரும் சான்டியாகோ நகரில் இயல்பான ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களைப் போலவே மேலும் 17 அல்-கொய்தா தீவிரவாதிகளும் அமெரிக்காவுக்குள் ஊடுருவி தங்கள் திட்டத்தை செயல்படுத்தக் காத்திருந்தார்கள். அது நிறைவேறிய நாள்தான் 9/11. யாரும் நினைத்துப் பார்த்திராத வகையில் விமானங்களை கொண்டு, இரட்டை கோபுரம் எனப்படும் உலக வர்த்தக மைய கட்டடத்தை தூள் தூளாக்கினார்கள் தீவிரவாதிகள். சரித்திரத்தில் விசித்திரங்கள் ஏராளம் உண்டு. அதில் ஒன்று அமெரிக்கா- அல்-கொய்தா மோதல். தான் உருவாக்கிய இளைஞனே தனக்கு எதிராக மல்லுக்கு நிற்பான் என்று அமெரிக்கா கனவுகூட கண்டிருக்காது. அந்த இளைஞன் வேறு யாருமல்ல... ஒசாமா பின்லேடன்! இன்றைக்கு உலகையே அச்சுறுத்தும் தீவிரவாத தலைவனாக பின்லேடன் உருவெடுத்ததற்கு ஒரு வகையில் முக்கியக் காரணமே அமெரிக்காதான். 1979-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் துருப்புகள் படையெடுத்தன. அங்கு ஆட்சியிலிருந்தது சோவியத் கைப்பாவை அரசுதான். அந்த அரசுக்கு எதிராக முஜாகிதீன் அமைப்பு பலத்த எதிர்ப்புக்காட்ட, அதைச் சமாளிக்கவே படையெடுத்தது சோவியத். ஆப்கனில் இருக்கும் அரசு கவிழ்ந்தால், முஜாகிதீன்களுக்கு உதவுகிற சாக்கில், தன் நாட்டின் தெற்கு எல்லையில் அமெரிக்கா நுழைந்துவிடும் என சோவியத் ரஷ்யா அஞ்சியது. ரஷ்ய படையெடுப்பை ஆப்கானில் இருந்த முஜாஹிதீன் படைகள் எதிர்த்தன. இந்தப் படையின் ஒரு பிரிவு தலைவர் முல்லா முகம்மது ஓமர் (இவர்தான் பின்னர் தலிபான்களின் தலைவரானார்). ரஷ்ய படைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் முஜாஹிதீன்களுக்குப் பணம் மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா அளித்தது. சுமார் 3 பில்லியன் டாலர்களை இவர்களுக்காகக் கொட்டியது. இந்த உதவிகள் யாவும் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. மூலமாகவே நடந்தன. சவுதி அரேபியாவும் தன் ‘நண்பனான’ அமெரிக்காவின் முயற்சிக்குத் தோள் கொடுத்தது. முஜாஹிதீன்களுக்காக நிதி திரட்ட, சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கட்டட நிறுவனத்தின் வீட்டுப் பிள்ளையான ஒசாமா பின்லேடனும் சுற்றிச் சுற்றி வந்தான். இந்த விஷயம் அமெரிக்காவுக்கு தெரியவர, பின்லேடனை ஏகத்துக்கும் ஊக்குவித்தது. அவன் மூலமாகவே முஜாகிதீன்களுக்கு உதவிகள் சென்று சேரும் வகையில் பார்த்துக் கொண் டது. இதையடுத்து, இன்னும் உற்சாகமாக களமிறங்கினான் சவுதி குடிமகனான பின்லேடன். இவனுடைய முழுப்பெயர்... ஒசாமா பின் முகம்மது பின் அவாத் பின்லேடன். 1955-ல் முகமது பின்லேடன் என்ற பணக்காரரின் ஐம்பது பிள்ளைகளில் ஒருவனாக பிறந்த இவன், தன்னுடைய குடும்ப பிசினஸான கட்டடம், சாலைகள் நிர்மாணிக்கும் பணியில்தான் முதலில் குதித்தான். தந்தை ஒரு விமான விபத்தில் இறந்து போனதும், குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்பட்டன. இதனால் சின்ன வயதிலேயே பல மில்லியன் டாலர் சொத்து பின்லேடனுக்கு வந்து சேர்ந்தது. தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்கள், குடி, இரவு விடுதிகள் என்றுதான் வாழ்க்கை கழிந்தது. ஆனால், திடீரென நிகழ்ந்த தந்தையின் மரணம், அவன் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. அப்துல் அஸிஸ் பல்கலைக்கழகத்தில் இருந்த இஸ்லாமிய சகோதரத்துவ குழு ஒன்றுதான் அவனை திசை திருப்பியது. அந்த அமைப்பு போதித்து வந்த தீவிர இஸ்லாம் பிரசாரத்தைக் கேட்டுக்கேட்டு, பின்லேடன் தீவிர மத வெறியனாக மாறினான். ‘தன் பிள்ளைகளில் ஒருவராவது இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டும்’ என்று தன் தந்தை விரும்பியதாக சொல்லிக் கொள்வான் பின் லேடன். அப்படித்தான் ஆப்கன் போரிலும் தன்னை நுழைத்துக் கொண்டான். ‘ஒருநாள் ஆப்கானிஸ்தானில் இருப்பது, ஆயிரம் முறை அல்லாவை தொழுவதற்கு சமம்’ என்றும் அடிக்கடி சொல்வான். 1985-ல் ஆப்கானிஸ்தானில் போர் தீவிரமடைந்தது. கிட்டத்தட்ட நாட்டையே தங்கள் கையில் சோவியத் வைத்திருந்தது. அந்த நேரத்தில், சுமார் 35,000 தீவிர இஸ்லாமிய இளைஞர்கள் நாற்பத்தி மூன்று நாடுகளிலிருந்து வந்து அங்கே களத்திலிருந்தனர். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்தது பின்லேடன். 1987-ல் எகிப்திய ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த ஒருவரிடம் பின்லேடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டான். மருத்துவரான அவர் பெயர் அய்மான் அல்-ஜவாஹிரி. பாகிஸ்தானின் பெஷாவரில் மருத்துவப் பணி செய்து கொண்டிருந்த ஜவாஹிரி, அங்கு வரும் ஆப்கன் அகதிகளுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார். ஒரு பக்கம் உயிர் காக்கும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே... மறுபக்கம், இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் என்று உலக அளவில் ஒரு பட்டியலை தயாரித்து... அதில் இடம் பிடித்தவர்களை தன் ஆட்கள் மூலம் கொன்றொழிக்கும் வேலையைச் செய்து வந்தார் ஜவாஹிரி. இவருடைய ஜிகாத் அமைப்புதான் 1981-ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதாத்தைக் கொன்றது. இந்த ஜிகாத் இயக்கத்தின் செயல்பாடுகளை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு பின்லேடனுக்கு கிடைத்தது. அத்தோடு, இது போன்ற அமைப்புகளுக்கு பல நாடுகளிலிருந்தும் வந்து குவிந்த நிதி உதவியும் பின்லேடனை சிந்திக்க வைத்தது. விளைவு... 1988-ம் ஆண்டு 'அல்-கொய்தா' என்ற இயக்கத்தைத் துவக்கினான் பின்லேடன். அல்-கொய்தா என்பதற்கு ‘அடிப்படை’ என்று அர்த்தம். ஆப்கானிஸ்தானில் காணாமல் போனவர்களைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுக்கும் நோக்கத்துக்காக என்று சொல்லிக்கொண்டே அல்-கொய்தா துவங்கப் பட்டது. காயம் பட்ட ஆப்கன்- அரேபிய வீரர்களை மருத்துவமனையில் சென்று பார்ப்பான் பின்லேடன். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும், உணவுப் பொருட்களும் கொடுத்துவிட்டு அவர்களின் பெயர் களையும் முகவரிகளையும் குறித்துக் கொள்வார்கள் அவனுடைய ஆட்கள். ஒரு வாரம் கழித்து, காயம்பட்ட அந்த வீரன் வீட்டுக்கு ஒரு காசோலை செல்லும். இது போன்ற பணிகளின் மூலமாகவே... ஆறடி உயரம் கொண்ட சவுதி அரேபிய இளைஞனான பின்லேடனின் பிம்பம் ஆப்கனில் போரிட்டுக் கொண்டிருந்த ‘வீரர்’களின் மனதில் ஆழமாக விழுந்தது. பலத்த நெருக்கடிக்கு நடுவே தாக்குப்பிடித்து வந்தாலும், ஒருகட்டத்தில்... அதாவது 1989-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படை வாபஸாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு போர் கதாநாயகனாகவே சவுதி அரேபியாவுக்குத் திரும்பினான் பின்லேடன். மறுபடியும் குடும்ப வியாபாரத்தில் இறங்கினான். 1990-களில் குவைத் மீது சதாம் உசேனின் இராக் படையெடுக்க... மறுபடியும் பிஸியானான் பின்லேடன். குவைத்தை ஆதரித்து வந்த சவுதி அரசு, இந்தப் போரில் குவைத்துக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த முயற்சியில் சவுதி அரசுக்கு தோள் கொடுக்கும் வகையில் தன்னுடைய ஆயிரக்கணக்கான முஜாஹீதின் வீரர்களை அனுப்பி வைக்க முன்வந்தான் பின்லேடன். ஆனால், அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக அதை ஏற்காத சவுதி அரசு, அமெரிக்க வீரர்களைத் தன் மண்ணில் காலடி பதிக்க வழி வகுத்துக் கொடுத்தது. அங்கிருந்தபடியே இராக்குக்கு எதிரான போரில் குதித்தனர் அமெரிக்க வீரர்கள். இந்த முடிவு, பின்லேடனை வெறியூட்டியது. வெளிப்படையாகவே சவுதி அரசை விமர்சிக்க ஆரம்பித்தான். குவைத் போரில் வெற்றி பெற்ற பிறகும், அமெரிக்கத் துருப்புகள் சவுதியை விட்டு உடனே கிளம்பவில்லை. இதனால் மேலும் வெறியானான். ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்ரமித்தது போலவே... சவுதியை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது அமெரிக்கா என்று பின்லேடன் பொங்க ஆரம்பித்தான். ஒரே சமயத்தில் சவுதி அரேபியா, அமெரிக்கா இருவருக்குமே பின்லேடன் எதிரியானான். சவுதி அரசு 1991-ம் ஆண்டு அவனை நாட்டை விட்டு துரத்தியது. சவுதி அரசின் தயவால்தான் பின்லேடன் குடும்பத்து வியாபாரமே நடந்து வந்தது. ஆகவே அவனை அவன் குடும்பமும் கைகழுவியது. பின்லேடன் சூடானில் அடைக்கலம் புகுந்தான். முதலில் ஒரு ஃபைனான்ஸியராகத்தான் நுழைந்தான். அங்கிருந்த மக்கள் பணத்துக்காக பின்லேடனை நாடினார்கள். அந்த சமயத்தில் அவனிடம் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் பணமிருந்தது. அப்போது உலகளாவிய அளவில் பரவிக் கிடந்த பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத தலைவர்களின் தொடர்புகள் பின்லேடனுக்கு கிடைக்க... அனைவரோடும் கைகோத்தான் பின்லேடன். ஃபைனான்ஸியர் பின்லேடன், முழுக்க முழுக்க தீவிரவாதி பின்லேடனாக மாறியது இதன் பிறகுதான். 1992-ம் ஆண்டு டிசம்பரில் யேமன் நாட்டு ஹோட்டல் ஒன்றில் அல்&கொய்தாவின் முதல் தாக்குதல் நடந்தது. இதில் இரண்டு சுற்றுலாப் பயணிகள் இறந்தார்கள். அல்&கொய்தா குறிவைத்த ஏராளமான அமெரிக்கப் போர் வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி, சோமாலியாவுக்குச் சென்றதால் பிழைத்தார்கள். இதுதான் பின்லேடன் அமெரிக்கா மீது வைத்த முதல் குறி.